“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.
இன்றைக்கும் ராமனை உயர்த்திப் பேசிக் கொண்டிருக்கிற ஒரு கூட்டம் இருக்கிறது. நாம் இராவணனை உயர்த்திப் பிடிக்கிற கூட்டம். இருவரும் கற்பனைக் கதாபாத்திரங்கள் என்பதில் நமக்கு எந்தக் கருத்து மாறுபாடும் இல்லை. அவர்கள் எழுதியபடியே பார்த்தாலும்கூட என்றுதான் நாம் சொல்லுகிறோமே தவிர, நாம் அதை நம்பிக் கொண்டு பேசவில்லை.
கம்பர் ஒரு இடத்தில், ’இரக்கம் எனும் பொருளிலா அரக்கன்’ என்று இராவணனைப் பற்றி சொல்லியிருப்பார். இராமன்தான் தீயவன், இராவணன் அல்ல என்று நிறுவுவதற்காக நாடகம் ஒன்று நடந்தது. எல்லோரும் இறந்துபோன பிறகு வழக்கு நடக்கும் என்பதுபோல கற்பனையில் இந்த நாடகம் உருவாக்கப்பட்டிருக்கும். நீதி தேவன் முன்னால் எல்லோரும் நிற்பார்கள். என்னை இரக்கமெனும் பொருளிலா அரக்கன் என்று கம்பர் சொல்லிவிட்டார் என்று கம்பர் மீது இராவணன் வழக்கு கொடுப்பார். வழக்கு விசாரணை நடக்கும். அப்போது, மனைவியைக் குழந்தையோடு காட்டில் துரத்தி விட்டாயே , மறைந்திருந்து கொன்றாயே இரக்கமுள்ளவனா நீ என்று ராமனைப் பார்த்து இராவணன் ஒவ்வொன்றாகக் கேட்பார். கம்பன் எல்லா கேள்விக்கும் பதில் கூறி சமாளிப்பார். இறுதியாக நீதி தேவனே மயக்கமடைந்து விழுந்துவிடுவார். அப்படித்தான் அந்த நாடகம் முடியும்.
சிலவற்றை இப்போது நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 1978ஆம் ஆண்டில் பெரியார் நூற்றாண்டு விழா எடுக்கப்பட்டது. ஒரு ஆண்டு முழுவதும் எடுக்கப்பட்ட இதன் நிறைவு 1979ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி சென்னையில் நடந்தது. நூற்றாண்டு விழா நிறைவு மாநாட்டில்தான் அந்த ராமாயண நாடகம் போடப்பட்டது. இதை எல்லா கட்சிகளும்தான் நடத்துவார்கள் என்று கருதிவிட இயலாது.
திராவிடர் கழகம் நடத்திய அந்த மாநாட்டில் நடந்த நாடகத்தில் நடித்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள். அதுதான் சிறப்பு. நீதிதேவனாக நடித்தவர் அண்ணாவின் நெருங்கிய நண்பர் சி.வி.ராஜகோபால். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இவர் எம்.எல்.சியாகவும் இருந்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைச்சராக இருந்த சி.எம்.அண்ணாமலைதான் கம்பராக நடிக்கிறார். 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து, 2 முறை காஞ்சிபுரம் நகராட்சியின் தலைவராக இருந்த கே.எம்.ராஜகோபால் என்பவர் இராவணனாக நடித்தார். தோழமைக் கழகம், தாய்க் கழகமாக இருந்தாலும்கூட ஒரு முன்னாள் அமைச்சர் நாடகத்தில் நடிப்பதை இப்போது எண்ணிப் பார்க்க இயலுமா? ஆனால் இவர்கள் நடித்தார்கள்.
கொள்கையை எடுத்துச் செல்வதுதான் நோக்கம் என்று வாழ்ந்த முந்தைய தலைமுறையினரை நினைவூட்டுவதற்காக இதைச் சொல்லுகிறேன். அதேபோலத்தான் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம். நீ என்னதான் மன்னனாக இருக்கலாம். ஆனால் ஒரு சூத்திரனாக இருந்து இந்து சாம்ராஜ்ஜியத்திற்கு முடி சூட்டிக் கொள்ள இயலாது என்று சொல்வதுதான் அந்த நாடகம். அதைச் சொல்லி அவர்கள் விளக்குவார்கள்.
இராமாயணத்தை எரிக்க வேண்டுமென்று பெரியார் ஒரு போராட்டத்தை அறிவிக்கிறார். அந்தப் போராட்டத்தை விளக்குவதற்காக அண்ணா பரப்புரை செய்கிறார். அதற்கு எதிர்ப்பு வருகிறது. சேலத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் பேசுகிறார்.
சென்னையில் அண்ணாவும் ஈழத்து அடிகளும் ஒருபக்கம் இராமாயணத்தை எரிக்க வேண்டுமென்று பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் இரா.பி.சேதுப்பிள்ளை போன்ற தமிழறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவன் சீனிவாசன் இதை எதிர்த்துப் பேசுகிறார்கள். தமிழ்நாடு இந்து சமய அறநிலையைத் துறையின் (அப்போது இந்து பரிபாலன சங்கம்) தலைவராக சி.எம்.ராமச்சந்திர செட்டியார் (கோவைக் கிழார்) இராமாயணத்தை ஏன் எரிக்க வேண்டும் என்று சென்னையில் நடந்த விளக்கக் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். அப்போது ஆணையராக இருந்தார். வழக்கறிஞரும்கூட. இதுபோல அரசு ஊழியர்கள் தலைமையில் இப்போது நடத்த இயலுமா?
1943ஆம் ஆண்டில் அண்ணா இதைப் பேசியபோது காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்தது. இந்து அறநிலையத் துறையின் ஆணையாளராக இருந்தவர் இராமாயணத்தை ஏன் எரிக்க வேண்டுமென்ற விளக்கக் கூட்டம் நடத்தியதோடு மட்டுமில்லாமல் ‘கோயில் பூனைகள்’ என்ற புத்தகத்தையும் எழுதினார் கோவைக் கிழார். கோயில்களில் நடக்கிற திருட்டுக்களைப் பற்றிய நூல். திருச்செங்கோட்டு கோயிலில் மட்டும்தான் அர்ச்சகன் உண்டியலிலிருந்து திருடினான் என்று எண்ண வேண்டாம். பல கோயில்களில் திருட்டு நடந்துள்ளது. அத்தகைய கோயில் திருட்டுக்களை தொகுத்து அவர் புத்தகமாக எழுதினார். அந்த நூலின் மறுபதிப்பை திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது.
சேலத்தில் நடந்த கூட்டத்துக்கு, சேலம் கல்லூரியின் முதல்வராக இருந்த இராமசாமிக் கவுண்டர் தலைமை தாங்கினார். அவர் நாமம் போட்ட பக்தியாளர். ஆனால் பார்ப்பன எதிர்ப்பாளர். 27ஆண்டுகள் கல்லூரி முதல்வராக இருந்த அவர் இராமாயணத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பேசுகிறார். இன்றைக்கு ஏன் அப்படிப்பட்ட தலைவர்கள் கிடைக்கவில்லை, ஆணையாளர்கள் ஏன் முன்வருவதில்லை என்று எண்ண வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.
பார்ப்பனர்கள் எப்போதும் தங்கள் சிந்தனையில் சரியாக இருந்தார்கள் என்பதைப் போல, நம்மவர்களும் இருந்திருக்கிறார்கள். இரண்டுமுறை முதல்வராகியும் ஆட்சியை இழந்தார் இராஜகோபாலாச்சாரியார். 1939ஆம் ஆண்டு ஆட்சியை விட்டு சென்றவுடன் வியாசர் விருந்து என்ற நூலை இராஜாஜி எழுதினார். 1954ஆம் ஆண்டு குலக் கல்வி திட்டம் கொண்டு வந்து ஆட்சியை விட்டு சென்றபோது சக்கரவர்த்தி திருமகன் என்று இராமாயணத்தை எழுதினார். அதற்குக் கலைஞர் முரசொலியில் பதில் எழுதினார். இராஜாஜியின் அப்பா பேரும் சக்கவர்த்திதான். அதனால் சக்கவர்த்தியின் திருமகன் என்று கலைஞர் எழுதினார். இராஜாஜி என்று அவர் எழுத, கலைஞர் மூகாஜி என்ற பெயரில் எழுதினார். இது பின்னாளில் புத்தகமாக வந்தது. வேலூர் திராவிடன் பதிப்பகத்தார் இந்த நூலை அச்சிட்டார்கள்.
இராமாயணத்துக்கும் பரதாயணம் என்று கலைஞர் எழுதினார். இராமன் என்ன செய்தான், பரதன்தான் ஆட்சி செய்தான். ஒரே ஒருமுறை ஆட்சி செய்து மரண தண்டனை அளித்துவிட்டு சென்றுவிட்டான் ராமன். சம்பூகனின் தலையை வெட்டியது தான் ராமன் செய்த சாதனை. வேறு என்ன செய்தான் என்று எழுதினார். அரசியல் கட்சியானாலும் இந்த சிந்தனைகள் தமிழ்நாட்டில் நிலவ வேண்டுமென்று இருந்த தலைவர்களைத்தான் கலைஞர் நினைவேந்தல் நிகழ்வில் நினைவூட்டிக் கொண்டிருக்கிறோம். அதை எண்ணிப் பார்த்து இப்போதிருக்க அரசியல் தலைமைகளும் அந்தப் போக்கினை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவலில்தான் இதையெல்லாம் முன்வைக்கிறோம்.
காவியை இங்கே நுழைவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று பதவியேற்றவுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள். அதை இப்போது எனக்கு முன்னால் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கூட இங்கே சுட்டிக்காட்டினார்கள். அதுதான் ஒட்டு மொத்த தமிழர்களுக்குப் பாதுகாப்பு. அதை உணர்ந்து அவர் பேசியிருப்பதுதான், கலைஞரின் ஆட்சி அமைய, அதை நோக்கிப் போகிறவரை மகிழ்ச்சியோடு நாம் பார்த்து தான் கலைஞரின் இந்த நிகழ்வில் நாம் கலந்து கொண்டிருக்கிறோம்.
திராவிட இயக்கத்தைப் பற்றியே பேசப்படுகிற சில செய்திகளையும் நாம் பேச வேண்டியத் தேவையில் இருக்கிறோம். திராவிடம் என்பதே ஏதோ ஆபத்தை விளைவிக்கிற ஒரு சொல் என்பதைப் போல பேசிக்கொண்டிருக்கிறார்கள். திராவிடம் என்ற வார்த்தையையே பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் இவர்கள் காலத்தில் கண்டுபிடித்த சொல்லைப் போலவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது வரலாற்றுக் காலந்தொட்டு இருக்கிறது. அதற்குள் போக விரும்பவில்லை. அண்மைக் காலத்தில் வைக்கப்பட்ட வாதங்களை மட்டும் பார்ப்போம்.
(தொடரும்)
தொகுப்பு: ர.பிரகாசு