‘நீட்’டின் மற்றொரு கோர முகம் வெளிப்பட்டிருக்கிறது. இவ்வாண்டு தமிழ்நாடு  அரசுப் பள்ளிகளில் படித்த 4 மாணவர்களுக்கு மட்டுமே தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு இடம் கிடைத்தவர்கள் இரண்டு பேர். ஆக 100 சதவீதம் அதிகரித்துவிட்டது என ‘புள்ளி விவரப் புலிகள்’ மார் தட்டலாம். ஆனால் எதார்த்தம் மிக மிக மோசம்.

தமிழ்நாட்டில் தான் இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றின் மொத்த இடங்கள் 5660. இதில் அரசுப் பள்ளியில் படித்த பெரும் பொருட் செலவில் தனியார் பள்ளிகளில் படிக்க வாய்ப்பில்லாத மாணவர்கள் பெற்ற இடம் இவ்வளவுதான். ‘நீட்’ தேர்வு வருகைக்கு முன்பு 2016இல் 30 அரசுப் பள்ளி மாணவர்கள் இடம் பிடித்தனர்.

இப்போது தமிழில் ‘நீட்’ தேர்வு எழுத எதிர்ப்பும் கண்டனங்களும் வெடித்தப் பிறகே சி.பி.எஸ்.ஈ. அனுமதித்தது. அதிலும் 49 கேள்விகள் தவறானவை. மாணவர்கள் விடையளிக்க முடியாததால் சுமார் 25,000 மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதி சுமார் 400 பேர் மட்டுமே ‘நீட்’டில் தேர்ச்சி பெற முடிந்தது.

நீட் தேர்வுக்கு முன்பு மருத்துவக் கல்லூரியில் சேரும் தகுதி மதிப்பெண் பெற்ற மாணவர்களில் இப்போது 80 சதவீதம் சரிந்து விட்டது என்று மருத்துவக் கல்லூரி மாணவர் தேர்வுக் குழு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது. அரசு நிதி உதவியுடன் செயல்படும் தனியார் பள்ளிகளிலிருந்து ‘நீட்’டில் தேர்ச்சிபெற்று, அரசு மருத்துவக் கல்லூரிகளில் நுழையும் வாய்ப்பு பெற்றவர்கள் இப்போது 26 பேர்.

‘தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் பெரும் தொகையை நன்கொடையாகக் கட்டிப் படிக்க வாய்ப்பில்லாதவர்கள் - அதேபோல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில்  பெரும் தொகையைக் கட்டணமாக செலுத்த முடியாதவர்கள் ‘நீட்’டில்  தேர்ச்சி பெற்றிருந்தும் சேர முடியாமல் புறந்தள்ளப்பட்டிருக்கிறார்கள்’ என்கிறார்,  சமூக சமத்துவ சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் இரவீந்திரநாத். அரசுப் பள்ளி ஒன்றில் உயிரியல் ஆசிரியரான காமாட்சி என்பவர் கூறும்போது, “அரசுப் பள்ளி மாணவர்களை தமிழில் நீட் தேர்வு எழுத ஊக்குவித்தோம்; 49 கேள்விகள் குளறுபடிகளால், தேர்ச்சி பெற முடியவில்லை. உயர்நீதிமன்றம் 196 மதிப்பெண்களை இவர்களுக்குக் கூடுதலாக வழங்க உத்தரவிட்டும், சி;பி.எஸ்.ஈ. உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கிவிட்டது” என்றார்.

69 சதவீத இடஒதுக்கீடு பாதிக்கப்படவில்லையே என்று ‘நீட்’ ஆதரவாளர்கள் இதற்கு பதில் கூறுகிறார்கள். ஆனால், 69 சதவீத இட ஒதுக்கீட்டில் புறக்கணிக்கப்பட்ட வசதி வாய்ப்பற்ற கிராமப்புற மாணவர்களுக்கு நீதி கிடைத்ததா என்பதே அடிப்படையான கேள்வி.

பள்ளிக்கூடங்களையும் கல்லூரிகளையும் திறந்த நமது கடந்தகால ஆட்சிகளில் அதில் படிக்க வரும் மாணவர்களுக்கு கல்வியை இலவசமாக்கியதும், உதவித் தொகை வழங்கியதும், சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்ததும் எதற்காக? இடஒதுக்கீடு எண்ணிக்கையில் இருந்தால்  மட்டும் போதாது. அது அடித்தள கிராமப்புற மாணவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தானே?

“நுழைவுத்  தேர்வு முறை வேண்டாம்; பிளஸ் டூ மதிப்பெண் மட்டுமே போதும் என்று முடிவெடுத்தது ஏன்? அது கிராமப்புற மாணவர்களுக்குத் தடையாக இருக்கிறது என்பதால்தானே? கலைஞர் ஆட்சியில் கிராமப்புற மாணவர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டதும் பிறகு ஜெயலலிதா ஆட்சியில் இது 25 சதவீதமாக உயர்த்தப்பட்டதும் இடஒதுக்கீட்டின் பயன். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்குள்ளேயே பாதிக்கப்பட்ட சமூகத்துக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துக்குத் தானே! முதல் தலைமுறையாக பட்டம் படிக்க வரும் மாணவர் அவர் முன்னேறிய சமூகத்தினராக இருந்தாலும் 5 கூடுதல் மதிப்பபெண் வழங்கும் முறையை கலைஞர் கொண்டு வந்தாரே, ஏன்? முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்லூரிக் கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்பதால்தானே? (இந்த கிராமப்புற, முதல் பட்டதாரி மாணவர்களுக்கான அரசு ஆணைகளை உயர்நீதிமன்றம் இரத்து செய்தது என்பது வேறு பிரச்சினை) 69 சதவீத இடஒதுக்கீடு மறுக்கப்படவில்லை என்று வாதாடுகிறவர்கள், அதில் மறுக்கப்படும் சமூக நீதியை மறைக்கிறார்கள் என்பதற்காகவே இந்த விவரங்களை எடுத்துக் காட்டுகிறோம்.

நடப்பாண்டான 2018 ஆம் ‘நீட்’டில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்தவர்களில் 52 சதவீதம் பேர் ‘பிளஸ் டூ’ தேர்ச்சிக்குப் பிறகு ஓராண்டு படிப்பை நிறுத்தி ‘நீட்’டுக்காக தனிப் பயிற்சி பெற்றவர்கள் தான் என்ற தகவலை தேர்வுக் குழு செயலாளர் ஜி. செல்வராஜ் கூறியிருக்கிறார்.

பட்டியல் இனப் பிரிவைச் சார்ந்த அரசுக் கல்லூரியில் இடம் பெற்றுள்ள ‘நீட்’டில் கடைசி மதிப்பெண் வரிசையில் உள்ள மாணவரின் நீட் மதிப்பெண் 200; கடந்த ஆண்டு இது 161 ஆக இருந்தது. ‘நீட்’டில் கடும் போட்டிகளை பட்டியல் இனப் பிரிவு மாணவர்களே சந்திக்க வேண்டியிருக்கிறது.

பெரும் பொருள் செலவில் அதிநவீன பயிற்சி மய்யங்களைத் தேர்வு செய்து ‘நீட்’ பயிற்சி பெற்றவர்கள் கூடுதல் மதிப்பெண்களைப் பெற முடிகிறது என்பதே எதார்த்தம்.

உதாரணமாக 2018இல் நீட்டில் முதலிடம் பெற்ற மதிப்பெண் 676. 2017இல் முதலிடத்தில் வந்தவர் பெற்ற மதிப்பெண்ணைவிட 20 அதிகம். நீட்டில் 550க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள், 2017 மற்றும் 2018இல் 81 பேர். இதற்குக் கீழே போனால் நிலைமை மறுக்கிறது. 500க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 2017இல் 203 என்றால், 2018இல் இந்த எண்ணிக்கை 213தான்.அதேபோல் 2017இல் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 1279 பேர். இப்போது 2018இல் 1466 பேர். நீட்டில் 300க்கு மேல் பெற்றவர்கள் 2017இல் 2569. 2018இல் 4791 பேர். மதிப்பெண் வரிசை குறைய குறைய இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மதிப்பெண் இடைவெளி அதிகரிக்கிறது. மிகக் கூடுதல் மதிப்பெண் பெறுவோரிடையே எண்ணிக்கை இடைவெளி குறைவாக இருக்கிறது.

2017 மற்றும் 2018ஆம் ஆண்டு ‘நீட்’ தேர்வை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ‘நீட்’டில் மிக அதிக மதிப்பெண் பெற்றவர்கள், மேலும் அதிக மதிப்பெண் பெறுவதையும், குறைந்த மதிப்பெண் பெற்று ‘நீட்’டில் தேர்வு பெற்றவர்களைவிட அதிக ‘இடைவெளி’ வேறுபாடுகள் இருப்பையும் காண முடிகறிது.

ஆக, சமூகத்தில் மிகவும் பின்தங்கிக் கிடக்கும் ஏழை கிராமப்புற மாணவர்களுக்கான மேல் தட்டு நகர்ப்புற வசதி படைத்த மாணவர்களுக்குமான ஏற்றத் தாழ்வுகளை நிலைப்படுத்தவே ‘நீட்’ துணை போய்க் கொண்டிருக்கிறது. வரும் ஆண்டுகளில் இந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டே போய் சமூக நீதியின் நோக்கத்தையே ‘நீட்’ உருக்குலைத்துவிடும் ஆபத்து உள்ளது.

(தகவல்: ‘டைம்ஸ் ஆப் இந்தியா’, ஆக.21)

Pin It