யந்திரங்களை எல்லாம் “பேயின்” அம்சம் என்று கூறி வந்த காலம் ஒன்று இருந்தது. அந்தக்காலம் மக்களுக்கு காட்டுமிராண்டி உணர்ச்சியைப் பரப்பப்பட்ட காலம் என்றே சொல்ல வேண்டும். அல்லது முதலாளித் தன்மையின் சூட்சிப் பிரசார காலம் என்றே சொல்ல வேண்டும். சுதந்திர அறிவை உபயோகித்து கூர்மையான ஆராய்ச்சி செய்தபின், எவருக்கும் பாமரத் தன்மையாலும் சூட்சிப் பிரசாரத்தாலும் ஏற்பட்ட தன்மைகள் மாறி விடும்.
உலகில் ஒவ்வொரு நாட்டிலும் இம்மாதிரியான பாமரத்தன்மையும் சூட்சி ஆதிக்கமும் இருந்து வந்ததெனினும் அவை அறிவுக்கு மதிப்புத் தோன்றிய பிறகு மறைந்துகொண்டே வருகிறது. பெரும்பாகம் மறைந்தும் விட்டது.
அதுபோல்தான் நம் இந்தியாவிலும் இன்னும் சில விஷயத்தில் காட்டுமிராண்டித் தன்மையும், பாமரத் தன்மையும்; புத்தியையும் அனுபவ பலன்களையும், உபயோகித்துப் பார்க்காத பல விஷயங்களும் இருந்து வருகின்றன. அவற்றில் ஒன்றே யந்திரங்களைப் பேயின் தத்துவமென்பதும். இந்தத் தத்துவம் பெரும்பாலும் நீங்கிவிட்டதென்றாலும் சூட்சிப் பிரசாரத்தின் பயனாய் சிற்சில இடங்களில் இன்னும் சிறிது பேசப்பட்டே வருகின்றது.
யந்திரங்கள் பேயின் தன்மை என்று பலர் சொல்லி பிரசாரத்துக்கு ஆதாரமாய் எடுத்துக்காட்டப்படும் அத்தாட்சி என்னவென்றால் யந்திரமானது குறைந்த நேரத்தில் அதிகமான சாமான்களை உற்பத்தி செய்து விடுகின்றதால் வேலை செய்து பிழைத்துத் தீரவேண்டிய ஜனங்களுக்கு வேலை இல்லாமல் போய் விடுகின்றது என்றும் அதனால் பல பேர் பட்டினி கிடக்க நேரிடுகின்றதென்றும் சொல்லப்படுவதாகும்.இப்படிப்பட்ட கொள்கையை உடையவர்கள் அவ்வளவு பேரும் மனிதரில் ஒரு சாரார் (பெரும்பாலோர் கடவுள் சித்தத்தாலோ அல்லது வேறு காரணத்தாலோ) தூங்க வேண்டிய நேரம் போக மற்ற வாழ்நாள் அவ்வளவும் பாடுபட்டே– சரீரத்தால் கஷ்டப்பட்டே ஜீவித்து வாழ வேண்டியவர்கள் என் கின்ற எண்ணத்தைக் கொண்டே பேசுகின்றவர்களாயிருக்கின்றார்களே ஒழிய வேறில்லை.
உலகத்தில் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் பெரும்பாகமான நாடுகள் யந்திரப் பெருக்கு ஏற்பட்டு யந்திரப்பெருக்கு இல்லாத நாட்டின் செல்வங்களைக் கவர்ந்து செல்வம் பொங்கும் நாடுகளாகவே ஆகிவரு கின்றன; என்றாலும் அங்கெல்லாம் கூட ஜனங்களுக்கு வேலையில்லாக் கஷ்டம் இருந்து தான் வருகின்றது என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம்.
ஆனால் மேற்குறிப்பிட்ட மற்ற நாடுகளிலுள்ள மக்கள் தங்களுக்கு வேலையில்லாமல் போனதற்காக யந்திரங்கள் காரணமென்று கருதி அதற்காக யந்திரங்களையெல்லாம் பேயின் தன்மை என்று சொல்லி அப்பேயை ஓட்டுவதற்கு ராட்டினத்தை உடுக்கையாய்க் கொண்ட ஒரு பூசாரியால் யந்திரங்களை உடைத்துக் குப்பையில் போட்டு விட்டு சரீரத்தால் (கைராட்டினத்தால்) பாடுபடும்படியான வழியை யாரும் பின்பற்றவில்லை. பின்னர் என்ன செய்கிறார்கள் - செய்தார்களென்று பார்த்தால் யந்திரங்களின் பெருமைகள் நன்றாய் விளங்கும்.
யந்திரங்கள் ஏற்பட்டதின் பயனாய் ஜனங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்யும் வேலைத் தன்மையை அது ஒழித்ததே தவிர பணவருவாய்த் தன்மையை அது ஒழித்துவிடவில்லை.
ஒரு தேசத்தில் மக்கள் கஷ்டப்பட்டு ஜீவிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விடுமேயானால் அதனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஜனங்கள் கஷ்டப்படாமல் வாழ வேண்டியதா? அல்லது கஷ்டம் இல்லாததால் செத்துப் போக வேண்டியதா? என்பதை யோசித்தால் யந்திரத்தின் தன்மை இன்னது என்பது விளங்கிவிடும்.
ஆகவே யந்திரப்பெருக்கால் கொஞ்ச நேரத்தில் அதிக சாமான் உற்பத்தி ஆகின்றதென்றால் அது தொழிலுக்கு ஏற்பட்ட ஒரு லாபமே ஆனதால் அதனால் ஏற்படும் பயனை தொழிலாளியே அடைய வேண்டியது நியாயம் என்பது யாருக்கும் புலனாகும்.
ஆதலால் வேலையில்லாதவர்களுக்காகப் பரிதாபப்பட்டு மனம் இறங்கித் துக்கப்படும் மக்கள், தொழிலாளிகளுடைய உரிமையை அவர் களுக்கு வாங்கிக் கொடுக்க முயலாமல் தொழிலாளிகளின் உரிமையைக் கொள்ளை கொண்டு போகின்றவர்களிடம் கருணையும் தயவும் வைத்து அவர்களை (முதலாளியை) சும்மா விட்டு விட்டு அந்த முதலாளியை ஒழிப்பதற்காக பட்டினி கிடந்து “விரதத்துடன்” விரட்டிக்கொண்டு போகும் தொழிலாளியைத் தடுத்து அவன் கையில் ராட்டினத்தைக் கொடுத்து உட்கார வைப்பதென்றால் இது தொழிலாளிகளை வஞ்சிப்பதாகுமா? அல்லது அவர்களுக்கு நன்மை செய்வதாகுமா? என்பதை யோசிக்க வேண்டுகிறோம். கூடிய சீக்கிரத்தில் இந்தியாவுக்கு விவசாயத் துறையிலும் யந்திரங்களே பெருகப் போகின்றது என்பது நமது நம்பிக்கையாகும்.
விவசாயத்துக்கும் யந்திரமென்றால் விவசாயத்தை ஒரு “கைத் தொழில்” முறை போலவே பாவித்து விவசாயத்தில் உள்ள சகல வேலைக ளுக்கும், அதாவது உழுதல், விதைத்தல், நீர்ப்பாய்ச்சுதல், அருப்பு அறுத்தல், தாம்பு அடித்துத் தான்யமாக்கி மூட்டையில் போட்டுத் தைத்தல் ஆகிய காரியங்களை யந்திரங்கள் மூலமாகவே செய்விப்பதாகும். உழுவதற்கு ஏக்கர் 1 க்கு 2 மாடுகள், ஒரு கலப்பை, ஒரு ஆள்வீதம் நாள் கணக்காய் பாடுபடாமல், ஆயிரம் ஏக்கர், ஐநூறு ஏக்கர் கொண்ட விஸ்தீரணத்துக்கு ஒரு ஆளைக் கொண்ட ஒரு மோட்டார் கலப்பை (டிராக்டர்) வீதம் லக்ஷக்கணக்கான ஏக்கர் விஸ்தீரணமுள்ள பூமிகளை சில நாள்களில் வெகு சில ஆட்களைக் கொண்டே உழவும். அதுபோலவே அறுப்பு அறுக்கவும், தானியமாக்கவும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விஸ்தீரணமுள்ள பூமிக்கு ஒரு மோட்டார் (கம்யூன் என்னும்) அருப்பு யந்திரத்தைக்கொண்டு சில நாளில் வெகுசில ஆட்களால் செய்யும்படியாகவும் செய்துவிட்டால் முதலில் வேலை செய்து கொண்டிருந்த லக்ஷக்கணக்கான ஆட்களுக்கு வேலைக்கு என்ன மார்க்கம் என்பதையும், அதுபோலவே லக்ஷக்கணக்கான மாடுகளுக்கு என்ன வேலை என்பதையும் பற்றி யந்திரத்தைப் பிசாசு அம்சமென்று சொல்லு கின்ற ராட்டின உடுக்கை கொண்டு யந்திரப்பிசாசுகளை ஓட்டும் பூசாரிகளைக் கேட்கின்றோம்?
யந்திரங்களைத் துவேசிக்கின்ற ஒவ்வொருவரும், முதலாளி ஆதிக்கத்திற்கு அடிமையாகவோ-அல்லது முதலாளித்துவத்தை அறியாத ஞான சூன்யர்களாகவோ இருக்கின்றவர்களே தவிர சிறிதாவது தொழிலாளி (சரீரத்தினால் கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களின்) நிலைமையைக் கண்டு இறக்கப்படத் தகுதியுடையவர்களல்ல வென்பதே நமது பலமான அபிப்பிராய மாகும்.
ஏனெனில் யந்திரப்பிசாசை ஓட்டும் பூசாரிகள் என்பவர்கள் மனிதனுக் குள்ள கஷ்டத்தை ஓட்டுவதற்குப் பதிலாக அவன் சுகப்படுவதற்கு அதாவது அவனுடைய கஷ்டத்தை அகற்றுவதற்கு ஏற்பட்ட சாதனத்தை ஓட்டப் பார்க்கிறார்களே தவிர வேறில்லை.
யந்திரம் கூடாதென்றால் மனிதனுக்கு அறிவு விர்த்தி கூடாது என் பதுதான் அதன் அருத்தமாகும். அப்படியானால் யந்திரங்களைப் பேயின் அம்சம் என்று சொல்லுவதைவிட யந்திரங்களைக் கண்டுபிடித்த ஞானவான்களைப் பேயர்கள் என்றும், கொடுமைக்காரர்கள் என்றும் கொலைக்காரர்கள் என்றும், அயோக்கியர்கள் என்றும், பாவிகள் என்றும் சொல்லி அவர்களை எல்லாம் தேடிப் பிடித்து ஒழித்து விடுவதே நாம் கஷ்டப்பட்டு உழைத்து வாழ வேண்டிய மக்களுக்கு செய்யும் அருந்தொண்டாகும் என்று கருதி விடலாம்.
இது சற்றாவது அறிவுடைமையோ அல்லது யோக்கியமுடை மையோ ஆகிய காரியமாகுமா? என்று கேள்கின்றோம். நிற்க உலகில் கைத்தொழில் வகைக்கும் விவசாயத்தொழில்வகைக்கும் யந்திரங்களை உற்பத்தி செய்து யந்திரத்தால் செல்வம் பெருக்கிய, தேசங்களில் முதன்மையான தேசம் அமெரிக்காவேயாகும். அப்படிப்பட்ட அமெரிக்காவில்தான் கோடீஸ்வரர்களான ஆண்களும், பெண்களும் பலர் இருக்கின்றார்கள். மணிக்கு ஆயிரக் கணக்கான ரூபாய் வருமானமுள்ளவர்கள் அங்கு பலருண்டு என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அந்தத் தேசமும் அன்னிய ஆட்சி என்பதிலிருந்து விடுபட்டு குடிகளுடைய ஆட்சி என்னும் குடி அரசு நாடாகவே விளங்கி வருகின்றது. இப்படியெல்லாம் இருந்தும் அந்தத் தேசத்தில் இன்று 2 கோடி பேர்களுக்குமேல் வேலை இல்லாமல் இருப்பதாகப் பத்திரிக்கைகளில் காணப்பட்டது. இந்த 2-கோடி பேர்களில் வீடு வாசல் இல்லாமல் இரவில் முனிசிபல் ரிப்பேர் குழாய்களிலும் ஜலதாரை டிச்சு வளைவுகளிலும் தூங்கிவிட்டு பகலில் தெருவில் திரிகின்ற மக்களும் உண்டு என்று அமெரிக்கர் மூலமே கேட்டு அறிந்தோம். இப்படி எல்லாம் இருந்தும் அமெரிக்க வேலையில்லாத் தொழிலாளிகளோ அல்லது அவர் களிடம் அனுதாபமுள்ளவர்களோ ஒரு நாளும் யந்திரங்களை பேயின் அம்சம் என்று சொல்லிக்கொண்டு ராட்டின உடுக்கையின் மூலம் யந்திரப் பிசாசுகளை ஓட்ட முயலவே இல்லை.
பின்னர் என்ன செய்தார்கள் என்றால் வேலையில்லாத ஆட்களும் அவர்களது அனுதாபிகளும் முதலாளிகள் மேல் பாய்ந்தார்கள். சமதர்மக் கொள்கையை நாடுமுற்றும் பிரசாரம் பண்ணினார்கள். முதலாளிகளை துவேஷித்தார்கள். கஷ்டப்படும் மக்களுக்கு யந்திரங்கள் உதவி செய்ய ஏற்பட்டும் அதன் பயனை கஷ்டப்படும் மக்கள் அடையாமல் முதலாளிகள் அடைவதை நன்றாய் தொழிலாளிகள் உணர்ந்தார்கள். ஒன்றும் மார்க்கம் ஏற்படவில்லையானால் பொதுஉடைமைக் கொள்கை என்கின்ற ஒரு ஆயுதம் இருக்கின்றது என்பதை முதலாளிகளுக்கு எச்சரிக்கையாகக் காட்டினார்கள். இப்போது யந்திரப் பேய்களை ஓட்டாமல் யந்திரங்களை அழிக்காமல் யந்திரங்களை வெறுக்காமல் வேலையற்ற தொழிலாளிகளுக்கு வேலை கிடைத்து வருகின்றது. தொழிலாளிகளின் குறைகள் ராட்டினம் சுற்றாமலே பஞ்சாய் பறந்துவருகின்றது. ராட்டினம் சுற்றுவதில் ஆத்மசக்தி வளருகிறதென்றும் அது விஷ்ணு சக்கரமென்றும், அது சுற்றும்போது அதில் ஒரு ஓங்கார சக்தி புறப்படுகின்றதென்றும் அது வற்றாத சமுத்திரமென்றும் சொல்லும்படியான இந்த அவிவிவேக ஆபாசக் கற்பனைகள் ஒன்றும் அவர்களுக்கு (அமெரிக்கத் தொழிலாளிகளுக்கு) கற்பிக்காமலே வேலையில்லாத் திண்டாட்டம் என்னும் “பேய்” ‘நான் பிழைத்தேன் எங்களப்பன் பிழைத்தான்’ என்று சொல்லாமல் ஓடி மறைந்து வருகின்றது. இந்த மூன்று மாதத்தில் 30 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துவிட்டது. இந்த வருஷ முடிவிற்குள் பாக்கி பேருக்கும் வேலை கிடைக்குமாம். இதன் காரணம் என்ன என்பதை அறிஞர்கள் யோசிக்க வேண்டுமென்பதுதான் நமது நோக்கமாகும்.
அதாவது ஒரே ஒரு காரியத்தால் தான் இவ்வளவு வேலையில்லாத பேர்களுக்கும் வேலை கிடைத்துவிட்டது. அந்தக் காரியம் என்னவென்றால் நாம் இந்த நான்கு வருஷகாலமாய் “குடி அரசில்” அவ்வப்போது குறிப்பிட்டு வந்த காரியமேயாகும்.
அதுதான் தொழிலாளிகள் செய்துவரும் வேலை நேரங்களை குறைக்க ஏற்பாடு செய்ததேயாகும்.
அமெரிக்க குடிஅரசு தலைவரான பிரசிடென்ட் ரூஸ்வெல்ட்டானவர் தம்தேசத்தில் அனேகருக்கு வேலை இல்லாத காரணத்தால் பொதுவுடமைக் கொள்கை பரவிவிடும் என்ற காரணத்தைக் கொண்டு தொழிற்சாலைகளில் இப்போது வேலை செய்துவரும் நேரத்தில் தினம் ஒன்றுக்கு ஆள் ஒன்றுக்கு சுமார் 1-மணி நேர வேலையை குறைத்தார். அதாவது ஒரு மனிதன் ஒரு வாரத்திற்கு (6-நாளைக்கு) சுமார் 45-மணி நேரம் வேலை செய்வதை வாரம் ஒன்றுக்கு 40 மணிநேரம்தான் வேலை செய்ய வேண்டும் என்பதாக உத்திரவு போட்டார். ஆள் ஒன்றுக்கு வாரம் ஒன்றுக்கு 5-மணி நேரம் வேலை செய்வதைக் குறைத்ததின் மூலம் இந்த மூன்று மாதத்துக்குள் வேலையில்லாத முப்பது லட்சம் பேருக்கு வேலை கிடைத்து விடும் என்றும், ஏறக்குறைய இந்த வருஷ முடிவிற்குள் வேலையில்லாத எல்லோருக்கும் வேலை கிடைத்து விடும் என்றும் அறிக்கை விட்டுவிட்டார்.
இதற்கு காரணம் தொழிலாளிக ளுடைய கிளர்ச்சியேயாகும். அதோடு தொழிலாளிகள் பிறரை அதாவது சட்டசபைக்கும், ஸ்தல ஸ்தாபனத்துக்கும் போகவேண்டியவர்களும், மந்திரியாக வேண்டியவர்களும், தொழிலாளர்களை படிக்கட்டுகளாய் உப யோகித்துக் கொள்ளுபவர்கள் மூலம் தங்கள் கிளர்ச்சிகளைச் செய்யாமலும் தொழிலாளிகள் அல்லாத சோம்பேறி வாழ்க்கைக்காரரை தங்களுக்கு தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் வைத்துக்கொள்ளாமல் பாடுபட்டு வந்ததாலுமே அவர்கள் (அமெரிக்க தொழிலாளிகள்) வெற்றிபெற்றார்கள். நம் நாட்டு தொழிலாளிகளுக்கு முதலாளிகள் அக்கிரமங்களை எடுத்துக் காட்டாமல் கடவுளின் பெருமையையும், மேல்உலக மோட்ச வாழ்க்கையின் அருமை யையும் பிரசாரம் செய்து வரப்படுகிறது. ஆனால் அமெரிக்க தொழிலாளிகள் கடவுளையும், மோட்ச வாழ்க்கையையும், துக்ஷமெனக் கருதி எல்லா மக்களுக்கும், எல்லாப் பொருளும் எல்லா சுகபோகமும் சமம் என்கின்ற பொதுவுடமைத் தத்துவம் போதிக்கப் பட்டு, அதை அவர்கள் கைக்கொண்டு வெற்றி பெற்றார்கள். இப்பொழுது நமது நாட்டு தொழிலாளிகளும், தொழி லாளர்களிடம் அபிமானமிருக்கும் தர்மப் பிரபுக்களும் பொதுவுடமைக் கொள்கையோ தலைவிதிக் கொள்கையையோ மறுப்பதிலோ பிரசாரம் செய்யாவிட்டாலும் “பிச்சை போடாவிட்டாலும், நாயைப் பிடித்துக் கட்டு” என்பதுபோல் இயந்திரங்கள் பிசாசின் அம்சம் என்கின்ற முதலாளித் தன்மைக்கு அனுகூலமான முட்டாள் பிரசாரத்தையாவது இனிச் செய்யாமல் இருக்கும்படிக்கும் செய்ய இடம் கொடுக்காமல் தொழிலாளிகளைப் பார்த்துக் கொள்ளும் படிக்கும் எச்சரிக்கை செய்கின்றோம்.
(குடி அரசு - தலையங்கம் - 13.08.1933)