பிரதமர் நரேந்திர மோடி அரசு, மக்கள் தொகையில் ஏறக்குறைய 17.5 விழுக்காடு உள்ள உயர் சாதி மக்களில் நலிந்த பிரிவுகளின் மக்களுக்கு மய்ய மாநில அரசுகளின் கல்வியிலும் உதவி பெறும் மற்றும் உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களின் கல்வியிலும், மய்ய மாநில அரசுகளின் வேலைகளிலும் 10 விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்து அதற்கு ஏற்ற வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி விதி 15இல் 6ஆவது உட்பிரிவையும் விதி 16இல் 6வது உட்பிரிவையும் சேர்த்துள்ளது. அவை 19.1.2019 முதல் நடப்புக்கும் வந்துவிட்டன. அவற்றின் தமிழாக்கம் பின்வருமாறு:
பிரிவு 15 (6)
(அ) உட்பிரிவு (4) மற்றும் (5)இல் குறிப்பிடப்பட்டுள்ள வகுப்புகள் அல்லாமல் பொருளாதாரத்தில் நலிந்துள்ள எந்தப் பிரிவுகளின் குடிமக்களை முன்னேற்றுவதற் காகவும் செய்யப்படுகின்ற எந்தச் சிறப்பு ஏற்பாட்டையும் செய்வதிலிருந்து, (ஆ) உட்பிரிவு (4) மற்றும் (5) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள வகுப்புகள் அல்லாமல் பொருளாதாரத்தில் நலிந்துள்ள எந்தப் பிரிவுகளின் குடிமக்களை முன்னேற்று வதற்காகவும் செய்யப்படுகின்ற அத்தகைய சிறப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தமட்டில் அவை பிரிவு 30 உட்பிரிவு (1)இல் உள்ள சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் அல்லாத, அரசால் உதவி செய்யப்படும் அல்லது உதவி செய்யப்படாத தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் சேர்க்கையுடன் தொடர்புடையதாகும் நிலையில் நடப்பில் உள்ள இட ஒதுக்கீட்டுக்கும் கூடுதலாக மற்றும் ஒவ்வொரு நிலை யிலும் உள்ள மொத்த இடங்களில் உச்ச அளவாக 10 விழுக்காடு இடங்களின் இடஒதுக் கீட்டுக்கான எந்தச் சிறப்பு ஏற்பாட்டையும் செய்வதிலிருந்து, இந்தப் பிரிவில் உள்ள எதுவும் அல்லது பிரிவு 19 உட்பிரிவு (1) (ப) அல்லது பிரிவு 29 உட்பிரிவு (2) ஆகிய வற்றில் உள்ள எதுவும் அரசைத் தடுக்காது.
விளக்கம்: இந்தப் பிரிவு மற்றும் பிரிவு 16 ஆகியவற்றுக்காக பொருளாதாரத்தில் நலிந்த பிரிவுகள் என்பது குடும்ப வருமானம் மற்றும் பொருளாதாரக் குறைவுகளுக் கான குறியீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அரசால் அவ்வப்போது அறிவிக்கப் படுகின்றவை ஆகும்.
பிரிவு 16(6)
நடப்பில் உள்ள இடஒதுக்கீட்டுக்கும் கூடுதலாக ஒவ்வொரு நிலைப் பதவிகளிலும் உச்ச அளவாக 10 விழுக்காடு இடங்களை உட்பிரிவு (4)இல் குறிப்பிடப்பட்டுள்ள வகுப்புகள் அல்லாமல் பொருளாதாரத்தில் நலிந்துள்ள எந்தப் பிரிவுகளின் குடிமக் களுக்கும் சாதகமாக நியமனங்களிலோ பதவிகளிலோ இடஒதுக்கீட்டுக்கு எந்த ஏற்பாட் டையும் செய்வதிலிருந்து அரசை இந்தப் பிரிவில் உள்ள எதுவும் தடுக்காது.
பிரதமர் நரேந்திரமோடி அரசின் இந்தச் செயல் உயர் சாதிகளின் ஆதிக்கம் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கும், மேலும் வேகமாக அதிகரிப்பதற்கும் வழிசெய்துவிட்டது. அதே வேளையில் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் வகுப்பு மற்றும் பழங்குடி மக்கள் தங்களுக்குரிய விகிதாசாரப் பங்கைப் பெறுவதைத் தடுப்பதற்கும் தாமதப்படுத்துவதற்கும் அடி கோலிவிட்டது.
இனி இந்த சட்டத்திருத்ததுக்கான வரலாற்றுப் பின்னணி என்ன என்பதைப் பார்ப்போம்.
1801ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் இந்தியா என்ற ஒரு நிலப்பகுதி பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது.மனுஸ்மிருதி காலந்தொட்டு சூத்திரர்களுக்கும் ஆதி சூத்திரர்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டு வந்தது. அந்தக் கல்வியை பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் 1835ஆம் ஆண்டில் எல்லா மக்களுக் கும் பாகுபாடு காட்டாமல் அளித்தது.அப்போது வடநாட்டில் காயஸ்தர்களும் தென்னாட்டில் கார்காத்த வேளாளர்களும் இந்தியா முழுவதும் பார்ப்பனர்களும் கல்வி பெற்றிருந்தினர். எனவே அவர்களே அரசு வேலைகளில் ஆதிக்கம் பெற்றி ருந்தனர். இதைக் கண்டு தென்னாட்டுப் பார்ப்பனரல்லாதார் சிலர் பிரிட்டிஷ் அரசிடம் முறையிட்டு அரசின் வேலை களைப் பார்ப்பனரல்லாத எல்லா வகுப்பு மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்குமாறு கோரினர்.
சென்னை மாகாணத்தில் பிரிட்டிஷ் அரசு 1840ஆம் ஆண்டில் ஓர் ஆணையைப் பிறப்பித்தது. அந்த ஆணையில் குறிப்பிட்ட சாதிக்காரரே அரசு வேலைகளில் இடம் பெறாமல் எல்லாச் சாதிக்காரர்களும் இடம் பெறுமாறு அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 1912ஆம் ஆண்டில் சென்னையில் வருவாய் வாரியத்திலும் பிற அலுவலகங்களிலும் பணியாற்றிய அதிகாரிகள் ஒன்றுகூடி திராவிடர் சங்கம் தொடங்கி அரசின் வேலைகளில் பங்கு கோரினர். சென்னையில் சி.நடேச முதலியார் 1916ஆம் ஆண்டில் டாக்டர் டி.எம்.நாயர், சர்.பிட்டி தியாகராயச் செட்டியார் ஆகியோரை இணைத்துக் கொண்டு தென்னிந்திய நல உரிமைச்சங்கம் என்கிற அமைப்பைத் தொடங்கினார். அந்த அமைப்பு அரசின் வேலைகளில் எல்லா வகுப்புகளுக்கும் விகிதாசாரப் பங்கு கோரும் அறிக்கையினை வெளியிட்டது. அந்த அறிக்கை பார்ப்பனரல்லாதார் அறிக்கை என்று அழைக்கப்பட்டது.
அந்த அமைப்பின் சார்பில் டாக்டர் டி.எம்.நாயர் இலண்டன் சென்று எல்லாக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கண்டு பேசி சென்னை மாகாண சட்டப்பேரவையில் பார்ப்ப னரல்லாதாருக்கு என்று தனித் தொகுதிகள் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை வைத்தார். பிரிட்டிஷ் அரசு அந்தக் கோரிக் கையை ஏற்றுக் கொண்டு 1919ஆம் ஆண்டில் அதற்கெனச் சட்டம் இயற்றியது.
அந்தச் சட்டத்தின் கீழ் 1920ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற்றது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது.முதலாவது நடவடிக்கையாக அந்த அரசு பார்ப்பனர்களின் ஆதிக்கத் தைக் குறைக்கின்ற நடவடிக்கையை எடுத்தது. ஏற்கெனவே 1840ஆம் ஆண்டில் வருவாய் வாரியம் வேலை நியமனத் துக்குப் பிறப்பித்திருந்த ஆணையை எல்லாத் துறைகளுக்கும் விரிவுபடுத்தி ஆணை பிறப்பித்தது. இவ்வாறு 1921ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணையே முதலாவது வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவ ஆணை என்றழைக்கப்பட்டது. பார்ப் பனர்களும் ஆங்கில ஏடு “இந்து”வும் தமிழ் ஏடு “சுதேச மித்திரனும்” அந்த ஆணையை எதிர்த்தனர். அரசு அந்த ஆணையை 1927ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்த முடியவில்லை.
சென்னை மாகாண அரசின் பத்திரப் பதிவுத்துறை அமைச்சராக இருந்த எஸ்.முத்தையா முதலியார் 1928இல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ ஆணையை முதலாவதாக நடை முறைப்படுத்தினார். சமுதாயத்தை ஐந்து வகுப்புகளாகப் பிரித்து மொத்த இடங்கள் 12 எனக்கொண்டு, அதில் பார்ப்ப னரல்லாதாருக்கு 5 இடங்களும் பார்ப்பனருக்கு 2 இடங்களும் ஆங்கிலோ இந்தியருக்கும் கிறித்தவருக்கும் 2 இடங்களும் முகமதியருக்கு 2 இடங்களும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 1 இடமும் எனப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது.
இந்தப் பங்கீடு நடப்புக்கு வந்த பின்னர் பார்ப்பனரல் லாதார் பிரிவில் எல்லா இடங்களையும் கார்காத்த வேளாளர், தொண்டை மண்டல சைவ வேளாளர், தெலுங்கு பேசும் ரெட்டியார், தெலுங்கு பேசும் நாயுடு, கருணீகர் ஆகிய ஐந்து வகுப்பு மக்களுமே பெற்றுக் கொண்டனர் என்பதை அறிந்த பெரியார் ஈ.வெ.ரா, 1934இல் அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அதில் பார்ப்பனரல்லாதார் என்கிற பிரிவில் பிற் படுத்தப்பட்டவர்கள் என்னும் உட்பிரிவை ஏற்படுத்துமாறு கோரினார்.
காங்கிரசுக் கட்சி அரசின் முதலமைச்சர் ஓமந்தூர் பி.இராமசாமி ரெட்டியார் 1947 நவம்பரில் பார்ப்பனரல்லாத இந்துப் பிற்படுத்தப்பட்டவர் என்னும் பிரிவை இந்தியாவிலேயே முதன்முறையாக உண்டாக்கினார். அவர் சமுதாயத்தை 6 வகுப்புகளாகப் பிரித்து, மொத்த இடங்கள் 14 எனக் கொண்டு அதில் பார்ப்பனரல்லாத மேல்சாதி இந்துக்களுக்கு 6 இடங்களும் பார்ப்பனரல்லாத இந்துப் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 2 இடங்களும் பார்ப்பனருக்கு 2 இடங்களும் ஆதித்திராவிடருக்கு 2 இடங்களும் ஆங்கிலோ இந்தியரும் இந்தியக் கிறித்தவருக்கு ஒரு இடமும் முசுலீம்களுக்கு ஒரு இடமும் எனப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டம் 26.1.1950இல் நடப்புக்கு வந்தது. 1947இல் ஓமந்தூரார் பிறப்பித்து நடப்பில் இருந்த கல்வியில் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவ ஆணையை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் அந்த ஆணை செல்லாது என்று கூறியது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து பெரியார் ஈ.வெ.ரா. போராடினார். அதன் காரணமாக பிரதமர் நேரு இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி விதி 15இல் உட்பிரிவு (4)ஐச் சேர்த்தார். அதன் காரணமாக, கல்வியிலும், சமுதாயத்திலும் பிற்படுத் தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் ஆகிய மூன்று பிரிவினருக்கும் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு வழி செய்யப்பட்டது. விதி 15(4)இன்படி கல்வியிலும் விதி 16(4) இன்படி வேலையிலும் 27.9.1951இல் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு 15 விழுக்காடும், பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு 25 விழுக் காடும் பொதுப் போட்டிக்கு 60 விழுக்காடும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. காமராசர் 13.4.1954இல் முதலமைச்சர் பொறுப்பேற்றார். அவர் 30.4.1954 இல் பட்டியல் வகுப்பின ருக்கும் பழங்குடி யினருக்குமான ஒதுக்கீட்டை 15 விழுக்காட்டி லிருந்து விகிதாசார அளவாக 16 விழுக்காடாக உயர்த்தினார். இதனால் பொதுப் போட்டிக்குரிய 60 விழுக்காடு 59 விழுக் காடாகக் குறைந்து விட்டது.
முதலமைச்சர் மு.கருணாநிதி 7.6.1971இல் சட்டநாதன் குழுவின் பரிந்துரையை ஏற்று, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 25 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாக உயர்த்தினார்; பட்டியல் வகுப்பினருக்கும் பழங்குடியினருக்கு மான இடஒதுக்கீட்டை 16 விழுக்காட்டிலிருந்து விகிதாசார அளவாக 18 விழுக்காடாக உயர்த்தினார்.இதனால் பொதுப் போட்டிக்குரிய இடங்கள் 59 விழுக்காட்டிலிருந்து 51 விழுக் காடாகக் குறைந்துவிட்டது.
முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிற்படுத்தப்பட்ட மக்களுக் கான இடஒதுக்கீட்டுக்கு, 2.7.1979இல் ரூ.9ஆயிரம் ஆண்டு வருமான வரம்பினை அறிவித்து அரசாணை வெளியிட்டார். அனைத்து அரசியல் கட்சிகளும் சமுதாய அமைப்புகளும் அரசு அலுவலர் அமைப்புகளும் இதை எதிர்த்துப் போராடின. போராடிய அனைவரின் கோரிக்கையும் வருமான வரம்பு அரசாணை நீக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே. வே.ஆனைமுத்து தலைமையிலான மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியும் அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையும் வருமான வரம்பு ஆணை நீக்கப்பட வேண்டும் என்று கோரியதுடன் நில்லாமல், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டினை 31 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று 19.8.1979இல் அரசுக்குக் கோரிக்கை மனு அளித்தது. அவர், அமைச்சர் பண்ருட்டி ச.இராமச்சந்திரன் மூலமாக 7.10.1979இல் முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் புரிய வைத்தார். அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்தது. முதல்வர் எம்.ஜி.ஆர். மறுசிந்தனை செய்தார்; 1.2.1980இல் வருமான வரம்பு ஆணையை இரத்துச் செய்ததுடன், பிற்படுத்தப்பட்ட மக்களுக் கான இடஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்தி ஆணை யிட்டார். அதனால் பொதுப் போட்டிக்குரிய இடங்கள் 51 விழுக்காட்டிலிருந்து 32 விழுக்காடாகக் குறைந்தது.
முதலமைச்சர் மு.கருணாநிதி மருத்துவர் ச.இராமதாசின் கோரிக்கையை ஏற்று 28.3.1989இல் 50 விழுக்காடு உடைய பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியலைப் பிற்படுத் தப்பட்ட வகுப்புகள் என்றும், மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் என்றும் இரண்டாகப் பிரித்து முறையே 30 விழுக்காடு என்றும் 20 விழுக்காடு என்றும் ஒதுக்கீடு அளித்து ஆணை யிட்டார். அத்துடன், பட்டியல் பழங்குடி வகுப்புக்கென்று தனியாக ஒரு விழுக்காடு ஒதுக்கீடு அளித்தார். பட்டியல் வகுப்புக்கான 18 விழுக்காடு அப்படியே தொடர்ந்தது. பொதுப்போட்டிக்குரிய 32 விழுக்காடு 31ஆகக் குறைந்தது.
முதலமைச்சர் மு.கருணாநிதி 2008ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான 30 விழுக்காட்டில் முசுலீம் களுக்கு 3.5 விழுக்காடும், பட்டியல் வகுப்புகளுக்கான 18 விழுக்காட்டிலிருந்து அருந்ததியர் வகுப்புக்கு 3 விழுக்காடும் உள்ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார்.
மய்ய அரசின் பணிகளில் பட்டியல் வகுப்புக்கு மட்டும் 1943இல் பிரிட்டிஷ் அரசு 8 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்தது; பின் அது 1946இல் 12.5 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. அரசமைப்புச்சட்டம் நடப்புக்கு வந்த பிறகு அது, தொடர்ந்து பின்னர் 15 விழுக்காடாக உயர்த்தப்பட்டு தொடர்ந்து வருகிறது. பட்டியல் பழங்குடியினருக்கு 1951இல் முதன்முதலாக 5 விழுக்காடு அளிக்கப்பட்டு அது பின்னர் 7.5 விழுக்காடாக உயர்த்தப்பட்டு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
1978ஆம் ஆண்டு வரை மய்ய அரசின் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப் படவே இல்லை. மேலும் வட இந்திய மாநிலங்கள் எதிலும் கல்வியிலும் வேலையிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. வே.ஆனைமுத்து வின் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியும் ஒடுக்கப்பட்டோர் பேரவையின் ஒட்டு மொத்தமான வேலைத் திட்டத்துடன் மேற்கொண்ட தொடர்ந்த செயல் பாட்டின் காரண மாக மண்டல் குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கை நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் அரசியல் கட்சிகளும் சமூக நீதி அமைப்புகளும் சமுதாய அமைப்புகளும் களத்தில் இறங்கிச் செயல்பட்டதன் காரணமாகவும் நாடாளு மன்ற மேலவையில் 1986 முதல் 1992 வரையில் உறுப்பினராக இருந்த ஒடுக்கப்பட்டோர் பேரவையின் தலைவர் ராம் அவதேஷ் சிங்கின் நடவடிக்கைகள் பிரதமர் வி.பி.சிங் கவனத்தை ஈர்த்ததாலும், பிரதமர் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மய்ய அரசில் வேலையில் மட்டும் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்தார். 2007இல் பிரதமர் மன்மோகன் சிங் மய்ய அரசின் கல்வியில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்தார்.
மய்ய அரசின் பணிகளில் முதல்நிலைப் பணிகளில் உள்ள அலுவலர்களின் 1980ஆம் ஆண்டுக்குரிய வகுப்பு வாரியான புள்ளி விவரம் மண்டல் குழு அறிக்கையில் தரப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டுக்குரிய அத்தகைய புள்ளி விவரம் மய்ய அரசின் பணியமர்த்தம் மற்றும் பயிற்சித் துறையின் இணை அமைச்சர் 18.11.2008ஆம் நாள் நாடாளுமன்றத்துக்கு அளித்த விடையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. எண்ணிக்கைக் கணக்கில் தரப்பட்டுள்ள அந்தப் புள்ளி விவரம் விழுக்காடாக மாற்றப்பட்டு இங்கே தரப்படுகிறது. மய்ய அரசின் முதல்நிலைப் பணிகளின் வகுப்புவாரியான பிரதிநிதித்துவத்தை இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.
இந்திய மக்கள் தொகையில் 2011ஆம் ஆண்டில் உயர் வகுப்பினர் ஏறக்குறைய 17.5 விழுக்காடு உள்ளனர்.எல்லா மதங்களையும் சார்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 57 விழுக்காடும், பட்டியல் வகுப்பினரும் பழங்குடியினரும் 25.5 விழுக்காடும் உள்ளனர்.
உயர் சாதியினர் 1980ஆம் ஆண்டில் பெற்றிருந்த 89.6 விழுக்காடு இடங்கள் 2008 ஆம் ஆண்டில் 77.2 விழுக்காடாகக் குறைந்துள்ளது.அதாவது ஆதிக்கம் 12.4 விழுக்காடு சரிந்துவிட்டது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 1980ஆம் ஆண்டில் பெற்றிருந்த 4.7 விழுக்காடு இடங்கள் 2008 ஆம் ஆண்டில் 5.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதாவது உயர்சாதியினர் வெறும் 0.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.
பட்டியல் வகுப்பு மற்றும் பழங்குடிகள் 1980ஆம் ஆண்டில் பெற்றிருந்த 5.7 விழுக்காடு இடங்கள் 2008ஆம் ஆண்டில் 17.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதாவது 11.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியும் அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையும் 1978ஆம் ஆண்டில் தொடங்கித் தொடர்ந்து செய்து வந்த அனைத்திந்திய அளவிலான தொடர் பரப்புரைப் பணிகளினாலும் கிளர்ச்சி களினாலும் மண்டல் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட பின்னர், சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் காட்டிய ஈடுபாட்டினாலும், 1990இல் பிரதமர் வி.பி.சிங், மண்டல் குழு பரிந்துரைத்தபடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மய்ய அரசின் பணிகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து அரசாணை பிறப்பித்ததனாலும் 6.8.1990 முதல் சமூக நீதிக்கு நாடு தழுவிய அளவில் கிடைத்த செல்வாக்கினாலும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் மனஎழுச்சி பெற்றனர். அதன் காரணமாக அவர்கள் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வது பெருகியது; வெற்றி பெறுவதன் விகிதம் கூடியது. அதனால் முதல் நிலைப் பணிகளில் உயர்சாதி யினரின் ஆதிக்கம் பிரதிநிதித்துவம் 12.4 விழுக்காடு சரிந்து விட்டது.
தங்களுடைய ஆதிக்கம் சரிவதைத் தெரிந்து கொண்ட உயர் சாதியினர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதால் பயனில்லை என்பதை உணர்ந்து கொண்டனர்; தங்களையும் பிற்படுத்தப் பட்ட வகுப்புகளின் பட்டியலில் சேர்க்கக் கோரினர்.
2014 மே மாதம் நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அன்றைய பிரதமர் மன் மோகன் சிங் தலைமையிலான காங்கிரசுக் கட்சி அரசு, வட இந்தியாவில் பீகார், குசராத், அரியானா, இமாசலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், புதுதில்லி, இராசஸ்தான் (பரத்பூர் தோல்பூர் மாவட்டங்கள் மட்டும்), உத்தரப்பிரதேசம் மற்றும் ஜார்க்கன்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஜாட் சமூகத்தினரை மய்ய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியலில் 4.3.2014ஆம் நாள் சேர்த்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் 17.3.2015ஆம் நாள் தீர்ப்பு கூறியது. ஜாட் சாதியை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.
ஜாட் சமூகத்தினரைத் தொடர்ந்து குசராத்தில் பட்டீதார் சமூகத்தினரும், மகாராட்டிய மாநிலத்தில் மராத்தா சமூகத்தினரும் தங்களைப் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியலில் சேர்க்கக் கோரி வலிமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் முன் மொழிந்த சமூக நீதி மற்றும் அதிகாரப்படுத் துதல் துறை அமைச்சர் இந்தத் திருத்தத்துக்கான நோக் கங்களும் காரணங்களும் என்ன என்பதை விளக்கினார். அதில் அவர் அரசமைப்புச் சட்டத்தில் உள்ள வழிகாட்டுதல் நெறிப்பகுதி, பிரிவு 46இல் கூறப்பட்டுள்ளதற்கேற்ப அரசு இந்தத் திருத்தத்தை முன்மொழிகிறது என்று கூறியுள்ளார்.
பிரிவு 46இல் சமூக அநீதிக்கும் எல்லா வகையான சுரண்டலுக்கும் ஆளாக்கப்படுகின்ற நலிவுற்ற பிரிவு மக்களுக்கும் பட்டியல் வகுப்பு மற்றும் பழங்குடி மக்களுக்கும் பாதுகாப்பு அளித்திடவும் அவர்களுடைய கல்வி மற்றும் பொருளாதார நலன்களின் மேம் பாட்டுக்காகவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள லாம் என்று சொல்லப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்கள் என்றோ, உயர் சாதியில் உள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்கள் என்றோ சொல் லப்படவில்லை. ஆனால் உயர்சாதி ஏழை மக்கள் என்றுமே சமூக அநீதிக்கு ஆளாக்கப்படாத நிலையிலும் எந்த வகையான சுரண்டலுக்கும் ஆளாக் கப்படாத நிலையிலும் அரசு இந்தச் சட்டத்திருத்தத்தை அவர் களுக்காக நிறைவேற்றியுள்ளது. இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.
2014ஆம் ஆண்டின் மே மாதப் பொதுத்தேர்தலைக் குறிவைத்து காங்கிரசு அரசு அந்த ஆண்டின் மார்ச்சு மாதம் ஜாட் சமூகத்தை மட்டும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கிய அந்த நடை முறையைப் பின்பற்றியே, பா.ஜ.க. அரசும், 2019 மே மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலைக் குறிவைத்து எல்லா உயர்சாதி ஏழைகளுக்கும் இடஒதுக்கீடு அளித்து இப்போது, அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தியுள்ளது. இது உள்நோக்கம் கொண்டது. இது பா.ச.க. வெற்றிக்கு ஓரளவு உதவக்கூடும் என நாம் கருதுகிறோம். பா.ச.க.வின் இந்தச் சூழ்ச்சியான நடவடிக்கையை நாம் முறியடிக்க வேண்டும். பா.ஜ.க அரசின் இந்த அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் மய்ய அரசின் பணிகளில் உயர் சாதியினர் பெற்றுள்ள பிரதிநிதித் துவம் மேலும் 10 விழுக்காடு கூடிவிடும். அதாவது 2008 ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி மய்ய அரசின் உயர்நிலைப் பணிகளில் உயர்சாதியினர் பெற்றுள்ள 77.2 விழுக்காடு இடங்கள் மேலும் 10 விழுக்காடு அளவுக்குக் கூடிவிடும்; அதாவது 87.2 விழுக்காடாக உயர்ந்து விடும்; உயர் சாதியினரின் ஆதிக்கம் நிலைக்க வைக்கப்பட்டுவிடும். இந்த ஆதிக்கம் சமுதாயம், அரசியல், பொருளியல், கல்வி, வணிகம், தொழில் என அனைத்துத் தளங்களிலும் உயர் சாதியினர் ஆதிக்கம் பெற வழிவகுத்துவிடும். அந்த அளவுக்குப் பிற்படுத் தப்பட்ட, பட்டியல் வகுப்பு, பழங்குடி மக்களின் பங்கு குறைந்து விடும்; இவ்வகுப்புகளின் முன்னேற்றம் தடுக்கப்பட்டுவிடும்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27 விழுக்காடு, பட்டியல் வகுப்பினர் 15 விழுக்காடு, பழங்குடியினர் 7.5 விழுக்காடு என இம்மூன்று பிரிவினருக்கும் மொத்தம் 49.5 விழுக்காடு போக எஞ்சிய 50.5 விழுக்காடு பொதுப் போட்டிக்கு என வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பொதுப்போட்டியில் இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பினரும் பட்டியல் வகுப்பினரும் பழங்குடி யினரும் உயர் சாதியினருடன் மதிப்பெண் தகுதி அடிப்படை யில் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்பட்டு வந்தனர். பொதுப் போட்டிக்குரிய இந்த 50.5 விழுக்காட்டிலிருந்துதான் 10 விழுக்காடு இடங்கள் எடுக்கப்பட்டு உயர்சாதி ஏழைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுப் போட்டிக்குரிய 50.5 விழுக்காடு இடங்கள் 40.5 விழுக் காடாகக் குறைக்கப்பட்டுவிட்டது. இதனால் பொதுப்போட்டிப் பிரிவில் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் வகுப்பு, பழங்குடியினர் பெற்றுவந்த இடங்களின் எண்ணிக்கை 10 விழுக்காடு அளவுக்குக் குறைக்கப்பட்டு விடும். இதனால் இம்மூன்று பிரிவினரும் தங்களுக்குரிய விகிதாசாரப் பங்கு அடைவது தடுக்கப்படுகிறது.
கல்வியின்மை, வறுமை, ஏழ்மை, சுரண்டலுக்கு ஆளாக்கப் படுவது, கீழ்ச்சாதியாக மதிக்கப்படுவது, கொடுமைக்கு ஆளாக்கப்படுவது ஆகிய இவையெல்லாம் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் வகுப்பு மற்றும் பழங்குடி மக்களிடையே ஈராயிரம் ஆண்டுகளாகப் படிந்துவிட்டுள்ள குழுப் பண்புகள்(Group Culture) ஆகும். இவற்றிலிருந்து இம்மக்கள் தங்களை விடுவித்துக் கொண்டு, சமுதாய நீரோட்டத்தில் சமமாகக் கலந்து வாழ்வதற்கு ஏதுவாக மேற்கொள்ளப்பட்டுள்ள(Enabliing Provisions) நடவடிக்கைகள்தான் அரசமைப்புச் சட்டத்தின் விதி 16 இல் அம்பேத்கர் ஏற்படுத்திய உட்பிரிவு (4) என்பதும் விதி 15இல் பெரியாரின் போராட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட உட்பிரிவு (4) என்பதும் ஆகும். இது சமூக நீதி என்பதாகும்.
உயர் சாதியினரில் ஏழ்மை என்பது குழுப் பண்பு ஆகாது; அது தனிப்பண்பு (Individual Culture) ஆகும். அவர்களின் ஏழ்மையைப் போக்குவதற்கு ஏதுவாக விதி 15இல் உட்பிரிவு (6) மற்றும் விதி 16இல் உட்பிரிவு (6) ஆகியவற்றைச் சேர்ப்பது தீர்வு ஆகாது. மாறாக அது சமூக நீதியின் அடிப்படை யையே தகர்த்துவிடும். பொருளாதார நிலைமை மாறக்கூடியது (Mobile) சாதிப்பண்பு என்பது மாறாதது. (Immobile.8)
(அ) இந்த 10 விழுக்காடு சட்டத்திருத்தம் தமிழ்நாட் டுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் பார்ப்பனர், கார்காத்த வேளாளர், தொண்டை மண்டல சைவ வேளாளர், ரெட்டியார், கம்மாநாயுடு, நாட்டுக்கோட்டைச் செட்டியார், சமணர் (ஜெயின்) முதலான மிக மிகக் குறைவான மக்கள் தொகையுடைய சமூகங்களே உயர்சாதிகளாக உள்ளனர். இவர்களுடைய மக்கள் தொகை 10 விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருக்கும். அவர்களுள்ளும் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் மிக மிகக் குறைவாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட நிலையில், அவர்களுக்கும் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்வது என்பது மிகப்பெரிய சமுக அநீதி ஆகும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பெருங்கேடுகள் மண்டல் வழக்கில் உச்ச நீதி மன்றம் 16.11.1992இல் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் விதி 15(4) மற்றும் 16 (4) ஆகியவற்றின்படி பிற்படுத்தப்பட்ட தன்மையின் அடிப்படையில் அளிக்கப்படும் இடஒதுக்கீடு சரியானதே என்று கூறிய உச்ச நீதிமன்றம், அந்த இடஒதுக் கீட்டுக்குக் கேடு விளைவிக்கும் கீழ்க்கண்ட கட்டளைகளையும் பிறப்பித்துவிட்டது.
(1) பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினர் ஆகிய மூன்று பிரிவினருக்குமான மொத்த இடஒதுக்கீடு என்பது 50 விழுக்காடு வரம்பை மீறக்கூடாது.
(2) பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது; (3) பட்டியல் வகுப்பினருக் கும் பழங்குடியினருக்கும் இன்றிலிருந்து ஐந்து ஆண்டு களுக்குப் பிறகு அதாவது 16.11.1997முதல் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது. (இதை இரத்துச் செய்து நாடாளுமன்றம் சட்டத்திருத்தம் செய்துவிட்டது.)
(4) பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் வளர்ந்த பிரிவினருக்கு (Creamy Layer) இடஒதுக்கீடு கொடுக் கக் கூடாது.
(5) சில குறிப்பிட்ட படிப்புகளுக்கும் பதவிகளுக்கும் இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது.
மய்ய அரசு என்ன செய்ய வேண்டும்?
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தடைகள் இடஒதுக்கீட்டுக்குப் பெருங்கேட்டினை உண்டாக்கிவிட்டன. பிற்படுத்தப்பட்ட வகுப்பி னரும் பட்டியல் வகுப்பினரும் பழங்குடியினரும் தங்கள் வகுப்புக்குரிய விகிதாசாரப் பங்கை அடைவதற்கு உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தடையாக இருக்கின்றது; பிரதமர் மோடி அரசு நிறைவேற்றியுள்ள ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்கிற சட்டத்திருத்தம் மேலும் ஒரு தடையாகிவிட்டது. இந்தத் தடைகளை நாடாளுமன்றம் அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்து நீக்க வேண்டும்.சமுதாயத்தில் உள்ள எல்லா வகுப்புகளுக்கும் கல்வியிலும் வேலையிலும் விகிதாசார வகுப்புவாரிப் பங்கு கீழ்கண்டவாறு கிடைத்திட மய்ய அரசு ஆவன செய்ய வேண்டும்.
1) பட்டியல் வகுப்பினர் - 17.0
2) பட்டியல் பழங்குடியினர் - 8.5
3) எல்லா மதங்களையும் சார்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 57.0
4) உல்லா மதங்களையும் சார்ந்த உயர் வகுப்பினர் - 17.5
மொத்தம் - 100.0
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியும் அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையும் 1994ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாநாடுகளை நடத்தி வருகின்றன. பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன்சிங், நரேந்திரமோடி ஆகியோருக்குக் கோரிக்கை மனுக்களையும் அவ்வப்போது அனுப்பி வருகிறது.
இந்தத் தலையங்கக் கட்டுரையை ஒவ்வொருவரும் இரண்டு தடவைகள் படியுங்கள்.
இளைஞர்களிடம் இவ்விவரங்களைக் கொண்டு போய்ச் சேருங்கள். போராடுவோம்! விகிதாசாரம் பெறுவோம்!