subavee_437ஆசிரியர்: சுப.வீரபாண்டியன்

கிடைக்குமிடம்: கலைஞர் கருவூலம், அண்ணா அறிவாலயம்,

தேனாம்பேட்டை, சென்னை-18

விலை:ரூ.50/-

***

தன் வலைப்பூவில் பேராசியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகள், ஈழம் தமிழகம் நான் என்ற தலைப்பில் சில பதிவுகளோடு நூலாக வெளிவந்திருக்கிறது.

நூலாசிரியர் ஈழம் தொடர்பாகத் தன் என்னுரையில் “பல பழைய வரலாறுகள் திரித்தும் மாற்றியும் சொல்லப்படுகின்றன. உண்மைகள் பல திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன” என்று அவரின் அனுபவத்திலும், பார்வையிலும் இருந்து நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார் உரிய சான்றுகளுடன்.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த பொழுது விடுதலைப் புலிகளுக்கு முழுமையான ஆதரவாளராக இருந்தார், ஆதரவு கொடுத்தார் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இருந்தாலும் அவரின் புலிகள் ஆதரவு நிலைப்பாடும் கூட, ஒரு கட்டத்தில் சில மாற்றங்கள் பெற்றன என்ற செய்தியை இந்நூல் கூறுகிறது.

1987ஆம் ஆண்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரை, அன்றைய வெளிநாட்டுத் தூதுவர் ஜி.பார்த்தசாரதி சென்று சந்தித்தார்.

 இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகளுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்த சூழலை எம்.ஜி.ஆருக்குப் பார்த்தசாரதி விளக்கிய பின், அவரே தரும் செய்தியை நூலாசிரியர் மேற்கோள் காட்டி இருக்கிறார்.

“என் விளக்கங்களை எம்.ஜி.ஆர். பொறுமையுடன் கேட்டார். பிறகு, இரு முக்கியமான குறிப்புகளைக் கூறினார். முதலில், உருவாக விருக்கும் இடைக்கால நிர்வாகக் குழுவில், இந்திய அரசு விடுதலைப்புலிகளுக்கு மிகத் தாராளமாக இடமளித்து விட்டதாகவும், ஈ.பி.ஆர்.எல்.எப். இன்னும் கூடுதல் பிரநிதித்துவம் பெறும் தகுதி உள்ளது என்றும் தான் உணர்வதை வெளிப்படுத்தினார். இரண்டாவதாக, நம் நாட்டு நலன் அடிப்படையில் ஸ்ரீலங்காவில் பிரதமமந்திரி (ராஜீவ் காந்தி) தேவை எனக் கருதி எடுக்கும் எல்லா நடவடிக்கைகளையும் தான் ஆதரிப்பதாக நான் பிரதமரிடம் கூறவேண்டும் என்றார்”

“தெளிவாகப் பேச இயலாத நிலையிலும், விடுதலைப் புலிகள், இந்தியாவின் பொறுமைக்கான எல்லையைத் தாண்டி விட்டனர் என்று எம்.ஜி.ஆர். உறுதி செய்தார். தமிழ்நாட்டில் மீதமுள்ள புலிகள் உறுப்பினர்களை ஒடுக்குமாறும் தன் அரசுக்கு அவர் உத்தரவிட்டார்” என்ற ஜி.பார்த்தசாரதியின் கூற்றைச் சான்றாக முன்வைக்கிறார் நூலாசிரியர் சுப.வீரபாண்டியன்.

இந்நூலின் இன்னொரு முக்கிய செய்தி கவனத்தை ஈர்க்கிறது.

1973ஆம் ஆண்டு டெலோ இயக்கத் தலைவர்களுள் ஒருவரான குட்டிமணியைக் கைது செய்து சிங்கள அரசிடம் முதல்வர் கலைஞர் ஒப்படைத்ததால், வெலிக்கடைச் சிறையில் அவர் கொல்லப்பட்டார் என்று திரு பழ. நெடுமாறன், 26.06.2012 நாளிட்ட தினமணி கட்டுரையில் கூறியிருந்தார்.

“குட்டிமணியின் மரணத்திற்குக் காரணம் சிங்களவர்களல்ல, நம்மவர்களில் ஒருவரான கருணாநிதிதான்” என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

அது உண்மையா, நடந்தது உண்மை என்ன என்பதற்கான ஆதாரத்தை இந்நூலில் சரியாகப் பதிவு செய்கிறார் ஆசிரியர் சுபவீ.

தன்னை வெலிக்கடைச் சிறையில் சந்தித்த வழக்கறிஞர் கரிகாலனிடம், குட்டிமணி தான் எழுதிய கடிதம் ஒன்றைக் கொடுத்து, அதை, இயக்கத் தலைவர் தங்கதுரையின் ஒப்புதல் பெற்று, வெளியிடுமாறு கூறியிருக்கிறார். அதன்படி ஒப்புதல் பெற்றக் கடிதத்தை கரிகாலன் அனுப்ப, அது 05.05.1983ஆம் நாள் முரசொலியில் வெளியாகிறது.அக்கடிதத்தின் ஒரு பகுதியை இந்நூல் பதிவு செய்கிறது. அந்தப் பகுதி:

“எமது வழக்கறிஞர் திரு ச. நவரத்தினம்(கரிகாலன்) அவர்கள் சிறைக்கூடத்தில், என்னையும், என் நண்பர் ஜெகனையும் சந்தித்தார்... 1973ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் வேதாரண்யத்தில் என்னைக் கைது செய்து இலங்கைப் பொலிசாரிடம் கையளித்தமைக்குக் கலைஞரின் கழக அரசு உடந்தையாக இருந்தது என்றொரு கருத்து, தமிழ்நாட்டில் ஒரு சாரார் மத்தியில் கூறப்படுவதாகச் சொன்னார்... ............. எம் நிலையை நாம் வெளிப்படுத்தி இருந்தால், கலைஞரின் கழக அரசு, இந்திய மத்திய அரசு எம்மை இலங்கைச் சிங்கள அரசிடம் கையளிக்க விடாது தலையிட்டுத் தடுத்திருக்கும் என்பது உறுதி.

இந்தப் பின்னணியில், தலைவர் கலைஞர் எம்மைக் காட்டிக் கொடுத்தார் என்றோ, இலங்கை அரசிடம் கையளித்தார் என்றோ பழி சுமத்துவது, உண்மைக்குப் புறம்பானதும், நியாய மற்றதுமாகும். இதனால் கலைஞரும், கழகத் தோழர்களும் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம்”

இதே செய்தியை அதற்கு முன்பே 04.01.1984ஆம் நாளிட்ட ஜூனியர் விகடனில் கரிகாலன் எழுதியிருப் பதையும் நூல் உறுதி செய்கிறது.

1987ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்களுக்கு உடன்பாடில்லாத இந்திய - இலங்கை உடன் பாட்டை அதாவது ராஜீவ் - ஜெயவர்தன உடன்பாட்டைக் கலைஞர் கண்டிக்கவில்லை என்றும் சொல்லி வருகிறார் நெடுமாறன்.

ஆனால் அதே 1987ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று சேலத்திலும், 10 அன்று வேலூரிலும் கலைஞர் பேசும் போது, “கந்தன் நிலத்தைக் கருப்பன் விற்கிறான். கருப்பன் கந்தனிடம் வாங்குகிறான். ஒப்பந்தத்தில் கையயழுத்துப் போடுகிறவர்கள் யார்? கந்தனும் கருப்பனும்தான் கையயழுத்துப் போட வேண்டும். வேண்டுமானால் பக்கத்தில் இருக்கும் கடம்பன் சாட்சிக் கையயழுத்துப் போடலாம்... சாட்சியும், நிலத்தை வாங்குகிறவனும் போட்டுக்கொண்டால் அந்த அக்ரிமென்ட் செல்லுமா? அந்த ஒப்பந்தம் செல்லாது. இன்றைக்கு அப்படித்தான் ராஜீவ்காந்தி போட்ட கையயழுத்து சாட்சிக் கையயழுத்து. ஜெயவர்தனாவோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டிய கையயழுத்து எங்கே?” என்று ராஜீவ் - ஜெயவர்தனாவின் ஒப்பந்தத்தைக் கண்டித்துப் பேசியக் கலைஞரின் பேச்சைச் சுட்டிக்காட்டும் நூலாசிரியர், அந்த ஒப்பந்தம் குறித்த நிகழ்வையும் பதிவு செய்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மருத்துவக் கல்லூரியில் 25 இடங்களும், பொறியியல் கல்லூரியில் 25 இடங்களும், வேளாண்மைக் கல்லூரியில் 10 இடங்களும், தொழில் நுட்பக் கல்லூரியில் 35 இடங்களும் ஈழ மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டதை, ஜெயலலிதா ஆட்சியின்போது, அந்த உரிமையை மறுத்துவிட்டார். அதனால் அவரின் ஆட்சிக் காலமான 5 ஆண்டுகளில் 125 மருத்துவர்களை, 125 பொறியாளர்களை, 50 வேளாண் திறனாளர்களை, 125 பொறியாளர்களை ஈழத்தமிழ்ச் சமூகம் இழந்தது. மீண்டும் கழக ஆட்சியின்போது, இழந்த அனைத்துக் கல்வி வாய்ப்புகளையும் மீட்டு மீண்டும் தந்த கலைஞர், சட்டத்துறையிலும் 5 இடங்கள் ஒதுக்கித்தந்தார்.

இவைகளை எல்லாம் மறைத்துவிட்டு, மாறாக 1973இல் இறந்த பெரியாரை 1977ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்.மேடைக்கு அழைத்து வந்த அதிசயத்தையும், 1943ஆம் ஆண்டே இறந்துபோன சத்தியமூர்த்தி ஐயர் அறிவுரைப்படியே 44ஆம் ஆண்டில், “திராவிடர் கழகம்” என்று பெரியார் பெயர் வைத்த அதிசயத்தையும் ஏற்ற இறக்கங்களோடு மேடை களில் முழங்கி, திரிபுவாதங்களிலும், புனைவுகளிலும் மக்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றனர் என்கிறார்.

135 பக்கங்கள் கொண்ட இந்நூலில், 15 தலைப்புகளில் ஈழம், ஈழப்போராட்டம், அதன் தலைவர்கள், தமிழகம், தமிழகத்தின் நிகழ்வுகள் என்று பல செய்திகளை சுவை குன்றாது, வரலாற்று ஆவணமாக இந்நூலை உருவாக்கி யிருக்கின்றார் சுப.வீரபாண்டியன்.

இன்று தமிழ்நாட்டில் திட்டமிட்டு, பரப்பப்பட்டு வரும் ஒருதலைப்பட்டசமான வரலாற்றுச் செய்திகளே ஊடகங்களின் வலிமையோடு ஊர்சுற்றி வரும் வேளையில், இதுவரை வெளிவராத அல்லது திரிக்கப் பட்ட அல்லது மறைக்கப்பட்ட வரலாறுகளையும் முயன்று, ஆய்ந்து, தக்க சான்றுகளோடு வந்திருக்கும் இந்நூல் தமிழக மக்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஓர் ஆவணமாகும்.

Pin It