வாஸ்து மூடநம்பிக்கை ஜாதிவெறிக்கு துணை போவதோடு அரசின் நலத் திட்டங்களையே முடக்குகிறது என்பதற்கு சான்றாக தெலுங்கானாவிலிருந்து ஒரு செய்தி வந்துள்ளது. தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், அரசு செலவிலேயே திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5 கோடி தங்க நகைகளை காணிக்கையாக்கினார். அரசு செலவிலேயே தனது ஆலோசகராக, ஒரு வாஸ்து பண்டிதரை நியமித்துக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர் அலுவலகத்தையும் சொந்த இல்லத்தையும் ஒன்றாக்கி, அரசு செலவிலேயே 25 கோடி செலவில் வாஸ்து முறைப்படி மாளிகை ஒன்றையும் எழுப்பியிருக்கிறார்.
அதே தெலுங்கானா மாநிலத்தில்தான் இப்படி ஒரு கூத்தும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏழை மக்களுக்கு இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு கட்டும் திட்டம் ஒன்றை அரசு அறிவித்துள்ளது. திப்பண்ணப்பேட்டை எனும் இந்த கிராமத்தில் இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, 2.27 ஏக்கர் இடத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கின. கிராமத்தில் 20 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 16 பயனாளிகள் ‘தலித்’ பிரிவினர். கிராமத்தின் பிரதான சாலை அருகே கட்டப்படும் இந்தக் குடியிருப்புகள் தலித் மக்களுக்கு கிடைத்திருப்பதை கிராம சாதிவெறியர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, “தரைதளத்தில் தலித் மக்களுக்காக கட்டப்படும் இரண்டு அறை குடியிருப்புகளால் கிராமத்துக்கு வாஸ்து குற்றம் ஏற்பட்டுள்ளது” என்ற புரளியை ஜாதி வெறியர்கள் கிளப்பிவிட்டனர். இதை ஊர் மக்களும் நம்பி, அந்த குடியிருப்புகளை கட்டவிடாமல் தடுத்து வருகின்றனர். குடியிருப்புகள் கட்டும் பகுதியில் பிள்ளையார் கோயில் ஒன்றை அவசரஅவசரமாக உருவாக்கி, ‘வாஸ்து தோஷம்’ கழிக்க நாள்தோறும் பூஜைகள் செய்யத் தொடங்கிவிட்டார்கள். செய்தியறிந்த வருவாய்த் துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் கிராமத்துக்கு விரைந்து கட்டுமானப் பணிகளை நிறுத்தச்சொல்லி விட்டார்கள்.
இரண்டு அறை கொண்ட வீடுகளை இந்த பிரதான இடத்தில் கட்டுவது வாஸ்து விரோதம்; இங்கே கோயில்தான் கட்ட வேண்டும் என்று ஜாதி வெறியிலும் மூடநம்பிக்கையிலும் மூழ்கிக் கிடக்கும் மக்கள் கூறி வருகிறார்கள். இது திட்டமிட்டே உருவாக்கப்படும் புரளி என்கிறார் - கிராம அதிகாரி ஆர்.கங்காத்ரா. ஆனாலும் தலித் மக்களுக்கு கிடைக்க வேண்டிய வீடுகள் கிடைக்க விடாமல் தடுக்கப்பட்டு விட்டன. வாஸ்து நம்பிக்கை இதற்குத்தான் பயன்பட்டிருக்கிறது.