2000ஆம் ஆண்டில் சென்னை அய்.அய்.டி.யில் நடந்த ஒரு நிகழ்வை சுட்டிக்காட்ட வேண்டும். பழங்குடி-தலித் இணையர்களுக்குப் பிறந்த சுஜி என்ற பழங்குடி பெண், 12ஆம் வகுப்பில் ஆந்திராவில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று, மாநில அரசின் விருது பெற்றவர். மாதம் ரூ.17,500 உதவித் தொகை பெற்று, 4 ஆண்டு பொறியியல் படிப்பை முடிக்க முடியும். ஆந்திராவிலே தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் சேர்ந்து படிக்க அழைப்பு விடுத்தும்கூட, அந்தப் பெண், சென்னை அய்.அய்.டி.யிலேயே படிக்க விரும்பினார். (பொதுவாக அய்.அய்.டி.களில் மாணவர்கள் சேர்க்கை தான் அதிகம் இருக்கும். மாணவிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே சேர்க்கப்படுகிறார்கள். இதிலும்கூட மனுதர்மக் கொள்கைதான்) தலித் மாணவர் என்றால் அவர்களுக்காக ஓராண்டு கூடுதல் படிப்பு. அதற்குப் பெயர் ‘தயாரிப்புப் பயிற்சி’. மாநிலத்திலே முதலிடம் பெற்ற மாணவியாக இருந்தாலும்கூட தலித் என்றால் அவருக்கும் தனிப் பயிற்சி கட்டாயம். இயற்பியல் ((Physics) மிகச் சிறந்த அறிவு பெற்றவர் சுஜி. தனிப் பயிற்சி வகுப்பில் டாக்டர் எம்.வி. சத்யநாராயணன் என்ற பார்ப்பனப் பேராசிரியர், வகுப்பில் இயற்பியல் தொடர்பாக ஒரு பாடத்தில் தடுமாறிக் கொண்டிருந்தபோது, மாணவி சுஜி, பேராசிரியர் பாடத்தில் செய்த தவறை திருத்தினார்.
அவ்வளவுதான். தனக்கு அவமானம் நேர்ந்து விட்டதாகக் கருதிய அந்த பேராசிரியர், அந்த மாணவியை தனிப் பயிற்சி தேர்விலேயே தோல்வியைத் தழுவச் செய்தார். அதிர்ச்சியுற்ற மாணவியின் பெற்றோர்கள், அப்போது அய்.அய்.டி. எதிர்ப்புப் போராட்டக்களத்தில் நின்ற பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் என்னை (விடுதலை இராசேந்திரன்) இல்லத்தில் சந்தித்து, கண்ணீர் விட்டனர். உடனே களத்தில் இறங்கினோம். பெரியார் திராவிடர் கழகம் பல்லாயிரக்கணக்கில் சுவரொட்டிகள் அச்சடித்து, அதன் வழியாக இந்த அநீதியை சென்னை நகரம் முழுதும் மக்களிடையே கொண்டு சென்றது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தை அணுகி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். அய்.அய்.டி. வளாக வாயிலிலேயே பொதுக் கூட்டம் நடத்தி, நிர்வாகத்தின் முறை கேடுகளை அம்பலப்படுத்தினோம். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அய்.அய்.டி.யிடம் விளக்கம் கேட்டது.
தேசிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையத்தின் சார்பில் அதன் உதவி இயக்குனர் ஏ.சத்ய நாராயணன், 8.6.2000 அன்று சென்னை அய்.அய்.டி. இயக்குனர் நடராஜனுக்கு ஒரு தாக்கீது அனுப்பினார். அதில், “தயாரிப்புப் பயிற்சியில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள பழங்குடிப் பிரிவு மாணவி சுஜியின் விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய வேண்டும். அல்லது மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். இதை செய்து முடித்த பிறகே அதிகாரபூர்வ தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். அதுவரை இப்போது வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று அந்த தாக்கீதில் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டது. பெரியார் திராவிடர் கழகம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது.