(மகுடம் இசை முழக்கத்தின் நிறைவு காட்சியாக கலைஞர்கள் வல்லிசையோடு குழுவினர் பாடிய எழுச்சிப் பாடல்)
இடிகொண்ட மேகமாய்
இசைதந்த வேகமாய்1
இனம்கூடி சேர்ந்து எழுக
விடிகின்ற பொழுதுக்கு
வென்றநம் வரலாற்றை
விரிவாகச் சொல்லித் தருக!
உயிருக்குள் ஒளியாகி
உணர்வுக்குள் மொழியாகி
உலகாள வந்த தமிழே!
ஒருபோதும் அடங்காது
ஒடுங்காது ஓயாது
உன்னோடு நான்கொண்ட உறவே!
(இடிகொண்ட)
அன்பெங்கள் அறமாக
அறிவெங்கள் வரமாக
அகற்றுவோம் சாதி நோயை!
ஆணுக்கு பெண்சமம்
என்பதே நீதியாய்
ஆக்குவோம் புதியபாதை!
(இடிகொண்ட)
எழில்கொண்ட வரலாறு
இலக்குகள் தெளிவோடு
இலக்கண இலக்கியங்கள்!
இழக்காமல் இன்றைக்கும்
எம்மோடு வளர்கின்ற
இசைக்கலை வாத்தியங்கள்!
(இடிகொண்ட)
அழியாத வாழ்வியல்
அகத்திணை புறத்திணை
அறம்கூறும் நல்ல நூல்கள்!
அவ்வையும் கம்பனும்
திருமூலர் வள்ளுவன்
அடையாளம் தந்த பேர்கள்!
(இடிகொண்ட)
களம்கண்டு நின்றாலும்
கரைதாண்டிச் சென்றாலும்
கரையாத எங்கள் உணர்வு!
கலையாக மொழியாக
காற்றோடு இசையாக
கலந்தேஎம் உயிர்வாழும் உறவு!
(இடிகொண்ட)
கோபங்கள் குறையாமல்
கொடுத்ததை மறக்காமல்
கூடினோம் கடலின் ஓரம்!
குடிகாக்க உயிரினை
கொடையாகத் தருவது
குலங்காக்கும் நமது வீரம்!
(இடிகொண்ட)
இயலாது எனும் பேச்சுக்
கிடமில்லை எனக்கூறும்
இளையோர்கள் சேர்ந்த கூட்டம்!
இசையாலும் தமிழாலும்
ஒன்றாகச் சேருவோம்
உருவாகும் நல்ல மாற்றம்!
(இடிகொண்ட)
ஆக்கம்: கவிஞர் காளமேகம்