தேர்தல் காலம் என்பது பெரும்பாலும் உணர்ச்சிகளால் வழிநடத்தப்படுகிற காலமாகத்தான் இருக்கும். ஆவேசமான உரைகள், அடாவடியான சொற்கள், சட்டென்று பற்றிக்கொள்ளும் கலவரங்கள் ..... இப்படித்தான் நாள்கள் நகரும்! அதிலும் முக்கியமான தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில், சில காரசாரமான விவாதங்கள் வந்து சேரும்!

இதற்கு நேர் மாறாக, ஆழமான, அழுத்தமான தன் உரையை, மிகுந்த கண்ணியத்தோடு, தர்மபுரித் தொகுதியில் உள்ள தடங்கம் என்னும் ஊரில், திமுக கழகத்தின் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் ஆற்றி இருக்கிறார். அந்தத் தொகுதியில்தான் பாமகவின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் மருமகள் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார்.

மூத்த தலைவர்களில் ஒருவரான ராமதாஸ் அவர்களைப் பற்றி பேசும்போது, உரிய மதிப்பளித்து உரையாற்றி இருக்கிறார் முதல்வர். சமூக, அரசியல் கருத்தோட்டங்களை மட்டுமே முன் வைத்துச் சில நியாயமான கேள்விகளை அந்தக் கூட்டத்தில் அவர் கேட்டிருக்கிறார்!dr ramadoss and modiஅவர் கேட்டுள்ள கேள்விகளின் சாரம் இதுதான்.

1. சமூக நீதியைப் பாதுகாப்பதற்காகவே தொடங்கப்பட்ட ஒரு கட்சி, சமூக நீதிக்கு முற்றிலும் எதிரான, இட ஒதுக்கீட்டைச் சிதைத்து, “உயர் ஜாதி ஏழைகள் “ என்று சொல்லி, 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அவர்களுக்குக் கொடுத்திருக்கும் பாஜகவுடன் எந்த அடிப்படையில் கூட்டணி வைத்து இருக்கிறீர்கள்?

2. சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு உத்தரவாதம் கொடுக்கும்படி வரவிருக்கும் அரசை வலியுறுத்துவோம் என்று சொல்லும் பாமக, அப்படி ஒரு உறுதியை பாஜகவிடம் பெற்று இருக்கிறதா? மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அப்படி ஓர் உறுதி இருக்கிறது. ஆனால் மோடியின் உத்தரவாதங்களில் ஒன்றாக அது எங்கேனும் சொல்லப்பட்டிருக்கிறதா?

3. ஐக்கிய முன்னணி அரசு எடுத்த சாதிவாரிக் கணக்கெடுப்பைக் கூட, பாஜக அரசு வெளியிடவில்லையே.... அதனோடு எப்படிக் கூட்டணி?

4. வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில்

பங்கேற்று உயிர் துறந்தவர்களுக்கு, அங்கீகாரமும் உதவித் தொகையும் அளித்தது திமு கழக அரசுதானே! இன்றைக்கும் சமூக நீதிக்காகக் குரல் கொடுத்து கொண்டிருப்பது திமுகதானே!

இப்படித் தரமான கேள்விகளை முன்வைத்த முதலமைச்சர், இறுதியாகச் சொன்னார் .... “ராமதாஸ் அவர்கள் மூத்த தலைவர்களில் ஒருவர். அவர் மீது நான் வைத்திருக்கும் மதிப்பு காரணமாக, இதற்கு மேல் ஒன்றும் பேச விரும்பவில்லை.’’

இதற்கு மேல் பேச என்ன இருக்கிறது?

- சுப.வீரபாண்டியன்