இந்துக்களுக்கான நாடு ஒற்றை நாடாக இருக்க வேண்டும்; மாநிலங்களாக பிரியக் கூடாது என்பதே “சங்கி”களின் கொள்கை. இந்த உண்மைகளை எல்லாம் வெளியே பேசாமல் மூடி மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மோடி ஆட்சி இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் ‘மாநிலங்களின்’ உரிமைகளை படிப்படியாக பறித்துக் கொண்டு வருகிறது. ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே வரி விதிப்பு, ஒரே ரேஷன் கார்டு என்ற மாநில அதிகாரங்களைப் பறிக்கும் நடவடிக்கைகளுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனிய கொள்கை இருக்கிறது.

* மாநிலங்களின் மொழி வழிப் பிரிவினையை ஆதரித்து காங்கிரஸ் தீர்மானம் போட்டபோது பா.ஜ.க.வின் மூதாதையரான இந்து மகாசபை மாநிலங்கள் பிரிவினையை கடுமையாகக் கண்டித்து தீர்மானம் போட்டது.

* “இதனால் மாநிலங்களுக்கு மிக அதிகமான அதிகாரங்கள் கிடைத்து விடுகிறது. கூட்டாட்சி முறை வந்து விட்டால் ஏராளமான அரசியல் கட்சிகள் வந்துவிடும். அதனால் தகராறுகள் ஏற்படும். ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக ஆகி விடும். அதனால் இந்தப் பழமை வாய்ந்த பாரத பூமி (பாரத் வர்ஷா) சிறிது சிறிதாகப் பிளவுபட்டு விடும். அதன் பிறகு இந்தியா உலகின் முன் மிகப் பெரிய சக்தியாக வளர முடி யாது.” (ஆதாரம் : இந்து மகா சபை வெளியீடான ‘Truth which is unity’)

* 1956ஆம் ஆண்டு மாநிலங்கள் புனரமைப்பு ஆணையம் மொழி வழி மாநிலப் பிரிவினையை பரிந்துரைத்தபோது ஆர்.எஸ்.எஸ். ‘தத்துவத் தந்தை’ கோல்வாக்கர் கடுமையாக எதிர்த்தார். மாநிலப் பிரிவினைகள் இல்லாத ஒரே அரசாங்கமே இருக்க வேண்டும். அதுவே இப்போது அவசியம் என்றார் (A unitary Goverment, Prime need of the hour). (ஆதாரம்: டைம்ஸ் ஆப் இந்தியா 26.1.1956)

* ஆர்.எஸ்.எஸ். அரசியல் வடிவமான ‘பாரதிய ஜன சங்கம்’ என்ன கூறியது?

“பாரதிய ஜனசங்கம் ஆட்சிக்கு வந்தால், அரசியல் சட்டத்தைத் திருத்தி கூட்டாட்சி முறையை ஒழித்து இந்தியாவை ஒரே நாடு என பிரகடனப் படுத்துவோம்.” (1957 பாரதிய ஜனசங்க தேர்தல் அறிக்கை) பாரதிய ஜன சங்கம் போட்டுத் தந்த பாதையில் தான் பாரதிய ஜனதா மாநில அடையாளங்களை படிப்படியாக அழித்து ஒற்றை ‘இந்து தேசத்தை’ உருவாக்கும் திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறது.

Pin It