கீற்றில் தேட...

எவர் ஒருவரையும் சாதியால் அடையாளப்படுத்திப் பார்க்கிற பார்வை மிகவும் இழிவானது. வருண ஆசாரப்படி பாகுபடுத்துகிற ஆரிய வைதீக முறையைக் கண்டிக்கிற பலரும்கூடச் சாதியாய்ப் பாகுபடுத்தி அடையாளப்படுத்துகிற இழிவான பார்வையைக் கண்டிப்பதில்லை.

நிகழ்காலத்தவர்களை மட்டுமின்றி பழந்தமிழ் அறிஞர்களையும் ஆளுமையர்களையும் நிகழ்கால வாழ் முறையில் இருந்து விளங்கிக் கொண்டு அவர்கள் எல்லாம் இன்னயின்ன சாதியினர் என்பதாக அடையாளப்படுத்துவது மிகவும் இழிவான நடைமுறையுடையது..

பழந்தமிழ் நாட்டில் தொழில்வழி வேறுபாடுகளைக் கொண்டிருந்த குமுக வாழ்நிலையினர், வந்தேறிய ஆரியப் பார்ப்பனிய வைதீக முறையால் வருணங்களாக அடையாளப்படுத்தப்பட்டதையும். பின்னர் பல்லவர் காலம் தொடங்கிப் பிற்காலச் சோழர்கள், விசயநகர ஆட்சி, நாயக்கர் ஆட்சி, மராட்டியர் ஆட்சி எனத் தொடர்ந்த ஆட்சிக் காலங்களைத் தன்வயப்படுத்திக் கொண்ட ஆரியப் பார்ப்பனியம் குமுகத்திற்குள் ஊடுருவித் தொழில்வழிக் குல வேறுபாடுகளையெல்லாம் வருண சாதி அமைப்புகளாக மாற்றி இறுக்கப்படுத்தி வந்ததை வரலாறு நெடுகப் பார்க்கலாம்.தமிழ் மொழி, பிராகிருத சமசுக்கிருத மொழிக் கலப்புகளால் சிதைக்கப்பட்டு மணிப்பிரவாள நடை உருவாக்கப்பட்டதையும் அறியலாம்.

சாதி சமயப் பிளவுகளை மறுத்துப் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதான கருத்துகளும், பிறமொழிக் கலப்பு மறுப்புகளும் அப்போதிருந்தே திருவள்ளுவர் தொடங்கி சித்தர்கள் எனப் பலரின் செயற்பாடுகள் வழி நடந்து கொண்டே இருந்தன.

இடையில் நடந்த இசுலாமியர் படையெடுப்பு, தொடக்கத்தில் மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்தது. சில பகுதிகளில் வலிய மதமாற்றங்களையும் செய்தது. வணிகத்திற்காக நுழைந்த ஆங்கிலேயர் ஊடுருவல் படிப்படியாக அதிகாரங்களைத் தங்களுக்காக ஆக்கிக் கொண்டது. அதேபோது இங்கு நிலவிய சாதிய வருண கொடுமைகளால் புறந்தள்ளப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த மக்களுக்குப் பல சலுகைகள் செய்ததோடு மத மாற்றங்களையும் அவை பரவலாகச் செய்யத் தொடங்கின.

இதைக் கண்டு ஆரியப் பார்ப்பனியம் அலறத் தொடங்கியது.. எனவே ஆரிய வைதீக முறையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அதை உள்ளீடாகக் கொண்ட சமயச் சீர்திருத்தக் கருத்தாடல்கள் கொண்ட இயக்கங்கள் வழி பரப்பத் தொடங்கின.

பிரம்ம சமாஜம், பிரார்த்தன சமாஜம், ஆரிய சமாஜம் என்றெல்லாம் பல வடிவங்களில் சீர்திருத்தங்கள் என்கிற பெயரில் ஆரியக் கருத்தாடல்கள் ஒருங்கிணைக்கப்பட்டன..

ஆனால் அப்போதும் அதற்கு முன்பும் தமிழ்நாட்டில் தாயுமானவர், வள்ளலார், வைகுந்தர் உள்ளிட்டவர்கள் ஆரிய வருண சாதிக் கருத்தாடல்களை எதிர்த்த வகையிலேயே ஆங்கிலேய எதிர்ப்பை இயக்க வழி நடைமுறைப்படுத்தினர்.

ஆங்கிலேய ஆட்சியின்போது உரிமைக் கோரிக்கைகளின்வழி கிடைத்த இட ஒதுக்கீடு, குடி மதிப்பீட்டுக் கணக்குத் திட்டங்களால் தங்கள் சாதிகளை அடையாளப்படுத்திக் கொள்ளவும் நிலைப்படுத்திக் கொள்ளவும் சாதிகளின் அணி சேர்க்கைகள் விரிவாக நடந்தன.

பல சாதிகள் சங்கங்களைத் தோற்றுவித்துக் கொண்டன. ஆரியச் சமசுக்கிருதச் சார்புபடுத்தியே சில சாதியினர் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். சத்திரியர்கள் என்றும், பரத்வாஜர் என்றும், பர்வதராஜர் என்றும், விஷ்வ பிராமணர்கள் என்றும், தேவேந்திரர்கள் என்றும் பல சாதிகளின் அடையாளங்களை மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்தன.

அந்த இடைக்காலங்களில், அது காலம் வரை தமிழ்நாட்டில் இருந்த பல தமிழ்க் குலங்கள் தங்களின் பெயர்களையும் அடையாளங்களையும் ஆரிய வயப்படுத்திக் கொள்ளத் தொடங்கினர். குல வழிபாட்டினர் பலரின் அடையாளப் பெயர்கள் ஆரிய வயப்படுத்தப்பட்டுச் சந்திரகுலம், சூரிய குலம், லக்ஷ்மண குலம், இராமர் குலம், பஞ்சபாண்டவர் குலம் என்பதாகத் தமிழ்க் குமுகக் குல வழி அடையாளங்களும் திரிக்கப்பட்டன.

மொழி வழியாகவும் குல வழியாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த மக்கள் சாதி வழியும் ஆரியச் சார்பு சமய வழியும் அடையாளப்படுத்திக் கொள்கிற அடிமைப் போக்குகள் நடக்கத் தொடங்கின.

இந்நிலையில் அக்காலத்தும், அதற்கு முன்பும் தீண்டப்படாத மக்கள் பாதகர், புலையர், சண்டாளர், பனையேறி - என்று பல வகைகளில் இழிவாகப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டனர்.

perunchithiranar book saathi ozhippuஅந்த நிலையில் தீண்டப்படாத சாதியர்களாக ஒதுக்கப்பட்டிருந்தவர்கள் தாங்கள் சார்ந்த சாதிகளின் பெயர்களை வெளிச்சொல்வதற்கும் தங்கள் பாதுகாப்புக்காகத் தங்களை அணி சேர்த்துக் கொள்ளவும் நெருக்கடிகள் இருந்தன. அதன் காரணமாகச் சிலர் தங்களின் பெயர்களிலேயே பிள்ளை - என்றும், பிற இடைநிலைச் சாதிப் பெயர்களை இணைத்தும் சூட்டிக்கொண்டனர்.

தங்களின் சாதிப் பெயர்களை வெளிச்சொல்வதில் இருந்த நெருக்கடியின் காரணமான அச்சத்தைப் போக்கும் வகையிலும் இந்த மண்ணின் தொல் குடி மக்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நிலையிலும் தமிழன் - என்றும், தொல் தமிழன் என்றும், திராவிடன் என்றும், அசல் திராவிடன் என்றும், ஆதி திராவிடன் என்றும் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றதோடு அரசியல் பதிவிலும் அவ்வாறு இருக்க அயோத்திதாசப் பண்டிதர் தொடங்கி எம் சி இராசா வரை மிகப் பெரும் அளவில் போராடினர்.

அதையே அன்றைக்குத் தலைவர்கள் அறிஞர்கள் பலர் முன்மொழிந்து இயக்கப்படுத்தி இயங்கினர்.

அறிஞர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள் 1800&களின் கடைசிப் பத்தாண்டுகளில் குடி மதிப்பீட்டுக் கணக்கில் தமிழன் என்று பதிவு செய்ய வலியுறுத்தியதும், தமிழன் என்றும், ஒரு பைசா தமிழன் என்றும் இதழ்கள் நடத்தியதும், அசல் திராவிட மகா சபை என்றும் பின்னர் திராவிட மகாசன சபை என்றும் உருவாக்கி நடத்தியதும், சான் இரத்தினம் அவர்கள் திராவிடப் பாண்டியன் என இதழ் ஒன்றை நடத்தியதும், திராவிடர் கழகம் என 1890-களிலேயே இயக்கம் நடத்தியதும்.

திராவிட மித்திரன் என்றும், ஆன்றோர் மித்திரன் என்று முனிசாமிப் பண்டிதரும், பூலோக வியாசன் - என்று முத்துவீர நாவலரும், இராசகோபால் அவர்கள் ஆதிதிராவிட மித்திரன் என்றெல்லாமும் இதழ்களை நடத்தியதோடு அதையே இலங்கை, மலையகம் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல இடங்களிலும் விரிவுபடுத்தி இயக்கப்படுத்தியதும். கவனிக்கத்தக்க விரிவான செய்திகள்.

திராவிடம் என்பதையும், திராவிடர் என்பதையும், ஆதிதிராவிடர் என்பதையும் நீதிக்கட்சியும் பெரியார் அவர்களுமே வலிய மாற்றினார்கள் என்பதாக அண்மைக் காலங்களில் தங்கள் அரசியல் நலனுக்காகப் பேசி வருகிறவர்கள் மேற்படி அடித்தட்டு மக்களின் வாழ்வுரிமைகளுக்காக நடந்த முயற்சிகளில் திராவிடர் என முன்னெடுக்கப்பட்ட அரசியல் அழுத்தங்களை உணர வேண்டும்.

இதற்கிடையில் நேரடியாகத் தங்களின் சாதிப் பெயரான பறையர் என்பதையே அடையாளப்படுத்த வேண்டும் என வலியுறுத்திப் பறையன் என்கிற பெயரிலேயே இதழை நடத்தியதோடு, இயக்கப்படுத்திச் செயல்பட்ட இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் முயற்சிகள் மிக விரிவானவை. அடித்தட்டு மக்களுக்குக் கல்வியில் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு பெறுவதற்காக அவர் போராடியதுடன், வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு வலியுறுத்தியதும், காந்திக்குத் தமிழ் படிப்பித்ததும், தென் ஆப்பிரிக்காவிற்குக் கொத்தடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டிருந்த எளிய தமிழ் மக்களுக்கு ஆதரவாக நின்று இயங்கியதும் அறியப்பட வேண்டிய செய்திகள்.

1886 -இலேயே தமிழ்ப் பழங்குடி மக்கள் இந்துக்கள் அல்லர் என அறிக்கை விட்டுப் பரப்பல் செய்தார் அயோத்திதாசப் பண்டிதர். அது தொடர்பாக அறிஞர்கள் பலருடன் தருக்கமிட்டார்.

பழந்தமிழர் நாடகக் கழகம் அமைத்துப் பெரியசாமிப் புலவர் அவர்கள் எளிய மக்களை அணி சேர்த்தார்.

எளிய மக்களை ஈடேற்றுவதற்காக எண்ணற்ற வகையில் துணை நின்றவரான அன்றைய நயனகரும் (நீதிபதி) சட்ட மன்ற மேலவை உறுப்பினருமான மதுரை பிள்ளையும், பின்னர் அவர்களின் மகன் ம. பழனிச்சாமி அவர்கள் திராவிட வாலிபர் சங்கம் எனத் தொடங்கி மிகப் பெரும் அளவில் இளைஞர்களை ஒருங்கிணைத்துச் செயல்பட்டார்.. இவ்வகையில் சென்னை தர்மலிங்கம், சிதம்பரம் சகசானந்தர், வாசுதேவர், எம் சி மதுரை பிள்ளை, முனிசாமி, வேலாயுதபாணி, பரமேசுவரன் எனப்பலர் சட்ட மன்ற உறுப்பினராக, சட்ட மன்ற மேலவை உறுப்பினராக இருந்து அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற வகையில் பாடாற்றவும், தேசிகஆனந்தா, கொங்கு பகுதியினரான வீரையன், எல் சி குருசாமி போன்ற பலரும் பெருமளவில் தொண்டாற்றவும் செய்தனர். அவ்வகையில் வரலாற்றின் நிகழ்வுகளில் அறியத்தக்க செய்திகள் பல உள்ளன.

தாழ்த்தப்பட்டவர்களை அரிசன் எனப் பதிய வேண்டும் எனக் காந்தி குறிப்பிடுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆதிதிராவிடன் எனப் பதிய வேண்டிப் போராடிப் பதிவதற்கான ஏற்பாடுகளை பி. வி. சுப்பிரமணியம், ஓங்காரம், முக்குந்து, சண்முகம் திருப்புகழ் அம்மாள், முனிசாமி , வாசுதேவர், இராசரத்தினம், வேணுகோபால் எனச் செயற்பாட்டாளர்கள் பலரும் பெரும் முயற்சி எடுத்து ஆங்கிலேய ஆட்சியரிடம் வலியுறுத்தி எம் சி ராசா அவர்களை முன்னிறுத்தி 1922 சனவரி 22 ஆம் நாள் சென்னைச் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும்,

திராவிட மகாசன சபை- யை வலுப்படுத்தி இயக்கப்படுத்தியவர்களுள் எம் சி ராசாவின் தந்தை எம். சின்னத் தம்பிக்கும் பெரும்பங்கு உண்டென்பதும், கோலார் தங்க வயலில் கோ. அப்பாத்துரை அவர்கள் அடித்தட்டு மக்களைப் பெருமளவில் திரட்டித் தமிழ் உணர்வையும் சாதி ஒழிப்பு உணர்வையும் ஊட்டி வளர்த்து இயக்கப்படுத்தியதும், அவரும் தமிழன் - என இதழ் நடத்தியதும் அறியத் தக்க செய்திகளாக உள்ளன.

1916 இல் தொடங்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் நீதிக் கட்சி என இயங்கியதன் பின்பும் தந்தை பெரியார் அவர்களாலும்தாம் திராவிடர் எனும் கருத்துப் பரப்பப்பட்டதாக அண்மைக் காலங்களில் பேசப்பட்டு வரும் செய்திகளுக்கு அயோத்திதாசர் தொடங்கி எண்ணற்ற அடித்தட்டு மக்கள் தலைவர்கள் முன்மொழிந்து இயங்கிய திராவிடர் - ஆதிதிராவிடர் எனும் சொற்களின் அரசியல் ஆழங்கள் விளங்கிக் கொள்ளப்பட வேண்டும்.

தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் கூட அடித்தட்டு மக்களுக்கான செயல்பாட்டுக்குரிய தலைவர்கள் அறிஞர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள் சொல்லி மாளாதவை.

அவ்வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட அக்காலத்தின் இளைஞர்களும் செயல்பாட்டாளர்களும் அறியத்தக்கவர்கள்.. அவர்களின் செயல்பாடுகளின் ஆழங்கள் குமுகத்தின் விடுதலை அரசியலோடு தொடர்புடையவை.

தமிழர்கள் என்று பதிந்து கொள்ள வேண்டும் என அயோத்திதாசப் பண்டிதர் அறிவுறுத்தியதும், அசல் திராவிடர், ஆதிதிராவிடர் என்றெல்லாம் அடையாளப்படுத்துகிற ஒரு பெரும் முயற்சி எம் சி ராசா காலம் வரை தொடர்ந்து நடைபெற்று வந்ததுமான அக்காலத்தில்தான் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முயற்சியில் தொகுக்கப்பட்டிருந்த பேரகராதியில் தமிழர்கள் என்போர் பறையன் ஒழிந்த சாதியினர் - என்பதான பொருள் எழுதப்பட்டிருந்ததும் அதைக் கண்டிக்கவோ, திருத்தம் செய்வதற்கோ வேறு எவரும் முன்வராத ஓர் அவலச்சூழல் அக்காலத்தில் இருந்ததும் அறியப்பட வேண்டும்.

அதை முதன் முதலில் முழுமையாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களே சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியின் சீர்கேடுகள் எனும் தலைப்பில் நூலாக எழுதி 1961-இல் வெளியிட்டார் என்பதும், 1934 இலிலேயே அந்த அகராதித் துறையில் இணைந்து பணியாற்றுவதற்கு முயன்றிருந்த போதும் அவரைப் புறக்கணித்த நிலையையும், அதன் பிறகு அந்தப் பேரகராதி வெளிவந்ததன் பின் 1955 இல் அந்தப் பேரகராதியில் உள்ள பிழைகளையும் குறைபாடுகளையும் விரிவாகத் தொகுத்து எழுதி அனுப்பி இருந்த போதும் அவையெல்லாம் பொருட்படுத்தப்படாதிருந்த நிலையையும் பாவாணர் அவர்களே விரிவாகத் தம் நூலில் பதிவு செய்திருக்கிறார்.

திருப்பனந்தாள் மடத்தின் தலைவராகத் தவத்திரு சுவாமிநாதத் தம்பிரான் இருந்த காலத்தில் பாவாணர் அவர்கள் நூல்கள் வெளி­யிடுவதற்கான துணை வேண்டிச் சென்றபோது பாவாணர் அவர்கள் அங்கு புறக்கணிப்பாக நடத்தப்பட்ட முறையையும், உ வே சாமிநாதய்யர் அவர்கள் பாவாணரை ஏற்கனவே தெரிந்திருந்தும் அவரின் சொல்லாய்வுகள் குறித்தெல்லாம் அறிந்திருந்தபோதும் தம்பிரான் துணை செய்துவிடக் கூடாது என்பதற்காகத் தனக்குப் பாவாணரைத் தெரியாது எனப் பாவாணர் முன்னிற்கவே மறுத்துவிட்ட நிகழ்வைப் பாவாணரே அவரின் தமிழர் மதம் நூலில் பதிவு செய்திருக்கிறார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் சமசுக்கிருத 'ஆதிக்க'த்திற்கு எதிராகப் போராடியதும் அதனால் அவருடைய கருத்துகள் புறக்கணிக்கப்பட்டதும் அதை ஏற்க இயலாது அப் பணியைத் துறந்து அவர் வெளியேறியதும் வரலாற்று நிகழ்வுகள்.

அவரை முழுக்க முழுக்கப் புரந்ததும், அவர் கருத்துகளை, ஆய்வுகளை வெளிக் கொண்டு வந்து இயக்கப்படுத்திப் பரப்புவதற்கு அடித்தளமாக இருந்தது தென்மொழி வழியான பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பேருழைப்பே ஆகும். அவர்களுக்கிடை­யிலான கெழுதகைமையைக் கெடுத்து முரண்பட வைக்க நடந்த முயற்சிகள் பல. அவற்றுக்குப் பின்புலமாக பல நோக்கங்கள் இருந்தன என்பதும் அறியப்பட வேண்டிய செய்திகள்.

1967 - திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்த பிறகும் கூட அதன் தொடக்கத்தில் பாவாணருக்கு விடிவு ஏதும் கிடைத்துவிடவில்லை.. இன்னும் சொன்னால் 1968-இல் சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டிற்குக்கூடப் பாவாணர் அழைக்கப்படவில்லை என்பதோடு அவரின் அடிப்படை கருத்துகளான. உலகின் மூத்த மொழி தமிழ்தான் - என்பதும், தமிழே திராவிடத்திற்குத் தாய் ஆரியத்திற்கு மூலம் - என்பதும், தமிழன் பிறந்தகம் குமரிக்கண்டமே என்பதும் ஏற்கப்படாமல் புறக்கணிக்கப்படவே செய்யப்பட்டன. என்ற நிலைகளோடு அவற்றுக்கு நேர் எதிரான கருத்துடைய வையாபுரியார் கருத்துடையோரும் தமிழ் ஆய்வறிவற்ற ஆரவாரக்காரர்களுமே சிறப்போடு அழைக்கப்பட்டிருந்தனர் என்பனவும் கவனிக்கப்பட வேண்டிய செய்திகள்.

அதன் காரணத்தால் தான் பாவாணர் அவர்களைத் தலைவராகவும் பெருஞ்சித்திரனார் அவர்களைப் பொதுச் செயலாளராகவும் கொண்டு தொடங்கப்பட்டது உலகத் தமிழ் கழகம்.

அது தொடங்கப்பட்ட ஓராண்டுக்குள்ளாகவே 300 கிளைகளுக்கு மேல் அமைக்கப்பட்டு விரிவுபடச் செயல்படத் தொடங்கிய பின்னரே பாவாணர் அரசின் கவனத்திற்கு உள்ளானதும், அவருக்கு ஏதும் துணை செய்தாக வேண்டும் எனும் நெருக்கடி அரசினரிடையே உருவானதும் அறியப்பட வேண்டிய செய்திகள்.

அவ்வகையில் பாவாணருக்கு ஏற்பட்ட இடையூறுகள், புறக்கணிப்புகள் எண்ணற்றவைப் போலவே பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்கு ஏற்பட்டவையும் எண்ணற்றவையாக இருந்தன என்பதும் அறியப்பட வேண்டிய செய்திகள்.

சாதியக் கொடுமைகளுக்கு எதிராக.. ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான பார்ப்பனிய வன்மங்களுக்கு எதிராகத் தந்தை பெரியாரின் கருத்துகளும் களச் செயல்பாடுகளும் மிக விரிவான நிலையில் அறியப்பட வேண்டுவன. தொடர்ந்து பெரியாரிய நெறியில் செயல்பட்ட ஐயா ஆனைமுத்து, வழக்கறிஞர் இராமதாசு, ஆசிரியர் கி. வீரமணி, கோவை கு. இராமகிருட்டிணன், கொளத்தூர் மணி உள்ளிட்ட எண்ணற்றோரின் தலைமைக்குரிய பணிகள் முகாமையாக அறியப்பட வேண்டியவை.

இவர்களன்றி தமிழ் மொழி இனம் சார்ந்த குமுகத்துறைகளில் மட்டும் அல்லாது சிவராசு, மீனாம்பாள் சிவராசு, பெரியவர் சுந்தரராசன், ஆர் கே சுவாமிநாதன், பாடாலூர் சொற்கோ, அன்பு பொன்னோவியம், இளையபெருமாள், டி எம் மணி, தேவாசீர்வாதம், மருத்துவர் சேப்பன், பேராசிரியர் தங்கராசு, சமத்துவ சங்கு ஆசிரியர் கிருட்டிணசாமி, இரும்பொறை குணசேகரன், ஜான் தேவாரம், நயனகர் (நீதிபதி) இராமகிருட்டிணன், சக்திதாசன், பொன் நாகப்பன், காட்டூர் சிவலிங்கம், கோ. தங்கவேலன், எர்ணாவூர் தமிழ்ச்செல்வம், தீனன், சேத்துப்பட்டு எத்திராசு, ஆசிரியர் பிரபாகரன் போன்று பிற அறிவியல் மருத்துவ இயல் உள்ளிட்ட அறிவு சார்ந்த துறைகளிலும், குமுகத்துறைகளிலும் ஈடுபட்ட பன்னூற்றுக்கணக்கான அடித்தட்டு மக்கள் தலைவர்கள் முன்னெடுத்து நடத்திச் செயற்பட்ட நிகழ்வுகள் மிக மிக அதிகமானவை.. அவையெல்லாம் அறியப்பட வேண்டியவை.

அவ்வகையில் அடித்தட்டுச் சாதிகளின் மீதான அவல நிலைகளை மட்டுமன்றி சாதி அமைப்புகளையே ஒழித்திட வேண்டும் எனும் நோக்கில் பார்ப்பனியத்தைக் கடுமையாக எதிர்த்ததோடு அடித்தட்டு மக்களுக்காக முழுமையாக நின்ற இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினர், மா இலெ கட்சியினர் எனப் பலரும் அவ்வகையில் எதிர்கொண்ட நெருக்கடிகளும் செல்பாடுகளும் பல.

சீனிவாச(ராவ்) தொடங்கி களப்பால் குப்பு, இரணியன் என எண்ணற்ற பலரின் செயற்பாடுகளும், பின்னர் தீவிரச் செயல்பாடுகளில் செயல்பட்ட அப்பு, பாலன், கண்ணாமணி தொடங்கி எண்ணற்றோரின் செயல்பாடுகளும் அறியப்பட வேண்டும்.. மார்க்சிய அறிஞர்கள் கோ. கேசவன், அ. மார்க்சு, ப. கல்யாணி, கோச்சடை, இரவிக்குமார் எனத் தொடங்கி தோழர்கள் தியாகு, பெ. மணியரசன், இராசேந்திர சோழன், மீ. த. பாண்டியன், துரைசிங்கவேலு, பாலன் உள்ளிட்டோரும், சந்துரு, புனித பாண்டியன், கண. குறிஞ்சி உள்ளிட்ட பலரும் சாதி ஒழிப்புக்கு எதிராகத் தீண்டாமை ஒழிப்புக்கு எதிராக ஆற்றிய, ஆற்றிவரும் வினைகள் அறியப்படவேண்டுவன.

தமிழ்த் தேசிய அரசியலோடு சாதி ஒழிப்பை இணைத்து எடுக்க வலியுறுத்திய வகையில் வெங்காலூர் குணா, எசு என் நாகராசன், கருணா மனோகரன், குமரிமைந்தன், பேராசிரியர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோரின் சாதி ஒழிப்புக்கான கருத்துகளும் அறியப்பட வேண்டுவன.

தமிழ்த் தேசிய அரசியலோடு சாதி ஒழிப்பு திட்டத்தைத் தென்மொழி இயக்க வழிப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் முன்னெடுத்த நிகழ்வுகளும், புலவர் கலியபெருமாள் தோழர் தமிழரசன் உள்ளிட்டோரின் தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சியின் வழி சாதி ஒழிப்பும் தமிழ்த் தேசியம் எனும் அரசியல் அறிக்கையாக முன்மொழியப்பட்டதோடு,

சாதிய ஆணவப் போக்குகளை எதிர்த்த களச் செயற்பாடுகளில் தன்னையே ஈகம் செய்த தோழர்களுடன் இணைந்து செயல்பட்ட நாற்றம்பள்ளி வேலு, அன்பழகன், பழனிவேலு, தருமலிங்கம், செகநாதன், தமிழ்ச்செல்வன், அன்பு, புதுவண்ணை தமிழரசன், மகிழரசன், வழக்கறிஞர் செம்மணி என எண்ணற்ற தோழர்களின் செயற்பாடுகளும் அறியப்பட வேண்டுவன.

அரியலூர் வை.பொன்னம்பலனார் மிகப்பெரும் நெருக்கடிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆளாக்கப்பட்டதும், சிங்காரவேலர், திரு வி க ஆகியோரின் அருஞ்செயல்களும் வரலாற்றுப் பதிவுக்குரியன. 1921 இல் நடைபெற்ற பி அண்ட் சி கலவரத்தில் தூண்டப்பட்டிருந்த சாதி மோதல் துப்பாக்கிச் சூடு வரை சென்று கடைசியாகச் சுடப்பட்டு இறந்த எட்டு அடித்தட்டு மக்களின் இழப்பைப் பொறுப்பெடுத்துத் தாங்களே அடக்கம் செய்ததோடு தொழிலாளர் வகுப்பிற்கே பெரும் தூணாய் நின்ற அவர்களின் செயற்பாடுகள் வரலாற்றுப் புகழுடையவை.. அதேபோல் குத்தூசி குருசாமியார், நெ. து. சுந்தரவடிவேலு, அறிவு வழி பஞ்சாட்சரம், எக்சரே கருணாகரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அறிவர்களின் செயற்பாட்டாளர்களின் முனைப்புகளும் வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடிகளும் அறியப்பட வேண்டியவை.

அம்பேத்கரின் நூற்றாண்டுக் காலத்தை ஒட்டித் தமிழ்நாட்டளவில் ஏற்பட்ட விழிப்புணர்வும் எழுச்சியும் எண்ணற்றோரை இயக்க வழிப்படுத்திப் பார்ப்பனியத்திற்கு எதிராக சாதியத்திற்கு எதிராக மிக கடுமையான வகையில் செயல்பட வைத்தன.

பொதுவுடைமைக் கட்சிகளில் இருந்தும்.. திமுக உள்ளிட்ட தேர்தல் கட்சிகளில் இருந்தும் பலர் வெளியேறி சாதி ஒழிப்புக்காகத் தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்காக மிக விரிவாகப் போராடினர். நூற்றுக்கணக்கான இயக்கங்கள் தோன்றின.. தமிழகத் தாழ்த்தப்பட்டோர் விடுதலை முன்னணி, சாதி ஒழிப்பு ஐக்கிய முன்னணி போன்ற பல முன்னணிகள் கட்டப்பட்டன.

அதற்கு முன் இருந்த காலங்களை விட இக்காலம் மிக எழுச்சியான விழிப்புணர்வுள்ள காலமாகும். அக்காலங்களில் அடித்தட்டு மக்களின் விடுதலைக்காகச் செயற்பட்டுக் கொண்டிருந்த தோழர்கள். அரங்க குணசேகரன், சந்திரபோசு, திருமாவளவன், பொழிலன், செல்வமணியன், பூவை மூர்த்தி, தலித் எழில்மலை, அம்பேத்கர் பிரியன், அதியமான், வினோத், எசு டி கல்யாணசுந்தரம், திருவள்ளுவன், உஞ்சை அரசன், இலெனின் சுப்பையா, வழக்கறிஞர் ப.பா.மோகன், வழக்கறிஞர் பொ.இரத்தினம், வழக்கறிஞர் இராசேந்திரன், தெய்வமணி, வழக்கறிஞர் பாவேந்தன், நிலவன், நிலவழகன், கோ. சுகுமாரன் , காஞ்சி அமுதன் எனத் தொடங்கி அண்மை காலங்களில் குடந்தை அரசன், நாகை திருவள்ளுவன், புரட்சிமணி, திருமுருகன் காந்தி என நூற்றுக்கணக்கான தோழர்கள் தலைமை எடுத்து அமைப்புகளைக் கட்டி, கூட்டமைப்புகளாக நின்று மிக விரிவாக செயல்பட்ட செயல்பாடுகள் வரலாற்றுப் பதிவுக்குரியவை.. அவ்வியக்கங்களுள் பல அண்மைப் பத்தாண்டுகளில் தேர்தல் பாதைகளுக்குள் நுழைந்து ஆளுங்கட்சிக்கோ எதிர்க்கட்சிக்கோ ஆதரவாக இருந்திடும் வகையில் சாதி ஒழிப்பு அரசியல் செயல்பாடுகளையும் வலியுறுத்திச் செயல்பட்டு வருகின்றன.

மேற்குறிப்பிட்ட பெயர் பட்டியல்களுள் மேலும் இடம்பெற வேண்டியவர்கள் பன்னூற்றுக் கணக்கினர் உண்டு. அவர்களின் பெயர்கள் செயல்பாடுகள் விரிவாக அறியப்பட வேண்டியவையே.

இவ்வகையில் மேலே குறிக்கப்பட்டுள்ளவர்களோடு சாதி ஒழிப்புக்கான போராட்டக் களத்தில் செயல்பட்ட, செயல்பட்டு வருகிற அனைவரும் ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு கோணங்களில் ஒவ்வொரு வகை அரசியல் நிலைப்பாட்டில் செயல்பட்டவர்கள், செயல்பட்டு வருகிறவர்கள், அச் செயல்பாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம்.. உடன்பாடும் முரண்பாடும் இருக்கலாம்.. ஆனால் சாதி அமைப்பு அப்படியே இருக்க வேண்டும் என்கிற நோக்கமுடையவையாக அவர்களின் செயல்பாடுகள் இருந்திடவில்லை. சாதியை ஒழிப்பதற்கான ஆழ்ந்த விரிந்த குமுக பகுப்பாய்வு தேவை. அதை நோக்கிய நிலைகளில் ஒட்டு மொத்த குமுக மாற்றத்தை, அரசியல் பொருளியல் மாற்றத்தை இலக்காகக் கொண்டு அறிவியல் கண்ணோட்டமுடைய இயங்கியல் தன்மையில் அனைவரின் செயற்பாடுகளையும் மதிப்பிட்டு ஏற்பதை ஏற்றுத் தள்ளுவன தள்ளி சாதியற்ற, குமுக, பொருளியல் மற்றும் பாலின ஏற்றத்தாழ்வற்ற ஒரு பொதுமைக் குமுகத்தை நோக்கிச் செயல்பட வேண்டி இருக்கிறது.

அதற்கான அரசியல் கோட்பாடுகளில் தெளிவு பெறவும் நடைமுறைத் திட்டங்கள் வகுத்துக் கொள்ளவும் மேற்படிச் செயல்பாட்டாளர்களின் வழித்தடங்களை அறிந்து கொள்வது கட்டாயத் தேவை உடையது என்கிற அளவில் வரலாற்றுச் சுவடுகளைப் படிப்போம். புதிய வரலாற்றைப் படைப்போம்!

- பொழிலன், ஒருங்கிணைப்பாளர், தமிழக மக்கள் முன்னணி