கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்திய முதலாளி வர்க்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு நெடிய கதை. அக்கதையின் சாராம்சத்தை மட்டும் நாம் இங்கே வழங்க முற்படுகிறோம். இந்தியாவில் இன்று நாம் காணும் தொழில் வளர்ச்சியையும் முதலாளி வர்க்கத்தின் எழுச்சியையும் மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலும் நம்மால் காண இயலாது. அந்நிய முதல் பெருமளவில் இந்திய பொருளாதாரத்தில் புழங்கிக் கொண்டிருந்ததற்கு இடையிலும் உள்நாட்டு முதலாளி வர்க்கம் இயங்குவதற்கு அதற்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டது இந்தியாவில் நடந்தது. இப்படி இயங்குவதன் மூலம் அந்த வர்க்கம் வளர்ச்சியும் பெற்றது. இது எந்த அளவிற்கு வளர்ச்சியுற்றது என்றால், நாடு 1947ஆம் ஆண்டு விடுதலை பெற்றபோது, காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற எந்த ஒரு ஆசிய, ஆப்பிரிக்க நாட்டை விடவும் வளர்ந்த ஒரு முதலாளிவர்க்கமும் தொழில்துறையும் இந்தியாவில் இருந்தன. இந்தியாவின் நவீன தொழில்சார்ந்த முதலாளி வர்க்கம் தழைத்தோங்க முக்கியக் காரணிகளில் ஒன்று, காலனி ஆதிக்கத்தின்போது, 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்ட வணிகமயமாக்கலாகும்.

இந்திய பொருளாதாரத்தை ஒருங்கிணைத்த அதே வேளையில், உலக முதலாளித்துவ அமைப்பிற்கு இந்தியப் பொருளாதாரத்தை கீழ்ப்படிய வைத்ததும் காலனி ஆதிக்கத்தின்போது நடை பெற்றது. இந்த பொருளாதார நிகழ்வுதான் இந்தியாவில் வணிக முதல் (Merchant capital) வளர்வதற்கான உகந்த சூழலை உருவாக்கியது. இந்த காலகட்டத்தில் இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்ததால் அதன் பொருளாதாரம் ஆதிக்க நாட்டின் பொருளாதார நலன்களை முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டிய சூழலும் நிலவியது. அதாவது, ஆங்கிலேய நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களுக்கு ஒரு சந்தையாகவும் அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு தேவையான மூலப் பொருள்களை வழங்கும் ஒரு நிலப்பரப்பாகவும் இந்தியா மாற்றப்பட்டது. இந்த இரு நடவடிக்கைகளும் வர்த்தகம் வாயிலாகவே நடைபெற்றன. இந்த வர்த்தகம் தான் இந்தியாவில் முதல் வளர்வதற்கான வழிவகையாக திகழ்ந்தது. வர்த்தக மயமாக்கலுக்கு ஏதுவாக பிற மாற்றங்களும் அக்காலகட்டத்தில் நடந்தேறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்திய நாட்டின் அடிக்கட்டமைப்பு வசதிகள் இக்காலகட்டத்தில் பெரும் மாற்றங்களையும் வளர்ச்சியையும் அடைந்தன. நாடெங்கும் இருப்புப்பாதைகள் அமைக்கப்பட்டு தொடர்வண்டி சேவைகள் தொடங்கின. புதிய சாலைகளும் துறைமுகங்களும் ஏற்பட்டதால் தரைவழி போக்குவரத்து எளிதாகவும் விரைவாகவும் நடைபெற ஏதுவாயிற்று. தந்தி, தொலைபேசி, தபால்துறை போன்றவற்றின் அறிமுகத்தில் தொலைதொடர்பு வசதி பெருகியது. இவை யாவும் இந்தியச் சந்தையை ஒருங்கிணைப்பதிலும் வர்த்தக மயமாக்களிலும் பெரும் பங்காற்றின.

இதனால் பொருள்களுக்கான சந்தை விரிந்தது. இத்தகைய விரிவாக்கத்தினால் இந்திய வர்த்தக முதல் பெரும் வளர்ச்சியைக் கண்டது. இந்திய வர்த்தக முதல் ஏற்றுமதியிலும் இறக்குமதியிலும் மற்றும் லேவாதேவி தொழில் மூலமாகவும் வளர்ந்தது. அபின், பருத்தி, சணல், எண்ணெய் வித்துக்கள் பெருமளவில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால், வர்த்தகமயமாக்கலால் ஏற்பட்ட வளர்ச்சி ஒரே சீராக இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் நடைபெறவில்லை. சில பகுதிகள் அதிவேகமாக வளர்ந்த நிலையில் நாட்டின் பல பகுதிகள் பின்தங்கின. மும்பையும் கொல்கத்தாவும் வியாபார மையங்களாக செழித்தோங்கத் தொடங்கின. இதன்பயனாக இப்பகுதிகளில் இந்திய முதலும் வெளிநாட்டு முதலும் குவிந்தன. சீரற்ற வளர்ச்சி சமுதாய அளவிலும் நடந்தேறியது. வர்த்தக மயமாக்கல் வழங்கிய வாய்ப்புகளை பார்சி இனத்தவரும் குஜராத்தின் பனியாக்களும் மார்வாடிகளும் பெருமளவில் பயன்படுத்தி தங்களது மூலதனங்களைக் கணிசமாக பெருக்கிக் கொண்டனர்.

தொழிற்சாலைகளை அடிப்படையாகக் கொண்ட நவீனத் தொழில்மயமாக்கல் 19ஆம் நூற்றாண்டின் மையப் புள்ளி யிலிருந்து இந்தியாவில் பரவ ஆரம்பித்தது. இது வர்த்தக மயமாக்கலின் ஒரு தொடர்ச்சியாகும். இந்த தொழில் வளர்ச்சி பெருமளவில் தனியாரின் முன்முயற்சியால் ஏற்பட்ட ஒன்றாகும். இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி அனைத்து தொழில்களிலும் ஏற்படவில்லை. ஒருசில இரும்பு உருக்கு ஆலைகளையும் சிமெண்டு ஆலைகளையும் தவிர்த்தால் மற்றவை அனைத்தும் பஞ்சாலைகளாகவும் சணல்ஆலைகளாகவுமே திகழ்ந்தன. ஆக, முதலீடுகளில் பெரும்பாலானவை விவசாய விளைப்பொருட்களை தொழில் பொருட்களாக மாற்றுபவை யாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாம் முன்பே குறிப்பிட்டவாறு, மூலதனத்தின் சமுதாயக் கூறுகள் பகுதிக்குப் பகுதி வேறுபட்டது. வங்காளத்தை எடுத்துக் கொண்டால் அங்கு தொடங்கப்பட்ட சணல் ஆலைகளும் தேயிலை தோட்டங்களும் பெரும்பாலும் ஐரோப்பிய, குறிப்பாக ஸ்காட்லாந்து மேலாண்மை நிறுவனங்களால் தொடங்கப் பட்டவையாகும். இந்தச் சூழல் ஏறக்குறைய முதல் உலகப்போர் நடைபெறும் வரை தொடர்ந்தது. இத்தகைய ஐரோப்பிய மேலாண்மை நிறுவனங்களே நிலக்கரிச் சுரங்கங்களிலும் முதலீடு செய்திருந்தன.

இதற்கு நேர்மாறாக, மும்பையிலும் அகமதாபாத்திலும் பஞ்சாலைகளும் நூற்பாலைகளும் துணி ஆலைகளும் பார்சி சமூகத்தவராலும் குஜராத்தி பனியாக்களாலும் தொடங்கப் பட்டன. இவர்கள் முன்பு வியாபாரத்தில் பொருள் ஈட்டிய வர்கள் ஆவர். குறிப்பாக அபின் மற்றும் பஞ்சு வியாபாரத்தில் பொருள் குவித்தவர்கள்.

முதல் உலகப் போரும் அதன் பின் வந்த காலகட்டமும் இந்திய மூலதனத்தை பரவலாக்கியது மட்டுமின்றி தொழில் முதலீடுகளில் அவை ஈடுபட்டு தழைத்தோங்கவும் செய்த காலமாகும். இரண்டு உலகப் போர்களின் போது ஏற்றுமதி / இறக்குமதி வர்த்தகத்தில் ஏற்பட்ட தொய்வும் காலனிய அரசு இந்திய தொழில்களை காப்பாற்ற மேற்கொண்ட வர்த்தகம் தொடர்பான கொள்கை முடிவுகளும் இந்திய உள்நாட்டுச் சந்தையை விரிவாக்க உதவியது.

இத்தகைய ஆதரவான சூழ்நிலையால் தனியார் பலரும் பலதரப்பட்ட தொழில்களில் முதலீடு செய்யத் தொடங்கினர். இறக்குமதி பொருள்களின் பதிலிகளை (import subsituting) உற்பத்தி செய்யும் துறையின் வளர்ச்சி இந்த காலகட்டத்தில்தான் தொடங்கியது. முதல் உலகப்போர் முடிவுக்கு வந்த காலத்தில் தான் மார்வாடிகள் பெருமளவில் சணல், சர்க்கரை மற்றும் காகித தொழிலில் முதலீடு செய்தனர். இதே காலகட்டத்தில் வேறு ஒரு மாற்றமும் நிகழ்ந்தது. அது வரையில் தொழில்துறை யில் கோலோச்சி வந்த ஐரோப்பிய மேலாண்மை நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை இந்திய தொழில் உற்பத்தியிலிருந்து விலக்கிக்கொள்ளத் தொடங்கின. இதற்கு முக்கியக் காரணம், அவர்கள் முதலீடு செய்து நடத்தி வந்த தொழில்களின் வாய்ப்பும் முக்கியத்துவமும் குறையத் தொடங்கியதே. அவர்கள் விலகத் தொடங்கிய அதே காலகட்டத்தில்தான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியச் சந்தைக்குள் காலடி எடுத்து வைத்தன. ஐரோப்பிய மேலாண்மை நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய தொழில்களில் ஈடுபட்டிருந்த போதிலும் இந்திய முதலாளிகளின் பங்கு, குறிப்பாக நவீன தொழில்களில் அவர்களின் பங்கு சிறப்பானதாகவே திகழ்ந்தது.

சமூக ரீதியாகவும் தங்களுக்குள் ஏற்பட்ட முரண்களினாலும் பிளவுபட்டதுபோல் தோற்றமளித்த போதிலும், இந்திய முதலாளி வர்க்கம், தனக்கென ஒரு குறிப்பிட்ட இடத்தை இந்திய அரசியலிலும் உருவாக்கத் தொடங்கியது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியில் இதன் தாக்கம் தெளிவாகப் புலப்பட்டது. நாடு விடுதலை பெற்ற 1947ஆம் ஆண்டு காலகட்டத்தில் காங்கிரசில் இந்திய முதலாளி வர்க்கத்தின் இடம் குறிப்பிடத்தக்கதாகும்.

1927ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய வர்த்தகத் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (Federation of Indian Chanmber of commerce and Industry) இந்திய முதலாளிவர்க்கம் நிலைபெற்றதைச் சுட்டும் ஒரு நிகழ்வாகும். இந்த அமைப்பு தொடங்கப்பட்டப் பின்னர் நாட்டில் நடைபெற்ற ஒவ்வொரு பொருளாதார நிகழ்வின்போதும் இந்திய முதலாளி வர்க்கத்தின் நிலைபாட்டை எடுத்துரைக்க இந்த அமைப்பு தவறியதில்லை. குறிப்பாக தங்களது தொழிலை நேரடியாகவோ மறைமுக மாகவோ பாதிக்கும் நிகழ்வுகள் குறித்த தங்களது கருத்துகளை இந்த அமைப்பு முன் வைத்துள்ளது. காலப்போக்கில் இந்த அமைப்பு மிகவும் செல்வாக்குள்ள கருத்தாக்க அமைப்பாக (think tank) பரிணாமம் அடைந்தது. காங்கிரசு கட்சியும் அரசும் இந்த அமைப்பின் நிலைப்பாடுகளை கவனத்தில் கொள்ளத் தொடங்கின. 1930களிலேயே இந்த அமைப்பால் தொடக்கி வைக்கப்பட்ட பொருளாதார திட்டமிடல் குறித்த விவாதம் நாடு விடுதலை பெற்ற பின்னரும் தொடர்ந்தது மட்டுமின்றி விடுதலை பெற்ற இந்திய நாட்டின் பொருளாதார மேலாண்மையையே தீர்மானிக்கும் வல்லமை பெற்றதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அமைப்பால் உருவாக்கப்பட்ட பாம்பே திட்டம் அல்லது டாட்டா - பிர்லா திட்டம் பொருளாதார திட்டமிடும் வல்லுனர்களின் கவனத்தை பெற்றது மட்டுமின்றி பிற்காலத்தில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வரையப்பட்ட திட்டங்களின் முன்னோடியாகவும் திகழ்ந்தது.

தென்னிந்தியச் சூழல்

1800ஆம் ஆண்டு வாக்கிலேயே சென்னை ராஜதானி எனப் பிற்காலத்தில் வழங்கப்பட்ட நிலப்பரப்பின் பெரும்பகுதி கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. ஆனாலும் கூட பொருளாதார ரீதியாக இப்பகுதியை ஒன்றாக இணைப்பது சீராகவும் சுலபமாகவும் நடைபெறவில்லை. கொல்கத்தாவையும் மும்பையைப் போலவும் சென்னை ஒரு வியாபார தொழில்நகரமாகவும் வளரவில்லை. இதன்தாக்கம் தென்னிந்தியாவில் உள்நாட்டு முதலாளி வர்க்கம் தோன்றியதிலும் வளர்வதிலும் நன்கு தெரிந்தது. இங்கு தோன்றிய தொழில் வளர்ச்சி மிகவும் குறுகிய அடித்தளம் கொண்டது. துணி தொழில் மட்டுமே குறிப்பிடத்தகுந்த அளவில் முதலீடுகளை ஈர்த்தது. வங்காளத்தில் காணப்பட்டது போலவே, சென்னையிலும் 1920 வரையில் ஐரோப்பியர்களே தொழில்களில் முதலீடு செய்திருந்தனர். உள்நாட்டு முதலாளி வர்க்கம் சென்னைப் பகுதியில் சீரான வளர்ச்சியை அடையாதது மட்டுமின்றி மந்தமாகவும் இருந்தது. ஐரோப்பிய முதலாளிகளின் மேலாதிக்கம் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். தோன்றி வளர்ந்த முதலாளிகளும் பலதரப்பட்டவராய் இருந்தனர். முதலைப் பெருக்குவதில் காணப்பட்ட வேறுபாடுகள் ஒரு முக்கியக் காரணம். ஒருபுறம் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் புதிதாக தோன்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தங்களது முதலை ஏற்றுமதி செய்து பெரிய அளவில் பொருள் ஈட்டினர். மற்றொரு புறம், கம்மா நாயுடுகளும் கவுண்டர்களும் வெள்ளாளர்களும் நாடார்களும் கல்லிடைகுறிச்சி பார்ப்பனர் களும் உள்நாட்டில் இருந்த குறுகிய கொடுக்கல் வாங்கல் தொழிலில் ஈடுபட்டு சிறிய அளவில் முதல் சேர்த்தனர்.

தென்னிந்தியாவின் தற்போதைய தொழில் முதலீட்டில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் நாட்டுக்கோட்டை செட்டியார் களுக்கு அக்காலகட்டத்தில் பெரிய அளவில் பங்கு இருக்க வில்லை என்பதே உண்மை. இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் மதுரை வங்கி ஆகியவற்றின் வாயிலாக கடன் சந்தையில் குறிப்பிடத்தக்க பங்காற்றியபோதிலும் அவர்களது சொத்துக்கள் பெரும்பாலும் அசையா சொத்துக்களாக தென்னாசிய மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் முடங்கிப் போயிருந்தன. அவற்றை மீட்டு மீண்டும் தாயகம் கொண்டுவர பெரிய முயற்சிகளில் செட்டியார் சமூகம் ஆர்வம் காட்டவில்லை.

1930களில் ஏற்பட்ட உலகம் தழுவிய பொருளாதார மந்தநிலை தென்னிந்திய தொழில் முதலீட்டில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இக்காலகட்டத்தில், தொழில்துறைக்கும் வேளாண் துறைக்கும் இடையே உள்ள பண்டமாற்று விகிதம் தொழில்களுக்கு சாதகமாக மாறியது. அதாவது, விவசாயிகள் தொழில் பொருட்களை வாங்க அதிக அளவில் செலவிடும் நிலை ஏற்பட்டது. இந்த நிலை ஏற்பட்டால் தொழில் செய்வோரின் நிலை உயர வேளாண் தொழில் செய்வோரின் நிலை தாழும். அதன் தொடர்ச்சியாக முதலீடும் வேளாண்மையிலிருந்தும் லேவாதேவி தொழிலி லிருந்தும் உற்பத்தி தொழிலுக்கு மாறும்.

இந்த மாற்றத்தின் சிறந்த உதாரணமாக கோவை பகுதியில் தோன்றி வளர்ந்த பருத்தி சார்ந்த துணித் தொழிலைச் சுட்டலாம். வேளாண் வியாபாரத்தில் சேர்த்த மூலதனத்தை தொழிற் சாலைகளில் முதலீடு செய்யத் தொடங்கினர் நாயுடு சமூகத்தவர். கவுண்டர்களும் ஓரளவு இதுபோல் முதலீடு செய்தனர். இவர்கள் மட்டுமல்லாது கைக்கோளர்கள் மற்றும் செங்குந்தர்களும் இத்தகைய தொழிலில் முதலீடு செய்தனர். இதேபோல் ஒரு சில நாட்டுக்கோட்டை செட்டியார் குடும்பங்களும் இத்தொழிலில் முதலீடு செய்தனர்.

1920களின் தொடக்கத்திலிருந்து நாடார்கள் பெருமளவில் தீப்பெட்டி தயாரிப்பு தொழிலில் முதலீடு செய்தனர். இதேபோல் தோல் பதனிடும் தொழிலில் இசுலாமியர்கள் ஈடுபட்டனர். இந்த காலகட்டத்தில் ஒருசில பார்ப்பன தொழில்முனைவோரும் தோன்றினர். சேஷசாயி, இந்தியன் சிமெண்ட், டி.வி.எஸ்., ராயல் என்ஃபீல்டு, ஈசன் குரூப் போன்ற நிறுவனங்கள் இக்கால கட்டத்தில்தான் தோன்றின.

நாடு விடுதலை பெற்றபோது, தமிழ்நாட்டில் ஓரளவு வளர்ச்சி பெற்ற முதலாளி வர்க்கம் இருந்தது. ஆனால் வலுவான நிலையில் அது இல்லை. வட இந்தியாவில் இருந்த முதலுடன் போட்டியிடும் வலு அவர்களுக்கு இல்லை. வட இந்திய முதல் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துமோ என்ற அச்சம் அவர்களை ஆட்கொண்டது. இந்த அச்சத்தின் காரணமாக, பல முதலாளிகளும் வட இந்திய ஆதிக்கத்திற்கு எதிர்ப்பாக தோன்றிய திராவிட இயக்கத்தை ஆதரித்தனர்.

இந்தியா விடுதலை பெற்றபோது, இந்திய மூலதனம், அளவிலும் முதலீட்டிலும் வேறுபட்டு காணப்பட்டது. ஒருபுறம் இந்தியத் தொழில் நிறுவனங்கள் இருக்க மறுபுறம் ஐரோப்பிய மேலாண்மை நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் தொழில் புரிந்து வந்தன. ஆனால், பம்பாய், அகமதாபாத், கல்கத்தா, கான்பூர் மற்றும் வட மாநிலங்களின் சில பகுதிகளிலிருந்து வந்த முதலாளிகளே இந்திய முதல் சந்தையில் ஆதிக்கம் செலுத்தினர். அவர்கள் பெரிய முதலாளிகள் மட்டுமல்லாது அவர்களது சந்தையின் அளவும் பெரிதாக இருந்ததே இதற்குக் காரணம். இதனால் அவர்களது முதலின் பெருக்கமும் அதிக அளவில் இருந்தது. இந்த சூழ்நிலை யிலும்கூட இந்திய முதலின் சமூக அடித்தளம் விரிவடைவ தற்கான சான்றுகள் நமக்குக் காணக் கிடைக்கின்றன. குறிப்பாக தமிழகத்திலும் ஆந்திரத்திலும் ஏற்பட்ட மாற்றங்கள் இதனைத் தெளிவாக படம்பிடிக்கின்றன. விவசாய வியாபாரத்திலிருந்து பல வியாபாரிகள் சர்க்கரை மற்றும் துணித் தொழிற்சாலைகளில் முதலீடு செய்தனர்.

விடுதலை பெற்ற அரசு தனது தொழில் கொள்கையாக இறக்குமதி பதிலி தொழில் கொள்கையை அறிவித்தது. இத்திட்டத்தின் தொடர்ச்சியாக ‘லைசென்சு’ மற்றும் ‘கோட்டா’ பெறுவதும் தொழில் தொடங்கவும் தொடரவும் அவசியமான தாக மாறியது. ஏற்கனவே வலுவாக இருந்த வட இந்திய முதலாளிகள் இச்சூழலின் முழுபயனையும் பெற்றனர். அரசியல் செல்வாக்கும் பணமும் முன்அனுபவமும் அவர்களுக்கு சாதகமாக இருந்தன. இவை அனைத்தும் இணைந்து புதிதாக தொழில் தொடங்க முனைவோருக்கு தடையாக விளங்கின. இதையும் மீறி ஒருசில தொழில்கள் தென் பகுதியில் தொடங்க முடிந்ததற்கான காரணம் டி.டி. கிருஷ்ணமாச்சாரி மற்றும் மத்திய அரசில் பணியாற்றிய பல தமிழ் அலுவலர்களின் உதவியேயாகும்.

1970களிலிருந்து ஒரு மாற்றம் ஏற்படத் தொடங்கியது. வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டதால் அதுவரை பெரு முதலாளிகளின் பிடியிலிருந்த வங்கிகள் மற்றும் வங்கிகள் தொழில் தொடங்க அளித்து வந்த நிதியும் ஜனநாயகப் படுத்தப்பட்டன. நிலைமை ஓரளவு மற்றவர்களுக்கும் ஏதுவானது. அதே சமயம் பல்கிப் பெருகிய பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியின் வாயிலாக புதிய முதலாளி வர்க்கம் ஒன்று தோன்றி வளர்ந்தது. குறிப்பாக கட்டுமானத் துறையில் ஆந்திர மாநிலத்து நிறுவனங்கள் பெற்ற வளர்ச்சி இதனால் ஏற்பட்டதாகும். இதே சமயத்தில் சமுதாய அளவில் ஏற்பட்ட மாற்றங்களும் இதற்கு சாதகமாக திரும்பின. இதுவரை அடக்கி வைக்கப்பட்டிருந்த அடித்தளசாதியினர் பொருளாதார நிகழ்வுகளில் பங்குபெற ஆரம்பித்தனர். இவை அனைத்தும் இணைந்து புதிய சூழலை உருவாக்கின. இதே சமயத்தில் தொழில் நடத்துவதில் புதிய முறையாக உள்ஒப்பந்தங்கள் மற்றும் தொழிற்சாலைக்கு வெளியே பொருள் உற்பத்தி செய்தல் எனும் முறை நடைமுறைக்கு வந்தது. இதனாலும் புதியதொரு சிறு முதலாளி வர்க்கம் வளர ஆரம்பித்தது.

1980களின் தொடக்கத்திலிருந்து மைய அரசின் தொழில் கொள்கைகள் பெரும் மாற்றத்தைக் கண்டன. தாராளமயமாக்கல் நடைமுறைக்கு வரத்தொடங்கியது. பொருளாதார சீரமைப்பினால் மின்னணு துறையும் தொலைதொடர்புத் துறையும் இதன் பலனைக்கண்டன. புதிய தொழில் முனைவோரும் முதலாளி வர்க்கமும் இந்தச் சூழலைப் பயன்படுத்தி வெகு வேகமாக வளர்ந்தன. புதிய முதலாளி வர்க்கம் வளர்ந்த அதே சமயம் பழைய பெருமுதலாளிகள் பல சிக்கல்களை எதிர்கொண்டனர். மாறிய பொருளாதார சூழலில் அவர்களின் போட்டியிடும் திறன் குன்றியது. அவர்களது முதலீடுகள் பல தொடர்பற்ற துறைகளில் விரவிக் கிடந்தன. குறிப்பிட்ட தொழில்களை மட்டும் திறம்பட நடத்தும் ஆற்றல் இல்லாததால் இந்த பழைய முதலாளித்துவத்தின் பிடி தேய்வுரத் தொடங்கினர். கான்பூர், அகமதாபாத் மற்றும் பம்பாய் பகுதிகளில் ஓய்ந்து போன துணித் தொழில் இதற்கு உற்ற சான்றாகும். புதிய தொழில் தொடங்கியவர்களுக்கு ஏதுவாக நாட்டில் பரவிய விஞ்ஞானத் தொழில்நுட்ப படிப்புகளும் ஒரு முக்கியக் காரணமாகும். மின்னணு, தொலைத்தொடர்பு, கணினித்துறை, மருந்து தயாரிப்பு மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்கு இது ஒரு முக்கியக் காரணமாகும்.

- இராமன் மகாதேவன்

தமிழில்: ஜெ.ரஞ்சன்

(இக்கட்டுரையாளர் பொருளாதாரம், வரலாறு ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகளை நிகழ்த்தி வருகிறார். சென்னையில் வசிக்கிறார்.)