இந்திய அரசு 1830 முதல் 1865 வரை மண்டல வாரியாகவும் மாகாண வாரியாகவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் செய்தார்கள், ஆனால். தேர்தலில் போட்டியிடுவது, அரசு வேலைக்கு அமர்த்துவது முதலான பணிகளுக்கு அது போதுமானதாக இல்லை.

பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மதச் சிறுபான்மையினர் ஆகியோர் அவரவர் எண்ணிக்கை விகிதாசாரப்படி இன்று வரையில் எந்த நூற்றாண்டிலும் இந்திய அரசும் மாநில அரசுகளும் அவரவருக்கு உரிய பங்கை அளிக்கவில்லை. இதுவரையில் இந்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் வைக்கப்பட்ட கோரிக்கைகள் காற்றில் விடப்பட்ட கோரிக்கைகளாகவே இருந்தன.

முதலாவது பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையத்தின் ஆய்வு 1953-55 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றது. அப்போது 2999 உள்சாதிகள் எல்லா மதங்களிலும் சேர்த்து இருப்பதாக அந்தப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கணக்கிட்டது. அந்தக் கணக்கை 1961-இல் நேரு அரசாங்கம் ஏற்க முடியாது என்று தள்ளுபடி செய்தது.

அதேபோல் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 3746 உள்சாதிகள் எல்லா மதங்களிலும் இருப்பதாகக் கணக்கிட்டது. அந்த கணக்குப்படி மொத்த மக்கள் தொகையில் 52% பிற்படுத்தப்பட்டோர் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், பிற்காலத்தில் வாஜ்பாயி அரசாங்கம் 200 எண்ணிக்கை சாதிகளையும் காங்கிரசு ஆட்சி மேற்கொண்டு 400 சாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது. ஆனால் அதன்படி மக்கள் விகிதாசாரம் கணக்கிடப்படவில்லை.

நம்முடைய அனைத்திந்தியப் பேரவை 3746+ 600 ஆக 4346 உள் சாதிகளின் விகிதாசார எண்ணிக்கை 57 விழுக்காடு ஆகும் என இந்திய அரசுக்குத் தெரிவித்தது. அதேபோல் பட்டியல் வகுப்பினர் 1975-இல் 15 விழுக்காடு இருப்பதாகக் கணக்கிட்டபடி இன்னமும் அதே 15 விழுக்காடு அனுசரிக்கப்படு கிறது. அதற்குக் காரணம் வீடுதோறும் மக்கள் கணக்கெடுப்பு என்பது துல்லியமாகச் செய்யப்படவில்லை என்பதுதான்.

எனவே, 2021-ஆம் பத்தாமாண்டுக் கணக்கெடுப்பு பிற்படுத்தப் பட்டோர், முற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினர் ஆகியோர் வீடு வாரியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என மார்ச்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியும் அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச்சிறுபான்மையினர் பேரவையும் இந்திய அரசையும் தமிழக அரசையும் வேண்டிக் கொள்கின்றன.

Pin It