2009-ல் கல்லூரிப் படிப்பு முடிந்து சென்னைக்கு வேலை தேடி வந்திருந்த நேரம், அப்போது பாடியில் (அண்ணாநகர் பின்புறம்) தங்கி இருந்தேன். உறவினர்கள் மூலமாக HDFC வங்கியில் collection பிரிவில் வேலை கிடைத்தது. அண்ணாநகர் 13 முதன்மைச் சாலையில் உள்ள HDFC வங்கியில் நான் பணியில் சேர்வதற்காக அழைப்பு வந்திருந்தது.

சென்னை நான் வருவது அதுதான் முதல்முறை அல்ல. 2009க்கு முன்பே இரண்டு, மூன்று முறை சென்னைக்கு அண்ணன் வீட்டிற்கு வந்திருக்கிறேன். அதுவும் இல்லாமல் 6 வருடங்கள் வெளியூர்களில் விடுதியில் தங்கிப் படித்தவன். நிறைய இடங்களுக்கு சென்று இருக்கிறேன். பேருந்தில் பயணிப்பதோ செல்லவேண்டிய சரியான இடத்திற்கு செல்வதிலோ பெரும்பாலும் சிரமம் இருந்ததில்லை.

neet exam 371

பணியில் சேர்வதற்காக லுகாஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அண்ணாநகர் 13 முதன்மைச் சாலை செல்ல வேண்டும். பேருந்தில் சென்றால் 5 அல்லது 10 நிமிடத்தில் சென்று விடலாம், நடந்து சென்றால்கூட 30 நிமிடத்திற்குள்ளாக சென்று விடலாம்.

லுகாஸ் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் ஏறினேன். காலை நேரம் என்பதால் பேருந்தில் நிறைய கூட்டம் நடத்துனர் கூட்டத்தை விலக்கி கொண்டு ஏன் அருகில் வந்தார். அண்ணா அண்ணாநகர் 12th மெயின் ரோட்டிற்கு ஒரு டிக்கெட் என்றேன். இந்த பஸ் அண்ணாநகர் போகாது என்றார். அவர் அப்படிச் சொன்னபோது பேருந்து வில்லிவாக்கம் நாதமுனி திரை அரங்கத்தைக் கடந்திருந்தது. அங்கேயே இறக்கி விடப்பட்டேன்.

அதற்குள் வங்கியில் இருந்து போன் வந்தது. இன்னும் வரலையா முதல்நாளே இப்படி தாமதமாக வருகிறாயே என்பதுபோல மேனேஜர் பேசினார். பிறகு அங்கு போகவில்லை நேராக நடந்தே அறைக்கு வந்துவிட்டேன். கிடைத்த முதல் வேலை அப்படி நாசமாய்ப் போனது. இது என்னுடைய மாநிலம் இங்கு இருப்பவர்கள் நான் பேசும் மொழியைத்தான் பேசுவார்கள். எனக்கு தமிழும் ஆங்கிலமும் நன்றாக படிக்க தெரியும். ஏதாவது உதவி வேண்டுமென்றால்கூட யாரிடமாவது என்னுடைய மொழியிலேயே பேசி அதற்கான பதிலையும் என்னுடைய மொழியிலே பெற்றுக் கொள்ள முடியும்.

அப்படி இருந்தும் என்னால் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக செல்ல முடியவிலை.

நிற்க, இதை இப்போது நீட் தேர்விற்காக ராஜஸ்தான் மற்றும் கேரளா செல்லவிருக்கும் தமிழக மாணவர்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள், நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு அவர்கள் செல்லும் இடம் அவர்களுக்கு முன்பே அறிமுகமான இடம் இல்லை. நம் மாணவர்கள் பேசும் மொழியும் அந்த மாநில மக்களும் பேசும் மொழியும் வெவ்வேறானவை.

நாம் பேசுவது அவர்களுக்கும், அவர்கள் பேசுவது நமக்கும் புரியாது. சரி படித்து இடத்தை தெரிந்து கொள்ளலாமென்றால் அதற்கும் வாய்ப்பில்லை. இவ்வளவு சிரமங்களோடு அவஸ்தைகளோடு 17 வயது நிரம்பிய நம் மாணவர்கள் பலநூறு கிலோமீட்டர் பயணம் செய்து, எப்படி அந்த மாநிலங்களுக்குச் சென்று தேர்வு மையத்தைக் கண்டுபிடித்து தேர்வு எழுதப் போகிறார்கள்?

அரசியல் அமைப்புச் சட்டம் 14வது அட்டவணை எல்லோருக்கும் சமவாய்ப்பு என்கிறது. ஒருவர் தான் படித்த பாடப்புத்தகத்தில் இருந்து வரும் கேள்விகளுக்கு பரிட்சை எழுதுவார், இன்னொருவர் தனக்கு தொடர்பே இல்லாத பாடப்புத்தகத்தில் இருந்து வரும் கேள்விகளுக்கு பரீட்சை எழுத வேண்டும். ஒருவர் தன் வீட்டிக்கு அருகிலேயே தேர்வு எழுதுவார் இன்னொருவர் பல நுறு கிலோமீட்டர் பயணம் செய்து தேர்வு எழுத வேண்டும். இது எப்படி சமவாய்ப்பாகும்? இது அரசியல் அமைப்பிற்கு எதிரானது அல்லவா?

மத்திய அரசு மாநிலங்களின் மீதும், மாநில மக்களின் மீதும் இனவாதத்தைத் திணிக்கிறது. நேரடியாகப் பிரிவினையைத் தூண்டுகிறது. மத்திய அரசின் இந்தப் போக்கு ஒருவகையான அரசின் தீண்டாமை வடிவம் என்றே தோன்றுகிறது.

‘சாதி என்பது கட்டளைகள் நிறைந்தது’ என்பார் அம்பேத்கர். நீ ஆடை அணியக்கூடாது, நீ செருப்பு போடக்கூடாது, நீ குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது, நீ கோவிலுக்குள் நுழைய கூடாது, நீ இந்தத் தெருவில் பிணத்தை தூக்கி செல்லக்கூடாது, இந்தத் தெருவில் நடக்கக்கூடாது என்று ஒவ்வொரு சாதியும் தனக்குக் கீழான சாதியின் மீது கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டே இருக்கும்.

சேரிக்கும் ஊருக்கும் இடையில் சில மீட்டர் தூரம்தான் இருக்கும், ஆனால் சேரி மக்கள் ஊர்த் தெருவின் வழியாக எல்லோரும் செல்வதுபோல செல்லமுடியாது. சேரி மக்கள் அவர்கள் பகுதிக்குச் செல்ல வேண்டுமானால் சில கிலோ மீட்டர்கள் ஊரைச் சுற்றித்தான் தங்கள் பகுதிக்கு செல்ல முடியும். அதாவது எல்லோரையும் போல உனக்கு உரிமை கிடையாது, உனக்கு உரிமை வேண்டுமானால் கஷ்டப்பட்டு அதை அடைந்துகொள் என்பார்கள்.

தற்போது நீட் தேர்வும் அப்படித்தான், இது நம் வரிப் பணத்தில் நாம் உருவாக்கிய மருத்துவமனைகள், இங்கு நமக்கு படிக்க சீட்டும் கிடையாது, தேர்வெழுத இடமும் கிடையாது. மீறி உனக்கு மருத்துவ சீட்டு வேண்டுமானால் அவ்வளவு எளிதாக உனக்கு கொடுத்துவிட முடியாது, பல நூறு கி.மீ. பயணம் செய்து பல சிரமங்களை அனுபவித்து உனக்கான உரிமையைப் பெற்றுகொள் என்கிறார்கள்.

இந்த எல்லா சிரமங்களையும் தடைகளையும் கடந்து நம் மாணவர்கள் மருத்துவர்கள் ஆவார்கள், ஏனென்றால் தடைகளை உடைத்து கல்வியின் மூலம் எல்லா தளங்களிலும் முன்னேறிய ஒரு தலைமுறை அவர்களுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறது.

- மணிகண்டன் ராஜேந்திரன்

Pin It