பரபரப்பான சூழலில் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். பெரியார் ஏன் வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் திராவிட இன உணர்வு கொண்ட அனைவரும் சிந்திக்கும் நாளாக இன்றைக்கு இருந்து கொண்டு இருக்கிறது. எனக்கு முன்னால் பேசியவர்கள் எல்லாம் அதைப் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார்கள்.

ஒரு பக்கம் முதல்வர் கலைஞருடைய தலையைக் கொண்டு வந்தால் எடைக்கு எடை தங்கம் கொடுப்பேன் என்று ஒரு சாமியார் பேசுகின்றார். பேசுவதற்குக் காரணம் முதல்வர் கலைஞர் சேலத்தில் ஆற்றிய உரை. அந்த வகையிலே இராமர் பாலத்தை வைத்து அரசியல் துவக்கியுள்ள சங்பரிவார்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். காரணம் இன்றைக்கு இந்த சூழலிலே இராமரைப் பற்றி நாங்கள் பேசினால் இந்தியா முழுதும் அண்ணன் போலீஸ் கந்தசாமி சொன்னதுபோல அதிர்ந்திருக்காது.

முதல்வர் கலைஞர் பேசியவுடன் இந்தியா முழுதும் “அதிர்துல்ல” என்று அவர்கள் சொன்னது போல இன்றைக்கு அதிர்கின்றது. இராமரைப் பற்றி முதல்வர் சொன்ன கருத்துக்களை அறிவுப்பூர்வமாக பகுத்தறிவுப்பூர்வமாக அவர்களால் மறுக்க இயலவில்லை. நாம் ஊர்வலத்தில் முழக்கமிட்டு வந்தோம், என்ன முழக்கம்? “இராமருக்கு சக்தியிருந்திருந்தால் அவர் கடவுள் எல்லா வல்லமையுடைய சர்வ வல்லமையுடைய அவதாரமாக இருந்தால் அவன் கட்டின பாலம் இது வரைக்கும் இருந்திருக்க வேண்டும். சாதாரணமா, நம்ம பொறியாளர்கள் சிவா அவர்கள் காண்ட்ராக்ட் எடுத்து கட்டிய பாலம்கூட நூறு வருடம் நிற்கிறது. ஆனால் இராமர் கட்டுன பாலத்தை மட்டும் தேட வேண்டியிருக்கிறது. (சிரிப்பு, கைதட்டல்)

ஆர்.எஸ்.எஸ்.க்கு நன்றி சொல்ல வேண்டாமா? இப்போது இராமாயணத்தை மீண்டும் நாங்கள் படிக்கத் தொடங்கி விட்டோம். சிந்திக்க தொடங்கிவிட்டோம். இராமன் காட்டுக்கு துரத்தப்படுகிறான். ராமன் பிறந்த ஊர் அயோத்தின்னு ஒரு பக்கம் சொல்றாங்க. இராமர் பிறந்த ஊர் அயோத்தி என்றால் காட்டுக்கு போ என்று சொன்ன பிறகு நாட்டுக்கு வடக்கே இமயமலைக்குதானே இராமன் போயிருக்க வேண்டும்? எதற்கு தெற்கு நோக்கி வந்தான்? தெற்கே இராமருக்கு என்ன வேலை? தெற்கே இராமேசுவரத்திற்கு எதற்கு இராமன் வந்தான்? அதனால் தான் ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள், இராமாயணம் உண்மையல்ல.

இது ஆரியர், திராவிடர் போராட்டம்! கற்பனைக் கதை. அங்கே இராமர் பாலம் கட்டினார் என்கிறான் இராமாயணத்தில், அதே இராமாயணத்திலே இராவணன் வந்து இங்கே சீதையை தூக்கிட்டுப் போனான் என்று சொல்லுகிறான். இராவணன் வருகிற போது பாலமே இல்லை. இராவணன் எப்படி வந்தாரு, கடல்லே பாலமே இல்லாம இராவணன் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கு வந்தவரு, அயோத்திக்கு வந்தவரு புஷ்ப விமானத்தில் வந்திருக்கிறாரு. அப்பவே இராவணன் புஷ்ப விமானம் கண்டுபிடித்து இருக்கிறாரு. கப்பல் ஓட்டிய தமிழன். இன்றைக்கு விமானம் ஓட்டுகிறான், அதே இலங்கையில்.

அதனால் அன்றைக்கே இராவணன் புஷ்ப விமானம் கண்டுபிடித்திருக்கிறான். இராவணனை அரக்கன்னு சொல்றான். அந்த அரக்கன் புஷ்ப விமானத்தில் வந்தான். சர்வ வல்லமைப் படைத்தக் கடவுளுக்கோ நீந்தக் கூட தெரியலீங்க.

நம்ம குற்றாலீசுவரன் என்ற 12 வயசுப் பையன் சாதாரண சின்னப் பையன் நம்ம தலைமன்னாரிலிருந்து இலங்கைக்கு நீந்தியே போயிருக்கிறான். ஆனால் கடவுள் இராமனால் நீந்தக்கூட முடியவில்லை. கடவுளுக்கு நீந்தக்கூட தெரியாதா? (கைதட்டல்)

ராமன் கட்டிய பாலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கூப்பாடு போடுகிறவர்களைப் பார்த்துக் கேட்கிறோம், ராமன், வானரப் படைகளுடன் இலங்கைக்குப் போய் இராவணனுடன் சண்டை போடுகிறான். ராமன் தம்பி இலட்சுமணன், அடிபட்டு காயமடைகிறான். உடனே காயத்துக்கு மருந்து போட, மருந்தைக் கொண்டுவர, அனுமார் தமிழ்நாட்டுக்கு திரும்புகிறான்.

நமக்கு ஏதாவது நோய்க்கு மருந்து வேண்டும் என்று மூலிகை வைத்தியர்களிடம் கேட்டால் - நம்ம வைத்தியர்கள் ஒரு பாட்டிலில் அரக்கு வைச்சு மருந்து தருவாங்க. ஆனா அனுமான், தமிழ்நாட்டுக்கு வந்து சஞ்சீவி மலையை அப்படியே தூக்கிட்டுப் போனான்னு, ராமாயணம் கூறுகிறது. சஞ்சீவி மலையிலிருந்து மூலிகையை எடுத்து லட்சுமணனுக்கு சிகிச்சை செய்ய, ஊட்டி மலை போல, சஞ்சீவி மலையையே அனுமார் தூக்கிட்டுப் போனாராம். நீங்ககூட படத்தில் பார்த்திருப்பீர்கள்.

அனுமார் மலையை தூக்கிக் கொண்டு பறப்பது போன்ற படத்தை, நமது ‘ஏபிடி பார்சல்’ சர்வீஸ் லாரிகளில் வரைந்து வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சஞ்சீவி மலையை அனுமார் தூக்கிக் கொண்டு போவார். அனுமாரையும், சஞ்சீவி மலையையும் சேர்த்து, நமது ‘ஏபிடி பார்சல்’ கொண்டு செல்லும் லாரியில் நம்ம ஊர் லாரி டிரைவர் ஏற்றிக் கொண்டு பறக்கிறார். (சிரிப்பு, கைதட்டல்). நாங்கள் என்ன கேட்கிறோம் என்றால், தமிழ்நாட்டிலிருந்து, அனுமார் தூக்கிச் சென்ற சஞ்சீவி மலையை, திரும்பும்போது அனுமான் தமிழ்நாட்டுக்குக் கொணடு வந்து, தமிழ்நாட்டில் வைக்க வேண்டுமா, இல்லையா? ஏன் வைக்க வில்லை.

இந்திய ‘அமைதிப்படை’ ஈழத்துக்குப் போய் புலிகளிடம் உதைப்பட்டு திரும்பி வந்ததுபோல், ராமன் சேனையும் திரும்பி வரும்போது, தமிழர்களின் சொத்தான, சஞ்சீவி மலையையும் திரும்பக் கொண்டு வரவேண்டுமல்லவா? அது தமிழர்களால் பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் அல்லவா? முதலில் பா.ஜ.க.வும், இந்து முன்னணிகளும், இலங்கைக்குப் போய், சஞ்சீவி மலையைத் திருப்பிக் கொண்டு வரட்டும். ஏன், சஞ்சீவி மலையைக் கேட்க மறுக்கிறாய்?

இராமன் இலங்கையிலிருந்து திரும்பி வரும்போது கடலைக் கடப்பதற்கு, குரங்குகளுடன் சேர்ந்து கட்டிய பாலத்தை இராமனே அழித்துவிட்டானாம். எப்படி? ஒரு வில்லை எடுத்து விட்டானாம், பாலம் அழிந்து விட்டதாம். இது என்ன நம்ம சிங்காநல்லூர் பாலமா? கடலில் கட்டிய பாலம். அதை ஒரே வில்லால் அழிச்சுட முடியுங்களா? சரி அப்படியே இருக்கட்டும். பாலத்தை ராமனே அழிச்சுட்டான்ல. அவனே வேண்டாம்னு சொன்ன பாலத்துக்கு, நீ ஏன் கூப்பாடு போடுற?

இந்த இராமாயணம் திராவிடர்களாகிய நம்மை - தமிழர்களை அரக்கர்கள் என்று இழிவுபடுத்துகிறது. இந்த இழிவை நியாயப்படுத்தும் ஓணம் பண்டிகை கேரளாவில் கொண்டாடப்படுகிறது. அந்தப் பண்டிகை தினத்தன்று, சேலம் இரயில்வே கோட்டம் உரிமை கோரி நாம் முழு வேலை நிறுத்தம் அறிவித்தோம் என்பதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், ஓணம் பண்டிகையின்போது முழு அடைப்பு நடத்தலாமா? என்று கேட்கிறார்கள்.

பெரியாருடைய இராமாயணக் குறிப்புகள் நூல் இங்கே விற்கப்படுகிறது. இராமாயணப் பாத்திரங்கள் புத்தகம் இங்கே இருக்கிறது. திருவாரூர் தங்கராசு எழுதிய இராமாயணம் நாடகம் நூல் இங்கே இருக்கிறது. படித்துப் பாருங்கள். இராவணனுடைய சிறப்புக்கள் தெரியும். இராவணனை அழிப்பதற்கு தேவர்கள் எல்லாம் போய் விஷ்ணுவிடம் கேட்கிறார்களாம்.

உடனே விஷ்ணு சொல்றாராம், இராமனாக அவதாரம் எடுத்து வருகிறேன் என்று. அப்போது குரங்கு வந்ததாம். அந்தக் குரங்குகள் தேவர்களாம். ஊட்டி மலைக்கு மேலே போகும்போது பார்த்தீர்களேயானால் ஒரு குரங்கு அடிபட்டதுன்னா, பக்கத்திலேயே ஒரு கோயில் கட்டிடுவான். புதைக்க மாட்டான். காரணம் அது தேவர்களாம். அதனால் அந்த குரங்கனுமார்க்கு கோயில் கட்டுகிறார்கள்.

இராவணன் பெண்களை மதித்தான். அந்த கதை, நம்ம சினிமாக் கதைதானுங்க. அன்றைக்கு டி.வி. இல்ல, அதனால ஒரே கதையை பல இலட்சம் வருசமா பேசிகிட்டு இருந்திருக்கிறார்கள். அதனால மக்கள் கிட்ட பதிஞ்சுப் போச்சு. இப்ப இருக்கிற மாதிரி ஏராளமான சேனல்கள் அப்போது இல்லை. இப்போ, ஒரு டி.வி.லே விளம்பரம் பண்றாங்க. சோதனை ஒளிபரப்பு, சோதனை ஒளிபரப்புன்னு 15 ஆம் தேதி வரைக்கும் அந்த டி.வி.க்கு சோதனை ஒளிபரப்பு. 15 ஆம் தேதிக்கு மேலே மக்களுக்கு சோதனை (சிரிப்பு). இந்த டி.வி. அத்தனையும் அன்றைக்கு இல்லை. அதனாலே ஒரே கதையை தெருவுக்கு தெரு வீட்டுக்கு வீடு உடுக்கை அடிச்சுப் பாடினான்.

அதனால தான் நம்ம மக்கள் எல்லாம் யாராவது கதை சொன்னா, “சொந்த கதையச் சொல்றானா, இவன் இராமாயணத்தை ஆரம்பிச்சிட்டாம்பா” என்பார்கள். அந்த அளவுக்கு நம்ம மக்கள் இராமாயணத்தை புரிந்திருக்கிறார்கள். இராமாயணத்தை தமிழ்நாட்டில் ஏற்க மாட்டார்கள். சூலூர்ல இராமனுக்கு கோயில் இருக்கிறதா? கோயமுத்தூர்லே ஒரே ஒரு கோயில் இருக்கு. பார்ப்பான் இருக்கிற இராம் நகர்ல மட்டும் ஒரு மூலையில் வெச்சு இருக்கிறான்.

வேறு எங்கேயுமே கோயில் இருக்காது. காரணம் என்ன? வீடுகளில் இராமன் பட்டாபிஷேகம் படத்தை மாட்ட மாட்டார்கள். கல்யாணத்தில் வைக்க மாட்டார்கள் காரணம் என்ன? கல்யாணம் செய்துவிட்டு காட்டுக்குப் போக வேண்டியது வந்திடும் என்ற பயம். கல்யாண வீட்ல இராமர் படம் வைத்தால் காட்டுக்குப் போக வேண்டியது வந்துவிடும் என்று வைக்க மாட்டார்கள். திருமணத்தில் ராமன் சீதையைப் போல் வாழுங்கள் என்று வாழ்த்த முடியுமா? தமிழக மக்கள் இராமாயண கதையை ஏத்துக்கிறது இல்லை.

லட்சுமணன் தொடங்கி வைத்த ‘ஈவ்டீசிங்’

சூர்ப்பனகை லட்சுமணன் மீது ஆசைப்பட்டாளாம். அதற்காக லட்சுமணன், சூர்ப்பனகையின் மூக்கையும், மார்பையும் அறுத்து விட்டானாம். இன்றைக்கு தமிழ் சினிமாவில்கூட என்ன நடக்கிறது? தளபதி, சின்ன தளபதிகள் எல்லாம் சினிமாவுக்கு வந்து விட்டார்கள். இந்த சினிமாவில்கூட, கதாநாயகர்கள் என்ன வசனம் பேசுகிறார்கள்? ‘நீ ஒரு பெண் என்பதற்காகத் தான் பார்க்கிறேன், திரும்பிப் போய்விடு’ என்று கதாநாயகன் வசனம் பேசுவார்.

வில்லனைப் புரட்டிப் புரட்டி போட்டு அடிக்கும் கதாநாயகன், பெண் என்றால், அடிக்க மாட்டார். ஆனால், கடவுள் அவதாரக் கதையான ராமாயணத்தில், சூர்ப்பனகையை ஒரு பெண் என்றும் பாராமல், மூக்கை அறுக்கிறான் லட்சுமணன். இது என்ன? ‘ஈவ்டீசிங்’. அந்த ‘ஈவ் டீசிங்’ தான், இவ்வளவு போராட்டத்துக்குமே காரணமாக இருந்திருக்கிறது. இராமாயண காலத்தில் - லட்சுமணன் தொடங்கி வைத்த ‘ஈவ்டீசிங்’ இன்று வரை ஒழிய மறுக்கிறது. ஒரு பெண் என்றும் பாராமல், மூக்கை, மார்பை அறுத்த லட்சுமணன், கடவுள் அவதாரமா? இவன் வணங்கத் தக்கவனா.

Pin It