15.02.2024 அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிச்ரா ஆகிய அய்வர் அடங்கிய அரசமைப்புச் சட்ட ஆயம் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு அளித்துள்ளது. பா.ச.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ‘2018ஆம் ஆண்டுத் தேர்தல் பத்திரத் திட்டம்’, அரசமைப்புச் சட்டத்தின் கூறு 19(1)(a)விற்குப் புறம்பானது. ஆகையால் அத்திட்டம் முற்றாகச் செல்லாது என 5 நீதிபதிகள் ஆயம் ஒருமித்தத் தீர்ப்பளித்தது.

மேலும் தேர்தல் பத்திரத் திட்டத்தின் தேர்தல் பத்திரங் களை விற்பனைச் செய்திடும் பொறுப்பையும் பத்திரங்களைப் பணமாக்கி அரசியல் கட்சிகளின் கணக்குகளில் சேர்த்திடம் பணியையும் ஏற்றிருந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (S.B.I.)வுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் கீழ்க்காணும் உத்தரவினையும் பிறப்பித்தது.

(அ) தேர்தல் பத்திரம் வாங்கியவர்கள் விவரம், பத்திரத்தின் மதிப்பு, வாங்கிய நாள் அடங்கிய விவரத் தொகுப்பி னைத் தனியான ஒன்றாகவும்;

(ஆ) பத்திரத்தைப் பணமாக்கிக் கொண்ட அரசியல் கட்சி, பத்திரத்தின் விவரம் மற்றும் பணமாக்கிய நாள் ஆகிய விவரத் தொகுப்பினைத் தனியான ஒன்றாகவும்; 21 நாள்களுக்குள் தேர்தல் ஆணையத்திற்கு அளித்திட வேண்டும். தேர்தல் ஆணையம் அவ்விவரங்களைத் தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் வெளியிட வேண்டும்.

ஒன்றிய அரசின் 2017-18க்கான வரவு-செலவுத் திட்டத் தினை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது, 28.01.2017 அன்று ‘தேர்தல் பத்திரத் திட்டம்’ என ஒன்று நிதிச் சட்ட முன்வரைவாக அறிமுகப்படுத்தப்பட்டது. 02.01.2018 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.modi electoral bondsதேர்தல் பத்திரத் திட்டத்தைச் செல்லாதென அறிவிக்கக் கோரி ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) உச்சநீதிமன்றத்தில் நீதிப்பேராணை கோரும் வழக்கை (Writ Petition (Civil)) எண்.880/2017அய் தாக்கல் செய்தது. மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியும் இதே நோக்கத்திற்காக (W.P.) வழக்கு எண்.59/2018 தாக்கல் செய்தது. காங்கிரசுக் கட்சியின் மத்தியப் பிரதேச மகளிர் காங்கிரசுத் தலைவர் ஜெயா தாகூரும் இதேபோல் ஒரு பொது நல வழக்கினை உச்சநீதிமன்றத்தில் தொடுத்தார்.

இந்த வழக்கில் தான் ஏழு ஆண்டுகளுக்குப் பின் மேற்சுட்டியத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தேர்தல் பத்திரத் திட்ட நிறைவேற்றம்

இத்திட்டம் கொண்டு வரப்பட்டபோது கூறப்பட்ட நோக்கங்கள் :

1.          கருப்புப் பணத்தை ஒழிப்பது.

2.          எதிர்காலத்தில் கருப்புப் பண உருவாவதைத் தடுப்பது.

3.          அரசியல் கட்சிகளுக்கு ஊர்-பேர் தெரியாத வகையில் பணமாக நிதியளிப்பதை ஒழிப்பது.

4.          அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பவர்கள் அடையாளத்தைத் தெரிவிக்க வேண்டியதில்லை என இருந்ததால் அவர்கள் வழங்கும் கருப்புப் பணத்தை அரசியல் கட்சிகள் தங்கள் கணக்கில் காட்டி, வருமான வரிவிலக்குப் பெற்று வந்த முன்பிருந்த முறையினால் கருப்புப் பணம் நிறம் மாறுவதைத் தடுப்பது.

5.          நியாயமானத் தேர்தல்கள் நடைபெற்றிட அரசியல் கட்சிகள் நிதி பெறும் முறையில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவது.

இத்திட்டத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இத்திட்டம் மாபெரும் ஊழலுக்குச் சட்ட வடிவம் என்பது தவிர வேறு என்ன?

தேர்தல் பத்திரத் திட்டத்தின் பிரிவு 7(4)இல் தேர்தல் பத்திரத்தை விற்பனை செய்வதற்கான ஸ்டேட் வங்கிக் கிளை, பத்திரத்தை வாங்கியவர் மற்றும் பணமாக்கிய கட்சி ஆகிய விவரங்களை கமுக்கமாக வைத்திருக்க வேண்டும். மற்றும் உச்சநீதிமன்றமோ அல்லது குற்றவியல் வழக்குப் பதிந்து, விசாரணை செய்யும் அமைப்போ கோரினால் தவிர வேறு எந்த அதிகார அமைப்புக்கும் தகவல்களைத் தெரி விக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட தொடக்க நிலையிலேயே ரிசர்வ் வங்கியும் தேர்தல் ஆணையமும் தங்கள் மறுப்புக் கருத்துகளைத் தெரிவித்தன.

ரிசர்வ் வங்கியின் கருத்துகள்

தேர்தல் பத்திரத் திட்டம் நிதிச் சட்டமாக நிறைவேற்றப் படுவதற்கு முன்பே ரிசர்வ் வங்கியின் அப்போதைய ஆளுநர் உர்ஜித் பட்டேல் 2017 சனவரியில் பின்வரும் மாறுபட்டக் கருத்துகளைத் தெரிவித்து நிதி அமைச்சகத்திற்கு எழுதினார்.

1.          தேர்தல் பத்திரம் வெளியிடுவதற்கான சிறப்புத் தேவை இல்லை.

2.          தேர்தல் பத்திரங்கள் வெளியிடுவதாக இருந்தால் அதனை ரிசர்வ் வங்கிதான் வெளியிட வேண்டும். வணிக வங்கிகள் வெளியிடுவது ஒன்றிய அரசின் நம்பகத் தன்மையை பாதிக்கும்.

3.          பணத்தாள் போல கையில் வைத்திருப்பவரைச் சார்ந்ததாக (bearer bond) தேர்தல் பத்திரங்களை வெளியிடாமல் மின்னணு ஆவணமாக வெளியிடல் வேண்டும்.

4.          2002ஆம் ஆண்டு பணப்பரிமாற்ற மோசடித் தடுப்புச் சட்டத்தின் கொள்கைகளை பாதிக்கும்.

5.          கருப்புப் பணப் புழக்கத்தை அதிகரிக்கும்.

ரிசர்வ் வங்கித் தெரிவித்த மேற்காணும் கருத்துகளை ஒன்றிய அரசு புறந்தள்ளியது.

தேர்தல் ஆணையத்தின் கருத்துகள்

26.05.2017இல் தேர்தல் ஆணையம் சட்டம்-நீதித் துறை அமைச்சகத்திற்கும் நிதி அமைச்சகத்திற்கும் எழுதிய கடிதத்தில் பின்வரும் கருத்துகளைத் தெரிவித்தது.

1.          நன்கொடைகளின் வெளிப்படைத் தன்மையைப் பொறுத்தவரை இது ஒரு பிற்போக்கு நடவடிக்கை ஆகும்.

2.          கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டத்தில் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடை விவரங்களை வெளியிட வேண்டும். நிறுவனங்களின் ஆண்டு ஆதாய - இழப்புக் (Profit & Loss) கணக்கில் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடை நிதி பற்றி அரசியல் கட்சி வாரியாக அறிவிக்க வேண்டும். ஆனால் தேர்தல் பத்திரத் திட்டத்தில் இது நீக்கப்பட்டுவிட்டது. அதனால் நிதி அளிப்பதில் வெளிப்படைத் தன்மை கேள்விக் குட்படுத்தப்படும்.

3.           பெரு நிறுவனங்கள் வரம்பில்லாமல் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பது கருப்புப் பணப் புழக்கத்தை அதிகரிக்கும். ஆகையால் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதியளிப்பதற்கு உச்சவரம்பு நிர்ணயித்திருந்த முந்திய விதியை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது.

தேர்தல் ஆணையத்தின் மேற்காணும் பரிந்துரைகளை ஒன்றிய அரசு புறக்கணித்தது.

உச்சநீதிமன்ற விசாரணை -முதல் கட்டம்

2017இலும் 2018இலும் தேர்தல் பத்திரத் திட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதால் செல்லாது என அறிவித்திடு மாறு உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

12.04.2019 அன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் மிச்ரா, சஞ்சீவ் கன்னா அடங்கிய அமர்வு, நன்கொடையாளர்கள், நன் கொடைகள் மற்றும் கணக்கு எண்கள் விவரத்தை முத்திரையிட்ட உறையில் அளித்திடுமாறு உத்தரவிட்டது. 13.04.2019 அன்று உச்சநீதிமன்ற அமர்வு “இந்த வழக்கு முக்கியத்துவமானதுதான்; ஆனால் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது” என்று கூறிவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் விசாரணை -2ஆம் கட்டம்

வழக்குத் தொடுத்தவர்கள் சார்பில் 2019 நவம்பரிலும் 2020 அக்டோபரிலும் வழக்கை விசாரித்திடுமாறு கோரினர். மீண்டும் 2021 தொடக்கத்தில் வழக்குத் தொடுத்த ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) புதிதாகத் தேர்தல் பத்திரங்கள் விற்பனைக்கு தடை விதித்திடுமாறு கோரியது. அப்போதையத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். கோபன்னா, வி. இராமசுப்பிரமணியன் அடங்கிய அமர்வு 26.03.2021 அன்று தடைவிதிக்க மறுத்து விட்டது.

மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் சட்டங்கள், திட்டங்கள் குறித்த வழக்குகளில் உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள ஊசலாட்டமான மனநிலையையே இது காட்டுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் இறுதி விசாரணை

2017 மற்றும் 2018இல் தேர்தல் பத்திரத் திட்டம் செல்லாது என அறிவிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம், மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் காங்கிரசுக் கட்சியைச் சார்ந்த ஜெயா தாகூர் ஆகியவர்கள் சார்பில் 2024இல் நாடாளுமன்ற மக்களவைக்குப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு முன்னதாக வழக்கு விசாரணையை நடத்துமாறு 16.10.2023 அன்று உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிச்ரா ஆகியோர் அடங்கிய அரசமைப்புச் சட்ட ஆயம் 31.10.2023, 01.11.2023, 02.11.2023 ஆகிய மூன்று நாள்கள் தொடர்ந்து விசாரணை நடத்தியது. தீர்ப்புரைப்பது தள்ளி வைக்கப்பட்டது.

15.02.2024 அன்று அய்ந்து நீதிபதிகள் ஆயம் கருத்தொருமித்தத் தீர்ப்புரையை அறிவித்தது.

தீர்ப்புரையின் சாரம்

ஒன்றிய அரசின் 2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரத் திட்டம் அரசமைப்புச் சட்டத்தின் கூறு 19(1)(அ)வுக்கு எதிரானது என்பதாலும் வாக்காளர்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதாக உள்ளதாலும் அத்திட்டம் செல்லாது என அறிவிக் கப்பட்டது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தேர்தல் பத்திர விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

12.04.2019 முதல் விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் விவரங்களையும் பணம் பெற்ற அரசியல் கட்சிகளின் விவரங்களையும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 06.03.2024க்குள் தேர்தல் ஆணையத்திற்கு அளித்திடல் வேண்டும்; தேர்தல் ஆணையம் ஸ்டேட் வங்கி அளிக்கும் விவரங்களை 13.03.2024க்குள் தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் வெளியிடல் வேண்டும் என உச்சநீதிமன்றம் 15.02.2024 அன்று உத்தரவிட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, விசாரணை, தீர்ப்பு

உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 18 நாள்கள் கடந்த பின் 05.03.2024 அன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தீர்ப்பில் அறிவுறுத்தியத் தகவல்களை அளிப்பதற்கு 30.06.2024 வரை 4 மாத காலக்கெடு தேவை என உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அந்த முறையீட்டை உச்சநீதிமன்றம் 11.03.2024 அன்று விசாரிப்பதாக அறிவித்தது.

உச்சநீதிமன்றம் 15.02.2024 அன்று அறிவித்தத் தீர்ப்புரையில் கூறியிருந்தவாறு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 06.03.2024 அன்றுக்குள் விவரங்களை அளிக்கத் தவறிவிட்டது. எனவே, இவ்வழக்கைத் தொடுத்த ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் சார்பில் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் 07.03.2024 அன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கான விண்ணப்பத்தினை (எண்.138/2024) தாக்கல் செய்தார். மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியும் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு (எண்.140/2024) தாக்கல் செய்தது.

மேற்குறிப்பிட்ட வழக்குகளை ஏற்கெனவே தீர்ப்பளித்த அய்ந்து நீதிபதிகள் ஆயம் 11.03.2024 அன்று விசாரித்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தவர்கள் சார்பில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை, தீய எண்ணத்துடன் தீர்ப்பை ஏற்க மறுக்கும் தன்மையிலும் பொறுப்பற்ற வகையிலும் கூறும் காரணங்கள் ஏற்கத் தகுந்தவை அல்ல என வாதிடப்பட்டது. நீதிபதிகளும் ஸ்டேட் பேங்க் சார்பில் எடுத்துரைத்த காரணங்கள் ஏற்கத்தக்கவை அல்ல என வங்கியின் முறையீட்டைத் தள்ளுபடி செய்தனர்.

15.02.2024 முதல் 11.03.2024 வரை 26 நாள்களாக வங்கித் தலைமை என்ன செய்து கொண்டிருந்தது என்றும் வினவப்பட்டது. ஸ்டேட் வங்கிக்கு 22,100 கிளைகள் இருந்தாலும் தேர்தல் பத்திர விற்பனையில் ஈடுபட்ட கிளைகள் 19 மட்டுமே. அவற்றுள் 14 கிளைகள் மட்டுமே பணமாக்கும் பணியில் ஈடுபட்டவை ஆகும். 25 அரசியல் கட்சிகளே தேர்தல் பத்திரத்திற்கு என கணக்குகள் தொடங்கி உள்ளன. தேர்தல் பத்திரம் தொடர்பான மின்னணு முறைத் தகவல் தொழில்நுட்ப அமைப்பு நிறுவிட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரூ.1.5 கோடியை செலவிட்டுள்ளது. இத்தகவல்கள் விசாரணையின் போது வெளிப்பட்டவை ஆகும்.

13.04.2019 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை மற்றும் பணமாக்கப்பட்டத் தகவல்களை -பத்திரங்கள், தொகை, வாங்கிய நிறுவனங்களின் பட்டியல் பணமாக்கிக் கொண்ட அரசியல் கட்சிகளின் பெயர் ஆகியவற்றை ஸ்டேட் வங்கி 12.03.2024 அன்று வேலை நேரம் முடிவதற்குள் தேர்தல் ஆணையத்திற்கு அளித்திட வேண்டும். தேர்தல் ஆணையம் பெற்ற தகவல்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்தின் வலை தளத்தில் 15.03.2024 மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்ற அய்ந்து நீதிபதிகள் ஆயம் உத்தரவிட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.

தேர்தல் பத்திர விவர வெளியீட்டில் குறைபாடும் நீதிமன்றத்தின் உத்தரவுகளும்

உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி 14.03.2024 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டத் தகவல்கள் முழுமையாக இல்லை.

(அ) 01.03.2018 முதல் 11.04.2019 வரையில் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள் மற்றும் பணமாக்கிய அரசியல் கட்சிகள் விவரம் வெளியிடப்படவில்லை. 12.04.2019க்குப் பின் உள்ள தகவல்கள் மட்டுமே வெளியிடப்பட்டன.

(ஆ) தேர்தல் பத்திரங்களில் இடம்பெற்ற தனித்தன்மையான எழுத்து எண்கள் விவரத்தை ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்காததன் காரணமாக வெளியிடப்படவில்லை.

எனவே உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆயம் 15.03.2024 அன்று தகவல்கள் முழுமையாக வெளியிடாதது பற்றி வினவியது. இதற்கு 01.03.2018க்கும் 11.04.2019க்கும் இடையிலான தகவல்கள் அனைத்தின் மூல ஆவணங்கள் உச்ச நீதிமன்றத்தின் 12.04.2019 இடைக்காலத் தீர்ப்பின்படி முத்திரை இடப்பட்ட 106 உறைகள் மற்றும் 523 உறைகள் அடங்கியப் பெட்டிகள் உச்ச நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்டு விட்டன. எனவே இத்தகவல்களை ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திற்கு அளித்திட இயலவில்லை எனக் கூறப்பட்டது.

இத்தகவல்களின் படிகள் ஸ்டேட் வங்கியிடம் இருக்கும் என நீதிமன்றம் கருதியதால் அத்தகவல்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. நீதி மன்றத்திடம் உள்ள குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களையும் மேலும் காலத்தாழ்வைத் தவிர்க்க நீதிமன்ற நிhவாகமே 16.03.2024 சனிக்கிழமை அன்றே ஸ்கேன் செய்து எண்மியப் படியும் (digitised copy) சேர்த்து அளிக்குமாறு உத்தரவிட்டது.

17.03.2024 அன்று தேர்தல் ஆணையத்தின் வலை தளத்தில் வெளியிடப்பட்ட தகவல்களில் 12.04.2019க்கு முந்தியத் தேர்தல் பத்திரங்கள் பற்றியத் தகவல்கள் இடம் பெற்றிருந்தனவே தவிர, பத்திரங்களில் உள்ள தனித்தன்மை எழுத்துடன் கூடிய எண்கள் விவரம் இடம்பெறவில்லை.

எனவே 18.03.2024 அன்று இவ்வழக்கைத் தொடர்ந்து விசாரணை செய்த நீதிபதிகள் ஆயம் நீதிமன்றத்திற்கு நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துகொள்ளுமாறு ஸ்டேட் வங்கித் தலைமையை அறிவுறுத்தியதுடன் கீழ்க்காணும் உத்தரவினைப் பிறப்பித்தது.

01.03.2018 முதல் 14.2.2024 முடிய வாங்கப்பட்ட, பணமாக்கிய தேர்தல் பத்திரங்களில் இடம்பெற்றுள்ள தனித்தன்மை எழுத்து எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் தகவல்களை முழுமையாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தேர்தல் ஆணையத்திற்கு அளித்துவிட்டு, விவரங் களை முழுமையாக அளித்து விட்டதற்கான உறுதிமொழியை ஸ்டேட் வங்கியின் தலைவர் தினேஷ்குமார் காரா 21.08.2024 அன்று உச்சநீதிமன்றத்திடம் அளிக்குமாறு உத்தரவிட்டது.

ஸ்டேட் வங்கி அளித்த முழுத் தகவல்களுடன் முழுமை யானப் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் 21.03.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிர்வாகத் தலைமையிடம் நீதிமன்றத்திடம் நேர்மையாகவும் நியாயமாகவும் (candid and fair to the court) நடந்து கொள்ளுமாறு சொல்லும் அளவிற்குத் தீயநோக்குடன் நடந்து கொள்ள என்ன காரணம்?

ஓரிரு நாள்களில் அளிக்கக் கூடியத் தகவல்களை அளித்திட 136 நாள்கள் அதாவது பொதுத் தேர்தல் முடியும் வரை காலக்கெடு கேட்டது யாரைக் காப்பாற்றிட?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் இருமுறை அறிவுறுத்தியும் கூட 15.02.2024 தீர்ப்பு நாளில் இருந்து 20.03.2024 வரை 33 நாள்கள் காலம் கடத்தியே ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திற்கு முழுத் தகவல்களை அளித்தது எதனால்? போன்ற வினாக்கள் மக்கள் மனதில் எழும் அல்லவா?

மோடி ஆட்சி கொடுத்த அழுத்தமே இதற்கும் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றதாகும்.

தேர்தல் பத்திரங்கள் பற்றி வெளியான தகவல்களில் இருந்து அறியத் தக்கவற்றில் முக்கியமானவை :

2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரத் திட்டம் செல்லாது எனத் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் மூலம் முக்கியமாக அறியத்தக்கவை.

ஆளும் பா.ச.க.விற்கு தேர்தல் பத்திரம் மூலமாக நன்கொடை அளித்து, பின்னர் அரசிடமிருந்து ஒப்பந்தம் அல்லது சலுகைப் பெற்று இலாபமடைதல் ஒருவகை. ஒப்பந்தம் அல்லது சலுகை பெற்ற பின்னர் தேர்தல் பத்திரம் வாங்கி நன்கொடை அளிப்பது மற்றொரு வகையாகும்.

சட்ட விரோதப் பணப் பரிமாற்றத் தடுப்புச் செய லாக்க இயக்குநரகம் (E.D.), நடுவண் புலனாய்வுச் செயலகம் (CBI), வருமான வரித்துறை ஆகிய இவற்றை அனுப்பி நிறுவனங்களைத் திடீர் சோதனை நடத்துவதன் மூலம் மிரட்டுதல்; அதன்பின் அந்த நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்திடல் இன்னொரு வகையாகும். அதன்பின் திடீர் சோதனை நடத்தியது தொடர்பானத் தொடர் நடவடிக்கையோ வழக்கோ காணாமல் போகும்!

மற்றொரு வகை, போலி நிறுவனங்கள் தொடங்கப்படுவது; அந்த நிறுவனத்திற்கு இலாபமே இருக்காது. ஆனால் தேர்தல் பத்திரம் மூலம் ஆளும் பா.ச.க.விற்கு நிதியளிக்கப்படும்.

மேற்காண்பவைப் பற்றி மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.

நிதி அளித்து ஒப்பந்தம் பெறல் - ஒரு சான்று

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ச.க. மாநிலங்கள் அவை உறுப்பினர் சி.எம். இரமேஷ் என்பவர். இவருக்குச் சொந்தமான நிறுவனம் ரித்விக் புராஜக்ட்ஸ் பிரைவேட் லிமிடட் (RPPL) என்பது.

இவர் திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலச் சட்டமன்றங்களுக்கு 2023 பிப்பிரவரியில் தேர்தல் நடைபெற ஒரு மாதத்திற்கு முன் ரூ.5 கோடிக்குத் தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்தார். அதுவரை நிலுவையில் இருந்த இமாசலப் பிரதேசத்தில் 302 மெகாவாட் மின் உற்பத்திக்கான சன்னி நீர்மின் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பொருளாதாரப் பணிகளுக்கான அமைச்சர்கள் குழு கூடி 04.01.2023இல் ஒப்புதல் அளித்தது.

சன்னி நீர்மின் திட்டத்திற்கு பொறியியல், கொள்முதல், கட்டுமானப் பணிகளுக்கான ரூ.1048 கோடி ஒப்பந்தம் சி.எம். இரமேஷின் ரித்விக் புராஜக்ட்ஸ் நிறுவனத்திற்கு 14.01.2023 அன்று வழங்கப்பட்டது. பட்டியலிடப்பட்ட ஒப்பந்தக்காரர்களுள் இடம்பெற்றிராத நிறுவனம் ரித்விக் புராஜக்ட்ஸ் பி.லிட் ஆகும். இதற்குக் கைம்மாறாக இரமேஷின் (RPPL) நிறுவனம் 11.04.2023 அன்று மேலும் ரூ.40 கோடிக்கான தேர்தல் பத்திரம் வாங்கியது (The Hindu 17.03.2024).

பா.ச.க. மோடியின் ஒன்றிய அரசிடமிருந்தும் பா.ச.க. ஆளும் மாநில அரசுகளிடமிருந்தும் ஒப்பந்தங்களோ, திட்டப் பணிகளோ பெறுவதற்கு முன்பாக ரூ.551 கோடி நிதி அளித்து 3 மாதங்களில் ரூ.1.32 இலட்சம் மதிப்பிலான ஒப்பந்தங்கள் பெற்றுள்ளதாக காங்கிரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார். இதை முன்தண்டல் (Prepaid) எனக் கிண்டல் செய்துள்ளார்.

ஒன்றிய அரசின் பா.ச.க. ஆளும் மாநில அரசுகளிடமிருந்து ரூ.62 ஆயிரம் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் அல்லது திட்டப் பணிகள் பெற்ற 3 மாதங்களில் ரூ.580 கோடி தேர்தல் பத்திரங்கள் வழியாக பா.ச.க. நிதி பெற்றுள்ளது என்றும் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார். இதனை பின்தண்டல் (Post paid) எனப் பகடி செய்துள்ளார் (The Hindu, 24.03.2024).

நிதியளித்து சுரங்கத் தொழிலில் சலுகைகள் பெற்றிடல் -ஒரு சான்று

பெருமுதலாளி அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனம் ரூ.226 கோடி தேர்தல் பத்திரம் மூலம் பா.ச.க.வுக்கு நிதி வழங்கியுள்ளது. மற்ற சில கட்சிகளும் பெற்றுள்ளன. வேதாந்தா அளித்த மொத்த நன்கொடை ரூ.400.65 கோடி ஆகும்.

ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம், சுற்றுச்சூழல் பாதிப்புப் பற்றி பொது மக்கள் கருத்து கேட்காமலே சுரங்கத் தொழிலில் உள்ள நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை 50 விழுக்காடு அதிகரித்துக் கொள்ளலாம் என விதியைத் தளர்த்தியது.

இராசத்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் இயங்கிவரும் வேதாந்தாவின் ஆயில் & கேஸ் நிறுவனம் எண்ணெய், எரிவாயு எடுத்திட ஒன்றிய பா.ச.க. அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திடம் மேலும் 10 ஆண்டுகளுக்கு அதாவது 2030 வரை அனுமதியை நீட்டித்துப் பெற்றுள்ளது.

ஒடிசாவில் உள்ள அலுமினியம் உருக்காலை, கோவாவில் உள்ள இரும்புத் தாதுச் சுரங்கம் என பலவகையில் நன்மைகள் பெற்றுள்ளது.

எந்த நிறுவனமும் பா.ச.க. மோடியின் ஒன்றிய அரசிட மிருந்து ஆதாயம், சலுகை பெறாமல் தேர்தல் பத்திரம் மூலம் பா.ச.க.விற்கு பணத்தை அளித்திடவில்லை என்பது கண்கூடு. ஆளும் பா.ச.க. தங்களுக்கு நன்கொடை அளித்த நிறுவனங் களுக்குச் சார்பாக அரசு கொள்கை முடிவெடுத்து சலுகைகள் அளிக்கின்றது என்பதற்கு வேதாந்தா ஒரு சான்று.

திடீர் சோதனைகளும் தேர்தல் பத்திர நிதி அளிப்பும்electoral bond scam companies

தங்கள் இலாபத்தைவிட அதிகமாக நிதி அளித்த நிறுவனங்கள்

electoral bond scam companies 1

மேற்காட்டியதில் பா.ச.க. பெற்ற நன்கொடை குவிக் சப்ளை செயினிடமிருந்து ரூ.375 கோடி 91.5%

மெகா எஞ்சினியரிங்கிடமிருந்து ரூ.584 கோடி 60%

தேர்தல் பத்திரத் திட்டம் 2018இல் நடைமுறைக்கு வருவதற்கு முன் நிறுவனங்கள் தங்களின் 3 ஆண்டு இலாபத்தில் 7.5% மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க லாம் என உச்சவரம்பு இருந்தது. பா.ச.க. ஆட்சி 2018இல் நிறுவனங்கள் சட்டம் (Companies Act) பிரிவுகள் 154 மற்றும் 182 ஆகிய இரு பிரிவுகளையும் நீக்கி விட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் பெற்ற நிதி

பா.ச.க. ரூ.6986.5 கோடி

திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1592 கோடி

காங்கிரஸ் கட்சி ரூ.1334 கோடி

பாரத் இராஷ்டிரிய சமிதி ரூ.1322 கோடி

பிஜு ஜனதா தளம் ரூ.944.5 கோடி

தி.மு.க. ரூ.656.5 கோடி

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ரூ.442.8 கோடி

தெலுங்கு தேசம் ரூ.181.35 கோடி

சமாஜ்வாதி ரூ.14.05 கோடி

தேர்தல் பத்திரங்களின் வழியாக அல்லாமல் 2013­23க்கு இடையும் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு ரூ.7,726 கோடிகள் நிதி அளித்துள்ளன. இதில் 64.7% சுமார் ரூ.5000 கோடியை பா.ச.க. பெற்றுள்ளது. (Business Line 21.03.2024)

கருப்புப் பணம் எப்படி உருவாகின்றது?

சட்டப்படி அதிக இலாபம் அடைய வழியில்லாத போது சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் அதிக இலாபம் அடைவதால் வரும் வருமானமே கருப்புப் பணம். இந்த முறைகேடு, முறை சார்ந்ததாக ஆக்கப்பட்டு விட்டது.

தேர்தல் பத்திரம் வழியாக அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்தவர்கள் யார்? இது ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கையூட்டு அன்றி வேறுஎன்ன?

வரம்பில்லா இலாபம் அடைவதற்குத் தொழிலதிபர்கள் நிதியை வாரி வழங்குகின்றனர்.

கருப்புப் பண உருவாக்கத்திற்குக் காரணம் யாது?

கொள்கை வகுக்கும் இடத்தில் அமர்ந்திருக்கும் உயர் வகுப்பு அறிவாளிகள் (?) அதற்கு ஏற்பவே கொள்கைகளை வகுக்கின்றனர். ஆட்சியாளர்கள் வகுக்கும் கொள்கைகளும் கொள்கைகளைச் செயற்படுத்தும் அதிகார அமைப்புமே கருப்புபண உருவாக்கத்திற்குக் காரணம். செல்வாக்குப் படைத்த பெருமுதலாளிகள் நலனே நாட்டு நலனாக முன்னிறுத்தப்படுகின்றது.

இந்த கருப்புப் பணம் ஜனநாயகத்தை அரித்து பொருளற்றதாக்கி விட்டது. மேற்குறிப்பிட்டவர்களே ஜனநாயகத்தை நலிவடையச் செய்துவிட்டனர். இந்தத் தேர்தல் பத்திரத் திட்டம் ஊழலின் ஒரு பகுதியை சட்டப்பூர்வமாக்கியது. இத்திட்டத்தை ஒழித்துவிட்டதாலேயே தேர்தல்கள் நியாயமாக நடைபெறும் என்று எதிர்பார்ப்பது பகற்கனவே.

இந்தப் போக்கை எதிர்த்து நின்று ஜனநாயக வழி முறைகளைப் பாதுகாப்பதற்கு மாறாகப் பணிந்து போகும் நிலப்பிரபுத்துவ மனப்பான்மை வளர்க்கப்படும் நிலையை மாற்றுவோம்!

பார்ப்பனிய பிற்போக்குப் பாசிச பாசக-வை ஆட்சியதிகாரத்திலிருந்துத் தூக்கி எறிவோம்!

- சா.குப்பன்

Pin It