தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து. (சென்ற இதழ் தொடர்ச்சி)

இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் இரண்டாவது உலக யுத்தமும் நடந்து கொண்டிருந்தது. அந்த காலகட்டங்களில் யூதர்களை இனப்படுகொலை செய்து, உலக வரலாற்றில் இன்று வரை வெறுக்கப்படும் இனப் படுகொலையாளர் ஹிட்லரை ஆதரித்ததுதான் ஆர்.எஸ்.எஸ். ஹிட்லரின் ஸ்வஸ்திக் கொடியை தங்கள் கொடியாக வைத்திருந்தார்கள்; முதல் உலகப் போர் நடந்தபோது இந்தியாவில் ஆயுதம் தாங்கிய உள்நாட்டுப் புரட்சியை நடத்தி இந்தியாவை ‘இந்து இராஜ்யமாக்க’த் திட்ட மிட்டார்கள். அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த ஹெட்கேவர் என்ற ‘சித்பவன்’ பார்ப்பனர், தங்களது குருவான திலகரிடம் இந்த யோசனையை முன் வைத்தபோது, திலகர் அது நடைமுறையில் தோல்வியைத் தழுவி விடும் எனக் கூறிவிட்டார்.

ஹிட்லரின் இனப்படுகொலையை பகிரங்கமாகவே ஆதரித்தது ஆர்.எஸ்.எஸ். என்பதை இளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த கோல்வாக்கர் என்ற பார்ப்பனர் பற்றியும், அவர்தான் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு கொள்கையை உருவாக்கித் தந்தவர் என்பதையும் ஏற்கனவே நான் கூறினேன். இதோ ஹிட்லரை அவர் ஆதரித்து எழுதியதை உங்களிடம் படித்துக் காட்டுகிறேன். இது “நாம் அல்லது நமது தேசத்தின் வரையறை” என்ற கோல்வாக்கர் எழுதிய நூல். 1939ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நூல், ஆர்.எஸ்.எஸ். கும்பலின் உண்மை முகத்தை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டியதால், இந்த நூலை வெளியிடுவதையே நிறுத்தி விட்டார்கள். அதற்குப் பிறகு இந்த நூல், எங்கள் தலைவர் கோல்வாக்கர் எழுதிய நூலே இல்லை என்று முழுப் பொய்யை அவிழ்த்து விட்டார்கள்.

ஏதோ மராத்திய மொழியில் ஜி.டி. சாவர்க்கர் என்பவர் எழுதிய நூலை கோல்வாக்கர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தந்தாரே தவிர, அவரே எழுதிய நூல் அல்ல என்று முழுப் பூசணிக்காயை சேற்றில் மறைக்க முயன்றார்கள், இந்த ‘அரிச்சந்திரனின் பேரர்கள்’. ஆனால் அதே நூலின் முன்னுரையில் கோல்வாக்கர், இந்த நூலை எழுதியது ‘நான்தான்’ என்றும், ஜி.டி. சாவர்க்கர் எழுதிய நூல் இந்த நூலை எழுத எனக்கு உத்வேகம் தந்தது என்றும் தெளிவாக விளக்குகிறார். ஏன், இந்த நூலைக் கண்டு ‘அவாள்களே’ மிரள வேண்டும்? இதை எழுதியது எங்கள் தலைவரே அல்ல என்று பொய்யாக மறுக்க வேண்டும்? அந்த நூலிலிருந்து தான் இப்போது ஹிட்லரை ஆதரித்து எழுதியதை உங்களிடம் படித்துக் காட்டுகிறேன்.

“ஜெர்மன் இனப் பெருமை இன்று உலகம் முழுதும் பேசப்படுகிறது. அது தனது இனத்தையும் தூய்மையான கலாச் சாரத்தையும் காப்பாற்றிக் கொள்ளவே ‘செமிட்டிக்’ இனத்தவரான யூதர்களை வெளியேற்றி, உலகத்தையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இதுதான் ஒரு இனத்தின் பெருமையை வெளிப்படுத்தும் மிக உயர்ந்தபட்ச நடவடிக்கை. ஆழமான வேறுபாடுகளைக் கொண்ட வெவ்வேறு இனங்களையும், கலாச்சாரங்களையும் ஒன்றுபடுத்தவே முடியாது என்பதை ஜெர்மன் நிரூபித்திருக்கிறது. இந்துஸ்தானத்தில் வாழும் நமக்கு இது ஒரு படிப்பினை.”

இப்படி ஹிட்லரையும் அவனது கொடூரமான இனப்படுகொலையையும் ஆதரித்தவர்கள்தான் இன்று ‘மெரினா கடற்கரையிலும்’ தேச விரோதிகள் ஊடுருவிவிட்டார்கள் என்று பேசும் ‘தேச பக்த’க் கொழுந்துகள்.

இது தொடர்பாக மற்றொரு வரலாற்றுத் தகவலை யும் கட்டிக் காட்ட முடியும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நாக்பூரில் உருவாக்கிய அய்ந்து பார்ப்பனர்களில் ஒருவரான பி.எஸ். மூஞ்சே, 1930இல் இலண்டன் வட்ட மேஜை மாநாட்டுக்குச் சென்றபோது, அங்கிருந்து இத்தாலிக்குச் சென்று பாசிசத் தலைவர் முசோலினியை சந்தித்துப் பேசியதை கிறிஸ்டோப் ஜாபர்லெட் என்பவர் தனது ஆய்வு நூலில் (இந்து தேசிய இயக்கமும், இந்திய அரசியலும்) சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து மார்சியா காசலோரி எனும் இத்தாலிய ஆய்வாளர், இது தொடர்பாக இத்தாலி மற்றும் மும்பை ஆவணக் காப்பகங்களில் உள்ள ஆய்வேடுகளைப் படித்து ‘எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ இதழில் (ஜன. 22, 2000) ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.

வட்டமேஜை மாநாட்டுக்குச் சென்ற பி.எஸ். மூஞ்சே, 1931இல் இத்தாலிக்குச் சென்று முசோலினியைச் சந்தித்தார். முசோலினி இயக்கம் நடத்திய பல்வேறு அமைப்புகள், நிறுவனங்களை நேரில் பார்த்து 13 பக்கங்களுக்குக் குறிப்புகள் எழுதியிருக்கிறார் மூஞ்சே. 1931 மார்ச் 19ஆம் தேதி மாலை 3 மணி யளவில் வெனிஷீய அரண்மனையில் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியை சந்தித்து, அவர் நடத்தி வந்த பாசிச அமைப்புகளை வெகுவாகப் பாராட்டினார்.

“வளரும் நாடுகளுக்கு இதுபோன்ற இராணுவ அமைப்புகள் மிகவும் தேவை. குறிப்பாக இந்தியாவுக்குப் புத்துயிர் ஊட்ட இதுபோன்ற இராணுவ அமைப்புகள் அவசியம் தேவை. இதே நோக்கில் நானாகவே சிந்தித்து, எங்கள் நாட்டில் ஏற்கனவே ஒரு அமைப்பை நான் உருவாக்கியுள்ளேன். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் நாட்டு இராணுவ அமைப்புகள் பற்றிப் புகழ்ந்து பேசுவேன்”

- என்று கூறி விடை பெறுகிறார் மூஞ்சே.

இளைஞர்களிடம் பாசிசக் கருத்துக்களைத் திணிப்பதுதான் இந்நிறுவனங்களின் நோக்கமாகும். இதை முன்மாதிரியாகக் கொண்டே ஆர்.எஸ்.எஸ். பயிற்சி அமைப்புகளை இந்தியாவில் உருவாக்கினர்.

மூஞ்சே இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு ஹெட்கேவருடன் இணைந்து பாசிசம் பற்றித் தீவிரமாக விவாதித்தார். 1934இல் பாசிசமும்-முசோலினியும் என்ற தலைப்பில் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தனர். இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தவர் காவ்தே சாஸ்திரி. ‘தி மராத்தா’ என்ற பத்திரிகைக்கு மூஞ்சே ஒரு பேட்டியளித்தார்.

“இந்தியாவில் இராணுவ ரீதியான இளைஞர் இயக்கம் அமைக்கப்பட வேண் டும். ஜெர்மனி இளைஞர் இயக்கத்தைப் போலவும், இத்தாலியில் உள்ள பலில்லா இயக்கத்தைப் போலவும் (இராணுவப் பயிற்சியுடன் பாசிச சிந்தனைகளையும் பயிற்றுவிக்கும் இயக்கம்) அந்த இயக்கம் அமைய வேண்டும். இந்த இயக்கங்களை நானே நேரில் சென்று பார்வையிட்டேன். என்னுள் மிகப் பெரும் தாக்கத்தை இந்த இயக்கங்கள் உருவாக்கிவிட்டன”

- என்று அந்தப் பேட்டியில் மூஞ்சே கூறினார்.

“இந்து தர்ம சாஸ்திரங்களின் அடிப் படையில் இந்துயிசக் கோட்பாட்டை உருவாக்கி இந்தியா முழுவதும பரப்பு வதற்கான திட்டம் ஒன்றை ஆலோசித்து வருகிறேன். ஆனால் சிவாஜி, முசோலினி அல்லது ஹிட்லரைப் போன்ற ஒரு இந்து சர்வாதிகாரியின் கீழ் நமக்கு சுயராஜ்யம் கிடைத்தால்தான், இந்தத் திட்டத்தை அமுல்படுத்த முடியும். அதற்காக, சர்வாதி காரிகள் உருவாகிறவரை, நாம் கைகளைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியாது. நாம் விஞ்ஞான ரீதியாக ஒரு திட்டத்தை உருவாக்கிப் பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும்”

- என்று ஹெட்கேவர், கோகலே ஆகியோரை சந்தித்துப் பேசும்போது மூஞ்சே கூறுகிறார்.

பிரிட்டிஷ் ஆட்சியின் உளவுத் துறை அறிக்கை களும், மூஞ்சேயின் இந்தத் திட்டங்களை உறுதி செய்கின்றன.

“எதிர்கால இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு - இத்தாலி ‘பாசிச’மாகவும், ஜெர்மனி நாசிசமாகவும் தன்னை உறுதிப் படுத்திக் கொள்ளும். இது மிகைப்படுத்தப் பட்டதாகக் கருத வேண்டாம்”

- என்று பிரிட்டிஷ் உளவுத் துறை அறிக்கையும் இந்த ஆபத்தைப் பதிவு செய்திருக்கிறது.

1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி, அதாவது இந்தியாவுக்கு ‘சுதந்திரம்’ வந்த அந்த நாளில் இவர்கள் என்ன செய்தார்கள்?

நாடெங்கும் மூவர்ண தேசியக் கொடி ஏற்றப்பட்ட அந்த நாளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நடத்திய நாடகம் என்ன? நாட்டுப் பற்றுக்கும் தேச பக்திக்கும் தாங்களே பிறப்பெடுத்தவர்கள் என்று மார் தட்டிக் கொள்வதால் இதை நாம் சுட்டிக்காட்டிக் கேட்கிறோம்.

இதோ பரபரப்பான ‘Freedom at Midnight’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக் காட்டுகிறோம்.

“1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி, பூனா நகரத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அங்கும் கொடிதான் ஏற்றப்பட்டது. ஆனால் அது சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடி அல்ல; அது காவிக் கொடி; 500 ஆண்கள் அந்த இடத்திலே திரண்டிருந்தனர். அய்ரோப்பாவையே நடுங்க வைத்த ஹிட்லரின் ‘ஸ்வஸ்திக்’ கொடியைத்தான் அங்கே ஏற்றினார்கள்.

ஹிட்லர் கொடியிலிருந்து மிகச் சிறிய மாற்றம் மட்டுமே அதில் செய்யப்பட் டிருந்தது. அந்தக் கொடியில் பொறிக்கப் பட்டிருந்தது ஆரியச் சின்னம். அங்கே கூடியிருந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். என்ற வகுப்புவாத பாசிச அமைப்பைச் சார்ந்தவர்கள்”

- என்று அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்த ‘சுதந்திரத்தை’ நாமும்கூட ஏற்கவில்லை; வந்த சுதந்திரம் பார்ப்பன-பனியாவுக்கே என்று கூறுகிறோம். அதற்காக நம்மை தேச விரோதிகள் என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களின் சுதந்திர எதிர்ப்பு மட்டும் ‘தேச பக்தி’யாகி விடுமா? பதில் கூற வேண்டும்.

அது மட்டுமல்ல; மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவலும் அதே நூலில் அடுத்த வரியிலேயே தரப்பட்டிருக்கிறது.

“அந்த இடத்திலே கூடியிருந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்களில் சிலருக்கு ஒரு உத்தரவு பணிக்கப்பட்டிருந்தது! அதற்கு சரியாக 48 மணி நேரத்துக்கு முன், கராச்சியில் மவுண்ட்பேட்டன் அவர் களோடு ஜின்னாவையும் சேர்த்து சுட்டுக் கொல்ல வேண்டும் என்று உத்தரவு பெற் றிருந்தவர்களும் அங்கே குழுமியிருந்தனர். அந்த முரட்டுத்தனமான வெறியர்கள் கூட்டம் தங்களை ஆரியர்களின் வாரிசு களாக எண்ணிக் கொண்டிருந்தது”

- என்ற தகவலும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவுக்கு ‘சுதந்திரம்’ வழங்குவது பற்றி பேச்சு வார்த்தை நடத்த வந்த மவுண்ட்பேட்டனையும் பாகிஸ்தான் தனிநாடு கேட்ட ஜின்னாவையும் தீர்த்துக் கட்ட சதித் திட்டம் போட்டு தோல்வி அடைந்த கலவரக் கும்பல்தான் இந்த ஆர்.எஸ்.எஸ்.!

மேலும் அந்த நூலில் தொடர்ந்து தரப்பட்டிருக்கிற தகவலைப் பாருங்கள்.

“அந்தக் கூட்டம் காந்தியை வெறுத்தது; காந்தியின் அஹிம்சை முறையைக் கோழைத்தனம் என்று அந்தக் கூட்டத்தினர் கூறினர். முஸ்லீம் மைனாரிட்டிகளோடு சகோதரத் தன்மையோடு பழக வேண்டும் என்று காந்தி சொன்னதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்களின் வாரிசுகளாக அந்தக் கூட்டம் தங்களைக் கருதிக் கொண்டது. முஸ்லீம்கள் தனிநாடு பெற்றதற்கு ஒரே காரணம் காந்திதான் என்று அவர்கள் சொன்னார்கள். அந்தக் கூட்டத்திலே முதல் வரிசையிலே நின்று கொண்டிருந்தார் நாதுராம் கோட்சே.”

(‘Freedom at Midnight’ என்ற நூலில் பக்கம் 273, 275-இல் கூறப்பட்டிருக்கிற தகவல்தான் மேலே தரப்பட்டிருக்கிறது. )

ஆம்! காந்தியாரை சுட்டுக் கொன்ற அதே நாதுராம் கோட்சே தான் அன்றைய தினம் (1947 ஆகஸ்ட் 15இல்) ஆர்.எஸ்.எஸ்.காரர்களோடு சேர்ந்து கொண்டு ஆரியக் கொடியை ஏற்றியவர்!

அந்தக் கோட்சே ஒரு பத்திரிகையின் ஆசிரியர். அந்த பத்திரிகையின் பெயர் ‘Hindu Rashtra’ என்பதாகும்.

‘சுதந்திர’ நாளில் அந்தப் பத்திரிகையின் தலையங்கப் பகுதி, கறுப்பு மய்யினால் நிரப்பப்பட்டு வெளியே வந்தது.

ஆரியக் கொடி ஏற்றியபோது, முன் வரிசையிலே நின்று கொண்டிருந்த நாதுராம் கோட்சே உணர்ச்சி வசப்பட்டு அலறுகிறான்!

“இந்துக்கள் கொலை செய்யப்படுகிறார்கள்; இந்துப் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள்; இதை மறைப்பதற்கே சுதந்திரம் பேசுகிறார்கள். இத்தனைக்கும் காரணம் காங்கிரஸ்தான்; எல்லாவற்றிற்கும் மேலாக காந்தி தான்”

என்று கோட்சே அப்போது அலறுகிறான். (ஆதாரம்: மேற்குறிப்பிட்ட அதே நூல்)

உடனே நாதுராம் கோட்சே, 500 தொண்டர்களோடு சேர்ந்து ஆரியக் கொடிக்கு ‘சல்யூட்’ செய்கிறான், குனிந்து தரையை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு, “என்னை வளர்த்த தாய் நாடே; உனக்காக எங்கள் உடல் சாகத் தயார்”

என்று பிரகடனப்படுத்துகிறான்.

அதற்குப் பிறகு 5 மாதங்களில் 1948, ஜனவரி 30இல் அதே நாதுராம் கோட்சே என்ற பார்ப்பனரால் காந்தியார் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

(தொடரும்)

Pin It