+2 பொதுத் தேர்வை எப்படியாவது, எப்போதாவது, கற்றுக் கொடுக்காமலேயே கட்டாயமாக நடத்தினால் ஏழைக் குழந்தைகளே அதிகம் பாதிப்படைவார்கள்.
நடப்புக் கல்வியாண்டு +2 பொதுத் தேர்வை தற்போதைய சூழலில் ரத்து செய்வதாக அறிவிப்பதே சரியான முடிவாக இருக்கும்.
பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்றால் பள்ளிகளைத் திறக்க வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும். பாடங்களை நடத்த வேண்டும். கோவிட் தொற்று பேரச்சமூட்டும் சூழலில் இதற்கான கால அளவை நிர்ணயம் செய்ய முடியாது.
ஒரு வேளை மூன்று அல்லது நான்கு மாதங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், வேலம்மாள் போதி கேம்பஸ் போன்ற தனியார் பள்ளிகளில் ஏற்கனவே இணைய வழியில் படித்த சில ஆயிரம் மாணவர்களை எப்படியாவது பொதுத் தேர்வுக்குத் தயார் செய்து விடுவார்கள்.
ஆனால், 5 லட்சத்திற்கும் அதிகமான அரசுப் பள்ளி மாணவர்களை மிகக் குறுகிய நாளில் பொதுத் தேர்வுக்கு தயார் செய்ய முடியாது. நோய்த்தொற்று, ஊரடங்கு, வேலை வாய்ப்பு இழப்பு, வருமானம் இழப்பு ஆகிய கரணங்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கே இயலாத நிலையில் இருப்பர்.
பள்ளிக்கு வருபவர்களை வைத்து, பாடங்களைக் குறைத்து, கற்பிக்கும் நேரங்களைக் குறைத்து, பேரளவில் பொதுத் தேர்வு நடத்தினாலும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வில் மதிப்பெண் பெற முடியாது.
தனியார் பள்ளி மாணவர்களுக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சமமான கற்றல் வாய்ப்புகளை வழங்காமல் ஒரே பொதுத் தேர்வின் மூலம் இருவகைப் பிரிவினரின் கல்வித் திறனை மதிப்பீடு செய்வது நியாயமற்றது.
நியாயமற்ற தேர்வு முறை மூலம் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிப் படிப்புக்கான சேர்க்கை வழங்கினால் ஏழை மாணவர்கள் முற்றிலுமாகப் பாதிக்கப்படுவர்.
நடப்புக் கல்வியாண்டுக்கு மட்டும் +2 பொதுத் தேர்வை ரத்து செய்யவேண்டும். தற்போது +2தேர்வு எழுத இருப்பவர்கள் 2018 - 2019 இல் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதி இருப்பார்கள்.
எனவே பத்தாம் வகுப்பு மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் அனைத்து வகையான கல்லூரிக் கல்விப் படிப்புகளுக்கும் வரும் கல்வியாண்டில் மட்டும் சேர்க்கை நடத்த தமிழ்நாடு அரசு முடிவெடுப்பதே மாணவர் நலனுக்கு ஏற்றது.
கல்லூரி மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு +2 பொதுத் தேர்வுப் பாடங்களுக்கும் இணைப்புப் பாடப் பயிற்சி அளிக்க வழி வகை செய்ய முடியும்.
மருத்துவப் படிப்புச் சேர்க்கையைப் பொருத்த வரையில் தமிழ் நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் சட்டத்தை திமுக அரசு உடனே சட்டமன்றத்தைக் கூட்டி நிறைவேற்ற வேண்டும். மருத்துவப் படிப்பிற்கும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் தமிழ் நாடு அரசு சேர்க்கை நடத்த வேண்டும்.
- சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு