கொளத்தூரில் வீரவணக்கப் பொதுக் கூட்டம்

சேலம் மாவட்ட ஈழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் மாவீரர் நாள் நிகழ்ச்சி சேலம் மாவட்டம், கொளத்தூர் புலியூர் பிரிவில் தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடம் முன்பு 27.11.2022 அன்று மாலை 6-00 மணியளவில் நடை பெற்றது. மாலை 7-00 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற வீரவணக்கப் பொதுக் கூட்டத்துக்குத் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்கொளத்தூர் மணி தலைமை தாங்கினார்.

திவிக சேலம் மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், கழகத் தோழர் ஓ. சுதா, விசிக வடக்கு மாவட்டச் செயலாளர் வசந்தன், விசிக ஒன்றிய செயலாளர் சேட்டு குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புலியூர் பிரிவில் உள்ள பொன்னம்மான் நினைவு நிழற் கூடத்தில் பொதுமக்கள் உணர்வாளர்கள் ஆகியோர் வீர வணக்கம் செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.kolathoor mani viduthalai rajendran and thirumaஈழ ஆதரவாளர்களால் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் வீரவணக்க பாடல் சரியாக மாலை 06.05 மணிக்கு ஒலிக்கப்பட்டது. உணர்வு மிக்க அந்த வீரவணக்கப் பாடலுக்கு கூடியிருந்த ஈழ விடுதலை ஆதரவாளர்கள் அனைவரும் அமைதி காத்து ஈழ விடுதலைப் போரில் வீரமரணம் அடைந்த விடுதலை புலிகளுக்கு அகவணக்கம் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து பெண்கள், குழந்தைகள் என பொது மக்களும், ஈழ விடுதலை ஆதரவாளர்களும், தோழர்களும் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து விடுதலைப் போராளிகளின் ஈகத்தை நினைவு கூறும் வகையில் மெழுகுவர்த்தியை ஏந்தியும், பொன்னம்மான் நினைவு நிழல் கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவுச் சின்னத்திற்கு வீர வணக்கமும் செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு ஆகியோர் வீரவணக்கம் செலுத்தினார்கள்.

வீரவணக்க நிகழ்ச்சியை தொடர்ந்து கொளத்தூர் பேருந்து நிலையம் முன்பு வீரவணக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த அப்பொதுக் கூட்டத்தின் முதல் நிகழ்வாக ஈழ விடுதலைக்கு உழைத்திட்ட, தொல் திருமாவளவன், கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், வன்னி அரசு ஆகியோர் குறித்த குறும்படம் காணொளி வடிவில் பெரிய திரைகளில் மக்கள் முன்பு திரையிடப்பட்டது.

2008 க்குப் பின் கொளத்தூர் புலியூர் பிரிவு தளபதி பொன்னம்மாள் நினைவு நிழல் கூடத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளின் தொகுப்பும் குறும்படமாக திரையிடப்பட்டது.

பொதுக் கூட்டத்தின் தொடக்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய புதிய பதிப்பான “பெரியாருக்கு எதிரான முனை மழுங்கும் வாதங்கள்” எனும் நூல் விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களால் வெளியிடப்பட்டது. இந்நூல் நன்செய் பதிப்பகத்தில் மூலம் மக்கள் பதிப்பாக குறைந்த விலைக்கு மறு வெளியீடாக வெளியிடப்பட்டது. அந்நூலின் விற்பனைத் தொகை முழுவதும் 'புரட்சிப் பெரியார் முழக்க' வளர்ச்சி நிதியாய் வழங்கப்படும் என நன்செய் பதிப்பகம் கவிஞர் தம்பி, திருச்சி அரசெழிலன் ஆகியோர் அறிவித்தனர்.

அடுத்து உடுமலை சாந்தி இயல் எழுதிய ‘உயிர்க் காற்று’ என்ற நூலினையும் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு பெற்றுக் கொண்டார். தொடர்ந்து கரூர் மலைக் கொழுந்தன் எழுதிய ‘போலிகளோடு ஒரு போர்’ எனும் நூலையும் தொல் திருமாவளவன் வெளியிட்டார்.

அடுத்து விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் மாவீரர் நாள் உரை நிகழ்த்தினார்கள். நிறைவாக திவிக நகரத் தலைவர் இராமமூர்த்தி நன்றி கூறினார்.

Pin It