திருச்சி திராவிடர் விடுதலைக் கழக சார்பில் மார்ச் 10ஆம் நாள் உலக மகளிர் நாளும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் மற்றும் சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கும் விழாவும் திருச்சி ரவி மினி அரங்கில் சிறப்புடன் நடந்தன. டார்வின்தாசன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் மனோகரன் வரவேற்றுப் பேசினார். விழாவில் வழக்கறிஞர் பானுமதி, பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உரையாற்றி சாதனை மகளிருக்கு விருதுகளை வழங்கினர்.
விருது பெற்ற மகளிர் விவரம்:
ச. பெட்ரிசியாமேரி - இவரது கணவர் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், மேரி துணிவுடன் முடிதிருத்தும் தொழிலில் தானே இறங்கினார். ஆண்கள் குழந்தைகளுக்கான முடிதிருத்தத்தை துணிவுடன் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடத்தி வருகிறார்.
க. இராஜேசுவரி : இரசாயனம் இல்லாத மூலிகைப் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் இறங்கி விற்பனையும் செய்து வருகிறார்.
சு. லட்சுமி : சொந்தமாக ஆட்டோ வாங்கி, ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார்.
ஆர். நீலா : நம்மாழ்வாரின் இயற்கை உணவு இயக்கத்தில் ஈடுபட்டு, ஆலங்குடியில் இயற்கை உணவகத்தை நடத்தி வருகிறார்.
தி. இராஜேஸ்வரி : திருச்சி பெல் நிறுவனத்தில் உதிரி பாகங்களை தயாரித்துத் தரும் பணியை ஒப்பந்தத்தில் எடுத்து உதிரி பாகங்களை தயாரித்து சப்ளை செய்து வருகிறார்.
ச. இந்திராணி : இவர் கால் டாக்சி ஓட்டுனராக பணியாற்றுகிறார்.
க. ஜீவராணி : புகைப்படக் கலையை கற்று சொந்தமாக புகைப்படம் எடுக்கும் நிலையத்தை நடத்தி வருகிறார்.
க. வள்ளி : பெண்களுக்கான ‘நாப்கின்’ தயாரிப்பை மூலிகை வழியாக தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
அனைவருக்கும் விருதுகளையும் நூல்களையும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் மணிமேகலை இருவரும் வழங்கினர். கழகத் தோழர் இரா. அழகர் எழுதிய ‘அஞ்சலி என்ற அழகி’ எனும் சிறுகதை தொகுப்பு நூலை நிகழ்வில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட்டு அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினர்களுக்கு ‘பெரியார் இன்றும்-என்றும்’ நூல் கழக சார்பில் வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி, அமைப்பாளர் குணாராஜ், தமிழ்முத்து, புதியவன் அசோக், மருத்துவர் முத்து உள்ளிட்ட கழகத் தோழர்களும், பெண்களும் பொது மக்களும் பங்கேற்றனர்.