மருத்துவக் கல்விக்கான ’நீட்’ என்னும் நாடளாவிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழக மக்களின் பொதுக் கோரிக்கையாகும். பாசக தவிர நீட்டை ஆதரிக்க யாருமில்லை என்பதே உண்மை. ஆனால், சட்டப் பேரவையில் ஒருமனதாக இயற்றப்பட்ட நீட் விலக்குச் சட்ட முன்வடிவை அரசமைப்புச் சட்ட வழிமுறையின் படி குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலங்கடத்தி வருகிறார் ஆர் எஸ் எஸ் ஆளுநர் ஆர்.என். ரவி. சட்டப் பேரவை முடிவை மதித்து நடக்குமாறு அனைத்துக் கட்சிக் கூட்டமும் வலியுறுத்தியுள்ளது.

அனிதா தொடங்கி 16 மாணவச் செல்வங்களின் உயிரைப் பறித்த நீட் கொடுமைக்கு முடிவு கட்ட முடியாமல் தமிழ்த் தேசம் தவித்து நிற்கிறது. உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டில் ஒப்பளவில் சிறப்பாக இயங்கி வரும் மருத்துவக் கல்வி முறைமையையும் மருத்துவக் கட்டமைப்பையும் நீட் அரித்துக் கொண்டிருக்கிறது. சமூக நீதிக்கு விழுந்துள்ள அடி மருத்துவக் கல்வியோடு நிற்கப் போவதில்லை என்ற அச்சுறுதலும் ஓங்கி நிற்கிறது.

neet and rn raviதமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதில் ’நீட்’டுக்கும் பங்கிருந்தது என்பதே உண்மை. “ஆட்சிக்கு வந்தால் உடனே நீட்டை நீக்கி விடுவோம்” என்று திமுக தந்த தேர்தல் வாக்குறுதி அடிப்படையற்ற ஒன்றுதான். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீதியர் இராஜன் தலைமையில் 8 உறுப்பினர் குழு அமைக்கப்பட்டது. நீட்டின் கேடுகளைப் பயிலவும், மாணவர் சேர்க்கைக்கு மாற்று வழிமுறைகளைப் பரிந்துரைக்கவும் அமைக்கப்பட்ட இக்குழு விரிவாக அனைத்துக் கூறுகளையும் ஆய்வு செய்து 86,000த்துக்கு மேற்பட்ட கருத்துகளைப் பெற்றுப் பதிவு செய்துள்ளது. பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் கருத்துரைத்துள்ளனர். குழு பலமுறை கூடி ஆய்வுசெய்து, 34 நாளில் 165 பக்க அறிக்கையை இறுதி செய்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் கையளித்தது. நீட் எப்படியெல்லாம் ஊர்ப்புற மாணவர்களையும் நகர்ப்புற மாணவர்களையும் தாக்குகிறது, எப்படியெல்லாம் அரசுப் பள்ளி மாணவர்களைத் தாக்குகிறது என்பதையெல்லாம் சான்றுகளுடன் எடுத்துக் காட்டும் இராஜன் குழு அறிக்கை… பயிற்சி மையங்களில் பணங்கட்டிப் பயிற்சி பெற முடிந்தவர்களுக்குள்ள வாய்ப்புகள், ஏழைப் பெற்றோர் படும் துன்பங்கள் அனைத்தையும் பட்டியலிடுகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்களிடம் சிக்கும் தன்னிதிப் பிரிவு மாணவர்களிடம் தண்டும் கொள்ளைக் கட்டணங்கள் சமூக நீதிக்கு ஏற்படுத்தும் கொடுங்காயங்களை இராஜன் குழு கண்டு கொள்ள வில்லை என்பது சமூக நீதி ஆர்வலர்கள் சிலரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் நீட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு தேவை என்ற பரிந்துரை வலுமிக்கது.

இந்த வலுவான அடிப்படை மீதுதான் சென்ற செப்டெம்பர் திங்களே தமிழ்நாடு சட்டப்பேரவை நீட் விலக்கிற்கான சட்ட முன்வடிவை இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆளுநரின் அரசமைப்பியல் கடமை இந்தச் சட்டமுடிவைக் ”கூடுமான விரைவில்” (அரசமைப்பு சட்டம் பயன்படுத்தும் தொடர்) குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைப்பதுதான். கிண்டி ராஜ் பவனில் குடிகொண்டிருக்கும் குட்டிப் பேய் தில்லி ராஷ்டிரபதி பவனில் குடிகொண்டிருக்கும் பெரும்பேய்க்கு அனுப்ப வேண்டும். அந்தப் பெரும்பேய் என்ன செய்யுமோ?

மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பது நீட்! 12 ஆண்டு பள்ளிக் கல்வியைப் பொருளற்றதாக்குவது நீட்! மாநில அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை உரிமையைப் பறித்துக் கொண்டது நீட்!

நீட் விலக்குச் சட்ட முன்வடிவை மேலனுப்பாமல், அதன் மீது வேறெந்த முடிவும் எடுக்காமல், அமுத்தலான வாய்மூடலுடன் கோப்பின் மேல் ஏறி அமர்ந்து ஆறுகால பூசை செய்து கொண்டிருக்கிறார் ஆர்என் ரவி. இத்தனைக்கும் முதலமைச்சர் நேரில் சந்தித்து நினைவூட்டவும் செய்தார். இது குறித்து தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சரைச் சந்திக்க விரும்பிய போது அவர் நேரம் கொடுக்கவே மறுத்து விட்டார்.

தமிழக மக்களின் உணர்வுகளை ஆளுநரும் அவரை ஆட்டிப் படைக்கும் மோதி வகையறாக்களும் மதிக்கவில்லை, அவர்களை இழிவு செய்யவும் தயங்கவில்லை. இது கல்வியில் சமூகநீதி தொடர்பான சிக்கல் மட்டுமன்று, தமிழ்மக்களின் இனமானச் சிக்கலுமாகும்.

”நாங்கள் தில்லி ஆண்டைகள், தமிழர்களாகிய நீங்கள் எங்களுக்கு அடிமைகள்” என்பதைத்தான் ஆர்என் ரவி வழியாக மோதி வகையறாக்கள் நமக்குச் சொல்லாமல் சொல்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற சட்டப் பேரவை, மக்களாட்சி முறையிலான அமைச்சரவையும் முதலமைச்சரும், மக்களின் தேவை, மக்களின் ஆழ்ந்த உணர்வுகள்… எது பற்றியும் கவலை இல்லாமல் சென்னையிலும் ஊட்டியிலும் நம் செலவில் உல்லாச வாழ்க்கை, ராஜ் பவனையே ஆர்எஸ்எஸ் அலுவலகமாக்கி, அவ்வப்போது சிறிராமனைத் தொழுதிடும் மத வெறி அறிக்கைகள்... இந்த ஆர் என் ரவி அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை!

இந்த அடாவடி ஆளுநரை வெளியேற்றும் நேரம் வந்து விட்டது. ஆட்டுக்கு ஏன் தாடி என்று பேசிக் கொண்டிருந்தால் போதாது. தமிழ்நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை என்ற முடிவையையும் எடுக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு அந்தத் திறன் உண்டு என்று நம்புகிறோம்! கிண்டியில் 156 ஏக்கர் பரப்பளவில் 6,000 மரங்கள், செடிகொடிகள், மான்கள், மற்ற எல்லாவற்றோடும், ஆள் படை மாகாணம் அனைத்தோடும் விரிந்து பரந்து அலங்கமாய்க் கிடக்கும் ராஜ் பவன் மாளிகையை வேறு நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். முதலில் இந்தப் பேயை விரட்டுவோம்!

- தியாகு

Pin It