‘ஏழு தமிழர்களை விடுதலை செய்ய மாட்டோம்’ என்று கொக்கரித்திருக்கிறார், பார்ப்பனர் சுப்ரமணியசாமி. சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில் 161ஆவது சட்டப் பிரிவின் கீழ் தமிழக அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டாமா என்ற கேள்விக்கு, அமைச்சரவை முடிவைத் தூக்கிக் குப்பையில் போடு என்று திமிருடன் பதில் கூறியிருக்கிறார்.

சுப்ரமணியசாமி 7 தமிழர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவரா? உச்சநீதிமன்றம், அமைச்சரவை முடிவுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவரா? அப்படி ஒரு அதிகாரம் அவருக்கு எப்படி கிடைத்தது? ‘மனுதர்மம்’ வழங்கியுள்ள பார்ப்பன அதிகாரத் திமிரா?

28 ஆண்டுகளாக ஏழு தமிழர்களும் சிறையில் வாடுகிறார்கள். சிறைவாசிகளின் தண்டனைக் குறைப்புக்கு சட்டம் வழங்கியுள்ள உரிமைகள்கூட, இவர்களுக்குக் கிடையாதாம். அதே நேரத்தில் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் ஒவ்வொரு வழக்கிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும் இந்த காவி பயங்கரவாதிகள் விடுதலையை எதிர்த்து பா.ஜ.க.வின் மோடி ஆட்சி, மேல்முறையீட்டுக்குக்கூட செல்லவில்லை.

2007ஆம் ஆண்டு பிப். 18ஆம் தேதி இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் நோக்கிச் சென்ற சம்ஜவுத்தா விரைவு இரயில், அரியானாவில் உள்ள திவானா கிராமம் வழியாக ஓடிக் கொண்டிருந்த போது ஒரு பெட்டியில் பயங்கர குண்டு வெடித்தது. இதில் பயணித்த 68 அப்பாவி பயணிகள் கொல்லப்பட்டனர். இதில் 48 பேர் பாகிஸ் தானியர்கள். முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவரான அசீமானந்தா, லாக்கேஷ் சர்மா, கமல் சவுகான், ராஜிந்தர் சவுத்ரி என்ற நான்கு காவி பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் கட்டுப்பாட் டிலுள்ள தேசியப் புலனாய்வு நிறுவனம் (என்.அய்.ஏ.), இந்த வழக்கை விசாரித்தது. சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த போதே அசீமானந்தா, தனது செயலுக்காக மனம் வருந்தி, இந்த குண்டு வெடிப்பை நடத்தியது தாங்கள் தான் என்றும், எப்படி அதை நடத்தினோம் என்றும் விரிவாக ‘கேரவான்’ இதழுக்கு பேட்டி அளித்திருந்தார். குண்டுவெடிப்பு நடந்த தொடர்வண்டிப் பெட்டிக்கு அருகே உள்ள பெட்டியில் வெடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. வழக்கிற்கு இவை முக்கிய சாட்சித் தடயம். ஆனால் இந்த சாட்சித் தடயத்தை சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் தேசிய புலனாய்வு மய்யம் மறைத்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நேரடி சாட்சியமளித்தவர்கள் 250 பேர். இதில் பலர் பிறகு பிறழ்சாட்சிகளாக மாறினர்.

அனைவரையும் விடுதலை செய்த அரியானா சிறப்பு நீதிமன்றம், அரசுத் தரப்பு குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறிவிட்டது என்று கூறியிருக்கிறது. புலன் விசாரணையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஹரியானா காவல்துறை அதிகாரி வழக்கில் அரும்பாடுபட்டு தாங்கள் சேகரித்த தடயங்களை நீதிமன்றத்தில் திட்டமிட்டு புலனாய்வுத் துறை சமர்ப்பிக்கவில்லை என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். குண்டு வெடிப்புக்கு பலியான பாகிஸ்தானியரின் மகளான ரகிலா வாக்கீல் என்ற பெண், தன்னை ஒரு சாட்சியாக இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலம் சமர்ப்பித்த மனுவை காரணம் ஏதும் கூறாமலேயே சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

2007ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அசீமானந்தா தலைமையிலான இதே நால்வர் குழு தான் மெக்கா மஸ்ஜீத், அஜ்மீர்தர்கா ஆகிய இஸ்லாமிய வழிபாட்டு இடங்களில் குண்டு வைத்தது என்று தேசியப் புலனாய்வுக் குழு குற்றம்சாட்டி கைது செய்து வழக்குத் தொடர்ந்தது. மெக்கா மஜ்ஜித் குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். அஜ்மிர்தர்கா குண்டு வெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்குகளிலிருந்தும் இந்த நான்கு காவி பயங்கரவாதிகளும் சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

2017, 2018ஆம் ஆண்டுகளில் இந்த வழக்கின் தீர்ப்பு வந்தது. ஆனால் மோடி ஆட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய புலனாய்வுத் துறை வழக்கை மேல்முறையீடு செய்யவே இல்லை. இப்போது ‘சம்ஜவுத்தா’ குண்டுவெடிப்பு கடைசி வழக்கிலிருந்தும் விடுதலை பெற்று விட்டார்கள். இந்த வழக்கிலும் மேல் முறையீடு செய்யப் போவதாக புலனாய்வுத் துறை உறுதியாகக் கூறவில்லை. பரிசீலிப்போம் என்று கூறுகிறது.

வழக்கை முறையாக நடத்தவில்லை என்று பாகிஸ்தான் தூதரக அதிகாரி இந்திய தூதரக அதிகாரியை அழைத்து எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்.

குண்டு வெடிப்பில் பலியான அப்பாவி மக்கள் பாகிஸ்தானியர் மட்டுமல்ல; இந்தியர்களும் உண்டு.

சுமார் 80 அப்பாவி பொது மக்களை குண்டு வைத்து கொலை செய்த இந்து பயங்கரவாதிகளைக் காப்பாற்றிய நடுவண் பா.ஜ.க. ஆட்சி, 28 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு, உச்சநீதிமன்றம் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்திய பிறகும் தமிழக அமைச்சரவை அதற்கு ஒப்புதலை தந்தப் பிறகும் இராஜிவ் கொலை வழக்கில் நேரடி தொடர்பே இல்லாத இந்த 7 தமிழர்களை விடுதலை செய்ய மறுக்கிறது, தமிழக ஆளுநர் மேலிட உத்தரவையேற்று, கோப்பைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்.

சுப்ரமணியசாமி, பார்ப்பனத் திமிருடன் தமிழக அமைச்சரவை தீர்மானத்தைக் குப்பையில் போடு என்கிறார்.

“பார்ப்பான் என்றால் தண்டனை வழங்காதே; சூத்திரன் என்றால் தலையை வெட்டு” என்ற மனுதர்மச் சட்டத்தைத்தான் இப்போதும் பா.ஜ.க. ஆட்சி நடைமுறைப்படுத்துகிறதா? இது நேர்மையா? நியாயமா?

Pin It