மொழிக்கு மதம், ஜாதி அடையாளங்கள் கிடையாது. அது மக்களுக்கானது. ஆனால் மொழியையும் பார்ப்பனர்கள் விட்டு வைக்கவில்லை.

இந்திய மொழிகளுக்கு எல்லாம் ‘தாய்மொழி’ கடவுளுக்கான மொழி என்று இவர்கள் கூறும் ‘சமஸ்கிருதம்’, மக்களுக்கான மொழியல்ல. அது ‘தேவபாஷை’. எனவே “பிராமணர்”களுக்கான மொழி என்று வர்ணாஸ்ரமத் திமிர் பேசுகிறார்கள்.

உ.பி.யில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதத் துறையில் ஃபெரோஸ்கான் என்ற இஸ்லாமியர் துணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இளம் வயது முதலே சமஸ்கிருதம் படித்து, அந்த மொழியில் முனைவர் பட்டம் பெற்றவர். உரிய கல்வித் தகுதி அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வானார். ஆனால் பல்கலைக்கழகப் பார்ப்பன மாணவர்கள் பார்ப்பன பேராசிரியர்கள் இஸ்லாமியர் சமஸ்கிருதத் துறையில் பணியாற்ற எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தனர். இரண்டு வாரம் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. உ.பி. முதல்வர் காவி உடை சாமியார் ஆதித்யநாத் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான வினய் பாண்டியா, போராடிய பார்ப்பன மாணவர்களுடன் சமரசம் பேசி அவர்கள் விதித்த கட்டுப்பாடுகள் நிபந்தனைகளை ஏற்று அதன்படி இஸ்லாமிய பேராசிரியர் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் இப்போது பல்கலைக்கழகம் திறக்கப்பட்டுள்ளது.

இதே பல்கலைக்கழகத்தில் உருது துறையில் ஆர்.கே. சர்மா என்ற பார்ப்பனர் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். 1916ஆம் ஆண்டு இந்த பல்கலைக்கழகத்தில் உருது மொழித் துறை தொடங்கப்பட்டது. இந்தத் துறையில் ‘இந்து’க்கள் உயர் பதவியில் அமர்த்தப்பட்டு வருகிறார்கள். ஆனால் சமஸ்கிருதத் துறையில் முதன்முதலாக ஒரு இஸ்லாமியர் வந்து விட்டால் துறை ‘தீட்டாகி’ விட்டது என்று பார்ப்பனர்கள் போர்க் கொடி உயர்த்துகிறார்கள்.

சமஸ்கிருதமே இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும் என்கிறது ஆர்.எஸ்.எஸ். பாரத கலாச்சாரத்தின் அடிப்படை சமஸ்கிருத கலாச்சாரம் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘சட்ட திட்டமும்’ கூறிக் கொண்டிருக்கிறது.

பார்ப்பனர்களே உயர்வானவர்கள்; அவர்களின் ஆதிக்கப் பண்பாட்டுக்கு அடங்கிப் போவதே பாரத கலாச்சாரம் என்பதே இவர்களின் ‘தத்துவம்’. அதைத்தான் இந்த ‘பனாரஸ் பல்கலைக்கழக’ நிகழ்வும் உறுதிப்படுத்துகிறது.

Pin It