இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்தோடு மத்திய மாநில அரசுகள் திட்டங்களை உருவாக்குவது இல்லை. அதன் காரணமாக இளையச் சமூகம் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. படித்த இளைஞர்களே வேறு வழியின்றி கிரிமினல்களாக மாறும் நிலையை ஆட்சிகள்தான் உருவாக்கி வருகின்றன. உருவாகும் வேலை வாய்ப்புகளைக் கூட நிரந்தரப் பணிகளாக்காமல் ஒப்பந்த ஊழியர்கள் தற்காலிக ஊழியர்களாக குறைந்த ஊதியத்தில் நியமிக்கவே மத்திய மாநில ஆட்சிகள் விரும்புகின்றன.
அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் தொடர்வண்டித் துறையில் 13 இலட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். இதில் தென்னக தொடர்வண்டித் துறையில் மொத்தம் 1இலட்சத்து 2 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. சென்னை, திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம், சேலம் ஆகிய மண்டலங்கள் அடங்கியுள்ள இப்பிரிவில் 15,000 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. தொடர்வண்டித் துறையில் சில மாதங்களுக்கு முன்பு, 90,000 பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு விண்ணப்பங்கள் கோரியபோது, வந்த விண்ணப்பங்கள் 2 கோடியே 30 இலட்சம். அந்த அளவுக்கு இளைஞர்கள் வேலைக்காகக் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் தென்னகத் தொடர்வண்டித் துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக மத்திய அரசு இப்போது விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது காலியாக உள்ள 15,000 பணியிடங்களில் 5,000 இடங்களை ஓய்வு பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப் போகிறார்களாம். இது மிக மோசமான கண்டிக்கத்தக்க முடிவு. புதிய இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்கு கதவடைக்கும் முயற்சி. இதற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாக செய்திகள் வந்துள்ளன.
தொடர்வண்டித் துறையில் ஓய்வு பெறும் வயது 60. எல்லா கோட்டங்களிலும் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்தும் பணி தொடங்கிவிட்டாலும் சென்னை கோட்டத்தில் 1279 பணியிடங்களுக்கு ஓய்வு பெற்றவர்களைக் கொண்டு நிரப்பும் முயற்சிகள் நடக்கின்றன. இவர்களுக்கு கடைசியாக வாங்கிய ஊதியத்திலிருந்து பென்ஷன் தொகையைக் கழித்து மீதித் தொகையை மாத ஊதியமாக வழங்கப் போகிறார்களாம். அதுவும் இப்படி ஓய்வு பெற்றவர்களை நியமிக்கப் போகும் பணிகள் பாதுகாப்புத் துறை சார்ந்தவை. 75 கார்டுகள், 55 ஸ்டேஷன் மாஸ்டர்கள், 26 வெல்டிங் மாஸ்டர்கள், 134 பாயின்ட்ஸ் மேன்கள், 238 தண்டவாள பராமரிப்பாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவில் 390 பேர். ஓய்வு பெற்றவர்களால் இத்தகைய கடினமானப் பணிகளை செய்ய இயலுமா என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், இந்தப் பணிகளில் படித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் வாழ்க்கைகளில் ஒளியேற்றி வைக்க தொடர்வண்டித் துறை மறுக்கலாமா?
ஓய்வு பெற்றவர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவது என்ற கொள்கைக்கு உலகு முழுதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இது சமூக நீதிக்கும் எதிரானது. குறிப்பாக ஏற்கனவே பார்ப்பன அதிகார வர்க்கம் ஆதிக்கம் செலுத்தும் அய்.அய்.டி.களில் ஓய்வு வயதை 5 ஆண்டு காலம் உயர்த்தினார்கள். பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவித இடஒதுக்கீடு ஆணை அமுல்படுத்தப்பட்டவுடன் அடுத்து வந்த வாஜ்பாய் ஆட்சி, மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மேலும் உயர்த்தி புதிய வேலை வாய்ப்புகளே உருவாகாமல் தடுத்து நிறுத்தியது. தென்னகத் தொடர்வண்டித் துறையில் வடநாட்டுக்க hரர்கள் ஏராளமாகக் குவிக்கப்பட்டு வருவதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப்போது மற்றொரு பேரிடியான முடிவை மத்திய ஆளும் பார்ப்பனிய பா.ஜ.க. ஆட்சி, எடுத்திருக்கிறது.
நியாயமாக பணி ஓய்வு பெறும் வயதை இப்போது இருக்கும் 60லலருந்து குறைப்பதுதான் வேலைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் சரியான வேலை வாய்ப்புக் கொள்கையாக இருக்க முடியும். ஒரு நல்ல மக்கள் நல ஆட்சி என்றால், இத்தகைய முடிவைத் தான் எடுக்க வேண்டும். ஆனால் முடிவெடுக்க வேண்டிய அதிகார மய்யத்தில் ‘நந்திகளாக’ அமர்ந்திருக்கும் பார்ப்பன அதிகார வர்க்கம் தொடர்ந்து ‘மனுதர்மப் பார்வை’யோடு பல இலட்சம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை தடுப்பதற்கே திட்டங்களைத் தீட்டுகிறது. இந்த விபரீத முடிவை தொடர்வண்டித் துறை கைவிட வேண்டும். அரசியல் கட்சிகள், இயக்கங்கள், கண்டனக் குரல் எழுப்ப வேண்டிய மிக முக்கியமான பிரச்சினை இது.