மரணபடுக்கையில் இருக்கும்போதும் கலைஞரை “சிலரால்” ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் மரணித்த பிறகும் கலைஞர் மீதான ஆத்திரம் “அவர்களுக்கு” குறையவில்லை. கடற்கரையை நோக்கி அவரது உயிரற்ற உடலோடு, நடை பிணங்களாய் நடந்து போன கூட்டத்தைப் பார்த்து அந்த சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவர் அந்த “சிலருக்கான” தலைவர் இல்லை. அதனால் சினம் கொண்டார்கள். அவர் “பலருக்கான” தலைவர். அதனால் பல லட்சக்கணக்கானோர் பதறிப்போனார்கள். அந்த சிலருக்கு இருப்பது ஆயிரங்காலத்துக் கோபம். இந்தப் பலருக்கும் இருப்பது நூறாண்டுப் பாசம். முன்னது ஆரியம் பின்னது திராவிடம். நரகாசுரனுக்கும் இராவணனுக்கும் இப்படித்தான் கொண்டாடி இருப்பார்கள். நமது உண்மையான திராவிடத் திருவிழாக்களை அடையாளம் காண வேண்டிய அவசியத்தை உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார் கலைஞர்.

“பாராட்டிப் போற்றி வந்த பழைமை யோகம், ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்” என்ற வரிகளில் தொடங்கிய கலைஞரின் பயணம், “இராமர் கட்டிய பாலம் எங்கே இருக்கிறது?” என்ற கேள்வியால் முடியும் வரை ஈரோடு, அவர் உயிரோடு கலந்திருந்தது “உங்கள் ஆட்சி மூன்றாந்தர ஆட்சியாக இருக்கிறது!” என்று இராஜாஜியின் சீடன் ஹெண்டே குற்றம் சாட்டினார். “இது மூன்றாந்தர ஆட்சி மட்டுமல்ல ! நாலாந்தர ஆட்சி. ஆம் வருணத்தில் நாலாம்படி வகிக்கும் சூத்திரர்களுக்கான ஆட்சி” என்று பெரியாரின் சீடன் கலைஞர் பதில் சொன்னார். பதவி இல்லாத காலத்தில் அல்ல. முதலமைச்சராக இருக்கும்போதே துணிச்சலாக சொன்னார். அதனால் தான்; தான் சாகும்வரை வெறிக் கொண்டு தாக்கினார் “துக்ளக் சோ”. அவரோடு கலைஞர் எதிர்ப்பு செத்துப் போய்விடக் கூடாது என்பதற்காக ஆடிட்டர் குருமூர்த்திக்கு பத்திரிக்கையாளர் பட்டாபிஷேகம் சூட்டி உட்கார வைத்துக் கொண்டது ஆரியம். இவர்களிடம் நல்லபேர் வாங்க வேண்டும் என்று எப்போதும் எண்ணியவர் அல்ல கலைஞர். பெரியாரை கலைஞர் கைவிட்டால் முதலில் பாராட்டு விழா நடத்தும் கூட்டம் இது என்பதும் அவருக்குத் தெரியும். அதற்கு அலையவில்லை. கடைசி வரைக்கும் கலைஞர் காத்த பெருமை அது தான்.!

ஒடுக்கப்பட்ட சமூகத்து மக்களான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஐ.ஏ.எஸ் ஆகலாம், நீதிபதி ஆகலாம். ஆனால் கோவில் அர்ச்சகர் ஆக முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தைவிட உன்னதமானதாக ஆகமங்கள் நிமிர்ந்து நின்றன. கர்ப்பக்கிரகத்தை கடவுளுக்கும் தனக்குமனதாக மட்டும் பூட்டி, தன்னையும் கதவுக்கு இணையான “சாமி” யாக ஆக்கிக் கொண்ட சமூக அநீதியை சட்டத்தால் உடைத்தது கலைஞரின் பேனா. “அர்ச்சகர் பணிக்கு பயிற்சி பெற்ற அனைவரும் சேரலாம்” என்றது அவரது சட்டம். உச்சநீதிமன்ற ஊறுகாய்ப் பானையில் அதைத் தூக்கிப் போட்டுப் பல ஆண்டுகள் பதுக்கி வைத்திருக்க முடிந்ததே தவிர சட்டம் செல்லாது என்று இந்தக் காலத்தில் சொல்ல முடியவில்லை. “கர்ப்பக்கிரகத்திற்குள் நீங்கள் எப்போது நுழைகிறீர்களோ, அப்போது அவர்கள் வெளியேறி விடுவார்கள்” என்று பெரியார் சொன்னது சில பத்து ஆண்டுகளில் பார்க்கப் போகிறோம். “கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தப் போகிறேன்”, என்று கிளம்பிய பெரியாரைத் தடுத்து, ‘ சட்டம் போடுகிறேன் அய்யா’ என்று கிளம்பிப் போய் விதித்தார் அல்லவா.... கலைஞரின் பெருமை இதில் தான் அடங்கி இருக்கிறது. !

இந்திய வரைபடத்தில் ஒரே எல்லைக்குள் இருந்தாலும் வடநாடு – தென்னாடு பிரிவினை அன்றும் உண்டு, இன்றும் உண்டு என்றும் உண்டு. தெற்கின் செழுமையையும் உண்டு கொழுத்தது வடக்கு. இதனை “வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ முழக்கமாக்கியது திராவிடர் இயக்கம். தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார். திராவிட நாடு பிரிவினையை வலியுறுத்தினார் அண்ணா. தமிழ்நாடும் – திராவிடநாடும் பெயர்தான் வேறுபாடே தவிர ஒன்று தான். இந்த முழக்கம் தான் வட இந்தியா எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, பலியா எதிர்ப்பு, மார்வாடி எதிர்ப்பு, அதிகாரக் குவியல் எதிர்ப்பு, அரசியல் கட்ட எதிர்ப்பு என வளர்ந்து இன்று நீட் எதிர்ப்பு, கூடங்குளம் எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, எட்டு வழிச் சாலை எதிர்ப்பாக கனன்று நிற்கிறது. பெரியாரின் உயிர் பிரிவினைக்காகவே பிரிந்தது. “பிரிவினையைக் கைவிட்டாலும் அதற்கான நோக்கங்கள் அப்படியே இருக்கின்றன’ என்ற அண்ணலின் மொழியை, தம்பி கலைஞர் அப்படியே வைத்திருந்தார்.

“மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாச்சி” என்று முழங்கி, அதை நோக்கி பல்வேறு மாநிலக் கட்சிகளை அணிதிரட்ட கலைஞர் முயன்றதால் தான் அவரது ஆட்சி 1976ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. மிசாவை எதிர்த்தால் ஆட்சி கலைக்கப்படும் என்று தெரிந்தே எதிர்த்தார். இந்திய அமைதிப்படை ஈழம் சென்றபோது எதிர்த்தார். அமைதிப்படையை வரவேற்கப் போகமாட்டேன் என்றார். “மிசாவைக் காட்டி மிரட்டினால் தமிழகத்துக்குள் வர விசா வாங்க வேண்டி வரும்” என்றார். இந்த தென்னாட்டு உறுமல் தான் கலைஞரின் பெருமை.!

மொழியைக் கருவியாக பார்த்தவர் பெரியார். ஆனால் அவரது வழித் தோன்றல்களான அண்ணாவும் கலைஞரும் மொழியை உணர்ச்சியாகவே பார்த்தார்கள், மாற்றினார்கள். தமிழ் இலக்கியத்தின் சுவையை உரித்துக் கொடுத்தும், பழந்தமிழ் மன்னர்களின் பெருமையைப் பறை சாற்றியும் இனப் புகழை மீட்டெடுக்க எழுதியும், பேசியும், நினைவுச் சின்னங்களை எழுப்பியும் வந்தவர் கலைஞர். தொல்காப்பியப் பூங்காவும் குரளோவியமும் இலக்கியத்தை புதுப்பித்து. வள்ளுவர் கோட்டமும் பூம்புகாரும் பழந்தமிழ் காலத்துக்கு அழைத்துச் சென்றது. உலகத் தமிழ் மாநாடு நடத்தியும், இலக்கிய பனுவல்களை ஆயிரக்கணக்கில் நாட்டுடமை ஆக்கியும் பழமையை புதுப்பித்துக் கொண்டார் கலைஞர். அந்த காலத்தில் புலவராகவும், அரசராகவும் இருந்தவர்கள் போல கலைஞரும் புலவராகவும், அரசராகவும் இருந்தார். சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதும் 1938- ல் தொடக்கிய அனைத்து மொழிப் போராட்டங்களை நடத்தியதும் திராவிடர் இயக்கமே. இவை எதுவும் தமிழ் தேசிய குஞ்சு, குருமார்களுக்குத் தெரியாது. சில குணக்கேடர்களின் முன்னும் பின்னும் வெட்டப்பட்ட மேற்கோளையே மேல் புல் மேயும் பதர்கள் அவர்கள். திராவிட இயக்கம் மக்கள் மையப் படுத்திய தமிழை மலினப்படுத்தி வரும் இவர்களின் அப்பன்மாரும், தாத்தாமாரும் தமிழ் படிக்கக் காரணமானது திராவிட இயக்கம். அண்ணாவும் கலைஞரும் ஈராயிரம் ஆண்டுத் தமிழை இருபதாம் நூற்றாண்டின் பாடு பொருளாக்க. அதிகார முகம் ஒன்றும் அவசியமாகிறது. அதுவாக கலைஞர் இருந்தது தான் அவருக்குப் பெருமை.!

தமிழை அவர்கள், “ நீஷ பாஷை” என்பார்கள். ! தமிழர்களை “தஷ்யூக்கள்” என்பார்கள்! கருவறைக்குள் போனால், “ தீட்டாயிடுத்து” என்பார்கள்! ஈ. வெ. ரா. அவர்களுக்கு “ அரக்கன்”! தமிழ்நாடு என்றால் “பிரிவினை வாதி” என்பார்கள்.

இவை அனைத்துக்கும் எதிர்ப்பதம் கலைஞர். அவர்கள் எதிர்ப்பது இதனால் தான் நாம் ஆதரிக்க வேண்டியதும் இதனால் தான். !

Pin It