தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மீண்டும் ஒரு நாடகத்தை சட்டப்பேரவையில் அரங்கேற்றி இருக்கிறார். அரசு எழுதிக்கொடுத்த உரையை படிக்காமல் தனது உரையை இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே முடித்துக் கொண்டார். அவர் எதையுமே முழுமையாக படிப்பதில்லை. அது திராவிடம் என்றாலும் சரி, வள்ளுவர் என்றாலும் சரி, சனாதனம் என்றாலும் சரி எதையும் அவர் முழுமையாக படிக்காமல் தனக்கு தெரிந்ததையெல்லாம் பேச வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒருவர். அதேபோல அரசே எழுதிக் கொடுத்து சட்டப்படி படிக்க வேண்டிய ஆளுநர் அதில் எனக்கு முரண்பாடு இருக்கிறது என்று கூறி தானே ஒரு உரையை எழுதிப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார் போல.

அப்படியானால் தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் எதாவது ஒன்றில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதலமைச்சராகி, அவர் அமைக்கிற அமைச்சரவையில் ஒரு உரையை தயாரித்த பின்னர் அவர் விரும்புகிற உரையை படிக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி, அமைச்சரவையின் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய ஒரு ஆளுநர் தமிழ்நாடு அரசின் உரையில் தனக்கு முரண்பாடு இருக்கிறது என்று பதிவு செய்திருப்பது என்பது அப்பட்டமான சட்ட விரோத, அவை மரபை மீறிய ஒரு நடவடிக்கை என்றுதான் எதிர்காலம் பதிவு செய்யும்.

இதற்காக சபாநாயகர் அப்பாவு, சிறந்த பட்டம் ஒன்றை அவருக்கு வழங்கியிருக்கிறார். அதாவது கோட்சே வழியிலும், சாவர்க்கர் வழியிலும் வந்தவர் என்ற பட்டத்தை அவருக்கு கொடுத்தார். அந்த பட்டத்தோடு ஆளுநர் வெளியேறி இருப்பது என்பது தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்பை மேலும் உயர்த்தியிருக்கிறது.

சட்டமன்றம் தொடங்குவதற்கு முன்பே தேசிய கீதம் பாட வேண்டும் என்கிறார். கூட்டம் தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து, கூட்டம் நிறைவடையும் போது தேசியகீதம் பாடுவது தான்  தமிழ்நாடு சட்டப்பேரவையின் மரபு. ஆனால் ஆளுநரோ கூட்டம் தொடங்குவதற்கு முன்பே தேசியகீதம் பாட வேண்டும் என்ற தனது அதீத தேசபக்தியை வெளிப்படுத்தி, அதை சட்டமன்றம் பின்பற்ற வேண்டும் என்கிறார். ஏற்கெனவே பின்பற்றிவரும் ஒரு மரபை மீறி ஏன் ஒரு கருத்தை திணிக்க வேண்டும்?

தமிழ்த்தாய் வாழ்த்திலும் திராவிடம் வருகிறது. தேசிய கீதத்திலும் திராவிடம் வருகிறது. இரண்டிலும் வருகிற திராவிடம் ஆளுநருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. ஆனாலும் அவர் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே அவையை விட்டு வெளியேறியது அவர் தேசிய கீதத்தையும் அவமத்திருக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது. இவருடைய தேசபக்தி திமுக அரசுக்கு குடைச்சல் தருவது மட்டும்தான்.

ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் மாளிகையாக மாற்றிக்கொண்டு அரசியல் சட்டத்திற்கு விரோதமான கருத்துக்களை பேசிக்கொண்டே தேசபக்தி நாடகம் போடுவதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆளுநரின் இத்தகைய செயல்பாடுகள் தமிழ்நாட்டு பாஜகவின் சவப்பெட்டியில் மேலும் ஆணியை அடித்துக்கொண்டே இருக்கிறது. இதற்காகவே ஆளுநர் ரவியை நாம் பாராட்ட வேண்டும்.

இன அழிப்புக்கு துணைபோகும் அதானி?

காஸா நகரில் பாலஸ்தீனிய மக்களையும், படைகளையும் குறிவைத்து இஸ்ரேலிய படைகள் கடந்த 4 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக ஹெர்ம்ஸ் 900 வகை டிரோன்களை வைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 28,000 பேர் உயிரிழந்தனர். அதில் 10,000க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். இனப்படுகொலைக்கு ஒப்பான இக்கொடூரச் செயலுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வழக்கை எதிர்கொள்ளும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. இந்த ஹெர்ம்ஸ் 900 வகை டிரோன்களை அதானி குழுமம் தற்போது தயாரித்து அனுப்பியிருக்கிறது என்ற தகவல்  வெளியாகியிருக்கிறது. 20-க்கும் மேற்பட்ட டிரோன்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு உபகரணங்கள் சார்ந்த பிரபல ஊடகமான ஷெப்பர்டு மீடியா கூறியுள்ளது.

இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, 2018ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் 15 மில்லியன் டாலர் முதலீட்டில் அதானி குழுமம் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு ஆலையை நிறுவியது. அந்த ஆலையில் இருந்துதான் இந்த டிரோன்கள் தயாரித்து அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானபோது அமைதிகாத்தது போலவே, இப்போதும் அமைதிகாக்கிறது மோடி அரசு. வணிக நோக்கித்திற்காக இன அழிப்புக்கு உதவும் டிரோன்களை தயாரித்து அனுப்பும் அதானி குழுமத்தின் நடவடிக்கையை தடுக்காமல், ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பதும் இன அழிப்புக்கு துணைபோகும் செயலே என கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

- விடுதலை இராசேந்திரன்

Pin It