74. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பார்ப்பனர் ஹெச்.வி.ஹண்டே இது மூன்றாம் தர ஆட்சி என்று திமுகவை சாடிய போது முதல்வராக இருந்த கலைஞர் எழுந்து அதற்கு பதிலடி தந்தார். “இது மூன்றாம் தர ஆட்சி அல்ல, நான்காம் தர ஆட்சி, சூத்திரர்களால் சூத்திரர்களுக்காக ஆளப்படும் ஆட்சி” என்று பதிலடி தந்து சட்டப்பேரவை குறிப்பிலும் அதை பதிவேற்ற வைத்தார்.

75. இட ஒதுக்கீடு அமல்படுத்துவதால் உயர் சாதியினர் பாதிக்கப்படுகிறார்கள் என்று எதிர்ப்பு எழும்பிய போது கலைஞர் அதற்கு ஒரு உதாரணத்துடன் பதில் அளித்தார். சலவை செய்து அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்ட துணிகளுக்கு மீண்டும் சலவை செய்ய தேவையில்லை, அழுக்காகி கிடைக்கும் துணிகளுக்குத் தான் சலவை செய்ய வேண்டும் என்று பதில் அளித்தார்.

76. சாலையில் தார் ஊற்றி கொளுத்தும் வெயிலில் வேலை செய்யும் தொழிலாளிகளின் அவலம் கலைஞரின் கண்ணில் தான் பட்டது. நேரில் கண்ட அவர் காலில் சாக்கு துணியை கட்டிக் கொண்டு தார் போட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு ஜாக் பூட், முழங்கால் வரையிலான காலனி, கையுறைகள் வழங்கவும் ஆணையிட்டவர் கலைஞர்.karunanidhi 385 77. 1954-இல் அரசியலை விட்டு விலகப் போகிறேன் என்று அறிவித்த ராஜாஜி, இராமாயணத்திற்கு கல்கி ஏட்டில் விரிவுரை எழுத தொடங்கினார். சக்கரவர்த்தி திருமகன் என்று அதற்கு பெயர் சூட்டினார். அறிவிப்பை கண்ட கலைஞர் உடனே முரசொலியில் சக்கரவர்த்தி திருமகனுக்கு பதிலடியாக சக்கரவர்த்தியின் திருமகன் கட்டுரை தொடர் முரசொலியில் வெளிவரும் என்று அறிவித்தார். ராஜாஜிக்கு சக்கரவர்த்தி என்ற பட்ட பெயரும் உண்டு. ராஜாஜி எழுதியதால் அதற்கு பதிலடியாக ‘மு.க ஜீ’ என்ற பெயரில் அந்த கட்டுரைத் தொடரை கலைஞர் எழுதினார்.

78. இராமாயணம் நூலுக்கு மறுப்பாக பரதாயணம் என்று தலைப்பிட்டு பரதன் ஆட்சி நடத்திய காலத்தில் பார்ப்பனர்கள் எப்படி மகிழ்விக்கப்பட்டார்கள் என்பதையும் மீண்டும் ராமன் ஆட்சிக்கு வந்த பிறகு சூத்திரன் சம்பூகனை அவன் வெட்டி சாய்த்ததையும் கலைஞர் பதிவு செய்தார்.

79. ராஜாஜிக்கு பதிலடி தந்த மூக்காஜீ-யின் கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ராஜாஜியை காப்பாற்றுவதற்கு அவரது சீடர் மபொசி களத்தில் இறங்கினார், மபொசிக்கு கலைஞர் பதிலடி கொடுத்தார். ‘விபீசணருக்கு விடையளிப்போம்’ என்ற தலைப்பில் மபொசியின் ராமாயண ஆதரவு கட்டுரையை மறுத்தார்.

80. டெல்லியிலே ஒவ்வொரு ஆண்டும் ராம லீலா என்ற பெயரில் ராவணன் உருவங்களை எரிக்கும் மதவெறி நிகழ்வுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் கலைஞர். தென்னாட்டிலும் ராமனை எரிக்கும் ராவண லீலாக்கள் நடத்தும் காலம் வந்தே தீரும் என்று முரசொலியில் போர்ச்சங்கு ஊதினார். பெரியார் திராவிடர் கழகம் 1996 இல் தொடங்கப்பட்ட காலத்தில் சில ஆண்டுகள் இராவண லீலாக்களை நடத்தியது, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் கூப்பாடு போட்டார்கள். முதல்வராக இருந்த கலைஞர் ஒவ்வொரு இராவண லீலா நிகழ்வின் போதும் பார்ப்பன எதிர்ப்புகளை புறந்தள்ளி காலையில் கைது செய்து மாலையில் வீட்டுக்கு தோழர்களை அனுப்பி வைத்தார்.

81. கலைஞர் எழுதிய பராசக்தி படத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடு முழுதும் கண்டனக் கூட்டங்களை நடத்தியது. தினமணி பத்திரிக்கை கிண்டல் செய்து கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டது, அதில் கதை, வசவு, தயாநிதி என்று எழுதப்பட்டு பரபிரம்மம் என்று தலைப்பிட்டது, கலைஞர் அதே பரப்பிரம்மம் என்ற தலைப்பை வைத்து ஒரு நாடகத்தை எழுதி பல ஊர்களில் நடித்துக் காட்டினார்.

82. மனோகரா திரைப்படத்திற்கு வசனம் எழுதினார் கலைஞர், கதையில் வரும் பேய் பிசாசு கருத்துக்களை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக அதிசய மருந்து சாப்பிடுவதால் உருவம் மறைந்து கொண்டே வருவது போல் கதையை மாற்றி அமைத்தார்.

83. ராஜா ராணி திரைப்படத்தில் அகல்யா கதை, சேரன் செங்குட்டுவன், சாக்ரடீஸ் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட வரலாறுகளை நாடகங்களாக இணைத்து பகுத்தறிவு கருத்துக்களை பரப்பினார்.

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்

Pin It