மரணங்களை ரசித்து வேடிக்கைப் பார்க்கும் சமூகமாக நாம் மாறி விட்டோம். வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்க அவ்வபோது சில மரணங்கள் தேவைப்படுகின்றது. அதுவும் வழக்கமான மரணங்கள் என்றால் அது நம் விழிகளில் இருந்து மூளைக்குள் தகவல் கடத்தப்படுவதற்கு முன் எண்ணங்களில் இருந்து காணாமல் போய் விடுகின்றது.
மரணங்களில் ஒரு மர்மமும், கிளுகிளுப்பும் இருந்தால் மட்டுமே அது சமூகத்தை திரும்பிப் பார்க்க வைக்கின்றது, பேச வைக்கின்றது. அப்படிப்பட்ட சமூகத்தில்தான் தங்களுக்கான இடம் தகுதியின் பேரால் மறுக்கப்பட்டு “ஒன்று நீ உன் தகுதியை நிரூபி இல்லை என்றால் உன்னை தகுதியற்றவன் என ஒப்புக்கொண்டு இந்த உலகத்தில் உனக்கான இடத்தை நீயே தேடிக் கொள்” என விரட்டியடிக்கப்பட்ட இளம் குருத்துகள் தன்னுடைய திறமையின்மை எண்ணி குற்ற உணர்வடைந்து அதிலிருந்து விடுபட தற்கொலைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
திறமையின் பேரால் தற்கொலை செய்துகொள்ள நிர்பந்திக்கப்பட்ட ஒவ்வொரு இளம் குருத்துகளும் இறுதிமூச்சு அடங்கும் போது சுரணையற்ற வெட்கக்கேடான இந்தச் சமூக அமைப்பின் மீது நிச்சயம் காறி உமிழ்ந்துவிட்டுதான் சென்றிருப்பார்கள்.
ஜோதி ஸ்ரீ, ஆதித்யா, மோத்திலால், பிரதீபா, சுபஸ்ரீ, ஏஞ்சலின் சுருதி, ரிதுஸ்ரீ, மோனிஷா, வைஸ்யா என்று நீட் தேர்வுக்காக மோடி அரசு கொடுத்த பலிகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போக நீட் தேர்வை தடுத்த நிறுத்த அதிகாரம் உள்ளவர்களும், தடுத்து நிறுத்தி வைக்கும் அளவுக்கு மக்கள் செல்வாக்கு கொண்ட கட்சிகளும் என்ன செய்தது என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகின்றது.
இழவு விழுந்த வீட்டுக்கு கேமரா சகிதம் சென்று நிவாரணம் வழங்குவதும், செத்துப் போனவர்களின் குடும்பத்துடன் குரூப் போட்டோ எடுத்துக் கொள்வதும், சுரணையற்ற ஜென்மங்களுக்கு கேவலமாகவே தெரிவதில்லை.
அவர்கள் எப்போது இழவு விழும் விளம்பரம் தேடிக் கொள்ளலாம் என்று கையில் பணத்தோடு சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள். துரதிஷ்டவசமாக நாம் இதுபோன்றவர்கள்தான் நீட்டை தடுத்து நிறுத்துவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம்.
இதைவிட பெரிய கொடுமை நீட் என்னும் அநீதி ஒழித்துக் கட்டப்பட வேண்டுமா இல்லையா என்ற விவாதத்தை நடிகர் சூர்யா நீட்டை எதிர்ப்பது சரியா தவறா என்று பிரச்சினை மடைமாற்றப்பட்டதுதான்.
உண்மையில் இந்தப் பிரச்சினை நடிகர் சூர்யா தொடர்புடையதா இல்லை லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடையதா என்று பார்க்காமல் சூர்யா திமுகவை ஆதரிக்க வேண்டும் என்று கேட்பதெல்லாம் என்ன வகையான அரசியல் நிலைப்பாடு? சூர்யா போன்றவர்கள் ஏதாவது சமூகத்துக்குச் செய்ய வேண்டும் என விரும்புகின்றார்கள்.
பொதுவாக தமிழ் சினிமா கதாநாயகர்கள் பல கோடி சம்பளம் வாங்குகின்றவர்களாகவே இருக்கின்றார்கள். ஆனால் அவர்களில் பலர் அதை வைத்துச் சமூகத்துக்கு எந்தவகையான உருப்படியான செயல்களையும் செய்வதில்லை.
ஆனால் சூர்யா போன்றவர்கள் ஏழை மாணவர்களை படிக்க வைப்பதன் மூலம் சமூக மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என நம்புகின்றார்கள். அதைத் தாண்டி வேறு எந்த வகையான சமூக அவலங்களுக்கு எதிராகவும் அவர் குரல் கொடுப்பதில்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
தன்னை அரசியல் சாராத நபராகவே அவர் முன்னிறுத்திக் கொள்கின்றார். அவர் எந்த சித்தாந்தத்தையும் முன்னிறுத்தி தனது கருத்துக்களை வெளிப்படுத்தவுமில்லை. சூர்யா மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள பல செல்வந்தர்கள் இது போல பள்ளிகளுக்கு நன்கொடை கொடுப்பதும், சில ஏழை மாணவர்களின் கல்விச் செலவுக்கு உதவவும் செய்துதான் வருகின்றார்கள்.
தமிழ்நாட்டில் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பெற்ற பல கல்லூரிகளின் வரலாற்றைக் கேட்டால் சாதி, மதம் கடந்து அது ஏழை மாணவர்கள் குறிப்பாக பார்ப்பனர்கள் மட்டுமே கல்வி பெற்றுவந்த சூழ்நிலையில் அனைத்துசாதி மாணவர்களும் கல்வி பயில வேண்டும் என்ற உயரிய நோக்கில் கட்டப் பெற்றதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
ஒரு சமூகம் உயர வேண்டும் என்றால் கல்வி நிச்சயம் முக்கியம். அதை யாரும் மறுப்பதிலை. இன்று தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலமாக இருக்கின்றது என்று சொன்னால் அதற்கு பின்னால் அரசு மட்டுமல்ல பல சமூக அக்கறை உள்ள தனி நபர்களின் பங்களிப்பும் உள்ளது.
ஆனால் உண்மையில் தன் குடிமக்களுக்கு கல்வியை அதுவும் தரமான பொதுவான கல்வியைக் கொடுக்க வேண்டிய முழுப்பொறுப்பும் அரசுக்கு மட்டுமே உள்ளது.
நம்மிடம் உதவி செய்யும் அளவுக்கு பண வசதி இருக்கலாம். ஆனால் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு என்பது அரசு அதை செய்ய வைக்க நாம் நிர்பந்திப்பதுதான். அரசு செவி கொடுத்து கேட்காமல் சில தனியார் கல்விக் கொள்ளையர்கள் லாபம் ஈட்ட உடந்தையாக இருந்தால் அதற்கு எதிராக மக்களை திரட்டி வெற்றி பெறும்வரை போராடுவதுதான் சரியான வழியாக இருக்கும்.
பணத்தைச் செலவு செய்து தர்மவான்கள் பட்டத்தை வேண்டுமானால் வாங்கலாம், ஆனால் சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதுதான் நிரந்தரமானது.
சூர்யா போன்றவர்கள் எப்போதுமே தங்களின் செயல்பாடுகளுக்கு வரம்பிட்டுக் கொண்டுதான் பேசுவார்கள். அவர் கல்வி சார்ந்த பிரச்சினைகளைத் தவிர வேறு எதற்கும் குரல் கொடுக்க விரும்பவில்லை என்பதில் இருந்தே இதை அறிந்து கொள்ளலாம்.
அதனால் சூர்யாவை பிரச்சினையின் மையமாக்கி விவாதிப்பது தேவையற்றது. பிஜேபி சூர்யாவை எதிர்த்தால் நாம் நிச்சயம் சூர்யாவுக்காக குரல் கொடுப்போம். ஆனால் சூர்யாவை நீட் பிரச்சினையை தீர்த்து வைக்க வந்த நாயகனாக சித்தரிப்பது உள்ளபடியே நீட்டை எதிர்த்து இத்தனை ஆண்டுகளாக களத்தில் இறங்கி போராடியவர்களைக் கொச்சைப்படுத்தும் செயலாகும்.
தற்போது பிரச்சினை இதுவல்ல...
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் என பல வகையான கல்வி முறைகள் நடைமுறையில் இருந்தாலும் அரசானது சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே கேள்விகளைக் கேட்பதே பெரும் அநீதியாகும்.
இதன் மூலம் ஒவ்வொரு மாநிலத்தின் தனித்தன்மைக்கும் ஏற்றார் போல இருந்த பாடத்திட்டங்களை ஒழித்துக் கட்டிவிட்டு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு வலுக்கட்டாயமாக மாற வைக்கும் சதித்திட்டமே ஒளிந்திருக்கின்றது.
சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தை நுழைத்தால் ஒருபக்கம் இந்தியையும் திணித்து விடலாம்; மற்றொரு பக்கம் பெரும் கார்ப்ரேட்களுக்கு இந்திய கல்விச் சந்தையையும் திறந்து விடலாம் என்பதுதான் நயவஞ்சகர்களின் கனவாகும்.
ஒரு பக்கம் நீட்டை எதிர்ப்போம் என்று தமிழ்நாடு அரசு சொல்லிக் கொண்டே நீட் பயிற்சி வகுப்புகளை நடத்துவதும், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மிகக் குறைந்த அளவாக 7.5 சதவீதம் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்குவதும் இவர்கள் நீட்டை ஒழிக்கும் லட்சணத்தைக் காட்டுகின்றது.
உண்மையில் இவர்களுக்கு ஏழை மாணவர்கள் மீதும் அரசுப் பள்ளிகள் மீதும் அக்கறை இருக்குமானால் நீட்டை ஒழித்துக் கட்டிவிட்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்.
சமூகத்தின் கடைக்கோடியில் இருந்து போராடி மதிப்பெண் பெற்று மருத்துவக் கனவோடு வரும் ஏழைகளுக்காக கட்டப் பெற்றதுதான் அரசு மருத்துவக் கல்லூரிகள். சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் பணக்கார வீட்டுக் குழந்தைகள் படிக்க அல்ல. அவர்களுக்கு வேண்டுமானால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படித்துவிட்டு அமெரிக்காவுக்கோ, ஐரோப்பாவுக்கோ போய்க் கொள்ளட்டும்.
தமிழகத்தில் புற்றீசல் போல நீட் பயிற்சி மையங்கள் தற்போது முளைத்திருக்கின்றன. ஆண்டுக்கு 70 ஆயிரம் முதல் 4 லட்சம் வரை பயிற்சிக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இவ்வளவு செலவு செய்து ஒரு அன்றாடம்காய்ச்சியின் பிள்ளை படிக்க முடியுமா? நிச்சயம் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே படிக்க முடியும்.
எனவே இந்த அரசுக்கு உண்மையில் மாநில உரிமைகளின் மீது அக்கறை இருக்குமானல் தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,900 எம்பிபிஎஸ் இடங்களில் 455 இடங்கள் மத்தியத் தொகுப்புக்கு போக மீதமிருக்கும் 2445 இடங்களிலும் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. தமிழ்நாட்டில் உள்ள 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 1300 எம்பிபிஎஸ் இடங்களில் 783 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்குக் கிடைத்தாலும் அதை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.தனியார் பள்ளிகளிலும், சிபிஎஸ்இ பள்ளிகளிலும் பயிலும் பணக்கார மாணவர்கள் வேண்டுமென்றால் அங்கு சென்று படித்துக் கொள்ளட்டும்.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், எம்.டி., எம்.எஸ் போன்ற மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கு 1585 இடங்கள் உள்ளன. எம்பிபிஎஸ் முடித்து, அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து பணியாற்றும் மருத்துவர்களுக்கு இந்த உயர் படிப்புகளில் 50 சதவிகிதம் ஒதுக்கீடு இருந்தது.
கிராமப்புறப் பகுதிகள், மலைக்கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றுவோருக்கு சிறப்பு மதிப்பெண்கள் தரப்பட்டு முன்னுரிமையும் வழங்கப்பட்டு வந்தது.மேலும் முன்னுரிமையில் சேர்பவர்கள், குறிப்பிட்ட ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணியாற்றியாக வேண்டும் என்று ஒப்பந்தமும் இருந்தது ஆனால் தற்போது இந்த முறையை எடுத்து விட்டார்கள்.
நீட் தேர்வு மூலம் தான் இந்த இடங்களும் இனி நிரப்பப்படும். இதனால் எம்பிபிஎஸ் முடிக்கும் ஒரு மருத்துவர், அரசு மருத்துவமனைக்கு வரவே தேவையில்லை என்ற நிலையை நீட் ஏற்படுத்தி இருக்கின்றது.
எனவே பிரச்சினை சாதாரணமானதல்ல, கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிரோடு சம்மந்தப்பட்டது. நீட் என்பது பார்ப்பன பயங்கரவாதத்திற்கும், முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கும் எதிராக சாமானிய மக்கள் நடத்தும் போராகும்.
தகுதி, திறமை என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாக உண்டக்கட்டி வாங்கித் தின்றே பிழைத்த கூட்டத்தின் வெற்றுக்கூச்சல் என்பதைப் புரிந்து கொண்டு தனியார்மயம், தாராளமயம், பார்ப்பனியம் போன்றவற்றை எதிர்க்கும் கட்சிகளோடு, இயக்கங்களோடு இணைந்து போராடி இதை நாம் முறியடிக்க வேண்டும்.
- செ.கார்கி