ஏழைகளுக்கு மருத்துவக் கல்வி எட்டாக்கனியாகும், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களின் மருத்துவக் கனவு நிறைவேறாமல் போகும், தாய்மொழி வழியில் படித்தவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியாமற்போகும், சிபிஎஸ்இ தவிர மற்ற பாடத்திட்டத்தில் படித்தவர்கள் மருத்துவம் படிக்க முடியாத நிலை உருவாகும். இங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை வெளிமாநில மாணவர்களே ஆக்கிரமித்துக் கொள்வார்கள் என்று தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் பேசியும், எழுதியும், இயங்கியும் வந்துள்ளனர்.
ஆனால் மத்திய பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டவர்கள் அவர்கள் முன்வைத்த நியாயமான கேள்விகளைக்கூட எள்ளி நகையாடினர். அப்படி எல்லாம் ஒன்றும் நிகழாது என்றும் அவர்கள் மிகைப்படுத்தி கூறுகிறார்கள் என்றும் மக்களை திசைதிருப்பி வந்தனர். மத்திய அரசிற்கு காவடி தூக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டவர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களைக்கூட விமர்ச்சித்தனர். அதற்கு வேறு ஒரு உள்நோக்கத்தை கற்பித்தனர். நீட் தேர்வு நடைபெற்றால்தான் மருத்துவக் கல்வி மேம்படும், தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும் என்று விதண்டாவாதம் புரிந்தனர். இதனால் ஏழை எளியவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கொஞ்சம்கூட கூச்சமின்றி பொய்யுரைத்தனர். தரம், தகுதி என்று கூப்பாடு போட்டனர். நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசத்தின் விரோதிகள்போல் சித்தரிக்கப்பட்டது தனிக்கதை.
ஏழை எளியவர்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள், இடஒதுக்கீட்டின் மூலம் வந்தவர்கள் எல்லாம் தரமான மருத்துவர்களாக இருக்க முடியாது என்பது போன்ற தோற்றத்தை கொடுத்தார்கள் பாஜகவின் அடிவருடிகள். ஆனால் இப்படிப்பட்ட பிரிவுகளிலிருந்து வந்த மருத்துவர்களையே பெருவாரியாக கொண்ட தமிழகத்தின் சென்னை மாநகரம்தான் இந்தியாவின் மருத்துவத் தலைநகராக மாறி நிற்கிறது! உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர். இதற்கு காரணம் சிறப்பான சிகிச்சையும், எல்லா மருத்துவ வசதிவாய்ப்புகளும், கட்டணம் குறைவாக இருப்பதும்தான். இதுதான் தமிழகத்தின் சிறப்பு. இங்குள்ள மருத்துவ கட்டமைப்பு இந்தியாவில் வேறு எங்கும் இல்லாதது. ஒரு மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்று திட்டமிட்டு செயலாற்றி இருக்கின்றன. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கின்றன. தனியார் மருத்துவக் கல்லூரியும் நிறைய இருக்கின்றன. இதனால் தமிழகத்தில் உள்ள மருத்துக் கல்லூரியின் இடங்கள் குறிவைக்கப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களை புறந்தள்ளி சிபிஎஸ்இ மாணவர்களை கொண்டு நிரப்பப்போகிறார்கள். அதற்கு நீட் தேர்வை பயன்படுத்தப் பார்க்கிறார்கள் என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு, அ.மார்க்ஸ் போன்ற பல கல்வியாளர்கள் எச்சரித்தனர்.
அவர்கள் எச்சரித்தது போலவே இன்று நடந்து வருகிறது. தமிழக மாணவர்களின் இடங்களை பறித்து வெளிமாநில மாணவர்களுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது நீட். மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் இடங்களை பறித்து சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கொடுத்திருக்கிறது நீட். இதன்மூலம் தமிழகத்திற்கு மிகப்பெரிய அநீதியை இழைத்திருக்கிறது மத்திய பாஜக அரசு.
மதிமுகவின் மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்பட்ட இடங்கள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மருத்துவக் கல்வி இயக்கத்திடம் கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு அவருக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பதிலில் உள்ள தகவல்களை பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2018-19 ம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களுக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. அரசு உதவிப் பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 3 மாணவர்களுக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தனியார் பள்ளி மாணவர்களில் 20 பேருக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.
அதேபோல் சிபிஎஸ்இ பள்ளி மானவர்களின் 611 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு நகரங்களின் இருப்பிடச் சான்றிதழை கொடுத்து வெளிமாநிலங்களில் பள்ளி படிப்பை முடித்த 191 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக அந்த தகவல் சொல்கிறது.
அது மட்டுமில்லாமல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவருக்குத்தான் இடம் கிடைத்துள்ளது. தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3 பேருக்கும், சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த 283 பேருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளவர்களில் மொத்தமே 8 பேர்தான் அரசு பள்ளியில் படித்தவர்கள். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 894 பேர். வெளிமாநிலத்தவர்கள் 283 பேர். இவை இல்லாமல் பள்ளி படிப்பு முடித்து பின்பு ஒரு ஆண்டு முழுக்க நீட் பயிற்சி எடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளவர்கள் மட்டும் 1,834 பேர். இது தமிழகத்தில் உள்ள மொத்த இடமான 3,456 இடங்களில் சரிபாதியை கொண்டிருக்கிறது.
நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்களும், நீட் கோச்சிங் சென்டரில் படித்தவர்களும்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மேற்கண்ட தகவல்கள் அதையே உறுதிப்படுத்துகின்றன. அப்படியெனில் மாநில பாடத்திட்டத்தில் படித்து மருத்துவர் ஆகவேண்டும் என்று கனவு காணும் ஏழை எளிய மாணவர்களின் நிலை என்ன? அவர்கள் இனி மருத்துவர் ஆக முடியாதா? அரசு அவர்களுக்கு என்ன பதிலை வைத்துள்ளது.
மருத்துவ துறையில் முன்பிருந்ததைப்போல் உயர் வகுப்பினர்களும், பொருளாதாரத்தில் முன்னேறியவர்களும் மட்டுமே கோலோச்ச சதி நடைபெறுவதாகவே தெரிகிறது. இதற்குத்தான் மத்திய பாஜக அரசு எத்தனை உயிர்கள் போனாலும் நீட்டை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது. நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை, அநீதிகளை பலரும் சுட்டிக்காட்டி வந்திருக்கின்றனர். மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றனர்.
அவர்கள் சுட்டிக்காட்டிய அனைத்தும் உண்மையென இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இனியும் தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதிப்பது முறையாகாது. நீட்டிற்கு எதிராக பெரும் போராட்டத்தை தமிழகம் முன்னெடுக்க வேண்டும். நீட்டை தொடர்ந்து தமிழர்கள் அனுமதித்தால் அது தங்களில் சந்ததியினருக்கு செய்யும் துரோகமாகவே எடுத்துக்கொள்ளப்படும்.
- வி.களத்தூர் எம்.பாரூக்