சென்னையில் நடைபெற்ற இந்திய வரலாறு காங்கிரஸ் 81ஆவது ஆண்டு மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள், “இன்று நாடு எதிர்கொள்ளும் ஆபத்து வரலாற்றுத் திரிபு” என்று பேசியிருப்பது ஆழ்ந்த கவனத்திற்கு உரியது.

குகைகளில் மனிதன் தன் கையில் அகப்பட்டவைகளை வைத்துத் தன் சிந்தனை ஓட்டங்களுக்குத் தக்கவாறு கோடுகளை இட்டபோது, மனித குல வரலாறு அதனுடன் தொடங்கியது. ஒரு நிகழ்வு பதிவு செய்யப்படுகின்ற போது அது வரலாறாய் மாறுகிறது. ஆக ஒரு செய்தியை, நிகழ்வைப் பதிவு செய்வது, எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வரலாறால் என்ன பயன்? கடந்த கால நிகழ்வுகள் எப்படி நிகழ்காலத்திற்கு வழி வகுத்துள்ளன, என்பதை அறிவதன் மூலம், தவறுகளைத் திருத்திக்கொண்டு எதிர்காலத்தை அமைக்க முயல்வதே வரலாற்றின் முதன்மையான நடைமுறைப் பயன்பாடாக இருக்க முடியும்.stalin 306இப்படி ஒரு பயன்பாட்டை வரலாற்றில் இருந்து பெறவேண்டுமானால், கடந்த காலங்களைப் பக்கச்சார்பு இல்லாமல் அதை அணுக வேண்டும். இல்லாவிட்டால் திரிபுவாதத் தவறுகள் வரலாற்றில் நிலைபெற்று, எதிர்காலத்திற்கு எந்தப் பயனும் அளிக்காத வெற்றுப் பக்கங்களாகவே இருக்கும். திரிபுகள் இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி, வீழ்ச்சிக்கு வழிவகுத்து விடும்.

நாட்டின் வரலாற்றைப் பார்ப்பனிய வரலாறாக, பார்ப்பனீயத்திற்குச் சார்பாக மாற்றிப் பிழையாகத் திருத்தி எழுதத் துடிக்கும் இந்துத்துவாவாதிகள் சூழ்ந்துள்ள நிலையை இன்று பார்க்கிறோம்.

 இளைஞர்களுக்குப் பிழையாய் கடந்த காலங்களைக் கற்பிப்பதன் மூலம், தாங்கள் விரும்பும் மோசமான எதிர்காலத்தைக் கட்டமைக்க எண்ணுகின்றார்கள் அவர்கள். இத்திரிபுகள் நாட்டிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் ஒருபோதும் பயன் கொடுக்காது.

இது ஒருபுறம் என்றால், ஒருவர் தமிழ்ப் பேரரசுகளின் காலம் பொற்காலமாக விளங்கியது என்று கூறினார். அது அவரின் பார்வை. ஆனால் அவரின் கூற்றில் சில மாறுபாடுகள் இருக்கின்றன. வேளாண் நிலத்தை நம்பி வாழ்ந்த வேளாண் தமிழர்களிடம் இருந்து விளைநிலங்களைப் பிடுங்கி, பார்ப்பனர்களுக்குத் தானமாக, இறையிலி நிலங்களாக அளித்தது சோழப் பேரரசு என்பது வரலாறு. சான்றுகளோடு வரலாறு பேசப்பட வேண்டும். வரலாறு என்பது வேறு, வரலாறு போன்ற புனைச் சுருட்டுக் கதைகள் வேறு. வரலாறு உண்மையாக இருக்க வேண்டுமா அல்லது புனைச் சுருட்டாக இருக்க வேண்டுமா?

 மகாபாரதம், இராமாயணம் போன்றவற்றை வரலாறாக உலகம் ஏற்குமா? ஏற்கனவே மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று எண்ணுகையில் பார்ப்பனீயம் தங்கள் பெருமைகளைக் கூற இது போன்ற பல புனைச் சுருட்டுகளை வரலாறாக மாற்றியமைக்கும் வேலையைச் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறது. வரலாற்றில் திரிபு என்பது மிக ஆபத்தானது.

இதுபோன்ற சூழ்நிலையில்தான் முதலமைச்சர் தளபதி அவர்கள், கற்பனைக் கதைகளைச் சிலர் வரலாறாகச் சொல்லி வருவதையும், அறிவுமிக்க சமுதாயம் அதனை ஏற்றுக் கொள்ளாது என்றும் எடுத்துக்காட்டியதோடு, இன்று நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்து என்பது இந்த வரலாற்றுத் திரிபுதான் என்றும் அடையாளம் காட்டியுள்ளார்.

தளபதியின் வரலாறு குறித்த வழிகாட்டுதல், நாட்டிற்கு மிகத் தேவையானது.

 வரலாற்றுத் திரிபுகளை, புனைச் சுருட்டுகளைக் கண்டு அவைகளைக் களையெடுக்க வேண்டும். அறிவியல் முறைப்படி ஆராய்ந்து, உண்மை வரலாற்றை எழுதுவோம், எதிர்காலம் பயன்பெற!

- மதிவாணன்

Pin It