‘சி.பி.எஸ்.ஈ.’ என்ற பார்ப்பனிய அமைப்பு, ‘நீட்’ தேர்வை அலங்கோலமாக - தான்தோன்றித்தனமாக நடத்தி முடித்திருக்கிறது. தமிழக பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் கடும் அவமானத்துக்கும் சொல்லொண்ணா துயரத்துக்கும் உள்ளாக்கப்பட் டிருக்கிறார்கள். மருத்துவராகும் கனவோடு இரவு பகலாக கடுமையாக உழைத்துப் படித்த நமது ஒடுக்கப்பட்ட சமுதாயத்து மாணவ மாணவிகள் தண்டனைக்குள்ளாக்கப்பட்ட கிரிமினல் கைதிகள் சிறைச் சாலைகளில் அடைக்கப்படும்போது நடத்தப் படுவது போன்ற சோதனைகள் அவமானங்களை சந்தித்திருக்கிறார்கள். தமிழ்நாடே இந்திய பார்ப்பனிய இந்துத்துவ ஆட்சியால் தண்டிக்கப்படும் மாநிலமாக மாறியிருக்கிறது. நெஞ்சு பதறும் இந்தக் கொடுமைகள் குறித்து வந்த செய்திகளை இங்கே தொகுத்து தருகிறோம்:
1) தமிழ்நாட்டைச் சார்ந்த 5000 மாணவ மாணவிகளுக்கு கேரளா, ராஜஸ்தான் என்ற வேறு மாநிலங்களில் போய் நீட் தேர்வை எழுத சி.பி.எஸ்.ஈ. உத்தரவிட்டது.
2) நீட் தேர்வு குறித்த சி.பி.ஸ்.ஈ.யின் தகவல் அறிக்கை - பக்கம் 2 - முக்கிய குறிப்புகளின் கீழ் 6ஆவது அம்சம் மற்றும் 4ஆவது பிரிவு ‘நுழைவுத் தேர்வுக்கான நகர மய்யங்கள்’ என்ற தலைப்பின் கீழ் 4(ஏ) முதல் 4(எச்) வரை இவ்வாறு விரிவாகக் கூறுகிறது:
“தேர்வு மய்ய ஒதுக்கீடு, கணினி மூலம் செய்யப் படுகிறது. இதில் மனிதக் குறுக்கீடு இல்லை. எந்தச் சூழ்நிலையிலும் வாரியத்தால் தேர்வு மய்யம் மாற்றப்பட மாட்டாது.” இப்படி தெளிவான அறிவிப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில் தேர்வு மய்யத்தைத் தேர்வு செய்த 5000 மாணவர்களின் தேர்வு மய்யங்கள் எப்படி பிற மாநிலங்களுக்கு மாற்றப்பட்டன? இதற்கு பொறுப்பேற்க வேண்டியது ‘சி.பி.எஸ்.ஈ.’ அல்லவா?
3) சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகு சி.பி.எஸ்.ஈ. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு ஏன் செய்ய வேண்டும்? தனது பார்ப்பனத் திமிருக்கு உச்சநீதி மன்ற பார்ப்பனக் கூடாரம் ஒப்புதல் தந்துவிடும் என்ற நம்பிக்கையில் தானே? அது தான் நடந்தது. தேர்வுக்கு இரு நாட்கள் மட்டுமே இடையில் இருக்கும்போது உயர்நீதிமன்றத் தீர்ப்பை இரத்து செய்து, சி.பி.எஸ்.ஈ. முடிவை நியாயப்படுத்தி, ‘வெளி மாநிலத்துக்கு ஓடு’ என்று நமது மாணவ மாணவிகளுக்கு உச்சநீதிமன்றம் அதிகாரத் திமிரில் ஆணை பிறப்பிப்பது நியாயம் தானா?
4) இப்போது கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு தனது மகனை அழைத்துக் கொண்டு தேர்வு எழுதச் சென்ற ஒரு தந்தை, கேரளாவிலேயே பிணமாகி தமிழகத்துக்கு சடலமாக வந்து சேர்ந்திருக்கிறார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த விளாக்குடி கிராமத்தைச் சார்ந்த கிருஷ்ணசாமி, தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துடன் திடீரென உச்சநீதி மன்றத் தீர்ப்பால் எர்ணாகுளம் போக வேண்டிய நிலையில் முன் பயணச் சீட்டு கிடைக்காமல் தொடர் வண்டியில் இரவு முழுதும் நின்று கொண்டே பயணம் செய்து, களைப்புற்று மன அழுத்தத்துக்கு உள்ளாகி, அடுத்த நாள் மகனுடன் தேர்வு மய்யத்துக்குக்கூட உடன் செல்ல முடியாத நிலையில் அறையிலேயே தங்கி அங்கே மாரடைப்புக்குள்ளாகி மரணமடைந்து விட்டார். அனிதா என்ற தங்கையை கடந்த ஆண்டு ‘காவு’ கேட்ட நீட், இப்போது ஒரு மாணவரின் தந்தை உயிரையும் ‘பலி’ கேட்டிருக் கிறது. கிருஷ்ணசாமி, நூலகர். இசை, நடனம் போன்ற கலைகளில் ஆர்வம் கொண்டவர். இரு கால்களையும் இழந்த துணைவியரை ஜாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டவர். சதுரங்க விiளாயட்டில் ஆர்வம் கொண்ட அவர், தனது மகனை மருத்துவராகவும், சதுரங்க விளையாட்டு வீரராகவும் உருவாக்க தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தார். குருதி முகாம் நடத்தியவர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடோடி உதவிக் கரம் நீட்டுபவர். அவரது சொந்த கிராமமே சோகத்தில் அழுது புலம்புகிறது.
5) ‘நீட்’டுக்கு விலக்கு கோரும் தமிழக அரசின் சட்டத்தை குப்பைக் கூடையில் வீசி எறிந்த பார்ப்பன நடுவண் ஆட்சியை தட்டிக் கேட்க தொடை நடுங்கிக் கிடக்கும் தமிழக ஆட்சி தேர்வு மய்யங்களை வெளி மாநிலங்களுக்கு மாற்றி யதைக்கூட கண்டிக்கத் தயாராக இல்லை. இது தமிழ்நாட்டின் சுயமரியாதைக்கே இழைத்த அவமதிப்பு.
6) இதேபோல, சிவகங்கை மாவட்டம் சிங்கணம்புரியைச் சார்ந்த கண்ணன் (44), தனது மகள் அய்ஸ்வர்யாவை மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலைக் கல்லூரிக்கு நீட் தேர்வு எழுத அழைத்துச் சென்றார். தேர்வு எழுதிய மகள் வெளியே வந்து சரியாக எழுதவில்லை அப்பா என்று கூறியவுடன், அங்கேயே சரிந்து விழுந்து மரணமடைந்துவிட்டார்.
7) பண்ருட்டியிலிருந்து புதுச்சேரிக்கு மகளை நீட் தேர்வுக்கு அழைத்து வந்த சீனிவாசன் என்பவரும் மரணமடைந்துவிட்டார். இது இந்த ஆண்டின் மூன்றாவது பலி.
8) நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள், சோதனைகளுடன் நீட் தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. சுமார் 3 மணி நேரம் பெற்றோர் வெயிலில் காத்திருந்தனர்.
9) நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையும்கூட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்--Neet) அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - Ayush) படிப்புகள் மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவருக்கும் நீட் தேர்வு கட்டாயமாக் கப்பட்டுள்ளது.
10) அதன்படி, நாடு முழுவதும் 2018-19ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மே 6இல் நடந்தது. தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் 136 நகரங்களில் 2,255 மையங்களில் நடந்த நீட் தேர்வில் விண்ணப்பித்திருந்த 13 லட்சத்து 26,725 மாணவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் தமிழகத்தில் 10 நகரங்களில் 170 மையங்களில் 1 லட்சத்து 7,288 மாணவர்களில்,1 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
11) காலை 6 மணி முதல் மாணவர் கள் தேர்வு மையத்தின் வாயிலில் காத்திருந்தனர். மையத்தின் வாயில் மற்றும் உள்பகுதி என 2 இடங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைக்கு பின்னரே தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப் பட்டனர். குறிப்பாக மாணவிகளை பொது இடங்களில் வைத்து சோதனை செய்தது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. இதற்கு பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
12) மாணவிகள் அணிந்து வந்திருந்த கம்மல், மூக்குத்தி, கொலுசு, வளையல்கள் அகற்றப் பட்டன.
13) மாணவிகளின் தலைமுடிகளை களைந்தும் காதுகளில் டார்ச் லைட் அடித்தும் சோதனை செய்தனர். கடுமையான கட்டுப்பாடுகளாலும் சோதனைகளாலும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவ, மாணவிகள் பதற்றத்துடனேயே தேர்வு எழுதினர். 9.30 மணிக்கு பின்னர் ஒரு நிமிடம் தாமதமமாக வந்தவர்களுக்கும் அனு மதி மறுக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் அதிகாரிகளுடன் வாக்குவாதமும் போராட்டமும் நடைபெற்றது.
14) சென்னையில் 49 மையங்களில் தேர்வு நடை பெற்றது. பெரும்பாலும் திருச்சி, மதுரை, தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னையில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளி யில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் அதிகாரிகள் ஆதார் கார்டு இருந் தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்களும் பெற்றோர்களும் “ஹால் டிக்கெட் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மட் டும் கொண்டுவர வேண்டும். மற்ற எதுவும் தேர்வு மையத்துக்குள் அனுமதியில்லை என்று தெளி வாக சொல்லப்பட்டுள்ளது. பின் எதற்காக ஆதார் கார்டு கேட்கிறீர்கள் ” என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகே மாணவர்கள் அனுமதிக்கப் பட்டனர்.
15) கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அஹிசா என்ற மாணவிக்கு சென்னை கோபாலபுரம் தனியார் பள்ளியில் தேர்வு மை யம் ஒதுக்கப்பட்டிருந்தது. தந்தை ஷாஜியுடன் மலப்புரத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்தார். அதிகாலை 5.40 மணிக்கு வர வேண்டிய ரயில், அரக்கோணத்தில் நடக்கும் தண்டவாளம் சீரமைப்பு பணியால் தாமதமாக காலை 9.40 மணிக்கு வந்தது. அங்கிருந்து காரில் தேர்வு மையத்துக்கு 9.50 மணிக்கு வந்தார். ஆனால், அவரை அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
16) அங்கிருந்த பொதுமக்கள் எவ்வளவு சொல்லியும் சாலை மறி யல் போராட்டம் நடத்தியும் அனுமதிக்கவில்லை. இதனால் தேர்வு எழுத முடியாமல் மாணவி கதறி அழுத சம்பவம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.
17) இதேபோல் கோவையைச் சேர்ந்த மாணவர் அர்ஷாத் அக மது என்பவருக்கு சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. 9.35 மணிக்கு வந்த மாணவரை 5 நிமிடம் தாமதமாகி விட்டது என்று கூறி தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் அந்த மாணவர் கண் கலங்கியபடி சென்றார்.
18) மதுரை நரிமேடு நாய்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 720 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத காலை 9.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் வினாத்தாள்கள் தேர்வு கண்காணிப்பாளரால் வழங்கப்பட்டன. இதில் 120 பேருக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்கள் தமிழ், ஆங்கிலத்தில் இல்லாமல் இந்தி மொழியில் இருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் தேர்வு கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தேர்வு மைய அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து தமிழ், ஆங்கிலம் வினாத்தாள்களை வழங்கினர். இதனால் 5 மணி நேர தாமதத்துக்குப் பிறகே மாணவர்கள் தேர்வை எழுதத் தொடங்கினர். இவர்கள்தான் தொடர் வண்டி தாமதத்தால் சில நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவ மாணவியை தேர்வு எழுத அனுமதி மறுத்தவர்கள்.
19) மாணவ மாணவிகளுக்கு நேர்ந்த இவ்வளவு அவமானம் அலைக் கழிப்புகளைவிட சில மாணவர்களின் ‘பூணூலை’ அகற்றச் சொன்னதுதான் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ போன்ற ஏடுகளால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. அணிகலன்கள் எல்லாவற்றையும் நீக்கச் சொன்ன சோதனை யாளர்கள், ‘புனித நூலான பூணூலை’யும்கூட அகற்றச் சொல்லி விட்டார்கள் என்று பதறுகிறது, அந்த ஏடு.
20) மத்திய தேர்வாணையம் - தமிழக தேர்வாணையம் - வேலைவாய்ப்பு வாரியங்கள் எத்தனையோ தேர்வுகளை நடத்துகின்றன. எந்தத் தேர்வுக்கும் இப்படி ஒரு கெடுபிடி அவமானங்கள் நடப்பது இல்லை. அப்படி என்ன சி.பி.எஸ்.ஈ. நேர்மையின் சிகரமா? இதே ‘சி.பி.எஸ்.ஈ.’ மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களைவிட உயர் கல்வியில் அதிக இடங்களைப் பெற வேண்டும் என்பதற்காக முறைகேடாக மதிப்பெண்களை வாரிப் போட்டது. அந்த ஊழல் அம்பலமாகி, சி.பி.எஸ்.ஈ. மாணவர்களின் தேர்வையே நிறுத்தி வைத்தது என்பது கடந்தகால வரலாறு.
21) சி.பி.எஸ்.ஈ.க்கு இத்தகைய தேர்வுகளை நடத்தும் தகுதியோ, அனுபவமோ கிடையாது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தேர்வுத் துறை இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கே.தேவராஜன் கூறியிருக்கிறார். “மாநில அரசின் கல்வித் துறையோடு சி.பி.எஸ்.ஈ. கலந்து பேசுவதோ, ஒத்துழைப்பதோ இல்லை. ஆனால் மத்திய தேர்வாணையம் - ஆசிரியர் தேர்வு வாரியங்கள் - மாநில கல்வித்துறை ஒத்துழைப்போடுதான் தேர்வுகள் நடத்துகின்றன” என்று சி.பி.எஸ்.ஈ.யின் பார்ப்பனத் திமிரை தோலுரித்துள்ளார்.
22) கடந்த ஆண்டைவிட 31 சதவீத மாணவர்கள் இவ்வாண்டு ‘நீட்’ தேர்வு எழுதியிருக்கிறார்கள். இதைக் காரணம் காட்டி, ‘நீட்’ தேர்வை மாணவர்கள் ஆதரிப்பதாக பா.ஜ.க. தலைவர்கள் கூறுவது பம்மாத்து வாதம். ஆயுர் வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி உள்ளிட்ட ஆயுஸ் படிப்புகளுக்கும் ‘நீட்’ கட்டாயப்படுத்தப்பட்டதே இதற்குக் காரணம்.