அனிதா தொடங்கி இந்த ஆண்டு தனுஷ், கனிமொழி, சௌந்தர்யா வரை 15 இளம் உயிர்களை நீட் அரக்கன் காவு வாங்கியுள்ளான். தமிழ்நாடே கூடி எதிர்த்தாலும் நீட்டைத் திணித்தே தீருவோம் என்று பிடிவாதமாகச் செயல்படும் நரேந்திர மோதியின் பாசக அரசுதான் தொடர்ந்து வரும் இந்த உயிரிழப்புக்கும், பல்லாயிரம் மாணவர்களின் வாழ்விழப்புக்கும் பொறுப்பாகும்.

neet killing studentsதற்கொலை கோழைத்தனம் அல்லவா? மருத்துவம் மட்டும்தான் கல்வியா? ஒரே ஒரு தேர்வில் தோற்றுப் போனால் குடிமுழுகிப் போகுமா? சின்னஞ்சிறிசுகளின் மனத்தில் மருத்துவக் கல்வியின் மீது இப்படி ஒரு மயக்கம், இப்படி ஒரு வெறியார்வம் வளரப் பெற்றோரும் மற்றோரும் எந்த அளவுக்குப் பொறுப்பு? இந்தக் கேள்விகள் எல்லாம் கேட்கத்தான் வேண்டும் என்றாலும், தமிழ்நாட்டு மக்கள் மீது அவர்கள் கட்டோடு எதிர்க்கும் நீட்டைத் திணிக்க நியாயம் உண்டா? என்பதுதான் ஒரு தேசமாக நாம் முகங்கொடுக்க வேண்டிய பெருவினா.

சென்ற செப்டம்பர் 13ஆம் நாள் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெறுவதற்கு தமிழக அரசு தமிழ்நாடு சட்டப் பேரவையில் முன்மொழிந்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது. 234 உறுப்பினர்களில் பாசக உறுப்பினர்கள் நால்வர் மட்டும் ஆதரிக்கவில்லை. இவ்வளவு பெரும்பான்மையோடு இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேறிய பிறகும் நீட் நீடிக்கிறது என்றால் இது சட்டப் பேரவைதானா? இந்தியா குடியாட்சியம்தானா? இப்படி இரு சட்டமுன்வடிவுகள் 2017 சனவரி கடைசியில் அஇஅதிமுக ஆட்சிக் காலத்திலும் நிறைவேற்றப்பட்டு தில்லி வல்லரசின் குப்பைத் தொட்டிக்குப் போய் விட்டன.

நீட்டை ஒழித்து விட்டுத்தான் மறு வேலை என்று உறுதியளித்துத்தான் திமுக ஆட்சிக்கு வந்தது. இந்த மக்கள் கட்டளையை மோதி அரசு மதிப்பதாக இருந்தால் இப்போது இயற்றப்ட்டுள்ள சட்டமுன்வடிவை ஏற்றுச் சட்டமாக்கி நீட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும். இது நடக்கும் என்று ஒப்புக்குக்கூட யாரும் நம்பவில்லை.

தமிழ்நாடு ஆளுநர் நீட் விலக்குச் சட்ட முன்வடிவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, அது ராஜ் பவனிலிருந்து ராஷ்ட்ரபதி பவனுக்கு ஊர்ந்து சென்று, பிறகு ஒன்றிய அமைச்சரவைதான் இறுதி முடிவெடுக்க வேண்டுமாம். அந்த முடிவைக்கூட நமக்குச் சொல்வார்களா? எப்போது சொல்வார்கள்?

இதுதான் இந்திய விடுமை! இதுதான் தமிழ் மாநில இறைமை! இதுதான் இந்திய அரசமைப்புக் கட்டுமானத்தின் அடிக்கற்களில் ஒன்று எனப்படும் (கேசவானந்த பாரதி வழக்குத் தீர்ப்பு, 1973) கூட்டாட்சி முறைமை! வெட்கக்கேடு!

என்ன செய்யப் போகிறார் தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர்? மற்ற மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதுவேன் என்கிறார். இந்த மடல்விடு மாவீரம் தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பரம்பரைச் சொத்து என்பதை நாம் அறிவோம். தில்லிக் கொடுங்கோலர்களும் அறிவார்கள். தமிழ்நாட்டு மக்களைத் திரட்டிப் போராடுவேன் என்று சொல்லக்கூட ஏன் மனம் வரவில்லை?

சட்டமுன்வடிவை ஆளுநருக்கு அனுப்பி விட்டு, அது தில்லிக்குப் போய் நல்ல முடிவு வரும் என்று காத்திருந்தால் இலவு காத்த கிளியின் நிலைதான்! அடுத்த ஆண்டு நீட் வந்து விடும்! அப்புறம் நீட்டும், பல்லாயிரம் கனவுகள் கருகுவதும், இளம்பிள்ளைகள் மனமுடைந்து மாள்வதும், இயல்பாகிப் போகும்!

நீட் தற்கொலைகளை ஆட்சியாளர் செய்த கொலைகள் என்று தேர்தலின் போது திமுக பரப்புரை செய்தது. அதுவும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களைச் சொன்னதே தவிர இந்திய ஆட்சியாளர்களை அல்ல! ஆட்சிக்கு வந்தால் உடனே நீட்டை ஒழித்து விடுவதாக வாக்குறுதியும் வழங்கியது. எப்படி என்று எவ்விதச் சட்ட விளக்கமும் தரவில்லை. அது அவ்வளவு எளிதன்று என்பதை அப்போதே சுட்டிக்காட்டினோம். ஆனால் இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் திமுகவின் மலிவான விளம்பர உத்தியில் குளிர்காய்ந்தனவே தவிர உண்மையை உடைத்துச் சொல்லவில்லை.

எதிர்க்கட்சியான அஇஅதிமுக கொலை கொள்ளை ஊழல் வழக்குகளில் சிக்கி அழிந்து கொண்டிருக்கிறது. அடிமைகள் அழியட்டும். நீட்டுக்கு காங்கிரஸ், திமுக மீது பழி போடுவதில்தான் அது குறியாக இருந்தது, இப்போதும் இருக்கிறது. திமுகவும் எதிர்ப்பழி சுமத்தவே துடித்தது, இப்போதும் துடிக்கிறது! இந்த இரு கட்சித் தலைமைகளுக்குமே நீட்டைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை, அல்லது தெரிந்து கொள்ளும் அக்கறை இல்லை. நீட் வந்தது எப்படி? உச்ச நீதிமன்றத்தால் மறுதலிக்கப்பட்ட பிறகும் அது நீடிப்பது எப்படி? அது தகுதித் தேர்வா? தகுதியழிப்புத் தேர்வா? நுழைவுத் தேர்வா? நுழைவு மறுப்புத் தேர்வா?

தமிழகத்தைப் பொறுத்த வரை நீதியை மறுக்கும் நீட் ஒரு பார்ப்பனிய சூழ்ச்சி என்பதை திமுக அல்லது அஇஅதிமுக புரிந்து கொள்ளவில்லை. இந்த சூழ்ச்சியின் சுருக்குக் கயிறு ஆர்எஸ்எஸ் கையில் உள்ளது என்பதை விளங்கிக் கொள்ளவும் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கிச் சொல்லவும் வேண்டும். நீட் திணிப்பில் ’சங்கல்ப் டிரஸ்டு’ என்ற அமைப்பின் வகிபாகம் பற்றிப் பேச வேண்டும். சங்கல்ப் டிரஸ்ட்டில் மறைந்துள்ள நச்சுக் கைகளே அனிதா முதல் சௌந்தர்யா வரை நம் பிள்ளைகளின் கழுத்தை நெரித்தவை என்பது திமுகவுக்கும் அஇஅதிமுகவுக்கும் தெரியுமா? நீட்டை எதிர்க்கிற மற்றவர்களுக்குத் தெரியுமா? நாம் அந்த உண்மைகளைத் தோலுரித்துக் காட்டுவோம்.

ஈக்கலையாமல் தேனெடுக்க முடியாது. அறுதியான உறுதியுடன் அறப்போர் தொடுக்காமல் நீட்டை விரட்ட முடியாது.

சட்டப் பேரவையில் சட்டமுன்வடிவை நிறைவேற்றி இத்தனை நாட்கள் ஆன பிறகும் கிண்டியோ தில்லியோ எவ்வித மறுமொழியும் தரவில்லை. இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? நீட்டை விரட்டுவதில் திரு மு. க. ஸ்டாலினுக்கு அக்கறை இருக்குமானால் உடனடியாக அனைத்துக் கட்சிகளையும் இயக்கங்களையும் அமைப்புகளையும் ஆற்றல்களையும் அணிதிரட்டிப் போராடத் திட்டமிட வேண்டும். நீட் வெறும் கல்விச் சிக்கலன்று! தமிழினத்தின் தன்மானச் சிக்கல்! நீட்டை விரட்டுவது திமுக ஆட்சிக்கு வரலாறு வைத்திருக்கும் ’நீட்’ தேர்வாகவே இருக்கக் கூடும்! ஆட்சிக்கு மட்டுமா? நம் அனைவர்க்கும்தான்!

- தியாகு

Pin It