1,46,679! இலட்சத்து நாற்பத்தாறாயிரத்து அறுநூற்று எழுபத்தொன்பது! இந்தத் தொகை இனவழிப்புக்கு நீதி கோரும் ஈழத்தமிழர் போராட்டத்தில் இன்றையமாயாத இடம் பெற்று விட்ட ஒன்று.
2008-09 இனவழிப்புப் போரின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்டோ வலிந்து காணாமலாக்கப்பட்டோ இல்லாமற்போனவர்கள் எத்தனைப் பேர்? மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெளிவாகக் கணக்கிட்டு திட்டவட்டமாகச் சொன்னார்: 1,46,679! போர் தீவிரமடைந்த போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசித்தவர்கள் என்று சிங்கள அரசு கொடுத்த கணக்கையும், மே 18ஆம் நாள் போர் முடிந்தபின் சிங்கள அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்தவர்களின் கணக்கையும் ஒப்பிட்டுக் காட்டி, எஞ்சிய 1,46,679 பேர் எங்கே? என்று அரசிடம் கேள்வி கேட்டார் இரயப்பு ஆண்டகை! அரசினால் விடை சொல்ல முடியவில்லை.
ஆயர் இராயப்பு ஜோசப் தமது 81ஆம் பிறந்தநாளுக்கு 15 நாள் இருக்கும் போது 2021 ஏப்ரல் முதல் நாள் யாழ்ப்பாணத்தில் காலமானார். 1940 ஏப்ரல் 16ஆம் நாள் நெடுந்தீவில் பிறந்த இராயப்பு அதிகாரத்துக்கு அஞ்சாமல் உண்மையும் நீதியும் தேடுவதில் தன்னளிப்புடன் ஈடுபட்ட தீரர். அதனாலேயே ஈழத் தமிழர்களிடையே “நீதியின் குரல்” எனப் பெயர் பெற்றவர்.
1992 அக்டோபரில் மன்னார் ஆயராகப் பட்டம் சூட்டப்பெற்ற இராயப்பு பள்ளிப் படிப்புக் காலமுதலே சட்டத்துக்கும் மனிதவுரிமைகளுக்கும் மாந்தக் கண்ணியத்துக்கும் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர். யாழ்ப்பாணம் புனித பட்ரிக் கல்லூரியில் படித்து முடித்த பின் இத்தாலியில் ரோமாபுரியில் பாண்டிஃபிகல் அர்பேனியானா பல்கலைக்கழகத்திலிருந்து திருச்சபைச் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
2009ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா செய்த செயல்கள் பெருந்திரளான வன்கொடுமைக் குற்றங்களாகும் என்பதை நிறுவுவதில் ஆயர் இராயப்பு ஆண்டகை முகன்மைப் பங்கு வகித்தவர்.. நிகழ்களத்தில் பன்னாட்டுச் சாட்சிகளின்றி நிகழ்த்தப்பட்ட இனவழிப்பின் வலுமிக்க சாட்சியாக அவர் இருந்தார். கொல்லப்பட்டவர்கள் என்று அவர் கொடுத்த கணக்கை யாராலும் மறுத்துப் பேச முடியவில்லை.
2011ஆம் ஆண்டு ஆயர் இராயப்பு ஏனைய உயர்நிலை கத்தோலிக்கக் குருமார்களுடன் சேர்ந்து ’கற்ற படிப்பினைகள் - மீளிணக்க ஆணைய’த்திடம் அரசைக் குற்றக்கூண்டிலேற்றும் நீண்ட விண்ணப்பம் அளித்தார்.
குற்றவாளிகளான தலைவர்கள் ஏற்படுத்திய ஆணையத்திடமே அவரும் அவரின் கூட்டாளிகளும் துணிந்து இப்படிச் செய்தனர். குற்றம் புரிந்த அரசின் முகத்துக்கு நேராகவே எப்போதும் உண்மை பேசியவர் இராயப்பு. உயிரச்சம் இல்லாமல் இதைச் செய்தார்.
முள்ளிவாய்க்கால் இனக்கொலைக்கு நீதி கோரும் தமிழர்களின் குரல்தான் இராயப்புவின் குரலாக ஒலித்தது. விடுமைக்கும் தன்னாட்சிக்குமான தமிழர் கோரிக்கையை அவர் எதிரொலித்தார். தமிழர் விடுதலை அரசியலில் அவர் ஈழத்தமிழரின் வேட்கையை அஞ்சாது வெளிப்படுத்தினார்.
சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையில் உலகெங்கும் தமிழர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒன்றுபட்டிருக்கும் இந்த நேரத்தில் ஆயரை நாம் இழந்து விட்டோம். தமிழர் வாழ்வில் நெருக்கடியான ஒரு கட்டத்தில் நீதியின் குரலாக ஒலித்தவரை இழந்து விட்டோம். ஓயாத ஒலித்த நீதியின் குரல் ஓய்ந்தே விட்டது.
மறைந்த மாமனிதர் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களுக்குத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் புகழ் வணக்கம்!
- தியாகு