தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்காக சமர்க்களம் கண்டு விதையுண்ட மாவீரர்களுக்குச் செவ்வணக்கம்!

தமிழீழ மக்களின் விடுமை வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் தமிழீழத் தனியரசு ஒன்றே வழி என்ற மக்கள் கட்டளையைத் தலைமேற்கொண்டு, விடுதலைக் குறிக்கோளில் உறுதியான நம்பிக்கையுடன் வரலாறாகிப் போன பல்லாயிரம் மாவீர்ர்களை நெஞ்சிலேந்துவோம்!

உணவும் நீருமின்றி உயிர்வாழ முடியாது என்பது போல் விடுதலையின்றியும் உயிர்வாழ முடியாது என்ற தமிழீழ மக்களின் வரலாற்று வேணவாவை மெய்ப்படச் செய்திட தம்முயிர் தந்த மாவீர்ர்களை வணங்குவோம்!

ஈழம் என்ற சின்னஞ்சிறு தேசத்தை பன்னாட்டுலக அரங்கில் பேசுபொருளாக்கியது மாவீர்ர்களின் ஈகம்! சிங்களப் பேரினவாத்ததுக்கும் இந்தியப் பேரரசியத்துக்கும் அனைத்துலக நாட்டாண்மைகளுக்கும் அறைகூவலானது மாவீரர்களின் வீரம்!

மாவீரர்களை வணங்குவதில் தமிழீழ மக்களுடனும் உலகத் தமிழர்களுடனும் விடுதலையை நேசிக்கும் அனைவருடனும் இணைந்து கொள்கிறோம்!

புவிக் கோளத்தின் கண்டங்களெங்கும் நாடுகள் தோறும் விடுதலைக்காகவும் நீதிக்காகவும் மாற்றத்துக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் போராடும் அனைத்து மக்களுடனும் நம் மாவீரர்கள் பெயரால் தோழமை கொள்வோம்! குர்து தேசமும் காசுமீரமும் பாலத்தீனமும் தமிழீழம் போலவே நம் மனத்துக்கு நெருக்கமானவை! அரசுகளற்ற தேசங்களின் அணிவகுப்பு புதிய உலகு சமைக்கப் போகும் மெய்ந்நடப்பு நோக்கி முன்னேறுவோம்!   

- தியாகு