கனடாவில் நடந்து முடிந்த தேர்தலில் நான்காவது முறையாக லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கனடாவில் கூட்டாட்சி அரசியல் அமைப்பு என்ற நடைமுறை இருக்கிறது. ஆல்பர்ட்டா என்ற மாநிலத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி தான் மக்கள் செல்வாக்கோடு ஆட்சியில் இருக்கிறது.

கனடா கூட்டாட்சி ஆட்சியை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்று ஆல்பர்ட்டா மாநில ஆட்சி குற்றம் சாட்சி வருகிறது. அதிக வரி செலுத்தும் மாநிலமாகவும், வளர்ச்சி திட்டங்களில் முதலிடம் பெற்ற மாநிலம் ஆல்பர்ட்டா தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து மாநில மக்களும் மாநில ஆட்சியும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

கன்சர் வேட்டிவ் வெற்றி பெற்ற அடுத்த நாளே ஆல்பர்ட்டா சட்டமன்றம் கூடி மசோதா ஒன்றை நிறைவேற்றி உள்ளது. கனடா கூட்டாட்சி அமைப்பிலிருந்து ஆல்பர்ட்டா தனியாக பிரிந்து செல்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இந்த மசோதா கூறுகிறது. ஆல்பர்டடா மாநில பிரிமியர் ஸ்மித் மார்கார்னி இவ்வாறு கூறியுள்ளார்: ஆல்பர்ட்டா மக்கள் பெருமைமிக்க கனடியர்கள் நாங்கள் இந்த நாடு ஒற்றுமையாகவும் பலமாகவும் இருக்கவே விரும்புகிறோம். எங்கள் தொழில்கள் அச்சுறுத்தப்படுவதையும், எங்கள் நிலங்கள் பறிக்கப்படுவதையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். வெற்று வார்த்தைகள் எங்களுக்குத் தேவையில்லை அர்த்தமுள்ள செயல்பாடுகளே தேவை என்று அவர் அறிவித்துள்ளார். தொடர்ந்து ஆல்பர்ட்டா மக்களை அடுத்த கட்ட போராட்டங்களை நோக்கி நகர்த்துவதற்கு தயார் செய்ய மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது.

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய ஆட்சிக்கு எதிராக திராவிட மாடல் ஆட்சி நடத்தும் உரிமைப் போராட்டம் தான், ஆல்பர்ட்டா மக்களுக்கான‌ உரிமைப் போராட்டத்தினை அந்த மாநிலமும் நடத்திக் கொண்டு இருக்கிறது. இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்ட மாநில சுயாட்சியை திராவிட மாடல் ஆட்சி கோருகிறது. ஆல்பர்ட்டாவும் அதேபோல் தங்கள் மாநிலத்தில் வாக்கெடுப்பு நடத்தி கனடாவோடு இணைந்து இருக்க வேண்டுமா, வேண்டாமா என்ற கோரிக்கையை சட்டத்தின் வாயிலாக எழுப்பி இருக்கிறது.

 ஜாதிக் குறியீடுகளை ஒழிப்பதும் ஜாதி ஒழிப்புதான்!

கடவுள் ஜாதி மதத்தைக் கடுமையாக எதிர்த்த புரட்சிக் கவிஞருக்கு தமிழ்நாடு முதல்வர் அரசு விழா அறிவித்ததோடு காலனி என்ற சொல்லும் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும் என்று அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்.

திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைப் பார்வையாகவே இதைக் கருத வேண்டும். இதே போல் நீதிக் கட்சி ஆட்சி ஆணைகளில் குறிப்பிடப்பட்டு வந்த "பஞ்சமன், பறையன்" என்ற வார்த்தைகளை நீக்கி ஆதிதிராவிடர் என்று அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தெருக்களில் உள்ள ஜாதிப் பெயரை நீக்க ஆணையிட்டார். இதிலும் சிலர் விமர்சனம் செய்கிறார்கள், `காலனி' என்ற பெயரை நீக்கி விட்டால் ஜாதி ஒழிந்து விடுமா? என்று கேட்கிறார்கள்.

தனது பெயருக்குப் பின்னால் உள்ள ஜாதிப் பட்டத்தை பெரியார் ஒழித்தார் ஜாதிப் பெயரை போட வேண்டாம் என்ற ஒரு இயக்கம் தமிழ்நாட்டில் நடந்தது.

இப்போது ஜாதிச் சங்க தலைவர்கள் கூட தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயரை போடுவதில்லை ஜாதி ஒழிப்பில், ஜாதிக் குறியீடுகளை ஒழிப்பதும் ஒரு முன்னெடுப்பு தான்.

ஜாதி ஒழிப்புக்கான பல்வேறு போராட்ட வடிவங்களில் அதன் அடையாளங்களை அழிக்கின்ற போராட்டங்களும் இணைந்து நிற்கின்றன. `அரிஜன்' என்ற வார்த்தையை காந்தியார் பயன்படுத்திய போது அம்பேத்கர் அந்த அவமானச் சொல்லை கடுமையாக எதிர்த்தார். அதற்காக "வார்த்தையை மாற்றி விட்டால் ஜாதி ஒழிந்து விடுமா?" என்று கேட்பது அபத்தம். ஜாதியத்திற்கு கருத்தியலை வழங்கி அதை உயிருடன் பாதுகாக்க துடித்துக் கொண்டிருப்பது பார்ப்பனியம்.

அந்தப் பார்ப்பனிய கருத்தியல் கட்டமைத்த மதிப்பீடுகளை தான் பார்ப்பனர் அல்லாத ஜாதியவாதிகள் தங்களின் மதிப்பீடுகளாகக் கருதி ஜாதியவாதிகளாக போலிப் பெருமை கொள்கிறார்கள்.

இந்த ஜாதிய மனநிலையையும் செயல்பாடுகளையும் எதிர்க்கும் போது பார்ப்பனியக் கருத்திலையும் இணைத்து எதிர்க்க வேண்டும். பார்ப்பனியத்தை துண்டித்து விட்டு ஜாதி எதிர்ப்பை மட்டும் பேசுவது அம்பேத்கரையும் மறுப்பதாகும்.

- விடுதலை இராசேந்திரன்