ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, இராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘நீட் திணிப்பு' என்ற தலைப்பில் ஆற்றிய உரை. (21.6.2018 இதழ் தொடர்ச்சி)

இட ஒதுக்கீடு இல்லை, எல்லோருக்கும் சம வாய்ப்பு என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதைத் தான் இப்போது மெதுவாகக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்தில் முதுநிலை படிப்பவர்கள் குறைந்தது அரசிடம் ஐந்து ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். ஆனால் இப்போது, காலம் முழுவதும் செய்ய வேண்டுமென்றும் கூறுகிறார்கள். அதுகுறித்து நமக்குத் தெரியாது. இவர்கள் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து பணியாற்றாவிட்டால் 45 லட்சம் ரூபாய்க்கு பாண்ட் எழுதி கொடுத்துவிட்டுத் தான் வெளியே செல்ல வேண்டும். அதனால் நமக்கு மருத்துவர்களாக, அறுவை சிகிச்சை நிபுணர்களாக, உயர் சிகிச்சை மருத்துவர்களாக நம் மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் கிடைக்கிறார்கள். ஆனால் இனிமேல் நீட் அவர்களைக் கொடுக்குமா என்று தெரியாது. நீட் தேர்வில் தேர்வு பெறுபவன் அதற்குத் தயாராக இருப்பானா என்று நமக்குத் தெரியவில்லை.

நீட் தேர்வு நடக்கும் முறையைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். முன்னதாக தனியார் மயம் என்று கூறினார்கள். தனியார் மயம் என்றால் அதற்குப் பார்ப்பன மயம் என்று பொருள். இப்போது அகில இந்திய தேர்வு என்கிறார்கள். அகில இந்திய தேர்வு என்றால் அதற்கு வடவர்கள் மயம் என்று பொருள். அகில இந்திய தேர்வு என்று வருகிற போதெல்லாம் அதில் வட நாட்டவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். குறிப்பாக அஞ்சல் துறைக்கு அகில இந்திய தேர்வை நடத்தினார்கள். தமிழ்நாட்டில் அஞ்சல் கொடுக்க வேண்டுமென்றால் தமிழில் முகவரியைப் படிக்கத் தெரிய வேண்டும். அதனால் தமிழுக்கு 25 மதிப்பெண்கள் கொடுக் கிறார்கள். இதில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவனும், அரியானாவைச் சேர்ந்தவனும் 25 மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்கள் வாங்கினார்கள்.

தமிழ்நாட்டில் குழந்தைப் பருவம் முதல் தமிழில் பேசி, தமிழில் படித்தவர்கள் யாரும் 18 மதிப் பெண்ணுக்கு மேல் வாங்கவில்லை. இதில் அஞ்சல் துறைக்கே அய்யம் வந்து அந்தத் தேர்வை ரத்து செய்துவிட்டார்கள். வட இந்தியாவில் இப்படித்தான் தேர்வுகள் நடக்கிறது. அகில இந்தியத் தேர்வை எல்லாவற்றுக்கும் கொண்டு வந்துவிட்டார்கள். இங்கு வேலைக்கு வருபவர்களும் வட நாட்டவர்கள்தான் அதிகம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

நீட்டுக்கு ஒரே நாடு, ஒரே தேர்வு என்றார்கள். குஜராத்தில் தேர்வு எளிமையாக இருந்தது என்றும், மேற்கு வங்கத்தில் கடுமையாக இருந்தது என்றும், தமிழ்நாட்டில் ஆங்கில கேள்வித்தாள் கடினமாக இருந்தது, தமிழ் கேள்வித் தாள் கொஞ்சம் பரவாயில்லை என்றும் செய்தித்தாள்களில் செய்திகள் வெளியானது. இது எப்படி ஒரே தேர்வாகும்? ஒரே தேர்வு என்றால் ஒரே கேள்வித்தாள்தான் இருக்க வேண்டும். ஒரு மொழிக்கு ஒரு கேள்வித்தாள். அதில் ஒன்று கடினமாகவும், ஒன்று எளிமையாகவும் இருக்குமென்றால் அதற்கு என்ன அகில இந்தியத் தேர்வு என்று பொருள் என்பதுதான் நமது கேள்வி.

இந்த முறைகள் அனைத்தும் முதல் தலை முறையாக, இரண்டாவது தலைமுறையாக கல்வி பெற்று வருகிற நமது கிராமத்துப் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பட்டியலின மக்களின் கல்வி வாய்ப்பைப் பறிப்பதற்கான மற்றும் எளிய மக்கள் தொடர்ந்து பெற்று வருகிற மருத்துவ சேவைகளை நிறுத்துவதற்கான முயற்சியாகத்தான் பார்க்க வேண்டும்.

இது மட்டுமில்லை, அனைத்துப் பணி களுக்குமான பணியாளர் நியமனத் தேர்வுகளில் நடந்து வருகிற முறைகேடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. நீட் தேர்விலும் கிராமத்து மாணவர்கள்தான் அதிகம் பாதிப்படைவார்கள் என்று நாம் சொன்னோம். அதுபோலவே இந்த ஆண்டு நீட் தேர்வில் கிராமத்து மாணவர்களை விட நகரத்து மாணவர்கள்தான் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னையில் நீட் இல்லாமல், மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை இருந்தபோது 113 பேர் சேர்ந்தார்கள். நீட் வந்த பிறகு சென்னை நகரத்தைச் சார்ந்தவர்கள் இந்த ஆண்டு 471 பேர் சேர்ந்திருக்கிறார்கள். வேலூரில் 54 பேர்தான் நீட் தேர்வுக்கு முன்பு சேர்ந்திருந்தார்கள். நீட் வந்த பிறகு இந்த ஆண்டு 153 பேர் சேர்ந்திருக்கிறார்கள். கோயம் புத்தூரில் நீட் தேர்வுக்கு முன்பு 102 பேராக இருந்தவர்கள் இந்த ஆண்டு 182 பேராக அதிகரித்து விட்டார்கள். ஒவ்வொரு நகரத்திலும் இப்படித்தான் நீட் வந்த பிறகு நகர்ப்புற மருத்துவ மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

ஆனால் கிராமத்தைப் பார்த்தோமானால், ஈரோட்டில் நீட் தேர்வுக்கு முன்பு 230 பேர் சேர்ந்திருந்தார்கள். ஆனால் இந்த ஆண்டு 100 பேர் மட்டும்தான் தேறியிருக்கிறார்கள். தருமபுரியில் 225 பேர் நீட் தேர்வுக்கு முன்பு தேர்ச்சி பெற்றிருந்தார்கள். நீட் வந்த பிறகு 82 பேர்தான் சேர்ந்திருக்கிறார்கள். கிருஷ்ணகிரியில் நீட் தேர்வுக்கு முன்பு 338 பேரும், நீட் தேர்வுக்குப் பிறகு 82 பேரும் சேர்ந்திருக்கிறார்கள்.

பின்தங்கிய மாவட்டங்களிலும், கிராமங்களிலும் மருத்துவ படிப்புக்குத் தேர்வாகும் மாணவர்கள் நீட் வந்த பிறகு பாதிக்கும் குறைவாக குறைந்திருக் கிறார்கள் என்பததைத்தான் இது காட்டுகிறது. இதனால் சில ஆண்டுகள் கழிந்த பின்னால் கிராமத்திலிருந்து மருத்துவர் இல்லாத நிலையும், கிராமத்து மக்களுக்கு மருத்துவம் கிடைக்காத நிலையும் ஏற்படும். இப்படிப்பட்ட வஞ்சகம் நிறைந்த தேர்வைப் பற்றி நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

சி.பி.எஸ்.சிதான் நீட் தேர்வை நடத்துவதாகக் கூறினாலும், இந்தத் தேர்வை அவர்கள் நடத்த வில்லை. ப்ரோ மெட்ரிக் என்ற அமெரிக்க நிறுவனம் தான் நீட் தேர்வை நடத்துகிறது. இந்த நிறுவனம் துணை ஒப்பந்தம் போட்டு சி.ஏ.எஸ்.அய்.டி சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குக் கொடுத்து விட்டார்கள். இந்த நிறுவனம் ஒரு துணை ஒப்பந்தம் போட்டு மெசெர்ஸ் அபெக்ஸ் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளார்கள். முதுநிலை மருத்துவத்திற்கு கணினியில் தேர்வு நடக்கும். சில இடங்களில் இணைய வசதி அளிக்கப்பட்டு, இணையத்தில் பதிலைத் தேடி தேர்வெழுதி யுள்ளார்கள். ஆம்மி அட்வின் (ஹஅஅலல யனஅin)என்ற செயலி வசதியைப் பயன்படுத்தி தேர்வெழுதி யுள்ளார்கள். இந்த முறையில் வெளியில் இருந்தும் செயலியை இயக்க முடியும். (அப்படியானால் தேர்வுக்கான விடையை வெளியிலிருந்து ஒருவர் கணினியைப் பயன்படுத்தி எழுதி அறையில் தேர்வு எழுதும் மாணவருக்கு அனுப்பி வைக்க முடியும்) இப்படி மோசடியாக தேர்வு எழுதி, பலர் மருத்துவராகியுள்ளனர் என்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

அதனால் எங்களுக்கு இதுபோன்ற மோசடி நடைமுறைகள் ஏதும் வேண்டாம். எங்கள் மருத்துவக் கல்லூரிகளில் எங்கள் மாணவர்களை சேர்த்துக் கொள்கிறோம் என்று கூறுகிறோம். இதற்குச் சட்டப்பூர்வமான விளக்கங்களை முந்தைய நீதிபதிகள் கொடுத்திருக்கிறார்கள். இப்போது தீர்ப்பு எழுதுகிற நீதிபதிகள் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவர்கள்தான் ஏதோ அறிவாளிகள் போல கருதுகிறார்கள். இதற்கு ஒரு விளக்கத்தை பிபி.சாவந்த் என்கிற நீதிபதி மண்டல் கமிசனுக்குத் தீர்ப்பு எழுதுகிறபோது சொன்னார். “அம்பேத்கர் மெட்ரி குலேசன் தேர்வில் 37 1/2 விழுக்காடு மதிப்பெண்கள் தான் வாங்கினார். ஆனால் அவரை விட அறிவாளி இந்தியாவில் யார் இருக்கிறார்கள்? சொல்லுங்கள்” என்று தனது தீர்ப்பிலேயே சாவந்த் எழுதினார்.

கல்வி கற்கத் தொடங்கிய அந்தத் தொடக்க காலத்தில் அவ்வளவு மதிப்பெண்தான் வாங்க இயலும். ஆனால் இப்போதிருக்கிற நீதிபதிகள் பற்றியும் குறிப்பிட வேண்டும். நீட் கூடாது என்று 2013ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வால் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. ஆனால் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் சீராய்வு மனு தாக்கல் செய்தார்கள். ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் சீராய்வு மனு தாக்கல் செய்தபோது அதே நீதிபதிகளிடம் சீராய்வு மனுவின் விசாரணையும் சென்றது. அதே நீதிபதிக்குத் தான் அதில் உள்ள பிழைகளை சுட்டிக் காட்டினால் தெரியுமென்று இவ்வாறு செய்தார்கள். ஆனால் நீட் தேர்வுக்கு 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி அல்டாமிஸ் கபிர் அதே ஆண்டில் ஓய்வு பெற்றுவிட்டார்.

31.12.2015ஆம் தேதி இன்னொரு நீதிபதி விக்ரம் அஜித் சென் ஓய்வு பெற்றுவிட்டார். இவர்கள் இருவர் மட்டும்தான் 2013ஆம் ஆண்டில் நீட் தேர்வு கூடாது என்று தீர்ப்பு வழங்கினர். மற்றொருவரான அணில் தவே என்ற குஜராத்தை சேர்ந்த நீதிபதி மட்டும்தான் அப்போது நீட் தேர்வு வேண்டுமென்றார். அவரிடம் தான் மறு சீராய்வு மனு சென்றது. இவரைப் பற்றி மற்றொன்றையும் சொல்ல வேண்டும். “நான் மட்டும் சர்வாதிகாரியாக இருந்தால் கீதையை தொடக்கப் பள்ளியிலிருந்து பாடமாக வைப்பேன்” என்று சொன்னவர்தான் இந்த அணில் தவே (இவர் ஒரு பார்ப்பனர்).

மறு சீராய்வு மனு சென்ற முதல் நாளே, இந்த மனுவை விசாரித்துத் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். அப்படித் தான் சட்டமும் சொல்கிறது என்று கூறிவிட்டு, பிறகு அவரே விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரையில் 2013ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை (நீட் தேர்வு கூடாது என்ற தீர்ப்பை) நிறுத்தி வைப்பதாகவும் கூறினார். தமிழகத்தில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்த வழக்கு ஒன்றை விஜயன் என்பவர் 1995ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தார். 2018 வரையில் அந்த வழக்கு இன்னமும் விசாரணைக்கே வரவில்லை.

அதுபோலத்தான் நீட் தேர்வு வேண்டாமென்ற தீர்ப்புக்கு அணில் தவே பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவும் மீண்டும் எப்போது விசாரணைக்கு வருமென்று தெரியாது. இதை எதிர்பார்த்துக் காத்திருந்தால் நமக்கு நீதி கிடைக்குமா? அடுத்து நாம் என்ன செய்ய வேண்டுமென்று யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தன்மானம் மீட்பதற்கு தன்னுரிமை கொண்ட தமிழ்நாடாக இருந்தால் நமது சிக்கலை நாமே தீர்த்துக் கொள்ளலாம்.

'நீ வேறு மொழி பேசுகிறாய், நான் வேறு மொழி பேசுகிறேன். உன் உணவு முறை வேறு, என் உணவு முறை வேறு; உன் உடை வேறு, என் உடை வேறு; ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஆங்கிலேயனா என்னை ஆள்வது' என காங்கிரஸ் ஆங்கிலேயர்களிடம் கேட்டது. பெரியார் காங்கிரஸ்காரர்களைப் பார்த்துக் கேட்டார், “நாங்களும் அதையேத்தான் கேட்கிறோம். இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளவனா எங்களை ஆள்வது? மைல்தான் நான்காயிரம் குறைந்துள்ளது தவிர உனக்கும் எனக்கும் வேறு என்ன மாறிவிட்டது?” என்று. இப்போது அதே கேள்வியை நாமும் கேட்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

எங்கள் பண்பாடு அறியாத, எங்கள் உணர்வுகள் புரியாத, எங்களுடைய நடைமுறைகள் தெரியாத, தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத அல்லது புரிந்துகொள்ள மறுக்கிற வடவர் களோடு இணைந்திருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு பெரியார் 1938ஆம் ஆண்டிலேயே பதில் சொன்னார். இப்போது 2018ஆம் ஆண்டில் நாம் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இத்தனை ஆண்டுகள் நாம் தள்ளிப்போனது போதும். விரைவில் முடிவெடுப் போம், என்றார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

செய்தித் தொகுப்பு : ர. பிரகாஷ்

Pin It