ஒருவர் சமூகப் பொருளாதாரப் படிநிலையில் முன்னேறிச் செல்வதற்குச் சவால் என்னவென்று எண்ணிப் பார்த்தால், இது புனிதம்; இது புனிதமல்ல போன்ற வேறுபாடுகளைக் கற்பிக்கும் பழமைவாதக் கருத்தியலும், இக்கருத்தியலின் விளைவாக ஏற்பட்ட சமூகப் படிநிலைகளும், ஏற்றத்தாழ்வுகளும் கொண்ட இறுகிப்போன ஒரு சமூக அமைப்புமாகும். இத்தகைய அமைப்பில் ஒருவர் சமூக மற்றும் பொருளாதாரப் படிநிலையில் முன்னேறிச் செல்வது என்பதே சவால்தான்; அது அனைவர்க்கும் இயல்பாக அமைந்துவிடக் கூடியதல்ல. பிறப்பின் அடிப்படையில் அமைந்துவிடும் இந்த ஏற்றத்தாழ்வில், ஒருவர் முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்புகள் கொண்ட சூழல் உருவாகாமல் போனால், அது அந்தத் தனிமனிதரை மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்தையே பின்னிழுத்துவிடும். இத்தகைய படிநிலைகள் கொண்ட சமூகக் கட்டமைப்பில், ஒருவர் தன் வாழ்வில் வளர்வதற்குத் தேவையான தகவல்களே அவருக்குச் சரியான சமயத்தில் சென்று சேர்வதில்லை. தகவலறிவு பெறுவதிலேயே ஒரு சமச்சீர்நிலை இங்கே இல்லை. மேலும், ஒருவர் தன் பொருளாதாரத் தேவைக்காகவும் பண்பாட்டுக் காரணத்திற்காகவும் நீண்ட காலத்திற்கு மற்றவரைச் சார்ந்து இருப்பதானது. அவர் தன் சுய மதிப்பைத் தானே குறைத்துக் கொள்ளும் அவலச் சூழலையும் உருவாக்குகிறது.

முன்னேற்றத்திற்கு அச்சாரமாய் விளங்கி வரும் திராவிட இயக்கம் பல்வேறு வகைகளில் மாணவர்களை படிக்க தூண்டவும், இடைநிலை கற்றலை தடுக்கவும், மேல்நிலை படிப்பை தொடரவும், வேலைவாய்புக்கும் வழிவகை செய்து உள்ளது, செய்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்றைய திராவிட மாடல் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் கல்வி செயல்திட்டங்கள் வெற்றியடைவதை கண்டு மற்ற மாநிலங்களும் திராவிட மாடல் அரசின் கல்வி திட்டங்களை செயல்படுத்தும் ஏற்பாட்டில் உள்ளன. அதற்கு சான்றாக 2019- 20 ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு அரசின் உயர் கல்வியில் மாணவர்களின் மொத்த பதிவு விகிதம் Gross Enrollment Ratio (GER) 51.4%. அதே  ஆண்டில் பிஜேபி ஒன்றிய அரசு ஆளும் மொத்த இந்தியாவின் GER சதவிகிதம் 21.5% முதல் 27.1% தான் உள்ளது.

mk stalin 192இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கை 2020-யை கொண்டு வந்துள்ள ஒன்றிய அரசு, இந்த சதவிகிதத்தை 50% ஆக உயர்த்த 2035  க்குள் மோடி அரசால் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 2019-2020-ம் ஆண்டுக்கான உயர்கல்வி தொடர்பான அகில இந்திய கணக்கெடுப்பில், நாடு முழுவதும் சராசரியாக 27.1% மாணவர்கள் உயர்கல்விக்குச் சென்றிருக்கிறார்கள். இந்த அளவீட்டில் தமிழ்நாட்டின் GER, ஒட்டுமொத்த இந்தியாவின் GER அளவை விடக் கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சொல்லப் போனால், 2019-2020-ல் தமிழ்நாட்டின் GER 51.4%. அதாவது, 2019-2020-ல் 18-23 வயதுள்ள இளைஞர்கள் 35.2 லட்சம் பேர் உயர் கல்வியில் சேர்ந்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2019-20-ம் ஆண்டின் கணக்கின்படி, மொத்தம் 2,610 கல்லூரிகள் உள்ளன. 35.2 லட்சம் பேர் உயர்கல்விக்குச் சென்றுள்ளனர். ஆராய்ச்சி படிப்பான பி.எச்.டி. பட்டம் பெறுவதற்கான மாணவர் பதிவும் தற்போதைய ஆண்டில் அதிகரித்திருக்கிறது. 2018-2019-ம் கல்வி ஆண்டில், 25,820 மாணவர்கள் பி.எச்.டி. பட்டம் பெறப் பதிவு செய்துள்ள நிலையில், 2019-2020-ம் கல்வி ஆண்டில் 15,828 ஆண்களும், 14,832 பெண்களும் என்று 30,660 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இத்தகைய முன்னேற்றதிர்க்கு திராவிட இயக்கங்களின் உழைப்பே காரணம். தமிழ்நாடு அரசின் இலக்கை எட்ட ஒன்றிய அரசு செயல்பட வேண்டுமானால், புதிய கல்வி கொள்கை எனும் மனுதர்ம கொள்கையை விட்டு  தமிழ்நாட்டை தான், திராவிட மாடல் அரசை தான் பிஜேபி பின்பற்ற வேண்டும் என்பது கண்முன்னே தெரிகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு மாணவர்களின் கல்விக்கு,வேலைவாய்ப்புக்கு வகுத்த சில திட்டங்களை வரிசைபடுத்துவது சிறந்தாக இருக்கும்.

உயர்கல்விக்கான உதவித்தொகைகள்

தமிழ்நாட்டில் மாநில, மத்திய அரசுகள் செயல்படுத்திவரும் உயர்கல்விக்கான உதவித்தொகைகள் இருபதுக்கும் மேற்பட்டவை. அனைத்து உதவித்தொகைகளுக்கும் ஒரே இடத்தில் விண்ணப்பிக்க, வரும் கல்வி ஆண்டு முதல் State Scholarship Portal ஒன்றைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது. மிகவும் எளிய முறையில், விவரங்களின் அடிப்படையில், சரியான உதவித்தொகைகளுக்கு விண்ணப்பிக்க இது உதவியாக இருக்கும்.

முதல் பட்டதாரி உதவித்தொகை

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவியருக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பு 2 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு வருடமும் ரூபாய் 20,000 உதவிதொகை வழங்கபடுகிறது.

உயர்கல்விக்கான நலத்திட்டங்கள்

மூவலூர் இரமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம்

திட்டத்தின் நோக்கம் பெண்களுக்கு உயர்கல்வி அளிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல். குழந்தை திருமணத்தை தடுத்தல். குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல். பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல். பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல். உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்கச் செய்தல். உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல். பெண்களின் சமுக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் வாய்ப்புகளை அதிகரித்தல் போன்று இத் திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் படித்து, இளங்கலை பட்டப்படிப்பு (UG Degree), டிப்ளமோ (Diploma), ITI போன்ற படிப்புகளை மேற்கொள்ளும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

7.5% தொழில்முறை படிப்புகளில் இட ஒதுக்கீடு (7.5% Preferential Allocation)

அரசுப் பள்ளியில் படித்த மாணவ, மாணவியருக்கு 7.5% தொழில்முறை படிப்புகளில் இட ஒதுக்கீடு (7.5% Preferential Allocation) பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை போன்ற தொழில்முறை படிப்புகளில் 7.5% இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடு

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஒவ்வொரு அரசு மருத்துவக்கல்லூரியிலும் 7.5% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. 200 இடங்கள் இருக்கும் ஒரு கல்லூரியில் 15 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே! சென்ற வருடம் MBBS இல் 455 இடங்களும் BDS இல் 114 இடங்களும் அரசுப் பள்ளி மாணவர்களால் நிரப்பப்பட்டன.

நான் முதல்வன் திட்டம்

இந்தத் திட்டத்தின் மூலமாக மாணவர்கள் சிறப்புப் பயிற்சி பெற முடியும். தங்களுடைய திறன்களுக்கு ஏற்ப அவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதையும் இத்திட்டம் உறுதி செய்கிறது. மாநிலக் கல்வி நிறுவனங்களில், மாணவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

நுழைவுத் தேர்வுகளுக்கான வினா வங்கிகள்

தேசிய அளவிலான பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்குப் பயன்படும் வகையில் தமிழ்நாடு பாட நூல் கழகம், 'உயர்கல்வி நுழைவுத் தேர்வு நூல் வரிசை' என 6 வினா வங்கிகளை வெளியிட்டுள்ளது.

பாலிடெக்னிக் மற்றும் ஐஐடி கல்லூரிகள்

 தமிழ்நாட்டில் மொத்தம் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 34 அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 403 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளும் உள்ளன. இப்பாலிடெக்னிக் கல்லூரிகளில் 66 வகையான பட்டயப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறையில் சாதிக்க நினைக்கும் மாணவர்களுக்குத் தமிழ் நாட்டில் இருக்கும் இப்பாலிடெக்னிக் கல்லூரிகள் மிகச் சிறந்த கல்வியை அளித்து, தொழிற்துறைக்குத் தேவையான திறன்களையும் மாணவர்களுக்குப் பயிற்றுவித்து அனுப்புகின்றன. அதிலும் குறிப்பாக 2023 ஆம் ஆண்டு முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்குப் புதிய மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு எண்ணற்ற சலுகைகளை அளிக்கிறது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயில்வோர்க்குக் கல்விக்கட்டண விலக்கு ஒவ்வோர் ஆண்டும் 7,500 அரசு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இலவசமாக 25 நாள்களுக்குத் தொழிலக உள் பயிற்சி அளித்து வருகிறது. இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு அத்தொழில் நிறுவனத்திலேயே வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல். ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை திட்டம். முதலாம் ஆண்டு பாடங்களுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்கள். பயணக் கட்டணச் சலுகை. வணிகப் பயிற்சி பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்கள் வழங்கும் அனைத்து இளநிலை வணிகப் பாடப்பிரிவுகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் நேரடியாக இரண்டாம் ஆண்டு நேரடிச் சேர்க்கைக்கான வசதி. மேலும், பல்வேறு வகையான புதிய பாடப்பிரிவுகளும், உட்கட்டமைப்பு வசதிகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2022-2023ஆம் கல்வியாண்டு முதல் முக்கியமான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழ் வழியில் பட்டயப்படிப்புகள் அறிமுகம். மகளிருக்கென்று ஆறு புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம். பல்வேறு அரசுத் தொழில் நுட்பக் கல்லூரிகளில் கூடுதல் விடுதி கட்ட நிதி ஒதுக்கீடு என்று தொடர்ந்து தொழிற்கல்விக்கான முக்கியதுவம் தமிழ்நாடு அரசு அளித்து வருகிறது.

அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள் (Govt ITls)

தற்போதைய சூழ்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் படித்து முடித்து வெளியில் வரும்போது, வேலையின்மை விகிதம் அதிகரிக்கிறது. 2021- மே மாதக் கணக்கின்படி, 2021- மே மாதக் கணக்கின்படி, தமிழகத்தின் வேலையின்மை விகிதம் 28.0 சதவிகிதமாக உள்ளது. வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதிலும் அரசு முனைப்புக் காட்டுவதோடு, தனியார் பங்களிப்பையும் ஊக்கப்படுத்த, அவர்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகள், மானியங்கள் என தொடர்ந்து தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மாநிலத்தில் வளர்ந்து வரும் தொழிற்சாலைகளுக்குத் தொடர்ந்து திறன்மிக்க தொழிலாளர்களை வழங்கிடும் நோக்கில் 102 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் செயல்படுகின்றன. இவற்றில் எலெக்ட்ரிசியன், பிட்டர், மெக்கானிக் மோட்டார் வெஹிகிள், டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர் போன்ற 55 பொறியியல் தொழிற்பிரிவுகளிலும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அண்ட் ப்ரோக்ராம்மிங் அசிஸ்டன்ட், சூயிங் டெக்னாலஜி, உணவு தயாரித்தல். பேஷன் டிசைனிங், டெஸ்க்டாப் பப்ளீசிங் ஆபரேட்டர் போன்ற 24 பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அறிவியல்,பணிமனை கணக்கு, பொறியியல் வரைபடம், அரசு சார்பில் வேலைவாய்புக்கான திறன் பயிற்சி அளிக்கபடுகிறது.

பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை ஊக்கப்படுத்துதல்

பட்டியலினத்தவர். பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் திறன்பயிற்சி பெறுவதை ஊக்கப்படுத்திடும் வகையில் பிரேத்யேகமாக 2 பட்டியலின அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள் சிதம்பரம் மற்றும் வடகரை ஆகிய இடங்களிலும், 6 பழங்குடியின அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள் அவர்கள் அதிகம் வசிக்கும் இடங்களான சங்கராபுரம், ஆனைக்கட்டி, கருமந்துறை. ஜமுனாமரத்தூர், கொல்லிமலை, கூடலூர் ஆகிய இடங்களிலும் செயல்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கென அனைத்துத் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் 5 சதவீதம் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. திறன்பயிற்சி பெறுவதற்கு வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வரையிலும் பெண்களுக்கு 14 முதல் அதிகபட்ச வயது வரம்பு இன்றிச் சேரலாம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மகளிரைத் திறன் பயிற்சிக்கு ஊக்கப் படுத்துதல்

மகளிர் திறன் பயிற்சிக்கு சேருவதை ஊக்கப்படுத்திடவும் பாலின சமத்துவத்தை அடைந்திடவும் பிரேத்யேகமாக 10 அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையங்களும், 3 தொழிற்பயிற்சி நிலையங்களில் மகளிர் பிரிவுகளும் செயல்படுகின்றன. இவைதவிர அனைத்துத் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் 30 சதவீதம் இட ஒதுக்கீடு மகளிர்க்கென வழங்கப்படுகிறது.

தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களை ஊக்குவித்தல்

மாநிலத்தில் இயங்கி வரும் 326 தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களிலும் 50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேர்க்கை செய்யப்படும் மாணவர்களின் பயிற்சிக் கட்டணத்தை அரசே ஏற்று அதனைத் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்குத் திரும்ப வழங்கி வருகிறது. இக்கட்டணம் பொறியியல் தொழிற்பிரிவுகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ.16800/- எனவும், பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ.13000/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் முதல் 100 பயனாளிகளுக்கு ரூ.57.55 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க ரூ.18.94 கோடி மானியத்துக்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அனைத்து தொழில் பிரிவுகளையும் உள்ளடக்கி ரூ.1,510 கோடி மதிப்பில் 7,400 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், கடன் வசதியாக்கல் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்புக்கான ஃபேம் டிஎன் (FaMe TN) அமைப்புக்கும், தொழில் முனைவோருக்கும் இடையே 100 புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகிருக்கிறது.ஃபேம் டிஎன் (FaMe TN) - சிறுதொழில் வளர்ச்சி வங்கி (SIDBI) இடையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விழாவில் ரூ.1,723 கோடி மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டன. இதன்மூலம் சுமார் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

தமிழ்நாடு அரசின் முன்னெடுப்புகள்

மாண்புமிகு தமிழக முதல்வர் 2018இல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தமிழகத்தில் ஒன்றிய அரசுப் பணித் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி உள்ளார். அதைப்பற்றிய செய்தி Deccan Chronicle நாளேட்டில் வந்துள்ளது. அதனைச் சரிசெய்யும் பொருட்டு நான் முதல்வன் என்ற திட்டத்தின்கீழ் தமிழக அரசுத் தொலைக்காட்சியான, Kalvi TVஇல் SSC - RRB என்று போட்டித் தேர்வுகள் பிரத்யேகமான வகுப்புகள் நடந்து வருகின்றன. மேலும், "Tn-Carrier Service Employment" அந்த வகுப்புகளை You Tube Channel வழியாகவும் காணலாம். இவை கல்வி டிவியில் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை ஒளிபரப்பாகின்றன. பின்னர், மாலையில் 7.00 மணி முதல் 9.00 மணி வரை மறுஒளிபரப்பு செய்யப்படுகின்றன. SSC, RRB தேர்வுகளுக்குப் பெரிதும் பயன்படும் R.S. அகர்வால் எழுதி, சந்த் நிறுவனம் வெளியிட்ட Reasoning, General Arithmetics நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கூட்டு வெளியீடாக விரைவில் வெளியாக உள்ளன. தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு அமைப்புப் புதிதாக ஒரு ஜாப் போர்ட்டல் அதாவது நிறுவனத்தையும், மக்களையும் இணைக்கும் ஒரு வேலைவாய்ப்புத் தளத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது.

தமிழ்நாட்டு அரசுக்கு தற்போது நல்ல தேடுதல் அம்சத்துடன் கூடிய வேலைவாய்ப்பு தேடல் தளம் தேவை இருக்கும் நிலையில் விரைவில் இதை அரசு அறிமுகம் செய்ய உள்ளது. தமிழக அரசு பல வருடமாக விவசாயத் துறை உட்படப் பல துறையில் மக்களின் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் படித்த மாணவர்களுக்கு ஐபிஎம், டிசிஎல், ஹெச்சிஎல் உடன் இணைந்து பல பிரிவுகளிலும், தொழில்நுட்பத்திலும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அறிமுகம் செய்வதாக பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது. இதற்கான திட்ட வடிவங்களை மாநகராட்சி மற்றும குடிநீர் வழங்கல் துறை செப்டம்பர் 13 அன்று அரசாணையாக வெளியிட்டது. (GO No 69). தற்போது சென்னை மாநகராட்சியில் இரு மண்டலங்களும், மாநிலத்தில் உள்ள 14 மாநகராட்சிகளில் ஒரு மண்டலமும், 7 பகுதிகளில் உள்ள நகராட்சிகளில் ஒரு மண்டலமும், 37 மாவட்டங்களில் ஒரு நகர்புற பஞ்சாயத்தும் தேர்வு செய்யப்பட்டு நகர்புற வேலைவாய்ப்பு திட்டம் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-22ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, HCL நிறுவனம் பயிற்சியோடு பணி வாய்ப்புகளை வழங்குகின்றது. தமிழக அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் வாயிலாக அரசுப் பள்ளி மாணவர்கள் 2,000 நபர்களுக்கு HCL Techbee Early Career Program-க்கான பயிற்சி கட்டணம் முழுவதையும் வழங்குகின்றது. இத்திட்டத்தின் வாயிலாக மாணவர்களுக்கு தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் பயிற்சியோடு HCL Technologies நிறுவனத்தில் முழுநேர பணிவாய்ப்பு கிடைக்கும்படி வழிவகை செய்துள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டம், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதி மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டல்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள், என்று பல்வேறு தளங்களில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகளோ, புதிய வேலை வாய்ப்புகளோ இல்லாத நிலையில், திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றவுடன், அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து புதிய வேலை வாய்ப்பு முகாம்களை தமிழ்நாடு எங்கும் நடத்தி காட்டியதை நாம் அறிவோம். மேலும் தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அனுமதித்து, அதில் தமிழர்களுக்கு குறிப்பிட்ட அளவில் வேலை வாய்ப்பு உறுதி செய்து கொடுத்தார் தமிழ்நாட்டின் முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள். கடந்த ஆண்டு துபாயில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பு கூட்டத்தில், அமீரக தொழில் நிறுவனங்கள் சார்பில் தமிழகத்தில் ரூ.2,600 கோடி முதலீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதில் 7000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது.

2022 ஆகஸ்ட் வரை தமிழ்நாடு அரசு நடத்திய முதலீட்டு மாநாடுகளின் மூலமாக 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அதன்மூலம் 2 இலட்சத்து 20 ஆயிரத்து 727 கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்து 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் நாட்டை சேர்ந்த முன்னணி நிறுவனங்களுடன் 1258 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். 1300 கோடி ரூபாய் முதலீடு செய்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள 49 MSME நிறுவனங்களும் இதில் அடங்கும். புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்களில் 19 நிறுவனங்கள் 1522 கோடி ரூபாய் முதலீடு செய்து உற்பத்தியைத் தொடங்கி 1909 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திருக்கிறது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக தொடர்ந்து பல்வேறு செயல்பாடுகளை செய்து கொண்டிருக்கும் தமிழக அரசினுடைய முயற்சிகள் பாராட்டும் வகையில் உள்ளது.

தொடர் நடவடிக்கையின்  மூலம் வரும் காலங்களில் இளைஞர்களுக்கு தடையற்ற கல்வியும், வேலைவாய்ப்பும் கிடைக்கும் வண்ணம்  திராவிட மாடல் ஆட்சி  செய்யும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழ்நாட்டு மக்கள் அடிமை ஆட்சியை விட்டொழித்து , கல்வி கற்க  தடையாய் இருக்கும் பிஜேபி அரசிற்கு  ஒத்து ஊதும் அதிமுக ஆட்சியில், புதிய தொழிற்சாலைகளும், வேலை வாய்ப்புகளும் இல்லாத நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி  உழைப்பவர்களுக்கான ஆட்சியாக நிமிர்ந்து நிற்கிறது. தமிழ்நாட்டை வரும் 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் பொருளாதாரம் ஈட்ட கூடிய முதல் மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதையே இலக்காக வைத்துச் செயல்பட்டு வரும் முதல்வர் மு. க.ஸ்டாலின்  அவர்களின் நம்பிக்கைக்கு உறுதுணையாய் இருப்போம். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். தமிழ்நாட்டை முன்னிலை மாநிலமாக மாற்றுவோம்.

- த.மு.யாழ்திலீபன்

Pin It