நீட் தேர்வைத் தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் ஜூலை 20 அன்று இடைக்காலத் தடை விதித்தது. இவ்வழக்கு பற்றியும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றியும் வழக்குத் தொடர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திரு.டி.கே.ரங்கராஜன் அவர்களிடம் கருஞ்சட்டைத் தமிழர் இதழுக்காக நேர்காணல் செய்தோம். CPM அலுவலகத்தில் நம்மை இன்முகத்துடன் வரவேற்று தேநீர் கொடுத்து உபசரித்துப் பின்னர் பேட்டியளித்தார். பேட்டி வருமாறு:

tk rangarajanஇந்த வழக்குத் தொடரப்பட்டதன் பின்னணி குறித்து

பொதுவாக ‘நீட்’ என்கிற மருத்துவப் படிப்பிற்கான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வைத் தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளுமே எதிர்க்கின்றன. சட்டமன்றத்தில் ‘நீட்’ டை எதிர்த்து மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அது குடியரசுத் தலைவருக்குச் சென்றதா இல்லையா என்பது தெரியாத சூழ்நிலையில் நான் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதினேன். அப்போது பிரணாப் முகர்ஜி அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தார். “உங்கள் மசோதா இங்கு வரவில்லை. அதனால் உங்கள் கடிதத்தை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருக்கிறோம்.” என்று குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து பதில் வந்தது. இந்த நேர்காணல் நடக்கும் இன்று வரை உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு இந்த மசோதாவை அனுப்பவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து அய்ம்பதாயிரம் மாணவர்கள் தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வு எழுதினார்கள். அதில் 24000 த்திற்கு மேற்பட்டவர்கள் தமிழ்வழியில் தேர்வு எழுதியவர்கள்.இந்தக் கேள்வித்தாளைப் படித்துவிட்டு எங்களுடைய மாணவர் அமைப்பு மொழிபெயர்ப்புத் தவறாக இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்தினார்கள். அதே போல டெக் ஃபார் ஆல் (Tech-For-All) என்கிற தனியார் அமைப்பும் (NGO) இதைப் பற்றி பேசத் தொடங்கினார்கள். நாங்கள் இதைக் கட்சியில் பரிசீலித்து வழக்குத் தொடரலாம் என முடிவெடுத்து என் பெயரில் வழக்குத் தொடர்ந்தோம்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு நடந்த முறை பற்றி

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இவ்வழக்கைச் சிறப்பான முறையில் விசாரித்தார்கள். தமிழக அரசின் வழக்கறிஞர், மத்திய அரசின் வழக்கறிஞர், CBSEயின் வழக்கறிஞர் ஆகியோர் வந்திருந்தனர். இந்த மொழிபெயர்ப்பு எதன் அடிப்படையில் செய்யப்பட்டது என்கிற கேள்வியை நீதிமன்றம் எழுப்பியது. அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. 35,000 பேர் தேர்வு எழுதிய பீகாரில் 37,000 பேருக்கு தேர்வு முடிவுகள் வந்தது. 3 மணிநேரம் எழுத வேண்டிய தேர்விற்கு அரை மணிநேரம் தாமதமாகக் கேள்வித்தாள் கொடுக்கப்பட்டதை எதிர்த்து, மும்பையில் மாணவர்கள் வழக்குத் தொடர்ந்து அந்த அரைமணிநேரத்திற்கு 180 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டினோம்.

ஆனால் CBSE மதுரைக் கிளையில் பெரிதாக ஒன்றும் வாதாடவில்லை. அவர்கள் வாதாடியதெல்லாம், “டி.கே.ரங்கராஜனுக்கும் இவ்விவகாரத்திற்கும் தொடர்பில்லை. பாதிக்கப்பட்டோர் யாரும் வழக்குத் தொடரவில்லை.” என்பதே. பின்னர் நீதிபதிகள் தெளிவாகத் தமிழ்வழியில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 49 கேள்விகளுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்கிற தீர்ப்பை வழங்கினார்கள். அதை நாம் பத்திரிக்கைகளில் படித்திருப்போம்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் முறை பற்றி

CBSE மேல் முறையீடு செய்வார்கள் என்பதைத் தெரிந்துதான் கேவியட் மனு தாக்கல் செய்தேன். இதில் CBSE இடையில் வசதியாகச் செய்துகொண்ட அல்லது இயற்கையாக அமைந்த ஏற்பாடு, கலந்தாய்வு முடிந்த மாணவர்கள் சிலர், எங்களுக்கு இடம் வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார்கள். அங்கும் “டி.கே.ரங்கராஜனுக்கும் இவ்விவகாரத்திற்கும் தொடர்பில்லை.” என்றே CBSE வழக்கறிஞர் வாதாடினார். ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்று ஏற்கெனவே இருக்கிற தீர்ப்பைச் சுட்டிக் காட்டி இது மிகவும் தாமதமானது என்று சொல்லி, மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அளித்த தீர்ப்பின்படி கிட்ட தட்ட 24,000 மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் அளித்தால் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட திறமையான மாணவர்கள் பின்னுக்குச் சென்று விடுவார்கள் என்கிற முறையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம். எங்களுடைய வாதம் அப்போது என்னவென்றால், 24,000 மாணவர்களுக்கும் இல்லையென்றால் அதிகபட்சமாக எத்தனை பேருக்கு இடம் கொடுக்க முடியும், இடங்களை எப்படி அதிகப்படுத்துவது என்பதாகத் தான் இருந்தது. ஆனால் அந்த வாதத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

மற்ற மாநில மொழிகளில் தேர்வு எழுதியவர்களுக்கு இந்தச் சிக்கல் இல்லையா?

11 மாநிலங்களில் இந்தச் சிக்கல் இருக்கிறது. ஆனால் அங்கு அதை எதிர்த்துப் போராட இயக்கங்கள் இல்லை.

இவ்வழக்கில் தமிழக அரசின் செயல்பாடு?

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு வரவேயில்லை. பிரகாஷ் ஜவடேகர் “நாங்கள் தமிழ்நாட்டிடம் தான் மொழிபெயர்ப்பிற்கு அனுப்பினோம்” என்று மாநிலங்களவையில் குறிப்பிடுகிறார். அதை எதிர்த்து ஒரு சொல் சொல்லுவதற்குக் கூட இந்த அரசிற்குத் துணிவில்லை.

இவ்வளவு தவறுகளையும் அத்துமீறல்களையும் செய்த CBSEக்கு நீதிமன்றமன்றம் சொன்னது என்ன?

CBSEயின் தவறை உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் இரண்டுமே மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கின்றன. CBSEயும் தவறை ஒப்புக்கொண்டது.

 இவ்வழக்கில் அடுத்தகட்ட முயற்சிகள் பற்றி

அடுத்து தமிழ்வழியில் தேர்வு எழுதிய மாணவர்கள் எத்தனை பேருக்கு இடம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது என்கிற பட்டியலையும் தயார் செய்து கொண்டிருக்கிறோம். வருகிற ஏழாம் தேதி அதைத் தாக்கல் செய்வோம்.

Pin It