அயோத்தி அரசியலை தீவிரமாக முன்னெடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் ‘இராமனை’ ஓட்டு வங்கியாக மாற்றும் நடவடிக்கைகளில் உத்திரபிரதேச மாநில அரசும், ஒன்றிய அரசும் தீவிரம் காட்டி வருகின்றன. வருகிற ஜனவரி 22ல் இராமன் கோயில் திறக்கப்பட இருக்கிறது. இராம ஜென்ம பூமி அறக்கட்டளை ரூ.1800/- கோடி செலவில் பாப்ரி மசூதி இருந்த இடத்தில் இந்த கோயிலை கட்டி முடித்திருக்கிறது. இதனால் அயோத்தியில் வீட்டு மனைகளின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாக உத்திரபிரதேச வருவாய்துறை அமைச்சர் கூறுகிறார். சர்வதேச விமான நிலையம் அமைக்கப் பட்டுள்ளதோடு எதிர்வரும் ஆண்டுகளில் ரூ.4500/- கோடி செலவில் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் புதிய நகரங்களை உருவாக்க தனியாருக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. விழாவின் கதாநாயகன் பிரமர் மோடி இராமன் சிலையை சுமந்து வந்து கர்ப்ப கிரகத்தில் நிறுவப் போகிறார் என்பதில் இருந்தே இதற்கு பின்னால் உள்ள அரசியலை புரிந்து கொள்ள முடியும்

கோயில் கர்ப்பகிரகம் புனிதமானது என்றும் அதில் பிராமணர்கள் மட்டுமே பூஜை செய்ய முடியும் என்றும் ஆகமங்களை தூக்கிக் கொண்டு பார்ப்பனர்கள் உச்ச நீதிமன்றம் வரை போகிறார்கள். கடந்த வாரம் ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் சம்பத் ராய் ராமன் பிரதிஸ்டை செய்யப்படும் கருவறையை படம்பிடித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்தியாவின் தலைநகரமே இனி அயோத்தி தான் என்ற நோக்கத்தோடு மதச்சார்பற்ற இந்தியாவை ‘மதவாத பாரத்’- ஆக மாற்றும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இது. இது இந்துக்களின் தேசம் என்றும் முரசறைய அறிவிக்கிறது இந்த பார்ப்பனிய அரசு.Ayodhya Ram Mandirராமனின் அயோத்தி ஏதோ இந்துக்களின் புனித நகரமாக இருந்ததைப் போல இந்துத்துவாவாதிகளில் சித்தரிப்பது வரலாற்றுப் புரட்டு என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உண்மையில் முஸ்லிம்கள், புத்தர்கள், சமணர்களின் பண்பாட்டு மையமாகவும் அயோத்தி இருந்திருக்கிறது.

முகலாய சாம்ராஜ்யத்தின் மூன்றாவது அரசருக்கு சொந்தமான ஆஃபிம் கோத்தி என்ற கட்டடம் இன்றும் அயோத்தியில் இருக்கிறது. அதாவது அபீன் அரண்மனை என்பது இதன் அர்த்தம். அரசரின் பெயர் சுஜா-உத்-தவுலா (1732-75) பிரிட்டீஷ் அரசு மன்னரை துன்புறுத்தி அபீன் என்ற போதைப் பொருளை விற்பனை செய்யத் தொடங்கியது. இப்போது இந்த கட்டடத்தில் ‘போதைப் பொருள் கண்காணிப்பு மய்யம்’ என்ற அரசு அலுவலகம் செயல்படுகிறது. 45 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த மாளிகை சீரழிந்து பராமரிப்பின்றி கிடக்கிறது. 1764 பக்சர் யுத்தத்தில் பிரிட்டீஷ் படைகள் இஸ்லாமிய மன்னரை தோற்கடித்து இந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். முகலாய கட்டடக் கலையோடு அமைந்த அரண்மனை இது. அயோத்தியில் இரட்டைத் தலைநகரங்களில் ஒன்றான ஃபைசாபாத்தில் இருந்த இந்த மாளிகையில் அரசர் ஓய்வெடுப்பது வழக்கம். அருகே இஸ்லாமிய கட்டடக் கலையுடன் தூண் ஒன்றும், மன்னர் காலத்தில் இஸ்லாமிய கலாச்சார விழா நடந்த மலர்த் தோட்டமும் இருக்கிறது. ‘அவாத்’ என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியில் அமைந்துள்ள ‘அனுமான் கிரி’ என்ற இந்த கோயிலுக்கு இஸ்லாமியர்கள் படையெடுத்துவந்த போது ‘அவாத்’ தை ஆண்ட இஸ்லாம் மன்னர் சொந்த இஸ்லாம் மத மன்னர்களை எதிர்கொண்டு தாக்கி மீட்டுத் தந்தார் என்பது வரலாறு.

18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அனுமான் கோயிலுக்கு இடம், நிதியுதவி வழங்கியது சுஜா-உத்-தவுலா வின் தந்தை. அயோத்தி நகரம். சுஜா-உத்-தவுலா, காலத்தில் இந்து – முஸ்லீம் ஒற்றுமையை வளர்த்தெடுத்தது. இது முஸ்லீம் சமூகத்தினர் மகிழ்ச்சியாக ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். இந்து ஊர்வலங்களுக்கு பயன்படுத்தப்பட்ட குதிரைகளை முஸ்லீம்களே வழங்கினர். இதே பகுதியில் ‘ஜன் மோர்ச்சா’ என்ற பத்திரிக்கையை நடத்திவரும் ‘இந்துமத’ ஆசிரியர் கிருஷ்ணா பிரதாப் சிங் தனது ஏட்டில் இந்த வரலாறுகளை பதிவு செய்துள்ளார்.

இஸ்லாமியர்களின் ஒரு பிரிவிரான ‘சுஃபி’ பிரிவினருக்கு சொந்தமான வழிபாட்டு இடங்கள் அயோத்தியில் இப்போதும் காணப்படுகின்றன. இங்கே உள்ள சையத் இப்ராகிம் ஷா வழிபாட்டு மையத்தில் அனைத்து மதத்தினரும் வழிபட்டு சென்றனர். ‘சுஃபி’ மதகுரு நவிருதின் சகோதிரியான பதிபூவா (1274-1337) இந்த பகுதியில் கைவிடப்பட்டவர்களுக்கான இல்லம் ஒன்றை தொடங்கி நடத்தினார். அதில் 35 அனாதை குழந்தைகளுக்கு மத வேறுபாடு இன்றி உதவிகள் வழங்கப்பட்டன.

அயோத்தியிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சரயு நதிக் கரையில் ஏராளமான சிறு சிறு இந்துக் கோயில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட ஜாதியினரும் தங்களுக்காக இந்த கோயில்களை உருவாக்கிக் கொண்டனர். பார்ப்பனர் பிற ஜாதியினரை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுத்ததை எதிர்த்து இந்தக் கோயில்கள் இப்போதும், துணித் துவைப்போர் கோயில், சவரம் செய்வோர் கோயில், தச்சர் கோயில் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

‘ராமன்’ புனிதக் கடவுள் ; தேசியக் கடவுள் என்ற புனைவுகளை எதிர்த்தவர்களும் ஏராளம் உண்டு. இப்போதும் நேபாள எல்லையில் உள்ள ‘ஜனக்பூர்’ பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வீட்டுப் பெண்களை அயோத்தியில் நடக்கும் திருமணங்களுக்கு அனுமதிப்பதில்லை. ஜனக்பூர் சீதையின் பிறப்பிடமாக நம்பப்படுகிறது. ராமன் – சீதையை கடும் துயரத்துக்கும் அவலத்துக்கும் உள்ளாக்கினான் என்பதே இந்த மக்கள் கருத்து.

அயோத்தி புத்தர்களுடன் தொடர்புடைய ஊராக இருந்திருக்கிறது. அயோத்தி ஒரு காலத்தில் ‘சகேதா’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது. புத்தர்களைப் பற்றி விரிவாக பேசும் பழம்பெரும் புத்த காவியம் ‘மகாஜனபதா’-வில் புத்தரின் தந்தை சுத்தோனந்தா மற்றும் புத்தர் பற்றிய குறிப்புகள் பதியப்பட்டுள்ளன. மழைக் காலங்களில் புத்தர் தங்கும் இடம் அயோத்தியாகவே இருந்திருக்கிறது.

2018ம் ஆண்டு அயோத்தியில் புத்த மதத்தைச் சார்ந்த வினீத் குமார் மவுரியா அயோத்தி – புத்தர்களுக்கு உரிய இடம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அயோத்தியில் புத்தர் கோயில்களை இடித்து இந்து கோயில்களாக மாற்றி விட்டனர் என்பது அவரது வழக்கு. சீனப் பயணிகள் ஃபாகியான், யுவான் சுவாங் இருவரும் தங்கள் பயணக் குறிப்புகளில் சமண, புத்த மத வழிபாட்டு இடங்களை தகர்த்து, இந்துக் கோயிகளை கட்டியதாக பதிவு செய்துள்ளனர்.

அலிகார் பல்கலைகழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் நதீம் ரேசாவி அயோத்தி பல மதங்களின் கலாச்சார மையம் இந்துக்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல, தொல்பொருள் துறை இந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும், ஆனால் அது ஒரு சார்பாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டுகிறார். உத்திரபிரதேச சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை இயக்குநர் முகேஷ் மேஷ்ராம், உபி தொல்பொருள் துறை முன்னாள் மண்டல இயக்குனர் கே.கே.முகமது ஆகியோரும் இந்த கருத்தை தொடர்ந்து வலியுறுத்தியும், உபி மாநில ஆட்சியோ, ஒன்றிய ஆட்சியோ எந்த ஆர்வமும் காட்டாமல், அயோத்தி இந்துக்களுக்கு மட்டுமே என்ற மதவெறி அரசியலில் தீவிரம் காட்டுகிறது. அதன் எதிரொலி தான் இந்த அயோத்தி ராமன் கோயில் திறப்பு விழா?

நீதிமன்றங்களின் குழப்பம் – முரண்பாடுகள் நிறைந்த தீர்ப்பும், மதவெறி அரசியலுக்குத் துணை போகிறது. மக்கள் பிரச்சனைகளிருந்து திசை திருப்பும் மதவாத அரசியலை எதிர்த்து வலிமையான இயக்கம் உருவாக வேண்டும். வரலாற்றுப் புரட்டுகளை அம்பலப்படுத்த வேண்டியது அவசியம்.

(தகவலுக்கு ஆதாரம் : ‘பிரண்ட் லைன் : டிசம்பர் 15, 2023ல் வெளிவந்த கட்டுரை’)

- விடுதலை இராசேந்திரன்

இராமாயணம் ஆரிய - திராவிடப் போர்

“ஆரியர்களால் தோற்கடிக்கப் பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை, தங்களின் புத்தகங்களில் திராவிடர்கள் - தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்”

“ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெருப்பை இது காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுக சிறுக நுழைந்து, ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.”

(சி.எஸ்.சீனிவாசாச்சாரி எம்.ஏ., எம்.எஸ்.ராமசாமி அய்யங்கார் எம்.ஏ., ஆகிய சரித்திர போதகர்கள் எழுதிய “இந்திய சரித்திர முதல் பாகம் எனும் புத்தகத்தில் ‘இந்து இந்தியா’ எனும் தலைப்பில் 16, 17வது பக்கங்களில்)