விடுதலைப் புலிகளின் முதல் இராணுவப் பயிற்சி முகாம் நடந்த பகுதியில் ‘மாவீரர் நினைவகம்’ அமைகிறது
சேலம் மாவட்டம், கொளத்தூர் ‘தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு’ சார்பில் நவம்பர் 27ஆம் தேதி, மாவீரர் நாள் புலியூர் பிரிவில் உணர்ச்சியுடன் நடந்தது. கொளத்தூர் - புலியூர் பிரிவுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. இந்தப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் இராணுவப் பயிற்சி முகாம் 1983 முதல் 1986ஆம் ஆண்டு வரை நடந்தது. விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதி பொன்னம்மான், வழிகாட்டுதலில் நடந்த இந்த முகாமில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்கள் பயிற்சி பெற்றனர். மேதகு பிரபாகரன் பலமுறை முகாமுக்கு வந்து பார்வையிட்டுச் சென்றிருக்கிறார்.
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அப்போது திராவிடர் கழகத்தில் செயல்பட்டு வந்தார். அவருக்கு உரிமையான தோட்டத்தில்தான் மூன்று ஆண்டுகள் பயிற்சிகள் நடந்தன. பெரியார் இயக்கத் தோழர்களின் முழு ஒத்துழைப் போடு இந்த முகாம் நடந்தது. உள்ளூர் பகுதி வாழ் மக்களின் ஆதரவோடும், கட்சிகளைக் கடந்த இன உணர்வாளர்கள் அர்ப்பணிப்புடன் உதவினர்.
பயிற்சித் தளபதி பொன்னம்மான், ஈழப்போராட்டக் களத்தில் மரணத்தைத் தழுவினார். அவரது நினைவாக புலியூர் பகுதியில் நினைவு நிழற்கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவு கூடத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27ஆம் நாள் மாலை 6.05 மணியளவில் மாவீரர் நினைவாக உணர்வாளர்கள், பெரியார் இயக்கத்தினர் மெழுகுவர்த்தி ஏற்றி மாவீரர் நாளை நடத்தி வருகிறார்கள். 1989 ஆம் ஆண்டு தமிழீழத்தின் வனப் பகுதியில் தலைமறைவாக இருந்த மேதகு பிரபாகரன், முதன்முதலாக மாவீரர் நாள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அந்நிகழ்வுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அழைக்கப்பட்டிருந்தார். அவர் ஈழம் சென்று 15 நாள்கள் தங்கியிருந்து திரும்பினார். அப்போது இந்திய இராணுவம் தமிழீழப் பகுதியை ஆக்கிரமித்து, சிங்கள அரசுக்கு ஆதரவாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் அவர்களுக்கு ஆதரவாக இருந்து வந்த தமிழீழ மக்களையும் கொன்றொழிக்கும் ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தது.
பிரபாகரன் உயிரைக் குறி வைத்து இந்திய இராணுவம் தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்த நேரம். அப்போது முதலாவது விடுதலைப்புலி போராளி சங்கர் மரணமடைந்த நவம்பர் 27அய் மாவீரர் நாளாக பிரகனடப்படுத்தினார். அந்த பிரகடன உரையில், “எமது போராட்டத்தில் இன்று ஒரு முக்கிய நாள். இது வரை 1207 போராளிகளை இழந்திருக் கிறோம். முதல் முறையாக இந்த மாவீரர் நாளை ஆரம்பித்துள்ளோம்” என்று அறி வித்தார். அந்த உரையில், “வழமையாக மக்களில் ஒரு பழக்கம் உண்டு. உயர்ந்த பதவிகள், வசதியானவர்கள், இப்படிப் பட்டவர்களைத் தான் பெரிதாகப் பார்க்கும் பழக்கம் உண்டு. அதுபோல் எமது போராட்டத்திலும் தலைவர்களை மட்டும் பிரித்து அவர்களது செய்கைகளை மட்டும் பெரிதாகப் பார்க்கக் கூடாது என்பதற்காக வும் எல்லா போராளிகளும் சமம் எனும் ஓர் நோக்கத்துடனும் இந்த நாளை நாம் கொண்டாட முடிவு எடுத்துள்ளோம். அதாவது எமது போராளிகளை நினைவு கூரும் ஒரே நாளில் வைப்பதால் எமது இயக்கத்தில் இருந்து வீரச் சாவுஅடைந்த தலைவர்களில் இருந்து, சாதாரணமாகப் போராடி வீரச்சாவு அடைந்த உறுப்பினர் வரை எல்லோரையும் சமமாகத்தான் கருதுகிறோம்” என்று உலகம் முழுதும் ஒரே நாளில் ஒரே நோக்கில் ‘மாவீரர் நாள்’ கடைபிடிக்கும் முறையை ஏன் கொண்டு வந்தோம் என்பதற்கான காரணங்களை விளக்கினார்.
1990ஆம் ஆண்டிலிருந்து புலியூர் பிரிவில் கழகத் தோழர்கள், உணர்வாளர்களை ஒருங்கிணைத்து, ‘மாவீரர் நாளை’ உணர்ச்சியுடன் நடத்தி வருகிறார்கள். ராஜீவ் கொலை நடந்த அந்த கடுமையான கெடுபிடி நேரங்களிலும் கூட புலியூர் மாவீரர் நாளைக் கண்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் உயர்நீதி மன்றத்தின் வழியாக முன் அனுமதி பெற்று நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு நிகழ்வில் ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரசுவதி சிறப்பு விருந் தினராகப் பங்கேற்று மாவீரர்களுக்கான சுடர் ஏற்றி, சிறப்புரை நிகழ்த்தினார். இலங்கை அரசின் தமிழர்கள் மீதான இராணுவ ஒடுக்குமுறை, தேசிய சுயநிர்ணய உரிமை, ஈழப் பிரச்சினையில் சர்வதேசங்களின் துரோகம் மற்றும் இந்திய அரசின் துரோகத்தை அம்பலப்படுத்தியும், இலங்கை அரசு கொண்டுவர முயற்சிக்கும் புதிய அரசியல் சட்டம் ஈழத் தமிழர் அடையாளத்தையே முற்றாக ஒழிப்பதையும் சுட்டிக்காட்டி 45 நிமிடங்கள் விரிவாகப் பேசினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரியார் இயக்கத்தின் பங்கினையும் புலிகளுக்கான முதல் இராணுவப் பயிற்சியை மூன்று ஆண்டு காலம் புலியூரில் நடத்துவதற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தோழர் களோடு முன்னின்று உதவியதையும் சுட்டிக் காட்டினார்.
5 மணியிலிருந்து நிகழ்ச்சிக்கு தோழர்கள் குடும்பம் குடும்பமாக வரத் தொடங்கினர். பெண்கள் ஏராளமாக நீண்ட கியூ வரிசையில் நின்று சுடர் ஏற்றினர். சரியாக 6.05 மணிக்கு மாவீரர்களுக்கான பாடல் ஒலிக்கத் தொடங்கியது. ஈழத்துக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் ஒவ்வொரு வரியும் இதயத்தை ஈட்டியால் துளைத்து கண்களில் நீரைத் ததும்ப வைத்தது. 40 நிமிடம் வரை சுடர் ஏற்றம் நிகழ்வு நீடித்தது. நிகழ்வுக்கு போராட்டக் காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் உதவிகளை செய்தவரும், திராவிடர் கழக மண்டல அமைப்புச் செயலாளருமான ப. பிரக லாதன் தலைமை தாங்கினார்.
கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் முதல் இராணுவப் பயிற்சி நடந்த பகுதியில் அதன் வரலாற்று நினைவாக மாவீரர் நினைவகம் ஒன்றை எழுப்ப, தோழர்கள், உணர்வாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் இனி எதிர்காலங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள், அந்த நினைவகத்திலேயே நிகழும் என்றும் அறிவித்தார். தனது குடும்ப சார்பில் ரூபாய் ஒரு இலட்சம் நன் கொடையும் அறிவித்தார். குருவாரெட்டியூர் பகுதி வாழ் மக்கள் சார்பில் கழகப் பொறுப்பாளர் நாத்திக ஜோதி, திராவிடர் கழக மண்டல அமைப்பாளர் ப. பிரகலாதன் இணைந்து ரூ.1,00,000/-மும், கழகத் தோழர் ஏற்காடு பெருமாள் ரூ.30,000/-மும் நன்கொடையாக வழங்குவதாக நிகழ்விலேயே அறிவித்தனர்.
நிகழ்வுக்கு திரண்டிருந்த பொது மக்கள், கழகக் குடும்பத்தினருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. திறந்த வெளியில் தரையில் பெரும் கூட்டமாய் அமர்ந்து மக்கள் உரைகளை செவிமடுத்தனர். கழக ஒன்றியத் தலைவர் செ.தர்மலிங்கம் நன்றி கூறினார்.