ஞாநி என்பது ஒரு புனைப் பெயர்தான் என்று தான் இத்தனை நாளாக எண்ணியிருந்தோம். ஆனால் அவர் தன்னை, எல்லாம் தெரிந்த ஒரு ஞானியாகவே கருதிக் கொண்டிருக்கிறார் என்பது இப்போதுதான் புரிகிறது. ஒரு பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் தன்னை நிறுவிக்கொள்ளும் ஞாநி, விமர்சனத்துக்கும் அவதூறுக்குமான அடிப்படை வித்தியாசம்கூடத் தெரியாதவராக இருப்பதுதான் நம்மை ஆச்சிரியத்தில் ஆழ்த்துகிறது. சனங்களுக்கு மரியாதை இல்லாத இந்த பாழாய்ப்போன சனநாயகத்தில் எல்லோருக்கும் பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் உண்டு என்று சொல்லப்படுகிறது. அதே சனநாயகத்தில்தான் அளவுக்கு மீறி "ஓ"வராய்ப் பேசுபவர்களுக்கு எதிராக 'அவதூறு' வழக்கு என்ற சட்டமும் இருக்கிறது.

திராவிட இயக்கங்கள் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார் ஞாநி என்பது ஓ...பக்கங்களை தொடந்து வாசிப்பவர்களுக்குத் தெரியும். இவை தவிர கலைஞரின் காதல் குறித்தும் கேள்வி எழுப்பி மக்கள் மத்தியில் தவறான கற்பிதங்களை கட்டமைக்க முயல்கிறார். கலைஞர், ராமதாஸ் போன்றவர்கள் ஒவ்வொரு வாரமும் குமுதம் எப்போது வரும், ஞாநியின் பக்கங்களை எப்போது படிக்கலாம் என்று காத்திருந்து படிப்பதைப் போலவும், ஞாநி சொல்வதைக் கேட்டுத்தான் அவர்கள் எந்த முடிவும் எடுக்கிறார்கள் என்பது போலவும் ஒரு மாயவலையை தானே விரித்து அதில் சிக்கிக் கொண்டிருக்கிறார் ஞாநி என்பதுதான் பரிதாபம்.

அவரது அவதூறுகளுக்கு உடனுக்குடன் தகுந்த தண்டனை கிடைத்தபடிதான் இருக்கிறது. அது அவருக்கே தெரியவில்லை. ஒருவர் நம் மீது வீசும் நியாயமற்ற கடுஞ்சொற்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச தண்டனையும் அதுதான். அதற்குப் பெயர் "நிராகரித்தல்". அதைத்தான் கலைஞர் போன்றவர்கள் செய்து வருகிறார்கள். தன்னை ஏதோ சமூக சீர்திருத்த அவதாரமாக கற்பனை செய்துகொண்டிருக்கும் ஞாநி, தன் கருத்துக்கள் அவை யார் மீது வீசப்படுகிறதோ அதை அவர்கள் சிறிதும் சட்டை செய்வதேயில்லை என்பதை அறிந்தால், பாவம் நொந்து போவார். அவரது 'குட்டுக்கள்' யாருக்கும் வலிப்பதில்லை. அவர் வழங்கும் 'பூச்செண்டுகள்' குப்பைக் கூடைகளைத்தான் நிறைத்துக் கொண்டிருக்கின்றன. அவர் எழுப்பும் 'இந்த வாரக் கேள்விகள்' கொக்கிகள் போல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. வேறு யாரையாவது சார்ந்து அவர் பிற்காலத்தில் எழுத நேரிடும்போது அந்தக் கொக்கிகள் அவர் கழுத்தையே நெரிக்கும்.

கலைஞரின் வாரிசு அரசியல் பற்றி பக்கம் பக்கமாக எழுதுகிற ஞாநி, மு.க.முத்துவைக்கூட விட்டுவைப்பதில்லை. உதாரணத்துக்கு ஞாநியின் இந்தக் கற்பனையைப் பார்ப்போம் - கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின் முதல்வராவாராம். அதற்கு மு.க.அழகிரி சம்மதிக்க மாட்டாராம். அதனால் அவருக்கு துணை முதலமைச்சர் பதவியை ஸ்டாலின் தருவாராம். இவர்கள் இருவரும் முதலமைச்சர் ஆவது பிடிக்காமல் மு.க.முத்து பிரச்சனை செய்வாராம். அடுத்த தலைமுறையைச் சேர்ந்த கனிமொழியும், தயாநிதி மாறனும் கைகோர்த்து ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் முத்துவுக்கும் எதிராக போர்க்கொடி தூக்குவார்களாம். இதன் பிறகு கனிமொழிக்கும் தயாநிதிக்குமே யார் முதலமைச்சர் என்பதில் தகராறு வருமாம். அவர்களில் ஒருவர் முதல்வராகவும் மற்றவர் துணை முதல்வராகவும் இருப்பார்களாம். இதற்கு எதிராக உதயநிதியை ஸ்டாலின் தயார் செய்வாராம்...!!! (உஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்ப்பா....இப்பவே கண்ணைக் கட்டுதே...!) கலைஞர் குடும்பத்தினரோ அல்லது எந்த ஒரு தி.மு.கவினரோகூட இப்படியெல்லாம் யோசித்திருக்க மாட்டார்கள். ஞாநி ஒருவேளை "ரூம் போட்டு யோசிப்பாரோ?"

ஞாநிக்கு ஒரு கேள்வி. நேரு பிரதமராகலாம். அவர் மகள் இந்திராகாந்தி பிரதமர் ஆகலாம். இந்திராகாந்தியின் மறைவுக்குப்பின் அதுவரையில் அரசியல் அரிச்சுவடே தெரியாமல் விமானம் ஓட்டிக் கொண்டிருந்த ராஜீவ்காந்தி பிரதமராகலாம். ராஜீவ்காந்தியின் மனைவி என்ற ஒரே காரணத்துக்காக சோனியாகாந்தி, இந்தியாவின் பழம்பெரும் கட்சி என்றழைக்கப்படும் காங்கிரஸின் தலைவியாகலாம். ராஜீவ்-சோனியாவின் புதல்வர் என்பதற்காக ராகுல் காந்தி பிரதமராகலாம்.

ராமதாஸின் குடும்பம் அரசியலுக்கு வரலாம். மூப்பனாரின் மகன் அரசியலுக்கு வரலாம். நேற்று முளைத்த கட்சிகளின் தலைவர்கள் அடுத்த முதல்வர் நான் தான் என்று மார்தட்டிக் கொள்ளலாம். இரண்டு படம் ஓடியவுடன் நம்ம ஊர் சினிமா கதாநாயகர்களுக்கு முதல்வர் ஆசை வரலாம். அய்யா... தெரியாமல் தான் கேட்கிறேன். கலைஞர் குடுப்பத்தினர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு? நேரு குடும்பத்தின் மீது அரசியல் எப்படி திணிக்கப்பட்டதோ அப்படித்தான் கலைஞர் குடும்பத்தின் மீதும் திணிக்கப்பட்டிருக்கிறது. நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டபோதும் அதன் தொடர்ச்சியாகவும் கனிமொழி சந்தித்த ஒடுக்குமுறைகள் தான் பின்னாளில் அரசியலில் அவர் ஈடுபட முடிவு செய்ததற்குக் காரணமாக இருக்க முடியும்.

பேனர்களில் விளம்பரங்களில் தன்னுடைய புகைப்படம் இடம்பெறக் கூடாது என்று கலைஞர் அறிவித்ததற்கு பூச்செண்டு கொடுக்கிற சாக்கில் 'தான் தொடங்கி வைத்த கலாச்சாரத்தை தானே முடித்து வைத்திருக்கிறார் கலைஞர்' என்று அப்பூச்செண்டுக்குள் ஒரு நெருஞ்சி முள்ளையும் வைத்துக் கொடுத்த ஞாநி அவர்களே... குமுதத்தில் ஓ..பக்கங்கள் துவங்கிய போது 'குமுதத்தில் இந்த வாரம் முதல் ஞாநியின் ஓ..பக்கங்கள்!' என்று நீங்கள் கடைகள் தோறும் உங்கள் முகங்காட்டித் தொங்கிக் கொண்டிருந்தது ஏன்? ஒவ்வொரு இதழிலும் விதவிதமாய் போஸ் கொடுப்பது ஏன்? கேட்டால் குமுததின் மீது பழியைப் போடுவீர்கள். ஆனால் உங்கள் படத்தைப் பார்த்து ஒருவர் அடித்த கமெண்டைச் சொல்லட்டுமா? ‘ஓ...ஞாநி’ங்கிற லார்டு லபக்குதாஸ் இந்தாளு தானா?"

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் மாலை அணிவித்துக் கொண்டதை கொச்சைப்படுத்தும் விதமாக திரும்பத் திரும்ப கலைஞர் டி.வி. ஒளிபரப்பியது எனவும் இதற்காக கலைஞரும் கலைஞர் டி.வியும் ஜெயலலிதாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் காலில் வெந்நீர் ஊற்றிக் கொண்டதைப்போல ஆர்ப்பாட்டம் செய்கிற ஞாநி அவர்களே... வைதீகச் சடங்குகளுக்கு எதிரானவராக காட்டிக் கொள்ளும் நீங்கள் "மாலை மாற்றிக் கொண்டால்தான் தவறு. ஒருவர் மற்றவருக்கு மாலையை அணிவிப்பது தவறில்லை" எனும் பொருள்பட கூறியிருக்கிறீர்கள்.

ஏதோ நேரில் சென்று பார்த்ததைப்போல ரன்னிங் கமெண்ட்ரி வேறு... "சிவாச்சாரியார் சசிகலா கையில் ஒரு மாலையைக் கொடுக்கிறார்.... அதை அவர் ஜெயலலிதாவுக்கு அணிவிக்கிறார்.... சிவாச்சாரியார் மற்றொரு மாலையை இப்போது ஜெயலலிதாவின் கையில் கொடுக்கிறார்.... அதை அவர் சசிகலாவுக்கு அணிவிக்கிறார்...!!!" நாட்டில் இதுவா தலையாய பிரச்சனை? கலைஞர் டி.வி. என்ன, எந்த டி.வி. ஆனாலும், அது எத்தனை முறை ஒளிபரப்பப்பட்டாலும் மாலை அணிவித்துக் கொண்டதில் தவறில்லை என்றால் தவறில்லை தானே. அதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?

கிராபிக்ஸ் மாற்றம் செய்தா ஒளிபரப்பினார்கள்? ஊடகங்கள் அவை சார்ந்த கட்சிக்கு சாதகமாக செய்திகள் ஏதாவது கிடைக்குமா என்ற ரீதியில்தான் செய்திகள் வெளியிடுகின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்காகவெல்லாம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தால் எல்லா கட்சிகளும் அவை சார்ந்த ஊடங்களும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டு திரிய வேண்டியது தான். ஆனால் உண்மையில், அதே கட்டுரையின் பிற்பகுதியில், ஓரின உறவுள்ளவர்கள் ஆட்சி செய்வதில் என்ன தவறு என்று கேட்பதன் மூலம் ஞாநிக்குள் இருக்கும் எண்ண ஓட்டம்தான் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் ஒரு கருத்தை ஞாநி சொல்கிறார் பாருங்கள். அவை பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டியவை. இங்கிலாந்தில் ஒரு அமைச்சர் தன்னை ஓரின உறவு உள்ளவர் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறாராம். அதனால் நமது அரசியல் கட்சிகளும் அடுத்த தேர்தல் அறிக்கையில் வேட்பாளர்களில் யாரெல்லாம் ஹோமோசெக்ஸ்காரர்கள், யாரெல்லாம் லெஸ்பியன்கள் என்று பட்டியல் வெளியிட வேண்டுமாம். ஒவ்வொரு கட்சியும் செக்ஸ் குறித்த தங்கள் பார்வையை தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க வேண்டுமாம். என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்! கஞ்சிக்கு வழி கிடைக்க ஏதாவது இருக்கிறதா என்று ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கையையும் வாய் பிளந்து கவனிக்கிற சாமானிய சனங்களுக்கு அதில் செக்ஸ் பற்றிய கட்சிகளின் பார்வைகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவர்கள் எந்த அளவு அதிர்வுகளுக்கு ஆளாவார்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறதா? தமிழ்நாட்டில் இருந்துகொண்டே இங்கிலாந்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற ஞாநிகளுக்கு இதெல்லாம் புரிய நூற்றாண்டுகளாகும்.

மகளிர் தின சிறப்புக் கட்டுரையாக திருமணம், விவாகரத்து, நட்பு பற்றி எழுதப்பட்ட கட்டுரை தடை செய்யப்பட வேண்டிய ஒன்று. திருமணம் செய்து கொண்டவர்கள், கணவன் மனைவிக்கு இடையே நட்பு முறிவதைப் போன்ற நிலை ஏற்பட்டால் உடனே விவாகரத்து செய்துவிட வேண்டுமாம். ஏனென்றால் கணவன் மனைவிக்கு இடையே திருமண உறவைவிட நட்பு தான் பெரிதாம். என்ன ஒரு அற்புதமான சிந்தனை! நட்பு என்று சொல்கிறீர்களே, மனைவியிடம் உள்ள உறவில் நட்பு என்று எதையாவது உங்களால் பகுத்துணர முடிகிறதா? அப்படி உணர முடிகிற அளவுக்கு உங்களுக்கு பக்குவம் இருந்தாலும், மனைவியைத் தவிர எத்தனையோ பெண்களிடம் அன்றாட வாழ்வில் தோழமையோடு பழகுகிறோமே, அந்த நட்புக்கும் மனைவியிடம் உள்ள நட்புக்கும் என்ன வித்தியாசம்? ஞாநிகளுக்கே வெளிச்சம்!!!

'பிள்ளைகள் பொருட்டு, கணவன் மனைவி சகித்துக் கொண்டு வாழத் தேவையில்லை, எனவே விவாகரத்துச் செய்துவிடுங்கள்' என்று போகிற போக்கில் ஏதோ டீ சாப்பிடக் கூப்பிடுவது மாதிரி விவாகரத்துச் செய்ய எல்லோரையும் கூவிக்கூவி அழைக்கிறார் ஞாநி. வாழ்வில் எத்தனையோ மனிதர்களை, விஷயங்களை சகித்துக் கொள்கிறோம். காரணமின்றி எரிந்து விழும் மேலதிகாரி தொடங்கி, எதிரிகள், அன்புத் தொல்லைகள், நடைபாதை- சாலைகள்- திரைஅரங்கங்கள்- பேருந்துகள்- ரயில்கள்- கடைகள்- அரசு அலுவலகங்கள் என எங்கும் எதற்கும் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம், எங்கும் எதிலும் காத்துக் கிடக்க வேண்டியிருக்கும் க்யூ வரிசை, அலுப்பூட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ல\ஞ்சம், ஏமாற்றம் தரும் ஆட்சி, இவை எல்லாவற்றுக்கும் மேலாக 'வாய்க்கு வந்ததை' உளறும் 'ஞாநி'கள் என எல்லோரையும் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கும் வாழ்வில், சொந்தப் பெண்டாட்டியை சகித்துக் கொள்வதில் என்னய்யா பிழை?

தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அவர்களை, அவர் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகள் எந்ததெந்த பள்ளியில் படித்தார்கள் அல்லது படிக்கிறார்கள், அவர்கள் தமிழ்வழிக் கல்விதான் கற்கிறார்களா என்ற பட்டியலை வெளியிடக் கோரும் ஞாநி அவர்களே....உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எந்தெந்த பள்ளியில் படித்தார்கள் அல்லது படிக்கிறார்கள், அவர்கள் எல்லோரும் தமிழ்வழிக் கல்விதான் கற்றார்களா என்ற பட்டியலை நீங்கள் வெளியிட முடியுமா? உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம்கூட உங்களால் மாற்றம் விளைவிக்க இயலவில்லை எனும்போது நீங்கள் அநாவசியமாக வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ளாமல் இருப்பதே நல்லது. ஒரு விஷயத்தை இங்கே நினைவூட்ட வேண்டியிருக்கிறது - "பிறருடைய அழுக்கைச் சுட்டிக் காட்டுமுன் உங்கள் விரலைச் சுத்தம் செய்யுங்கள்."

நடிகர் திலகம் சிவாஜிகணேசனையும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரையும் உடல்ரீதியாக கிண்டலடித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியதற்கு, அப்படி அவர் எழுதியதை திரும்பப் பெறும் வரை திரைப்படத்துறையில் எந்த ஒத்துழைப்பும் ஜெயமோகனுக்கு அளிப்பதில்லை என்று திரைத்துறையினர் தீர்மானம் போட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் ஞாநி, உடல் ஊனமுற்றவர்களை கேவலமாகச் சித்தரிக்கும் திரைப்படங்களில் இனி நடிப்பதில்லை என்று நடிக நடிகையர் தீர்மானம் போடத் தயாரா என்று கேள்வி எழுப்புகிறார். அவ்வப்போது, தேவையற்ற விஷயங்களில், யாரும் டயர் செருப்பு அணிவித்து வில்வண்டியில் அழைத்து வராமலேயே நவீன நாட்டாமையாக மாறிவிடும் ஞாநி, இவ்விஷயத்திலும் தவறான தீர்ப்பையே தந்திருக்கிறார். உடல் ஊனமுற்றவர்களை கிண்டலடிப்பது தவறு என்றால், அதைச் செய்த திரைத் துறையினர் மட்டுமா குற்றவாளிகள்? ஜெயமோகனும் தானே குற்றவாளி? திரைத்துறையினருக்கு கண்டனம் தெரிவிக்கும் ஞாநி, ஜெயமோகனின் செயலைப் பற்றி ஒரு வரிகூட குறிப்பிடாமல் நழுவுவதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன?

நம் நாட்டு பட்ஜெட்டில் எத்தனை கோடி ரூபாய் ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று 'ரமணா' விஜயகாந்த் போல புள்ளிவிபரக் கணக்கு கூறும் ஞாநி, வீட்டில் திருடு போகிறது என்பதற்காக உணவுக்கான செலவைக் குறைத்துவிட்டு யாராவது பூட்டு வாங்குவதற்கு அதிக பணம் செலவிடுவார்களா என்று அறிவுப்பூர்வமான கேள்வியும் எழுப்புகிறார். இந்திய பட்ஜெட்டில் 'ராணுவத்துக்கு' என்று தான் பணம் ஒதுக்குகிறார்கள். அது 'இந்திய ராணுவத்திற்கு' என்று யார் சொன்னது? ஒதுக்கப்படும் பணம், இலங்கையின் சிங்கள ராணுவத்துக்கும் சேர்த்துத்தான் என்பது ஞாநிக்குத் தெரியாதா என்ன? இலங்கையின் சிங்கள ராணுவத்திற்கு ஆயுதம் வழங்குவது முதல் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது வரை எல்லாம் நாம் தானே செய்கிறோம். இதெற்கெல்லாம் பணம் வேண்டாமா?.... போங்க ஞாநி, இது கூடவா தெரியாம இருப்பாங்க?

பகுத்தறிவுத் திருமணங்கள் என்ற பெயரில் நடைபெறும் திருமணங்களில் வைதீகச் சடங்குகளை விட்டுவிடுபவர்களால் தாலி கட்டிக் கொள்வதை மட்டும் விட முடியவில்லை என்று அங்கலாய்க்கும் ஞாநி அவர்களே... உண்மையில் உங்கள் வருத்தம், தாலி கட்டும் சடங்கு தொடர்ந்து இருக்கிறது என்பதனாலா அல்லது மந்திரம் ஓதுதல், யாகம் வளர்த்தல் போன்ற வைதீகச் சடங்குகளைச் செய்யும் புரோகிதர்களுக்கு பிழைப்பதற்கு வழியில்லாமல் போய்க் கொண்டிருப்பதனாலா?

கிருத்தவ மதத்திலிருந்து 'திரும்பி' இந்து மதத்திற்கு வந்திருக்கும் 300 பேர் எந்த சாதியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று கேட்கும் ஞாநி அவர்களே...உங்களுடைய வங்கொடுமை தாங்க முடியாமல்தானே அவர்கள் கிருத்தவ மதத்திற்குப் போனார்கள்? எனவே அவர்களை உங்கள் சாதியில் சேர்த்துக் கொள்வதுதான் நியாயம்.

பேராசிரியர் சுப.வீ அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் மானமுள்ள எந்த தமிழனுக்கும் இரத்தம் கொதிக்கச் செய்யும்படி "தமிழுணர்வு என்பது பாலுணர்வைவிட தாழ்ந்ததா என்ன" என்று கிண்டல் தொனிக்க குறிப்பிட்டதற்கும், தந்தைப் பெரியாரை "பெரியவாள்" என்று குறிப்பிட்டு கேவலப்படுத்தியதற்கும் ஒவ்வொரு தமிழனின் கால்களிலும் விழுந்து ஞாநி மன்னிப்புக் கேட்க வேண்டும்.

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலையால் அழிந்து கொண்டிருக்க, இங்கு வந்த சிங்களவர் ஒருவரின் சட்டை கிழிக்கப்பட்டதற்கு வரிந்து கட்டிக் கொண்டு ஈழத் தமிழ் அபிமானிகளின் மீதெல்லாம் அக்னி மழை பொழிகிறார் ஞாநி. கேட்டால் எங்கோ சாகும் தமிழர்களை விட இங்கே தமிழ்நாட்டில் நடக்கும் சிறிய கைகலப்புதான் தனக்கு முக்கியம் என்கிறார். இதன் மூலம் ஞாநி தன்னை தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் அருகதையை இழந்து விட்டதால் அவரை நாடு கடத்துவதே சரியான தீர்வாக இருக்க முடியும். அதுவும் இலங்கைக்கு, அதிலும் குறிப்பாக சிங்கள ராணுவ முகாமுக்கு கடத்தப்பட வேண்டும். அங்கு போனால், அவர்கள் எதைக் கிழிக்கிறார்கள் என்பது அப்போது புரியும்.

"குண்டர் சட்டத்தில், 'குண்டர்' என்றால் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் என்று இருக்கிறது. ஆனால் திருட்டு வி.சி.டி. விற்கும் சாலையோர சிறுவியாபாரிகள், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்களே, திருட்டு வி.சி.டி. விற்பதால் எப்படி பொது அமைதி கெடுகிறது?" என்று எழுதுகிறார் ஞாநி. திருட்டு வி.சி.டி விற்கும் சிறுவியாபாரிகள் குண்டர்களா இல்லையா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால், இருந்த இடத்தில் இருந்து கொண்டு, கணினி முன்னால் அமர்ந்து கொண்டு, சமூகத்துக்கு ஒவ்வாத கருத்துக்களை எழுதி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கிற ஞாநி, நிச்சயம் "குண்டர்" தான்.

யாரும் காது கொடுத்துக் கேளாத போதிலும் கட்டளையிட்டு, பட்டியல் கேட்டு, குட்டு வைத்து, பூச்செண்டு கொடுத்து பிழைப்பு ஓட்டிக் கொண்டிருக்கும் ஞாநிக்கு ஒரு பரிந்துரை: ஈழத் தமிழர்கள் என்றாலே உங்களுக்கு ஆகாது என்பது தெரியும். இருந்தாலும் தமிழினி பதிப்பக வெளீடான ஈழத்தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் "அங்கே இப்ப என்ன நேரம்?" என்ற நூலின் முன்னுரையை மட்டுமாவது படிக்கவும். தான் படித்த சில ஆங்கிலப் புத்தகங்கள் எப்படி இருந்தன என்பது குறித்து "சாதாரண வாசகருக்கு ஒரு சாதாரண எழுத்தாளர் எழுதும் எழுத்து" எனவும், "இவர்கள் தங்கள் பாண்டித்தியத்தை காட்டவோ, மேதாவிலாசத்தை வெளிப்படுத்தி வாசகரை அசத்தவோ எழுதுவதில்லை. பகிர்ந்து கொள்வதுதான் அவர்களுடைய முக்கியமான நோக்கம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஓ...பக்கங்கள் முழுவதும் விரவிக் கிடப்பது உங்களின் மேதாவிலாசத்தன்மையே அன்றி வேறொன்றுமில்லை. யாரவது அறிக்கை வெளியிட்டால், அறிக்கை வெளியிட்டவரை அல்லது அந்த கட்சியை அவமானப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு அதை அப்படியே கட்டம் கட்டி "இந்த வாரச் சிரிப்பு" என்று வெளியிட்டு விடுகிற தீராத நோய் தொற்றிக் கொண்டிருக்கிறது உங்களிடம். உண்மையைச் சொல்லப்போனால், இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சிரிப்பு, நீங்கள் எழுதும் ஓ...பக்கங்கள் தான்.

எதிர்வினை அவ்வளவாக இல்லை என்பதால், எழுதுவது எல்லாம் சரியாகிவிடாது. ஞாநியின் கருத்துக்களும் அவதூறுகளும் தமிழ்ச்சமூகம் என்னும் உடலில் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கும் விஷம். அவை முழுவதும் பரவி சமூகம் நீலம் பாரித்துவிடாமலிருக்கத்தான் இந்த நீளக் கடிதம்.

மேற்குறிப்பிட்ட "சாதாரண வாசகருக்கு ஒரு சாதாரண எழுத்தாளர் எழுதும் எழுத்தாகத்" திகழும் பல கட்டுரைகள் வெளிவருகின்ற அதே குமுதத்தில் ஞாநியின் விஷக் கருத்துக்களும் வெளிவருவதுதான் வருத்தமாக இருக்கிறது. சமூகத்தை சீர்குலைப்பதையே தலையாய பணியாகக் கொண்டிருக்கும் ஞாநியின் ஓ...பக்கங்களை தொடர்ந்து வெளியிடுவது குறித்து மறுபரிசீலனை செய்வது, உலகெங்கும் வாசகர்களைக் கொண்டிருக்கிற, குமுதம் போன்ற பத்திரிகைகளின் தரத்துக்கு நல்லது.

இனி எப்போதும் பேனாவைத் திறந்தோ, கணனியைத் திறந்தோ எழுதுவது குறித்து ஞாநி மறுபரிசீலனை செய்வது, தமிழ்ச்சமூகத்தைப் பொறுத்தவரையில் சாலச் சிறந்தது.

இப்படிக்கு,
எஸ். பாபு