jallikattu marina beach protest

நம் நாட்டின் அமைப்புகள் என்பது எப்போதும் கலகத்திற்கு, கலகக்காரர்களுக்கு எதிரானது!! அதிலும் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஓர் அமைப்பு காவல்துறை. அத்துறை இதுவரை எந்தப் போராட்டத்திலும் இல்லாத அளவு இந்தக் ஜல்லிக்கட்டு கலகத்தில் பாசாங்கோடு நடந்து கொள்வதுதான் கொஞ்சம் பிசிறடிக்கிறது. மதுவிலக்கு, பண மதிப்பு நீக்கம் உள்ளிட்டு அரசுக்கெதிராக நடந்த எல்லா தன்னெழுச்சிப் போராட்டங்களிலும், அவ்வமைப்பானது தங்களது அராஜக முகங்களைக் காட்டியபடியே இதுவரை நடந்து வந்திருக்கிறது.

முதன்முறையாக அதிசயிக்கத்தக்க வகையில் தற்பொழுது நடந்துவரும் ஜல்லிக்கட்டு கலகத்தின் களத்தில் சிலபல காவலர்கள் ஆர்ப்பாட்டாகாரர்களின் காயங்களுக்கு மருந்து போடுவது; அவர்களுக்கு சோறு ஊட்டி விடுவது; தண்ணீர் தருவது என மிகுந்த நேசத்தோடு நடந்துகொள்வது எல்லாம் என்பது என்ன வகையான நாடகீயம்? யார் பின்னிருந்து நடத்தும் நாடகீயம்? என்கிற சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது.

இந்த தன்னெழுச்சிப் போராட்டத்தைப் பேணிக் காத்து, வார்த்தெடுக்கும் அமைப்பின் இந்தவகை யுக்திகளுக்குப் பின்னிருக்கும் சக்திகள் உண்மையில் யாரெனத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம், தற்பொழுது நமக்கு அவசரத் தேவையாக இருக்கிறது. இந்த நிலைமையை இப்படியே நீட்டித்து 'நீட்' உள்ளிட்ட வேறுசில தேசிய அரசியல் சூழ்ச்சிகளை, எந்த எதிர்ப்புமில்லாது மடைமாற்றும் காரியக் கிறுக்கு நுண்ணரசியல் ஏதேனும் இதன் பின்னால் இருக்கிறதா என்பதையும், உண்மையில் அச் சூழ்ச்சியரசியலின் நுண்ணிய நாடகம் ஏதேனும் நம்மீது எழுப்பப்படும் சாத்தியமிருக்கிறதா என்பதையும், வந்து சேர்ந்துவிட்ட இந்த தன்னெழுச்சி சக்தியைக் கொண்டே நாம் முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அப்படியாகப்பட்ட நாசகர வேலைகள் ஏதேனும் இதன் பின்புலத்தில் தென்படுமாறு இருப்பின், கைவரப் பெற்றிருக்கும் இதே ஒற்றுமையுடன் நாம் ஒன்று சேர்ந்து, அவற்றை முறித்துப்போடும் தெளிவை களத்திலிருக்கும் விவரமறிந்தவர்கள் அனைவரும் முன்னெடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தெளிவுகொண்டு தமிழர் ஒற்றுமையை சரியான நகர்விற்கு செலுத்த வேண்டும்.

- கர்ணாசக்தி

Comments

1 comment

1
sakthigautham
500, 1000 ரூபாய் பிரச்சனைல இருந்து மோடியை காப்பாற்ற சசிகலா செய்யும் கைம்மாறும், ஜெயலலிதா மரண சந்தேகங்களை திசை திருப்பவும், சசிகலா மீதான வெறுப்பை திசை திருப்பவும் அதிமுக செய்யும் யுக்திதான் காவல்துறையின் ஒப்பற்ற பாதுகாப்புடன் நடக்கும் இந்த சல்லிகட்டு போராட்டம் என்பது நமக்கு தெரியுது, வெகுளியாக போராட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கும், மக்களுக்கும் புரியலையே!! தயவுசெஞ்சு சல்லிகட்டு தடையை நீக்குங்கடா!! யாரையும் பாதிக்காத சல்லிகட்டுக்காக இப்படி மாணாவர்களின் சக்தியும் மக்களின் சக்தியும் வீணாவதை துளிகூட சகிக்கமுடியலடா!!

அதாவது, ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பாதிக்கின்ற முக்கியப் பிரச்சனைகளை அப்படியே காலில் போட்டு மிதித்துவிட்டு, ஒருவரை கூட பாதிக்காத சாதிக்கட்டுக்காக நடக்கும் போராட்டத்தை ஊதிப்பெருக்கிய ஓட்டுப் ”பொறுக்கிகள்”, ஊடகப் “பொறுக்கிகள்”, சினிமா கூத்தாடிகள் ஆகியோரைத்தான் மனதார பாராட்ட வேண்டும்!!! “பொறுக்கி” ன்னு சொன்னா சிலருக்கு பயங்கரமா கோவம் வருதே!!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.