“ஏண்டி! சரஸூ! நீ சமர்த்தோன்னோ! அத்திம்பேர் முகத்திலே துப்பு பார்க்கலாம்!” - அக்கிரகார வாசிகள் குழந்தை வளர்ப்பதே ஒரு தனி ரகம்!
எதற்கெடுத்தாலும், “சமர்த்தோன்னோ!” என்று சொல்லியே தயார் செய்வார்கள்! அதாவது இந்த உலகத்தில் முன்னேற வேண்டுமானால் படிப்போ - பணமோ முக்கியமல்ல; சமர்த்துதான் (அவர்கள் அகராதிப்படி தந்திரம் கலந்த கெட்டிக்காரத்தனம்) முக்கியம் என்பது அவர்கள் முடிவு! அந்த முறையிலேயே வளர்க்கப்பட்டவர்கள், “சமர்த்தாகவே” இருப்பதில் ஆச்சரிய மென்ன?
அக்கிரகாரவாசிகள் தங்கள் குழந்தைகளைத் தெருவில் கொண்டு வந்து மலம் கழிக்க விடுகிறார்களே! அதுவும் இந்த “சமர்த்தில்” சேர்ந்தது தான். அதாவது, வீட்டிலிருப்பவர்களுக்குத் தொல்லை யில்லாமல் முனிசிபாலிடிக்குத் தொல்லையா யிருக்கட்டுமே, என்ற
“பொது” நலந்தான்!
அக்கிரகாரவாசிகளின் “சமர்த்துக்கு” இவ்வாரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நான் என்றும் மறக்கவே மாட்டேன்.
‘புடோவ்கின்’ என்ற ரஷ்யத்திரைப்பட டைரெக்டரும் ‘சர்கஸாவ்’ என்ற ரஷ்ய நடிகர் நிபுணரும் சென்னைக்கு வந்திருந்தார்கள்.
அவர்களை சினிமாத்துறை நிபுணர்கள் (எஸ். எஸ். வாசன் நீங்கலாக) வரவேற்றார்கள்! வரவேற்பு நடந்த இடம் “உயர்தரப் பெண்கள் (சாதாரணப் பெண்கள் அல்ல! நினைவிருக்கட்டும்!) பாடசாலை,” திருவல்லிக்கேணி! இரு நஷ்ய நிபுணர்களும் உள்ளே நுழைந்தவுடனே, ஆரியச் சேரிப் பெண்திலகங்கள் பூப்பந்தல் அமைத்துக் காட்டி, ஜிப்சி நடனம் ஆடி, உயரத்திலிருந்து பூமாரி பொழிந்து (ஆரத்தி மட்டும் எடுக்கவில்லை!) வரவேற்ற காட்சியுண்டே! அதை நேரிற் கண்டவர்களுக்குத் தான் அதன் நுணுக்கம் தெரியும்.
இந்த அபூர்வக் காட்சியை ‘க்ளோஸ் அப்’ எடுக்கும் பேறு என்னைப் போன்ற ஒரு சிலருக்குத் தான் கிடைத்தது! என்றும் மறக்க முடியாத காட்சி!
பிறகு தேநீர் விருந்து நடைபெற்றது! விருந்தினர் அருகிலும் எதிரிலும் அநேகமாக அக்கிரகார வாசிகளே! ஏனையோர் வட நாட்டார்!
தொழிலாளர் இயக்கத் தலைவர்கள், புரட்சிக் கொள்கைக்காக அல்லும் பகலும் பாடுபடுகிறவர்கள், ஊரார் தூற்றுதலையே மாலையாகக் கொண்டு உழைப்பவர்கள், ஆகியோர் இருந்த இடத்தைப் பட்டப்பகலிலேயே விளக்குப் போட்டுத்தான் பார்க்க வேண்டியிருந்தது!
ரஷ்ய நிபுணர்களின் கொள்கையும் இலட்சியமும் என்ன என்பது யாருக்குத் தெரியாவிட்டாலும் அக்கிரகாரத்துக்கு நன்றாகத் தெரியும்! சட்டைக்குள்ளே பூணூல்! ஆனால் புடோவ்கின் கழுத்தில் மாலையிடுகிறார் அவர்! நெஞ்சுக்குள்ளே ஜாதி நஞ்சு! மலர் மாலை தூவுகிறாள், அந்த அணங்கு!
சேரிப்பக்கம் - பட்டினிப்பட்டாளத்தின் பக்கம்-செல்வதற்கு வாய்ப்புத் தரவில்லை, ரஷ்ய நிபுணர்களுக்கு!
திடீரென்று ஸ்டாலின் தமிழ் நாட்டுக்கு வருவதாக வைத்துக் கொள்வோம். அவர் நிச்சயம் மயிலாப்பூரில் தான் தங்குவார்!
ஜீவானந்தமும், தங்கமணியும், குமார மங்கலமம், கந்தசாமியும் ஸ்டாலினைத் தரிசிக்கக் கூட முடியாது!
சமர்த்தோன்னோ, அக்கிரகாரத்தார்? அதனால்!
ஒருக்கால் திராவிட நாடு கிடைத்து, பெரியார் திராவிட சமதர்மக் குடியாட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அவர் கழுத்தில் விழுகின்ற முதல் மாலை அக்கிரகாரத் துடையதாகத்தானிருக்கும். அந்த விழாப்பந்தலுக்குள் நுழைவதற்கே நமக்கு அக்கிரகாரந்தான் நுழைவுச் சீட்டு அனுப்ப வேண்டும்! இது நிச்சயம்!
புடோவ்கின் உலக சினிமா டைரெக்டர்களில் முதன்மையான நிபுணர்.
சர்கஸாவ் உலக நடிகர்களில் முதல் தரமானவர். இவர்கள் கொள்கை களையே தமிழ்நாட்டில் பரப்பி வருகின்ற ஒரு தலைவரை, அக்கிரகாரம் மென்று தின்றுவிடுவேன் என்கிறது. அதே கொள்கையைப் பல எதிர்ப்புகளுக்கிடையே நாடகமேடை மூலம் பரப்பி வருகின்ற எம். ஆர். ராதா நாடகத்துக்கு இங்கே தடை! அவரை அக்கிரகாரம் வெறுக்கிறது! அவர் நாடகத்துக்குச் சென்று பேசிய நீதிபதி சோமசுந்தரம் மீது எரிந்து விழுகிறார்கள், அதிகார பீடம் ஏறியுள்ளவர்கள்!
ஆனால் இதே நாஸ்திக நாட்டின் நிபுணர்களுக்கு, மதத்தை யொழித்த நாட்டின் கலைஞர்களுக்கு, தனி உடைமையைத் தகர்த்த நாட்டின் அறிஞர்களுக்கு - அக்கிரகாரத்தின் மகத்தான வரவேற்பு! பிரதம நீதிபதியின் தலைமை! மந்திரிகளின் வாழ்த்து!
பாருங்கள், வேடிக்கையை! கவனியுங்கள், இரட்டை நாக்குப் படைத்த வர்களின்” லீலா விநோதங்களை!
அடுத்த வரவேற்பு சித்ரா டாக்கீஸ் கொட்டகையில் நடைபெற்றது. இதில் நான் கவனித்த விஷயங்கள் இரண்டுதான்!
1. தந்தத்தினால் செய்யப்பட்ட கிருஷ்ணன் படத்தை புடோவ்கினுக்குப் பரிசாகத் தந்து, “கிருஷ்ணன் அன்பின் அறிகுறி” என்று கூறியது; (பகவத் கீதை படித்தவர்களுக்கு ஞாபகமாயிருக்கலாம்; அதில் கூறப்பட்டிருப்பது அன்புதானே!)
2. “அடுத்த தடவை நான் சென்னை வரும் போது தமிழில் பேச வேண்டும் என்பது என் ஆசை,” என்று புடோவ்கின் கூறியது! தேசீய மொழியாகிய ஹிந்தியில் என்றோ, கடவுள் மொழியாகிய சமஸ்கிருதத்தில் என்றோ கூறாதது ஏன்?)
- அன்புக்கு அணிகலமானவரும் கற்பனைப் பேர்வழியல்லாதவருமான புத்தரின் உருவம், ரஷ்ய நிபுணர்களுக்குத் தரப்பட்டிருந்தால் புத்திசாலித் தனமாயிருந்திருக்கும்! ஆனால் அக்கிரகாரம் தன் ஆரியமதப் பிரசாரத்தை விடுமா?
சமர்த்தேனானோ, அவா?
- குத்தூசி குருசாமி (3-2-51)
நன்றி: வாலாசா வல்லவன்