நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை சட்டம் மற்றும் அரசியல் வழியாக முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உணர்ந்து, 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி யுள்ளார். இரண்டு முக்கிய கருத்துகளை அக்கடிதம் வலியுறுத்துகிறது. கல்வித் துறை நிர்வாகம் மாநில அரசுகளிடம் இருக்க வேண்டும்; அதற்குத் தேவையான முயற்சிகளில் மாநிலங்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க முன் வர வேண்டும் என்று வலியுறுத்தும் அந்தக் கடிதம், நீட் தேர்வு வழியாக ஒன்றிய ஆட்சி கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்படுவதையும் சுட்டிக் காட்டுகிறது. பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய முதல்வரின் சிறப்பான முன்னெடுப்பு இது.
சமூக நீதியின் பிறப்பிடமான தமிழ்நாடு மட்டும் தான், ‘நீட்’ ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை சமூகத்து மாணவர்களின், மருத்துவக் கனவை சிதைக்கும் ஆபத்துகளை கவலையுடன் புரிந்து செயலாற்றி வருகிறது. ஏற்கனவே ஆட்சி யிலிருந்தவர்கள் சடங்குக்காக ஒரு தீர்மானம் நிறைவேற்றி விட்டு அதை ஒன்றிய ஆட்சி புறந்தள்ளி தாக்கீது அனுப்பியதையும் கூட மறைத்து விட்டார்கள். தி.மு.க. ஆட்சி இதற்காக ஏ.கே. ராஜன் தலைமையில் குழு ஒன்று நியமித்து நீட் உருவாக்கிய பாதிப்புகளை புள்ளி விவரங்களுடன் ஆவணப்படுத்தியிருக்கிறது. இந்த அறிக்கையையும் தனது கடிதத்துடன் இணைத்து இதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆராய்ந்தால் கிராமப்புற ஒடுக்கப்பட்ட மாணவர்களின் பாதிப்புகளை உணர முடியும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருக்கிறார். மாநில முதல்வர்களிடம் இக்கடிதங்களை தமிழக அரசு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று வழங்குவார்கள் என்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
தமிழக சட்டமன்றத்தில் ஏ.கே. ராஜன் குழு பரிந்துரை அடிப்படை யில் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதா சட்டமா வதற்கு ஆளுநர் ஒப்புதல் வேண்டும். அந்த ஒப்புதல் கிடைக்குமா, இல்லையா என்ற கேள்விக்குறி இருக்கவே செய்கிறது. அதே நேரத்தில் பல்வேறு மாநிலங்களிலும் இந்த சமூக நீதிக் குரல் கூட்டாட்சிக் கண்ணோட்டத் தோடு வலியுறுத்தப்படுமானால் கோரிக்கை மேலும் அழுத்த மடைந்து ஒன்றிய அரசை அசைய வைக்கும் வாய்ப்புகளை உருவாக்கக் கூடும்.
86,342 பேரிடம் கருத்துகளைக் கேட்ட ஏ.கே. ராஜன் குழு நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் படிப்பு (11.45 சதவீதத்திலிருந்து 50.81 சதவீதத்துக்கு வீழ்ச்சி); அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதில் ஏற்பட்ட வீழ்ச்சி (1.12 சதவீதத்திலிருந்து 0.62 சதவீதம்); ஆங்கிலம் வழிப் படித்தவர்கள் சேர்க்கை வீதம் அதிகரிப்பு (85.12லிருந்து 98.01 சதவீதம்); சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வாய்ப்புகள், பொருளாதார ரீதியாக பின்தங்கி யுள்ள ஏழை மாணவர்களிடம் உருவாக்கிய பாதிப்பு (47.42லிருந்து 41.05 ஆக வீழ்ச்சி) போன்ற பல்வேறு கண்ணோட்டத்தில் ஆய்வு செய்திருக்கிறது.
‘நீட்’ பயிற்சி வகுப்புகளுக்கு பல இலட்சம் செலவிடக் கூடியவர் களும் அதற்காக இரண்டு ஆண்டுகள் வரை படிப்பைத் தொடராமல் பயிற்சி எடுத்தவர்கள் மட்டுமே வெற்றி பெற முடிகிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தனை தடைகளையும் முட்டுக்கட்டை களையும் உருவாக்கி வரும் இந்தப் போட்டித் தேர்வு, மருத்துவக் கல்வியின் ‘தரத்தை’ எப்படி உயர்த்தும் என்ற கேள்விக்கு ‘நீட்’ ஆதரவாளர்களிடம் பதில் இல்லை. இதைத் தவிர, தேர்வு எழுதுவதில் ஆள் மாறாட்டங்கள் மதிப்பெண் போடுவதில் நடக்கும் கணினி மோசடிகளும் அம்பலமாகி வருகின்றன. சமமானவர்களிடம் சமமான போட்டி முறைகளை நடத்துவதே அரசியல் சட்டம் வலியுறுத்தும் 14ஆவது பிரிவின் சம உரிமைக் கோட்பாடு. சமமான நிலையில் இல்லாதவர்களிடையே போட்டியை மட்டும் சமமாக நடத்துவது என்பது சமத்துவத்துக்கு நேர் முரணானது. தேர்வு முறையை சமமாக நடத்துகிறோம் என்று வாதிடுகிறவர்கள், அந்தத் தேர்வை சந்திப்பவர்களிடம் உள்ள பாகுபாடுகளைக் கவனத்தில் கொண்டிருக்கிறார்களா? நீதிமன்றம் சட்டத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கிறதே தவிர சமூக யதார்த்தத்தைப் பார்க்கவே மறுக்கிறது.
‘தகுதித் தேர்வு’கள் தரமான கல்வியை உறுதி செய்கின்றன என்ற கருத்தை அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே மறு ஆய்வு செய்யத் தொடங்கி விட்டன. போட்டித் தேர்வுகளால் பெரும் பணக்காரர்கள் அரசியல் செல்வாக்குள்ளவர்கள் பெரும் பயனடைகிறார்கள் என்றும், ஒப்பீட்டளவில் ஏழைகள், மைனாரிட்டி இனத்தவர், பெண்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்றும் பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு பின்தங்கியுள்ள சமூகங்களைக் கவனத்தில் கொண்டு அவர்களைப் பாதிக்காத தேர்வு முறைகள் அந்நாட்டில் வடிவமைக்கப் பட்டுள்ளன. இது குறித்து 2003ஆம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய கிரட்டர் (Grutter) வழக்கு தீர்ப்பு மிகப் பெரும் திருப்பு முனையை உருவாக்கியது.
போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வுகள், ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான தடைகள் என்பது மட்டுமல்ல; ‘பார்ப்பனிய மேட்டிமை’யை கல்வியின் பண்பாடாக மாற்றும் சமூக நீதிக்கான எதிர்க் கருத்தியல். இத்தகைய ‘மேட்டிமைப் பண்பாட்டுச் சூழலில்’ பார்ப்பனிய குணாம்சத்தோடு படித்து வரும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், கிராமங்களில் வறுமை நிலையில் உழன்று கொண்டிருக்கும் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் மருத்துவ சேவை செய்ய முன் வருவார்களா? அல்லது தங்களது எதிர்கால சமூக பொருளியல் வளர்ச்சிக்கான போட்டிக் களத்தில் மூழ்கிக் கிடப்பார்களா? இது ஒரு முக்கிய கேள்வி.
ஒரு மருத்துவ மாணவருக்கான தகுதி என்பது மருத்துவம் பார்க்க வரும் ஏழை எளிய மக்கள் மீதான கவலை, சேவை செய்யும் ஆர்வம் - அர்ப்பணிப்பு என்பதில் அடங்கியிருக்கிறதே தவிர, ‘நீட்’டில் வாங்கும் மதிப்பெண் தர வரிசையில் அல்ல; இந்த சமூக நீதிக்கான உணர்வுகளை ஊட்டி, அதை தமிழ்நாட்டில் சமூகத்தின் பொதுக் கருத்தியலாக மாற்றி அமைத்ததில் பெரும் வெற்றியைப் பெற்றதுதான் திராவிட இயக்கம். அந்த உணர்வு தான் தமிழக முதல்வரை இந்த முனைப்பான செயல்பாடுகளுக்கு உந்து விசையாக இயக்கிக் கொண்டிருக்கிறது.
- விடுதலை இராசேந்திரன்