பெரியாரியலையே முழு நேரப் பணியாக ஏற்றுத் தொண்டாற்றிய பெரியாரியல் போராளி இராவணன் (45) முடிவெய்தி விட்டார். திருப்பூரிலிருந்து அவரது பெரியாரியல் பயணம் தொடங்கியது. தமிழ்நாடு திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் என்று தொடர்ந்து செயல்பட்டவர்.
மதுரைக்கு அருகே உள்ள அதிகாரப்பட்டி என்ற கிராமத்தைச் சார்ந்த இராவணன், திருப்பூருக்குப் பணிக்கு வந்தபோது, ‘பெரியாரிஸ்டாக’ மாறினார்.
15 ஆண்டுகாலம் தனது குடும்ப உறவுகளைத் துண்டித்துக் கொண்டு இயக்கத்தோடு இணைந்து முழு நேர ஊழியராக பெரியாரியக்கங்களில் களப்பணியாற்றினார்.
2007ஆம் ஆண்டு தஞ்சையில் அன்றைய பெரியார் திராவிடர் கழகம், ஜாதி ஒழிப்பு மாநாடு-பேரணி ஒன்றை நடத்தி சட்ட எரிப்பில் சிறைச் சென்ற போராளிகளுக்கு விருது வழங்கி கவுரவித்தது. அப்போது திருப்பூரில் தனது வேலையை உதறிவிட்டு, முழு நேரப் பணியாற்ற கழகத்துக்கு வந்து மாநாட்டு அலுவலகப் பொறுப்பேற்று செயல்பட்டார். அது முதல் எந்தப் பயனையும் எதிர்பார்க்காது முழு நேரப் பணியாற்றி வந்தார். திராவிடர் விடுதலைக் கழகத்திலும் முழு நேரப் பணியாற்றி வந்தவர், ‘காட்டாறு’ என்ற குழு பிரிந்த போது அவர்களுடன் சென்று பணியாற்றினார். ‘காட்டாறு’ குழுவில் இணைந்து செயல்பட முடியாத நிலையில் அதிலிருந்து விலகி சுமார் ஓர் ஆண்டுக்கு முன் சென்னை வந்து ‘நற்றிணைப் பதிப்பகத்தில்’ பணியாற்றி வந்தார். மீண்டும் திராவிடர் விடுதலைக் கழகத்துடன் உறவு கொண்டு சென்னை மாவட்டக் கழகத் தோழர்களுடன் நெருங்கிப் பழகி மீண்டும் கழகத்தில் இணைந்து பணியாற்ற விரும்பினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோரைச் சந்தித்து உளம் திறந்து பேசினார்.
சென்னை மாவட்டக் கழக அலுவலகமான பத்ரி நாராயணன் படிப்பகம் அருகிலேயே வீடு வாடகை எடுத்துத் தங்கினார். கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மதியம் தனது வீட்டில், நண்பருடன் மதிய உணவு அருந்திவிட்டு பேசிக் கொண்டிருந்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டவுடன் நண்பர் உதவியுடன் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். செய்தி அறிந்த கழகத் தோழர்கள் மாவட்ட செயாளர் இரா. உமாபதி, விழுப்புரம் அய்யனார் மற்றும் தோழர்கள், உடனே மருத்துவமனைச் சென்று மருத்துவர்களிடம் பேசி உடனடி சிகிச்சை கிடைக்க ஏற்பாடுகள் செய்தனர். இருதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள், ‘ஆஞ்சியோ பிளாஸ்’ சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதற்கிடையே செய்தி அறிந்த இராவணன் சகோதரர்கள், உறவினர்கள் சென்னை வந்து மதுரைக்கு அழைத்துப் போய் சிகிச்சை அளிப்பதாக முடிவு செய்தனர். 15 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சொந்த கிராமத்துக்குச் சென்றார். இராவணன் ஊர் சென்றவுடன் திடீர் மாரடைப்புக்குள்ளாகி முடிவெய்திவிட்டார்.
பெரியாரியத்துக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட கொள்கைத் தோழரை இளம் வயதிலேயே இழந்து நிற்கிறோம். ஈடு கட்ட இயலாத இழப்பு என்ற சொற்றொடருக்கு முழு நியாயம் வழங்கியிருக்கிறார் தோழர் இராவணன். திராவிடர் விடுதலைக் கழகம் வீரவணக்கம் செலுத்துகிறது.