நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் ஒயாது நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே மற்றுமொரு தாக்குதல் கல்வித்துறையின் மீது நடந்தேறியுள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்கலாம் என்று அனுமதி அளித்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் நவோதயா பள்ளிகள் தொடங்க இருந்த தடையை விலக்கியுள்ளது. நவோதயா பள்ளிகள் என்றால் என்ன? ஏன் 30 ஆண்டுகளாக இப்பள்ளிகளை தொடங்க தடை இருந்தது? சொற்பமான கட்டணத்தில் தரமான கல்வி என்று கூறும் நவோதயா பள்ளிகளை வரவேற்காமல் நாம் ஏன் அதை எதிர்க்க வேண்டும். சற்று விரிவாக பாப்போம்.
நவோதயா பள்ளிகள்
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது 1986 இல் புதியக் கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது. அந்நிய முதலீட்டுக்கு இந்தியாவின் கதவுகளை திறந்துவிடுவதற்கு முன்னோட்டமாக அந்நிறுவனங்களில் பணிபுரிய மனித வளத்தை உருவாக்கும் விதமாக இருந்தது அந்தக் கல்விக் கொள்கை. அறிவுசார் கல்வித் திட்டத்தை மாற்றி வேலைவாய்ப்பினை மட்டும் குறி வைத்த திறன்சார் கல்வி திட்டமாக மாற்ற பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி உயர்கல்வியில் சுயநிதி கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைகழகங்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாகத்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகள் என்ற உண்டு உறைவிடப் பள்ளி தொடங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டு கற்பிக்கப்படும் இப்பள்ளிகள் மத்திய அரசின் மனித வளத்துறையின் கீழ் நேரடியாக இயங்குகிறது. 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளிகளில் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மிகச் சொற்பமான கட்டணம் மட்டுமே மாணவர்களிடம் வசூலிக்கப்படுகிறது. இப்பள்ளிகளில் உள்ள இடங்களில் மொத்தம் 75 சதவீதம் கிராமப்புற மாணவர்களுக்கும் குறைந்தபட்சம் 22.5 சதவீதம் இடங்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் மொத்தம் 589 நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன .
1989 ல் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க கடும் எதிர்ப்பு கிளம்பியதையொட்டி தமிழகத்தில் மட்டும் இப்பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஏறத்தாழ 30 ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது மீண்டும் நவோதயா பள்ளிகளை திறக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, மிகச் சொற்ப கட்டணத்தில் கல்வி, தனியார் பள்ளிகளுக்கு நிகரான உட்கட்டமைப்பு, திறன் வாய்ந்த ஆசிரியர்கள், நல்ல தேர்ச்சி விகிதம் என்று பல நன்மைகளை கொண்டிருக்கும் நவோதயா பள்ளிகளை நாம் ஏன் எதிர்க்க வேண்டும். மிகவும் பயனுள்ள திட்டம் தானே என்ற கேள்வி எழலாம்.
நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை
நவோதயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பத்தே வயது நிரம்பிய மாணவர்களுக்கு நுழைவு தேர்வு வைப்பதன் அடிப்படையில் நடக்கிறது. இந்த மாணவர் சேர்க்கையைப் பற்றி 2015 ல் நிதி ஆயோக் நவோதயா பள்ளிகளை பற்றி நடத்திய ஆய்வில் என்ன கூறுகிறது. மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மை இல்லையென்றும் மாணவர் சேர்க்கை வழிமுறை நுழைவுத் தேர்வு பயிற்சி பெற வசதியுள்ள மாணவர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் சுட்டிக் காட்டுகிறது அந்த அறிக்கை. மேலும் நவோதயா பள்ளிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ள போதிலும் இப்பள்ளிகளை பற்றிய தகவல் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையாதலால் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி அருகாமையில் உள்ளவர்களாகவும் வசதி படைத்தோராகவுமே உள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும் நீட் விவகாரத்திலே நுழைவுத் தேர்வு எவ்வாறு சமூக நீதிக்கு எதிரானது என்பதை நாம் உணர்தோம். வசதிவாய்ப்பு பெற்றவர்களுக்கு சாதகமாகவும் அது மறுக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும் தான் உள்ளன இந்த நுழைவுத் தேர்வுகள். அதிலும் பத்தே வயது நிரம்பிய குழந்தைக்கு நுழைவுத் தேர்வு வைப்பது குழந்தைகள் மீது ஏவப்படும் மோசமான உளவியல் வன்முறை ஆகும். தொடக்கல்வியில் சிறந்து விளங்கா மாணவர்கள் பிற்காலத்தில் உயர்கல்வியில் சிறந்து விளங்கியதை நாம் கேள்வியே பட்டதில்லையா. அவ்வாறிருக்க 10 வயது குழந்தைகளை தரம் பிரிப்பது எப்படி சரியாகும்.
சமமற்ற நிதி ஒதுக்கீடு
அரசு செலவினங்களை கணக்கில் கொண்டால் நவோதயா பள்ளிகளில் படிக்கும் மாணவருக்கு தலா 85 ஆயிரமும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் மாணவருக்கு 27000 ரூபாயும் தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒரு மாணவருக்கு ஏறத்தாழ 14000 ரூபாய்க்கும் குறைவாகவே செலவழிக்கிறது. சில மாநிலங்களில் ஒரு மாணவருக்கு 5000க்கும் குறைவாகவே செலவழிக்கிறது அரசு. நாடெங்கிலும் உள்ள 589 நவோதயா பள்ளிகளுக்கு மட்டும் 2015 ஆம் ஆண்டு 2250 கோடிகளை அரசு செலவிட்டுள்ளது. ஏன் இத்தகைய ஏற்றத்தாழ்வு? அனைவருக்கும் தரமான சமச்சீரான கல்வி தர வேண்டிய அரசே மாணவர்களை இப்படி தரம் பிரித்து வெறும்1 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களுக்கு மட்டும் நிறைய நிதி ஒதுக்கீடு செய்து தரமான கல்வி அளிப்பேன் என்று கூறுவது எப்படி நியாயமாகும்.
நிதி ஆயோக் ஆகஸ்டு மாதம் அடுத்த 3 ஆண்டுக்கான வரைவு திட்டம் ஒன்றினை தயார் செய்து சமர்ப்பித்தது. குறிப்பாக கல்வித்துறையில் முக்கியமான சில மாற்றங்களை அதில் பரிந்துரை செய்திருந்தது. அதன்படி, சரியாக இயங்காத போதிய அளவு ஆசிரியர் இல்லாத மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ள முறையாக வகுப்புகள் நடக்காத அரசுப் பள்ளிகளை படிப்படியாக தனியார் மயப்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. தற்போது உள்ள அரசுப் பள்ளிகளில் 36 சதவீதம் இவ்வாறாக உள்ளதாகவும் கூறுகிறது. நவோதயா பள்ளிகள் மூலம் தனியார் பள்ளிகளை விடவும் சிறப்பான கல்வி அளிக்க முடியும் என்று மார்தட்டும் அரசு ஏன் தரமற்ற பள்ளிகள் என்று கூறி பெரும்பாலான அரசுப் பள்ளிகளை தனியார் மயப்படுத்த முயல்கிறது? இச்சமயத்தில் நாம் இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். தொடக்கக் கல்வி என்று வரும் போது அரசுப் பள்ளிகளை விட்டு தெறித்து ஓடும் பணக்கார நடுத்தர வர்க்கம் உயர்கல்வி என்று வரும் போது மட்டும் அரசுக் கல்லூரிகளில் சேர்வதையே விரும்புகின்றனர். குறிப்பாக மருத்துவம், பொறியியல், சட்டம்,மேலாண்மை போன்ற படிப்புகளுக்கு அரசுக் கல்லூரிகளில் தான் தரமான கல்வி கிடைக்கும் என்று நம்புகின்றனர். இதையும் படிப்படியாக தனியார்மயப் படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்பது வேறு விஷயம். ஆக அரசுக் கல்லூரிகளையும் நவோதயா பள்ளிகளையும் சிறப்பாக நடத்தக் கூடிய அரசினால் ஏன் அதே போன்று எல்லா அரசுப் பள்ளிகளையும் நடத்த முடியவில்லை? நவோதயா பள்ளிகளில் தரம் வாய்ந்த கல்வி அளிக்கப்படும் என்று கூறும் அரசு தான் அரசுப் பள்ளிகளில் தரம் சரியில்லை என்று கூறி அதை தனியார்மயப்படுத்த முயல்கிறது.
இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. பிரச்சனை அரசுப் பள்ளிகள் என்ற அமைப்பில் இல்லை. மாறாக அதை சீரமைக்க விரும்பாத அரசின் கொள்கையே இதற்கு காரணம். அரசுப்பள்ளிகளுக்கு போதிய நிதி ஒதுக்கி சிறந்த உட்கட்டமைப்பு வசதி செய்து கொடுத்து ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து சிறந்த முறையில் பள்ளிகளை இயங்க வைக்க முடியும். ஆனால்அப்படி எல்லா பள்ளிகளின் தரத்தையும் உயர்த்தாது சொற்பமான பள்ளிகளுக்கு மட்டும் அதிக அளவில் ஒதுக்குவது என்பது பெரும்பான்மையான அடித்தட்டு மக்களுக்கு கல்வியை மறுப்பதன்றி வேறு என்னவாக இருக்க முடியும் .
காவிமயமாகும் கல்வி
30 ஆண்டுகளுக்கு முன்னர் நவோதயா பள்ளிகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முயன்ற போது முக்கியமாக வைக்கப்பட்ட வாதங்களுள் ஒன்று நவோதயா பள்ளிகளில் கற்பிக்கப்படும் சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் தமிழ்நாடு சார்ந்த வரலாறு, பண்பாடு எதுவுமே இருக்காது என்பதாகும். அது போக, பாடப்புத்தகங்களை தயாரிக்கும் NCERT அமைப்போ, கல்வியை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் இசைவுக்கு ஏற்ப பாடப்புத்தகங்களை மாற்றி வருவதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 2014ல் பதவியேற்ற பின் மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் பள்ளிகல்வியை “இந்திய” (காவி) மயமாக்கி மாணவர்களுக்கு தேசப்பற்றையும் பெருமையையும் ஊட்ட வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியது. அதன்படி பாடபுத்தகங்களையும் மாற்றி வருகிறது. உதாரணமாக, கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் சுதந்திரப் போர் என்பது இஸ்லாமியர்களுக்கு எதிரான போர் என்று பொருள்படும்படி பாடப்புத்தகங்களை திருத்தி அமைத்துள்ளது. 8,9,10 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் வேதங்களும், உபநிடதங்களும் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இது போன்ற தமிழகத்தின் வரலாற்றுக்கு தொடர்பில்லாத காவிமயமாக்கப்பட்ட கல்வி தான் இப்பள்ளிகளில் வழங்கப்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சைனிக் பள்ளிகள் போன்று மாற்றப்படும் நவோதயா பள்ளிகள்
கடந்த ஜூலை 18 ஆம் தேதி மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் நடத்திய கூட்டத்தில் பிரதமர் அலுவலகம் சில பரிந்துரைகளை முன் வைத்தது. அதன்படி, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள சைனிக் பள்ளிகளில் உள்ள கல்வி முறையை போன்று மத்திய அரசின் கேந்திரிய பள்ளிகளிலும் நவோதயா பள்ளிகளிலும் அறிமுகப்படுத்துமாறு அறிவுறுத்தியது. அதன்படி மாணவர்களுக்கு உடற்பயிற்சியை கட்டாயமாக்கி தனிமனித ஒழுக்கம், தேச பக்தி ஆகியவற்றுக்கு தனிக் கவனம் கொண்டு பாடத் திட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறியது. கூட்டத்தின் முடிவில் மத்திய அமைச்சர் மகேந்திர நாத் “இது மாணவர்களை மேலும் நாட்டு பற்று உடையவர்களாகவும் தேசிய உணர்ச்சி உடையவர்களாகவும் மாற்றும்” என்று கூறினார். தேசிய உணர்ச்சி என்ற பெயரில் பாசிச உணர்வினை மக்களுக்கு ஊட்டி அரசு துணையுடன் வன்முறை அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு இது போன்ற உணர்வுகளை ஊட்டி வளர்ப்பது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் ஒழுக்கம் கட்டுப்பாடு என்ற பெயரில் ஆணாதிக்க சிந்தனையே குழந்தைகளின் மனதில் விதைக்கப்படும். ஆக ஆர்.எஸ்.எஸ் ஷாக்காக்கள் போல இப்பள்ளிகளை செயல்பட அறிவுறுத்துகிறது மத்திய அரசு. அரசு மற்றும் தனியார் துறைகளின் அதிகாரத்தில் உட்காரக் கூடியவர்கள். இது போன்ற வெறுப்புணர்வோடு இருப்பது எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
இவையனைத்தையும் கருத்தில் கொண்டு பார்த்தோமேயானால் , நவோதயா பள்ளிகளை அனுமதிப்பது என்பது சமூக நீதிக்கு எதிரானது; அனைவருக்கும் தரமான கல்வியை மறுத்து ஒரு சிறு பிரிவினருக்கு மட்டும் கல்வியை அளிக்கும் திட்டம் என்பது விளங்கும்.. அரசு மெல்ல தனது பாசிச முகத்தை காட்டி மக்களுக்குள் மத ஜாதிச் சண்டைகளை வளர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் இன்றைய காலக்கட்டத்தில் தேசிய வெறியூட்டும் காவியமயமாக்கப்பட்ட கல்வி என்பது மிகவும் ஆபத்தானதாகும்.
கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றிகல்விக்கான நிதி ஒதுக்கீடை அதிகரித்து அனைத்து மாணவர்களுக்கும் தரமான இலவசக் கல்வியை அரசு அளிப்பதே இதற்கு தீர்வாக அமையும்.