திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மத்திய அரசின் கல்வி வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், கல்வி நிலையங்களில் நிலவும் ஜாதிய பாகுபாடுகளை நீக்க வலியுறுத்தியும், கண்டன பொதுக்கூட்டம் பாவூர் சத்திரம் பேருந்து நிலையத்தில் மார்ச் 3ம் தேதி மாலை 5 மணியளவில் கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் குரும்பலாபேரி மாசிலாமணி தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.

துவக்கத்தில் மாவட்ட அமைப்பாளர் அன்பரசு வரவேற்றார். திராவிடர் விடுதலைக்கழக நிர்வாகிகள் சங்கர், லெட்சுமணன், பெரியார் திலீபன், தங்கதுரை, சபாபதி, மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளிம்பு நிலை மக்களுக்கு எதிராக செயல்படும் மத்திய மோடி அரசை கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட தலைவர் பால்வண்ணன், கீழப்பாவூர் மதிமுக ஒன்றிய செயலாளர் இராம உதய சூரியன், கீழப்பாவூர் திமுக ஒன்றிய செயலாளர் இராமச்சந்திரன், கழகத் தோழர் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக கல்வி வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை புறக்கணிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், கல்வி நிலையங் களில் நிலவும் ஜாதிய பாகுபாடுகளை நீக்க வலியுறுத்தியும், கழக மாநில பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால்பிரபாகரன் உரையாற்றினார்.

அவர் தனது உரையில், “மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் ஜாதிகளாக கூறுபோட்டு, உழைக்கும் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை சூத்திரர்களாக, பஞ்சமர்களாக, கீழ் சாதியாக, தொடக்கூடாத, புழங்கக் கூடாத இழிமக்களாக ஆக்கி இந்த நாட்டில் தங்களது மேலாண்மையை பார்ப்பனர்கள் நிலை நிறுத்திக் கொண்டனர். உலகிலேயே மிகப்பெரிய கொடுங்கோலர்கள் ஈவு இரக்க மில்லாத கூட்டமொன்று உண்டென் றால் அது ஊரார் உழைப்பில் உடம்பை வளர்க்கும் ஆரிய, பார்ப்பன கூட்டமே. ஜாதி மதவெறியை உடைக்கின்ற சம்மட்டிகளாக, தீண்டாமை கொடுமை களை எரிக்கும் தீவட்டிகளாக திராவிடர் விடுதலைக்கழகம் இன்று களத்தில் நின்று போராடுகின்ற வேளையில் ஒரு சிலர் பெரியார் அவர்களை கொச்சைப் படுத்துவதே தங்களின் ஒரே செயல்திட்டமாக வைத்துக்கொண்டு நவீன பார்ப்பன மனுவாதிகளாக தமிழ்தேசியம் என்கிற பெயரில் கூப்பாடு போடுகின்றனர்.

மத்திய அரசின் கல்வி வேலை வாய்ப்புகளில் தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் போராடி பெற்றுத்தந்த இடஒதுக்கீட்டை சவக்குழிக்கு அனுப்ப முயற்சிக்கும் பார்ப்பன காவிகளை இவர்கள் எதிர்ப்பதில்லை கல்வி நிலையங்களில் ஜாதியின் பெயரால் முதல் தலைமுறையாக படிக்கச் செல்லும் விளிம்பு நிலை மாணவர்கள் மீது ஜாதியின் பெயரால் காட்டப்படும் பாகுபாடுகளை எதிர்க்க துணிவில்லாதவர்கள் இவர்கள், ஜாதி ஒழிந்த, மதம் ஒழிந்த தமிழகம்தான் உண்மையான தமிழ்தேசியம் என்பதை வசதியாக மறந்துவிட்டு, அதனை நோக்கி பயணிக்கின்ற பெரியார் இயக்கங்கள் மீது சேறுவாரி பூசுவதே இவர்கள் வேலை திட்டமாக வைத்துக்கொண்டு பார்ப்பன அடிமைகளாக இன்று சில தமிழ் தேசியவாதிகள் வாழ்கிறார்கள்.

இன்றைக்கு சில போலித் தமிழ் தேசியர்கள் தங்களது தேர்தல் அறிக்கையில் “ஆடுமேய்ப்பதை அரசு வேலையாக்குவோம்” என்று கூறுகிறார்கள். இப்படி இவர்கள் கூறுவது பார்ப்பன குலக்கல்வி திட்டத்தின் மறுவடிவம் அல்லவா? மாடு மேய்பதை அரசு வேலையாக்கினால் மட்டும் அவர்கள் மீது சமுதாயம் வைத்திருக்கின்ற பார்வை மாறிவிடுமா? என நாங்கள் கேட்கிறோம். அப்படி பார்த்தால் இந்த நாட்டில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த என் சகோதரன் மனித மலத்தை அள்ளும் வேலையை செய்கிறான். சாக்கடை சுத்தம் செய்கிறான். அதுவும் அரசு வேலைதான், ஆனால் அரசு வேலையில் இருக்கிறார்கள் என்பதற்காக ஜாதி வெறியர்கள் என் சகோதரர்கள் மீது வைத்திருக்கும் பார்வையை மாற்றிவிட்டார்களா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. எனவே ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம் என்று சொல்கிறது தமிழ் தேசியம். அதற்கு மாறாக ஆடுமேய்ப்பவரை ஐஏஎஸ் அதிகாரிகளாக ஆக்கி அழகு பார்த்தது இந்த பெரியாரியம்தான் என்பதை நவீன மனுவாதிகளான இவர்கள் மறந்துவிடக்கூடாது” என கூறினார்.

முடிவில் கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சுப்பையா நன்றி கூறினார். இக்கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை, ஆதி தமிழர் கட்சி, தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் திராவிடர் விடுதலைக் கழகப் பொறுப்பாளர்கள் பால்அறிவழகன், வே.பால்ராசு, அம்புரோசு, வீரபெருமாள், ரவிசங்கர் உள்ளிட்ட ஏராளமான தோழர்களும் பங்கேற்றனர்.                                      

செய்தி - மன்னை இரா.காளிதாசு

Pin It