இந்தியாவில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு தேர்தலே நடக்க வாய்ப்பில்லை என பல அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். அவர்களின் அச்சத்துக்கு காரணம் இல்லாமல் இல்லை.

மோடியின் இந்த பத்தாண்டு கால ஆட்சியில் அதற்கான தீவிரமான முன்னெடுப்புகள் ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ்சின் நீண்ட கால செயல்திட்டமாக இருந்த காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது, காஷ்மீரைத் துண்டாடுவது, ராமர் கோயில் கட்டுவது போன்றவை ஏற்கெனவே நடத்திக் காட்டப்பட்டு விட்டன. அடுத்து பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

எதை எல்லாம் தங்கள் கையில் அரசியல் அதிகாரம் கிடைத்தால் செய்வோம் என ஆர்.எஸ்.எஸ்சின் மூதாதையர்கள் சொல்லி வந்தார்களோ, அதை எல்லாம் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ்சின் முகாமில் இருந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி செய்து முடித்து விட்டார்.

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்து சிறுபான்மையின மக்களுக்கும் இந்த பத்தாண்டுகளில் கூடுமானவரை மோடி அரசு மரண பயத்தைக் காட்டி இருக்கின்றது.one nation one election2020 இல் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக போராடிய முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகள் தலைநகர் டெல்லியில் நடத்திய திட்டமிட்ட கொலைவெறித் தாக்குதலில் ஏறக்குறைய 53 பேர் பலியானர்கள்.

அதேபோல இந்தாண்டு மே மாதம் முதல் மணிப்பூரில் கிறிஸ்தவ சிறுபான்மை பழங்குடி சமூகமான குக்கி இன மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மெய்தேய் இன மக்களை ஆர்.எஸ்.எஸ், பிஜேபி கும்பல் மத ரீதியாக தூண்டி விட்டதன் காரணமாக பெரும் கலவரம் மூண்டு, ஏறக்குறைய 130 பேர் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ தேவாலயங்கள் அழிக்கப்பட்டன. பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆட்படுத்தப்பட்டனர்.

மதவெறியில் ஊறித் திளைக்கும் பெரும்பான்மை ஆதிக்க சாதி இந்துக்களின் மனம் குளிரும்படி தன்னுடைய பத்தாண்டு கால ஆட்சியை மோடி சிறப்பாகவே செய்திருக்கின்றார். அந்த தைரியத்தில் தான் தற்போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் பிஜேபி இறங்கி இருக்கின்றது.

இதன் மூலம் இந்தியா முழுவதையும் காவி கொடியின் கீழ் கொண்டு வரும் தன் நோக்கத்தை நிறைவேற்றத் துணிந்திருக்கின்றது. இதற்காக ராம்நாத் கோவிந்த் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்திருக்கின்றது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை அமுல்படுத்த வேண்டும் என்றால் அனைத்து மாநிலங்களின் ஆட்சியையும் தற்போது கலைக்க வேண்டி இருக்கும்.

சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கான உரிமை அந்தந்த மாநில அரசுகளுக்குத்தான் உண்டு. ஒரு மாநிலத்தில் அசாதாரண சூழல் நிலவினால் மட்டுமே ஒன்றிய அரசு அங்கு நடைபெற்று வரும் ஆட்சியைக் கலைக்க முடியும். எனவே ஒன்றிய அரசு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் இதை நடத்திக் காட்ட வாய்ப்புள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு மட்டுமின்றி, பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும் மாநில அரசின் அதிகாரத்தையும் பறிக்க இருக்கின்றது.

பாஜக 2014-ல் தனது தேர்தல் அறிக்கையிலேயே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை முன்வைத்து இருக்கின்றது. இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதற்கான திட்டங்களை 2017-ம் ஆண்டு நிதி ஆயோக் வகுத்துக் கொடுத்தது. 2018-ம் ஆண்டு சட்ட ஆணையம் இந்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்திற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

கடந்த மார்ச் 10-ம் தேதியன்று, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, "ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது” என கூறியிருக்கின்றார்.

ஆனால் இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடத்த 2019, ஜூன் 19-ம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு அழைப்பு விடுத்த போது, அழைப்பு விடுக்கப்பட்ட 41 கட்சிகளில், 19 கட்சித் தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இப்படி பெரும்பான்மை கட்சிகளின் எதிர்ப்பை மீறித்தான் தற்போது ராம்நாத் கோவிந்து தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கின்றது.

தனது இந்து ராஜ்ஜிய கனவை நிறைவேற்றிக் கொள்ளத்தான் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பதைக் கொண்டு வருகின்றோம் என்பதை வெளிப்படையாக சொல்லத் திராணியற்ற சங்கி கும்பல் தேர்தலுக்காக செய்யும் செலவைக் காரணம் காட்டுகின்றது.

ஆனால் தேர்தலில் அரசியல் கட்சிகள் செய்யும் செலவோடு ஒப்பிட்டால் தேர்தல் ஆணையம் செய்யும் செலவுகள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சில மாநிலங்களில் நடைபெற்ற சட்ட சபைத் தேர்தல்களையும் சேர்த்தால் 30000 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு 60000 கோடிகள் செலவிடப்பட்டுள்ளன. இதில் தேர்தல் ஆணையத்தின் செலவு 2019 ஆம் ஆண்டு மட்டும் 10000 கோடி ஆகும்.

ஆனால் 2014 மற்றும் 2019 ஆண்டு முறையே பாஜக மட்டும் மொத்த செலவில் 40 முதல் 50 சதவீதம் செலவழித்துள்ளது.

இவை எல்லாம் சட்டப்படி காட்டப்பெற்ற கணக்குகள் தானேயொழிய உண்மையான கணக்குகள் அல்ல என்பதால், அரசியல் கட்சிகள் செலவு செய்த தொகை இதைவிடப் பல மடங்கு இருக்கலாம்.

இவ்வளவு தொகை அரசியல் கட்சிகளுக்கு எங்கிருந்து வருகின்றன என்று பார்த்தால் 2016லிருந்து 2017 வரை, 2021லிருந்து 2022 வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் கொடுக்கப்பட்ட நன்கொடையில் பாஜகவிற்கு மட்டும் 5 ஆயிரத்து 271.97 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது மற்ற கட்சிகள் பெற்ற நன்கொடையின் கூட்டுத் தொகையை விட 3 மடங்கு அதிகமாகும்.

இந்தியப் பெருமுதலாளிகளின் இந்துத்துவ சார்பு என்பது எப்போதுமே வெளிப்படையானது. ரத்தன் டாடா, அம்பானி குழுமம், அதானி குழுமும் உட்பட இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான பார்ப்பன, பனியா நிறுவனங்கள் எப்போதுமே ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நிதி உதவி செய்தே வந்திருக்கின்றன.

இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடைபெறும் கருத்தியல் பரப்புரை, வன்முறை போன்வற்றின் பின்னே எப்போதுமே இந்து பெருமுதலாளிகளின் கை இருந்தே வந்திருக்கின்றது.

2024 நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற்றால் அதில் வெள்ளமெனப் பாயக் காத்திருக்கும் பணத்தின் பெரும்பகுதி இந்து கார்ப்ரேட் முதலாளிகளுடையாதாகவே இருக்கும்.

இதற்காக இந்து பெருமுதலாளிகள் தங்களின் கைக்காசை செலவு செய்யத் தேவையில்லை. மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடனான 10 இலட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்கெனவே இருக்கின்றது.

இந்த பத்தாண்டு கால ஆட்சியில் இந்து மத வெறியர்களையும் பார்ப்பன, பனியா முதலாளிகளையும் ஒரு சேர திருப்திபடுத்தி இருப்பதால் நிச்சயம் இந்தியாவில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மூலம் இந்தியா முழுமைக்கும் காவிகளின் ஆட்சியைக் கொண்டு வந்து விடலாம் என நம்பிக்கையோடு ஆர். எஸ்.எஸ் பாஜக கும்பல் இருக்கின்றது.

ஒருவேளை அது சாத்தியப்பட்டால் நிச்சயம் இனி இந்தியாவில் தேர்தல் என்றே ஒன்றே நடக்காது என்பது உறுதி. இந்தியாவில் இருக்கும் அனைவரும் இந்துக்கள் எனவும், இந்தியா ஓர் இந்து நாடு எனவும் அறிவிக்கப்படும். காசி, மதுரா போன்ற நகரங்களில் இருக்கும் அனைத்து மசூதிகளும் தகர்க்கப்பட்டு இந்துக் கோயில்கள் கட்டப்படும். பசுவைக் கொல்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி கொண்டு வரப்படும். பாடத் திட்டங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு புராணப் புளுகளையும், பார்ப்பன ஆபாசக் குப்பைகளையும், மனுதர்மத்தையும் பாடத் திட்டங்களாக வைப்பார்கள். குலத்தொழிலை செய்ய மறுப்பவனின் சிரம் அறுக்கப்படும்.

இந்தியாவின் இருண்ட காலத்திற்கான தொடக்கமாகவே ஒரே நாடு ஒரே தேர்தல் அமையும். நிச்சயம் அதுதான் இந்தியாவிற்கு கடைசித் தேர்தலாகவும் இருக்கும்.

- செ.கார்கி

Pin It