‘நாட்டின் மக்கள்தொகையில் 73 விழுக்காடு பேர் ஓ.பி.சி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினராக இருந்தாலும், முதல் 200 நிறுவனங்களில் ஒன்று கூட அவர்களுக்கு சொந்தமானதாக இல்லை’ என ராகுல் காந்தி கூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பிப்ரவரி 18ஆம் தேதி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் எக்ஸ்ரே. அதுதான் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும். சாதிவாரி கணக்கெடுப்பு இளைஞர்களின் ஆயுதம். அதன்மூலம் தான் உங்கள் மக்கள்தொகை என்ன என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். நாட்டின் செல்வத்தில் உங்கள் பங்கு என்ன என்பதை அறிய முடியும்.rahul gandhi 450தற்போது நாட்டில் ஓ.பி.சி. வகுப்பினர் 50 விழுக்காடு, தாழ்த்தப்பட்டவர்கள் 15 விழுக்காடு, பழங்குடியினர் 8 விழுக்காடு உள்ளனர். இவர்களின் மொத்த மக்கள் தொகை 73 விழுக்காடு. ஆனால் நாட்டில் உள்ள முதல் 200 நிறுவனங்களில் ஒன்று கூட ஓ.பி.சி. அல்லது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானதாக இல்லை. நாட்டின் உயர்மட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 90 பேரில் வெறும் 3 பேர்தான் உங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள். ஊடகத்துறையில் ஒருவர் கூட இல்லை. உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு இந்த நாட்டில் எதிர்காலம் இல்லை.

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் ஓ.பி.சி. அல்லது பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை. பெரிய தொழிலாளர்கள் பத்து, பதினைந்து பேரின் ரூ.14 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும் அரசு, விவசாயிகளின் கடனை ஒருபோதும் தள்ளுபடி செய்யவில்லை. தொழிலதிபர்கள் லட்சக்கணக்கான கோடி ரூபாயை ஒரு நிமிடத்தில் வங்கியில் கடன் பெறுகின்றனர். ஆனால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் துரத்தி அடிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Pin It