இந்து புராணங்களை வரலாறுகள் என்று ‘சங்கி’கள் பேசி வருவதை வரலாற்று அறிஞர்கள் நகைக்கிறார்கள். சுப்ரமணிய சாமி பார்ப்பனர் இப்போது இராமன் கோயில் பிரச்சினையை முன் வைத்து எழுதியுள்ள நூலில் இந்தியாவின் வரலாற்றை புராணங்களின் அடிப்படையில் எழுத வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். சுப்ரமணியசாமி எழுதியுள்ள இந்த ‘மடத்தனமான’ கருத்துகளை அவரது மூளையில் ஏற்றி வைத்தது, கோல்வாக்கரின் சிந்தனைதான்.
பாகிஸ்தான், பர்மா, ஆப்கானிஸ்தான், ஈரான், சீனாவும் இந்துக்களுக்கான நாடு என்று எழுதியதோடு அதற்கு சான்றாக புராணங்களையே வரலாறுகளாக்குகிறார், கோல்வாக்கர். அதையே சு. சாமியும் இப்போது பேசுகிறார்.
கோல்வாக்கர் எழுதுகிறார்:
“நமது தாய்நாடு எவ்வளவு தூரம் பரந்து, விரிந்து கிடக்கிறது என்பதைத்தான் நமது புராணங்களும் இதிகாசங்களும் சுட்டிக் காட்டுகின்றன.
இன்றைய ஆப்கானிஸ்தான், நமது பழைய உபகானஸ்தான்; மகாபாரதத்தில் வரும் சால்யா, ஆப்கானிஸ்தானத்திலிருந்து வந்தவரே. நவீன காபூலும், காந்தாரமும் அன்றைக்கு ‘காந்தார தேசமாக’ இருந்ததுதான். அந்த நாட்டை (ஆப்கானிஸ்தான்)ச் சார்ந்தவர் தான், கவுரவர்களின் தாயாகிய காந்தாரி. ஈரான் கூட ஆரிய தேசமே. அதன் முந்தைய அரசன் ரேஷாஷா பெலாவி முஸ்லீமாய் இருந்தார் என்பதைவிட ஆரியராக இருந்தார் என்பதுதான் உண்மை.... கிழக்குப் பகுதியைப் பார்த்தால், பர்மா என்பது நமது பழைய பிரதேசமே... தெற்கே திரும்பினால், இலங்கை மிக நெருங்கிய தொடர்புடையது. இந்தியா என்ற பெரும் நிலப் பரப்பிலிருந்து எப்போதுமே வேறுபடுத்திப் பார்க்கப்படாதது திபெத். நமது ‘திரி வாஸ்தவம்’ தான் நமது தலைவர்களால் சீனப் பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது. அது பரமேஸ்வரின் கைலாயம்; கடவுளின் பூமி.” (ஆதாரம்: Bunch of Thoughts என்ற கோல்வாக்கரின் தமிழ்மொழி பெயர்ப்பு நூலான ‘சிந்தனைக் கொத்து’ நூல்)
தனித் தனி நாடுகள் உருவாகிய பிறகும் எவ்வித வரலாற்று சான்றுகளும் இன்றி புராணங்களில் வரும் பெயர்களை எடுத்துக் கொண்டு வேறு நாடுகளுடன் வெவ்வேறு மொழிகளில் ஒலிக்கும் பெயர்களை மட்டுமே தொடர்புபடுத்தி, அதையே வரலாறு என்கிறார் கோல்வாக்கர்
நாடுகளுக்கான எல்லைகளை நாம் ஏற்க முடியாது என்று கூறும் கோல்வாக்கர், அது மனசாட்சிக்கு செய்யும் துரோகம்; வெட்கக் கேடு என்று எழுதுகிறார்.
“இன்றைய அரசியல் எல்லைகள்தான் நமது முழுமையான தாயகத்தினைக் குறிக்கிறது என நாம் நினைப்போமானால், நமது மனசாட்சிக்கு துரோகம் செய்தவர்கள் ஆவோம். இப்படி ஒப்புக் கொண்டால் நமது அறிவுக்கு இதைவிட வெட்கக்கேடு ஏதுமில்லை.” (ஆதாரம்: மேற் குறிப்பிட்ட அதே ‘சிந்தனைக் கொத்து’ நூல்)
கோல்வாக்கரின் வரையறையில் சீனாவும் ஈரானும் இந்து நாடுகள்; அந்த நாடுகளின்மீது படையெடுத்து, இந்தியாவுடன் இணைக்க வேண்டும் போலிருக்கிறது. அதற்கு ஆதாரம் புராணங்கள்.
புராணங்களை வரலாறுகளாக்கும் ஒரு கூட்டம் இந்த நூற்றாண்டிலும் வெட்கமின்றி எழுதுகிறது; பேசுகிறது.